வெள்ளி, 2 ஜூன், 2017

கவிக்கோ அவர்களின் நினைவாக

எத்தனையோ கவியரங்குகள், கவிதை குறித்த ஆய்வரங்களில் கலந்து கொண்டிருந்தாலும் என்னுடைய கவிதை குறித்து நானே உரையாற்றி எழுதுவது புதிய அனுபவமாக இருந்தது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘நானும் என் கவிதையும்’ என்ற தலைப்பில் உரையாற்றியது எனது மனதிற்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது” என்று கவிக்கோ மனம் திறந்து என்னிடம் கூறியதுடன் தன் கைப்பட அவ்வுரையை எழுதி கொண்டுவந்து நேரில் கொடுத்து அச்சிட அனுமதி வழங்கியது எனக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. 1996-97 ஆம் ஆண்டு சனவரி திங்கள் கருத்தரங்கில் ‘நானும் என் கவிதையும்’ என்ற தலைப்பில் கவிக்கோ அவர்கள் நிகழ்த்திய உரையை அவருடைய நினைவாக இங்கு வழங்குகின்றேன்.






வியாழன், 24 ஏப்ரல், 2014


முனைவர் மு.வளர்மதி அவர்களின்
 பிறந்த நாள் வாழ்த்துமடல்

தாயே!
மலரின் மணம் நீ!
நிலவின் குளிமை நீ!
கதிரவனின் ஆற்றல் நீ!
நீலக்கடலின் எல்லையில்லா அறிவு நீ!
குணத்தில் அகன்ற வானம் நீ!
மணத்தில் இன்று மலர்ந்த மலரின் வாசம் நீ!
தாழையின் மடல் நீ!
ஏழையின் பசியைத் தீர்க்கும் விண்ணின் மழைத்துளி நீ!
அனுபவத்தின் சுமைதாங்கி நீ!
நல்லறிவின் நல்லாசான் நீ!
போர்ர்க்களமே உம்மை வணங்கும் போராளி நீ!
புகழை விரும்பா புதுமைப் பெண் நீ!
மொழிபெயர்ப்பின் சிகரம் நீ!
அடிமை விலங்கின் திறவுகோல் நீ!
தன்னையே செதுக்கிய சிற்பியின் உளியும் நீ!
பல்லாயிரம் மாணவர்க்கு வழிகாட்டி நீ!
சான்றோரின் தலைமை நீ!
நல் இதயங்கள் வாழ்த்தும் நல்ல மனிதப் பிறவியும் நீ!
மானுடன் போற்றும் மாமேதை நீ!
மாலை மதியம் நீ!
இளவேனில் தென்றலும் நீ!
எங்கள் மனம் பதிந்த வரலாற்றுச் சுவடி நீ!
தடயமில்லா ஈகைக்குணம் கொண்டவள் நீ!
தாகம் தீர்க்கும் நீரும் நீ!
பிறப்பை அறுக்கும் அமிழ்தமும் நீ!
பொறுமையின் உறைவிடம் நீ!
எளிமையின் உதாரணம் நீ!
விருதுகள் விரும்பா விண்வெளி வெளிச்சம் நீ!
புகழை விரும்பா பெரியாரின் மகள் நீ!
தாய்க்கே தாயானவள் நீ!
தந்தையைச் சேயாக்கியவள் நீ!
உற்றாரை காப்பதில் உமையன்னை நீ!
உறவினரை காக்கும் அன்னையும் நீ!

அம்மா!
உன்னிடத்தில் இல்லை
எனும் குறைகளுமுண்டு. ஆம்!
உன்னிடத்தில்  கள்ளமில்லை;
வஞ்சகமில்லை; பொறாமையில்லை;
பிறரை கெடுக்கும் தீய குணமில்லை; பழிபாவமில்லை ;
உன்னை நம்பியவர்க்கு அன்புக்கு பஞ்சமில்லை;
எங்கள் அம்மாவின் ஆயுளில் என்றுமே குறையுமில்லை.
அம்மா!
உம்மை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!
எங்கள்  அம்மா! பல்லாண்டு காலம்
எல்லா நலமும் வளமும் பெற்று
சீரும் சிறப்புடன் பழியில்லா
வாழ்வு வாழ வேண்டும்!

தாயே!
நீ வாழ்ந்தால் பல உயிரினம் வாழும்!
நீ வாழ்ந்தால் அறம் வாழும் பெண்மை வாழும்!
வாழ்க பல்லாண்டு வாழ்க! வாழ்க!
வாழும் காலத்தே
பலரையும் வாழவைக்கும்
தமிழ் அன்னையும் நீயே!

அம்மா!
உம்மால் நாங்கள்
துக்கத்தை மறந்தோம்!
பகையை மறந்தோம்!
சோம்பலை மறந்தோம்!
பகல் கனவை மறந்தோம்!
ஆடம்பரத்தை மறந்தோம்!
ஆரவாரத்தை மறந்தோம்!
ஏற்றத் தாழ்வினை மறந்தோம்!
ஏக்கத்தை மறந்தோம்!
தேவையில்லாததை மறந்தோம்!
நிலையில்லாததை மறந்தோம்!
உம்மால் நிலையானதை உணர்ந்தோம்!.
ஆம். உன்னால்!
தாய்மையின் அன்பை உணர்ந்தோம்!
தகப்பனின் வழிகாட்டியாய் உணர்ந்தோம்!
ஆசிரியரின் தகுதியாய் உம்மை அறிந்தோம்!
தூய நட்பை உணர்ந்தோம்!
எதிர்பாப்பில்லா பாசத்தை உணர்ந்தோம்!
எளிமையை அறிந்தோம்!
நேர்மையை உணர்ந்தோம்!
கடின உழைப்பின் பலனை அறிந்தோம்!
பணிவின் பெருமையை உணர்ந்தோம்!
கனிவான மொழியின் உயர்வை அறிந்தோம்!
எழுத்தின் ஆழத்தை அறிந்தோம்!
ஆய்வின் அருமை அறிந்தோம்!
மனித பிறவியின் காரணத்தை உணர்ந்தோம்!
வாழ்வின் பொருளை உணர்ந்தோம்!
எங்கள் எண்வரின் வாழ்வையும்
தொடங்கி வைத்தாய்!
 உம்மால் நாங்கள் வாழ்வோம்!
 எங்களால் தமிழ்ச் சமுதாயமே வாழும்!
தமிழினமே வாழ துணையாய் இருப்போம்!
தேசத்தை காக்கும் நாங்கள்
உங்கள் மாணவர்கள்
எனும்  பெயரையும்
காப்போம்! காப்போம்!!
நன்றி, அம்மா!
அம்மாவிற்கு
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!

இப்படிக்கு
தங்கள் அன்பு மாணவர்கள்
20, ஏப்ரல், 2014

செவ்வாய், 4 அக்டோபர், 2011

சிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -4

"இந்திய அரசு, இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் வெளியாகும் குழந்தை நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டத்தை ஏற்படுத்தி, 1955 ஆம் ஆண்டு முதல் பரிசுகள் வழங்கி வருகின்றது. முதல் முதலாகத் தமிழில் இப்பரிசைப் பெற்ற நூல், நா.கி.நாகராசன் எழுதிய 'ராமுவும் நானும்' என்ற அறிவியல் அற்புதங்களைக் கூறும் சிறுவர்களுக்கான அறிவியல் நூலாகும்.

சிறுவர்களுக்கான அறிவியல் நூல்களை எழுதி பல பரிசுகளை வென்றவர் கல்வி கோபால கிருஷ்ணன் ஆவார். இவர் பத்துக்கும் அதிகமானப் பரிசுகளைப் பெற்றுள்ளார். இவரது பறக்கும் பாப்பா, பண்டைய உலகில் பறக்கும் பாப்பா, பாதாள உலகில் பறக்கும் பாப்பா போன்ற சிறுவர்களுக்கான அறிவியல் நூல்களுள் குறிப்பிடத் தக்கவையாகும்.” (22)


ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து எழுதாமல் பொதுவாகப் பல விஞ்ஞான உண்மைகளைக் கூறுகின்ற சிறுவர் நூல்களில் குறிப்பிடத்தக்கவை; பெ.நா.அப்புஸ்வாமி, எஸ். விஸ்வநாதன் எழுதிய 'விஞ்ஞானக் கதைகள்', பொ.திரிகூட சுந்தரத்தின் 'அம்மாவும் மகனும்', பி.வி.கிரியின், 'அறிவியல் கதம்பம்', நெ.சி.தெய்வசிகாமணியின் 'சிறுவர் விஞ்ஞானக் கதைகள்', தங்கமணியின் 'அறிவியல் சிறுகதைகள்', ர.சண்முகத்தின் 'வியப்பூட்டும் விஞ்ஞானம்', 'விஞ்ஞான உண்மைகள்', பூவை அமுதனின் 'அறிவியல் கருவிகள்' ,ஆ.கோவிந்தராசுலுவின் 'அறிவியல் பூக்கள்', 'வைரக்கற்கள்', 'ஹாலி'யிலே வானுலா', நெல்லை சு.முத்துவின் 'வானம் எனும் வீதியிலே' ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள்ளும் அறிவியல் செய்திகளைப் பாடல் வடிவில் படைப்பது அரிது

“மணலை விடவும் பலகோடி
மடங்கு சிறிது அணுவாகும்
ஊசி முனையின் சதகோடி
உருவம் சிறுத்தது அணுவாகும்!
புரோட்டான் நியூட்ரான் இவ்விரண்டும்
அணுவின் உட்கரு கொண்டனவாம்
அதனை ஏதும் அணுகாமல்
சுற்றி வருவது எலக்ட்ரானாம்
ஒரு வகை அணுக்கள் பலகோடி
ஒன்றாய்ச் சேர்ந்தது பொருளாகும்!
உலகில் உள்ள‌ பொருளெல்லாம்
அணுக்கள் சேர்ந்தே ஆனவையாம்!” (23.)

அறிவியலை விரும்பிப் படிக்கும் வகையில் கவிதையில் சொல்ல முடியும் என்பதை இப்பாடல் காட்டுகிறது. இத்தகைய பாடலை ஓரளவு வளர்ந்த குழந்தைகளே புரிந்து கொள்ளமுடியும். சிறுவர் பாடல்கள் படைப்போர் எந்தக் கருத்தை, எந்த வயதினருக்கு, எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதைக் கொண்டே அதற்கேற்றவாறு எழுதுகின்றனர்.

சிறுவர் பாடல்களில் பின்பற்றப்படுகின்ற இலக்கணங்கள் குறித்து வெ.தனலக்குமி, தன் ஆய்வில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
“1. ஓசை நயத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு வல்லெழுத்து வண்ணம், மெல்லெழுத்து வண்ணம், இடையெழுத்து வண்ணம், ஆகியவற்றைப் போற்றியுள்ளனர்.
(எ‍ - டு) "பட்டுப் பட்டு
பட்டு வாயில் பிட்டு"
2. நாட்டுப் பாடல் சந்தங்கள் கவிஞர்கள் தம் தனித்தன்மையைப் பாதிக்காத வகையில் மிக அளவாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
(எ‍ - டு) "சுண்டெலி ராசனுக்குக் கலியாணமாம்
சோளத் தட்டுப் பல்லக்கு ஊர்வலமாம்"
3. பெயரடைகள், பண்படைகள், பெயரெச்ச அடைகள், வினையெச்ச அடைகள் ஆகியவற்றைப் பொருள் புலப்பாடு கருதி எடுத்தாண்டுள்ளனர். இயற்கைப் பொருட்கள் பற்றிய பாடல்களில் அடைகள் மிகுதியும் இடம் பெறுகின்றன.
(எ‍ - டு) காட்டுத் திணைக் கதிர், சேலத்து மாம்பழம், சோலைமலர்
4. பண்படைகளைக் கவிஞர்கள் மிகுதியாகக் கையாண்டுள்ளனர். இவற்றுள்ளும் அளவு பற்றி வரும் பண்படைகள் மிகுதியாகப் போற்றப்பட்டுள்ளன.
(எ‍ - டு) சின்ன வால், குள்ள வாத்து, குட்டிநிலா, வட்டமான தட்டு
5. வினையெச்ச அடைகள் மிகக் குறைவாக இடம் பெறுகின்றன.
(எ‍ - டு) பையக் கொறிக்கிறாள், மெல்ல அசையுது, பாய்ந்து தாவுது, அசைந்து நடக்குது
6. சொல், தொடர் ஆகியன அடுக்கிவரத் தொடுக்கும் உத்தியைக் கவிஞர்கள் சிறப்பாகக் கையாண்டுள்ள‌னர். இவற்றுள் பெயர்ச்சொற்களையும் வினையெச்சச் சொற்களையும் அடுக்கிவரத் தொடுத்தல் மிகுதியாகும்..
(எ‍ - டு)."பூனையாரே! பூனையாரே!
நத்தையாரே! நத்தையாரே!
பசுவே! பசுவே!
'பனைமரமே! பனைமரமே!"
7. உவமை அணி, பொருள்விளக்கம், அழகுணர்வூட்டல், ஆகிய நோக்கங்களுக்கு மிகுதியும் பயன்பட்டுள்ளது. உயிரினங்கள், இயற்கைப் பொருள்கள், செயற்கைப் பொருள்கள், மக்கள் ஆகியன பற்றிய உவமைகளைக் கவிஞர்கள் எடுத்தாண்டுள்ளனர். மக்களின் பண்பை உணர்த்தும் நோக்கில் இயற்கைப் பொருள்களை உவமையாக்கிப் பாடுதல் பெருவழக்காக உள்ளது.
(எ‍ - டு) ‘ஆமை போல அடங்கிடாதே தம்பி,
“வாழையைப் போலவே நீ ‍ எல்லா
வகையிலும் உதவிடுவாய்'
8. உருவக அணி ஏற்ற இடங்களில் இடம் பெற்றுப் பாடல்களுக்கு அழகூட்டுகிறது.
(எ‍ - டு) "மீனினம் ஓடிப் பறக்குதம்மா ஊடே
வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா"
9. குழந்தைகள் சுவைத்து இன்புறத்தக்க இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை, குழந்தைகளின் வேடிக்கை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இயல்பு கற்பனை ஆகியனவும் பாடல்களில் இடம் பெற்று கவிஞர்களின் கற்பனை ஆற்றலைக் கோடிட்டுக் காட்டுகின்றன".
(எ‍ - டு) "வானத்திலே வெள்ளித் தட்டு
வந்து பாரம்மா வெளியே
வந்து பாரம்மா" (24)
என்று குழந்தைப் பாடல்களின் பின்பற்றப்பட்டுள்ள‌ இலக்கணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

இங்கு எடுத்துக்காட்டியுள்ள பாடல் வகைப்பாடுகளைக் கொண்டு
1.சந்தம், ஓசை நயத்திற்கும் பழகு தமிழ்ச் சொற்களுக்கும் முதன்மை வழங்கி எளிமையான நடையில் பாடல்கள் இடம்பெறுதல்.
2. பாடுபொருளுக்கேற்ப ஒலிக் குறிப்புச் சொற்களைப் பயன்படுத்தி, பொருள் புலப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தல்.
3. கொச்சைச் சொற்கள், பிற மொழிச் சொற்களை நீக்கிப் பாடல்களை வழங்குதல் (இச்சொற்கள் அரிதாக ஒரு சில பாடல்களில் இடம் பெற்றுள்ளன)
4. சொல்நயத்தை முதன்மையாகக் கொண்டு குழந்தைகள் தலை அசைத்து, கை தட்டி இரசித்துப் பாடும் வகையில் இனிமையாகப் பாடல்களை வழங்குதல்.
5. வினாவிடை முறைகள், புதிர் முறை, விடுகதைகள் முறையிலும், பாடல்களில் வழங்கும் உத்திகளை இயல்பாகக் கையாளுதல்
ஆகியன சிறுவர்களுக்கானப் பாடல் நெறிகளைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

"குழந்தைகள் தாமே பாடி மகிழ்வனவாகும், குழந்தைகள் விரும்பும் பொருள்களை காட்சிகளை விளையாட்டுகளைப் பற்றியனவாகவும், குழந்தைகள் வயதுக்கும் அறிவுக்கும் ஏற்ற சொற்களையும், கருத்துக்களையும், சந்தங்களையும், பெற்றனவாகவும் அமைந்தன... குழந்தைகளுக்காக குழந்தை உள்ளத்தோடு, குழந்தையின் மொழியில் குழந்தை உலகத்தை விளக்கும் பாடல்களே உண்மைக் குழந்தைப் பாடல் என்பது நான் கொடுக்கும் விடையாகும்."(25) என்று பூவண்ணன் கூறுகிறார். ஒரு படைப்பாளி வழங்கியுள்ள இவ்விலக்கண நெறிமுறைகளே பொருத்தமானதாகக் கொள்ளலாம்.



குறிப்புகள்

1. புரியாத புதிர், ஆ.கோவிந்தராசலு, அம்சா பதிப்பகம், கரிக்காலாம்பாக்கம், புதுவை,
பதி, 01.06.2002, அணிந்துரை, ப.2.
2. குழந்தை இலக்கிய வரலாறு, பூவண்ணன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக்.62
3.மூன்றாம் வகுப்பு, தமிழ், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 2009, ப.1
4. பாடுவோம் அறிவியல், சிறுவர்கள் அறிவியல் பாடல்கள், குழ.கதிரேசன், பூங்குழல் வெளியீடு, சென்னை, 1998.
5. கிள்ளைப் பாடல்கள், புதுமைப் பித்தன், அம்மன் புக் கம்பெனி, சென்னை 1996, ப.15
6.குழந்தைத் தெய்வங்கள், ந.தி.சுப்பிரமணியன், சூர்யா பதிப்பகம், திருவள்ளூர், 1998, ப.30
7. மூன்றாம் வகுப்பு, தமிழ், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 2009, ப.61
8. குழந்தைக் கவிஞரின் இலக்கியத் திறன், வெ.கிருட்டினசாமி, மாணிக்கவாசகர் நூலகம், சிதம்பரம், 1981, ஆக.15
9. குழந்தைப் பாடல்களில் பாடுபொருளும், பாடு நெறியும், வெ.தனலக்குமி, மங்கை வெளியீடு, சென்னை-18, டிச.1990, ப.80
10. வளரும் பூக்கள், செல்லகணபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, டிச.2008. ப.14.
11. மூன்றாம் வகுப்பு, தமிழ், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 2009, ப.64
12. மலரும் உள்ளம், அழ.வள்ளியப்பா, , குழந்தைப் புத்தக நிலையம், சென்னை, 1967, ப.42
13.குழந்தைப் பாடல்களில் பாடுபொருளும், பாடு நெறியும், வெ.தனலக்குமி, மங்கை வெளியீடு, சென்னை-18, டிச.1990, ப.371
14. மலரும் உள்ளம், அழ.வள்ளியப்பா, ப.4, குழந்தைப் புத்தக நிலையம்,மூன்றாம் பதிப்பு, சென்னை, 1974
15. எலி கடித்த பூனை, குழ.கதிரேசன், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 2002, ப.25
16.சிறுவர் பாட்டு, நரா.நாச்சியப்பன், அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை 41, மூன்றாம் பதிப்பு, 1999, ப.40.
17. குழந்தைக் கவிஞரின் இலக்கியத் திறன், வெ.கிருட்டினசாமி, மாணிக்கவாசகர் நூலகம், சிதம்பரம், 1981, ஆக.15, ப.41
18.மேற்படி நூல்
19. மலரும் உள்ளம், அழ.வள்ளியப்பா, ப.42, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை, தொகுப்பு -1, ப.3.
20. பேசும் கிளியே, குழ.கதிரேசன், பக்.14.
21. குழந்தைக் கவிஞரின் இலக்கியத் திறன், வெ.கிருட்டினசாமி, மாணிக்கவாசகர் நூலகம், சிதம்பரம், 1981, ஆக.15, ப.41
22. நெல்லை சு.முத்துவின் சிறுவர் இலக்கியப் படைப்புகள், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, க.பகலவன், 2009 10, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ப.25
23.அறிவியற் பூக்கள், ஆ.கோவிந்தராசலூ, அம்சா பதிப்ப்கம், கரிக்கலாம்பாக்கம், புதுவை, பதி, ஜூலை, 1995, ப.4
24. குழந்தைப் பாடல்களில் பாடுபொருளும், பாடு நெறியும், வெ.தனலக்குமி, மங்கை வெளியீடு, சென்னை-18, டிச.1990, ப.358-59.
25. குழந்தைக் கவிஞரின் இலக்கியத் திறன், வெ.கிருட்டினசாமி, மாணிக்கவாசகர் நூலகம், சிதம்பரம், 1981, ப.15

புதன், 7 செப்டம்பர், 2011

சிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -3


மூன்று நிலைகள்

பூமியிலும், வானத்திலும் உள்ள ஏராளமான இயற்கைக் கூறுகளை, மனிதன் படைக்கின்ற செயற்கைப் பொருள்களை சிறுவர்களுக்கு புரியும் மொழியில் ஒருவர் எழுதலாம். ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளக்கூடியதைத் தான் அப்படி எழுத முடியும். "இளம்பிள்ளைப் பருவத்திலே குழந்தைகளுக்கு அதிகம் படிக்கத் தெரியாது. அந்தப் பிராயத்தில் இளம் குழந்தைகள் தங்கள் கண்களை மலர விழித்து, தங்களைச் சூழ உள்ள அற்புதம் ஒவ்வொன்றையும் வியப்போடு நோக்குகின்றன; களிக்கின்றன; சிற்சில வேளைகளில் மழலைச் சொற்களால் தம் ஐயங்களை வெளியிடுகின்றன. ஓயாமல் கேள்விகளைக் கேட்கின்றன”.(8) இந்த உளவியல் பாங்கு சிறுவர் இலக்கியத்தின் மையப்புள்ளியாக, படைப்பு நெறியாக அமைகின்றன. பாடல்களின் நெறியும் இதுவேயாகும்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள் - நூல் விமரிசனம்

தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள் - முனைவர் மு.வளர்மதி; பக்.424; ரூ.185; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2வது முதன்மைச் சாலை, தரமணி, சென்னை-113.

ஒரு மொழி இலக்கிய வளர்ச்சிக்கும் செழுமைக்கும் அந்த மொழியில் படைக்கப்படும் புதிய ஆக்கங்கள், பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுந்த நூல்கள், பிற இலக்கியங்களிலிருந்து பெறும் மொழிபெயர்ப்புகள் ஆகிய மூன்று வழிமுறைகள் அடிப்படைத் தளங்களாக அமைந்தன என்ற முன்னுரையுடன் மொழிபெயர்ப்பின் அவசியத்தை விளக்கியுள்ளார் நூலாசிரியர். அந்த வகையில், தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் புதுமைப்பித்தன், அ.கி.ஜெயராமன், மாஜினி ரா.ரங்கசாமி, க.ரா.ஜமதக்னி, வெ.சாமிநாதசர்மா போன்றோரின் பங்கு குறிப்பிடத்தக்கது. "மொழிபெயர்ப்பு வேகம் மிகுதியாக இருக்கும் காலக்கட்டத்தில் இலக்கிய வேகம் மிகுதியாக இருப்பதைக் கடந்த கால வரலாறு காட்டும். மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு தொடர் பணி. ஒரு மொழியின் இலக்கியவாதிகள் மொழிபெயர்க்கப்படும்போது அந்த நூல்கள் வழியாக மற்றொரு மொழி இலக்கியவாதிகளுடன் ஒட்டுறவு ஏற்படுகிறது என்ற பதிவு உண்மை. அத்தகைய மொழிபெயர்ப்புக் கலையில் கைதேர்ந்த 17 அறிஞர் பெருமக்களைப் பற்றிய அற்புதமான பதிவு. இடையிடையே.. அவர்கள் கூறியுள்ள மொழிபெயர்ப்பு குறித்த கருத்துகளையும் எடுத்தாண்டுள்ளது சிறப்பு.

நன்றி‍: தினமணி (22.08.2011)