செவ்வாய், 19 ஜூலை, 2011

சிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -1

குழந்தைகளின் உலகம் விந்தையானது; வியப்பில் ஆழ்த்துவது; அறியும் ஆர்வம் மிக்கது; சுறுசுறுப்பானது; எதையும் உற்று நோக்குவது; அச்சமற்றது; பேதமற்றது; அன்பின் அரவணைப்பில் இன்பம் காணுவது; தன்மொழியில் பேசும்; வண்ண வண்ணப் பொம்மைகளின் வழியாகப் பொருட்களை அறியும்; அன்பு செலுத்தும்; விலங்குகள் பறவைகளிடம் தோழமைக் காட்டும்; தான் விரும்பியதை அடைய அழும்; கோபம் கொள்ளும்; அடம் பிடிக்கும்; பெரியவர்களிடம் பாட்டும் கதையும் கேட்டு அறியும்; இதைப் பேரின்பமாகக் கருதி மகிழ்ச்சியடையும்; இத்தகைய இயல்புடைய குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் இனிய எளிய முறையில் நல்லறிவைப் புகட்ட குழந்தை இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.சிறுவர் இலக்கியம்

தாய் தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடல்கள் பாடி, கதைகள் சொல்லி வந்த காலத்தை குழந்தைகள் இலக்கியத்தின் தோற்றக்காலம் என்று கூறலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தை இதற்கு வரையறுத்துக் கூற இயலாது. ஏனெனில் ஏட்டில் எழுதா இலக்கியமாக, நாட்டுப்புறப் பாடல்களாக, கதைகளாக வழங்கிய தாய்மாரும், பாட்டிமாரும் இதன் தொடக்க காலப் படைப்பாளிகள் என்பதை எல்லோரும் அறிவர்.

கைவீசம்மா கைவீசு, நிலா நிலா ஓடிவா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, போன்ற பாடல் வரிகள் தாயிடமிருந்து குழந்தைகளுக்கு முதல் இலக்கியமாக அறிமுகமாகின்றன. பிறகு வித விதமான பறவைகளும், விலங்கினங்களும் பேசுவது போல இடம் பெறும் சின்னச் சின்னக் கதைகளும், 'ஒரே ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தாராம்' எனத் தொடங்கும் கதைகளும், பிறகு இராமாயணம், மகாபாரதம், தெனாலிராமன் கதை, விக்கிரமாதித்தன் கதை போன்ற நெடுங்கதைகளும் குழந்தைகளின் அந்தந்த வயதுக்கேற்ப, வளர்ச்சிக் கேற்ப பல நூற்றாண்டுக் காலங்களாக, பல்லாயிரம் தாய்மார்களின் வாய்மொழியாக குழந்தைகளுக்கான இலக்கியம் வளர்ந்து வந்துள்ள‌து. தற்காலத்தில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மழலையர், சிறுவர்களுக்கான இலக்கியப் பரப்பு விரிந்து பரந்துள்ள‌து.

குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் என்ற இரு சொற்றொடர்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 3 வயது முதல் 6 வய‌து வரை மழலையர் என்றும் 7 வயது முதல் 14 வயது வரை சிறுவர் என்றும் குறிப்பிடப்படுவதால் இந்த இரு பிரிவுகளுக்குரிய பாடல்களும் கதைகளும் பிற படைப்புகளும் படைப்பாளிகளால் வழங்கப்படுகின்றன. தொல்காப்பியம், சங்க இலக்கியம், பிள்ளைத் தமிழ் போன்றவற்றில் குழந்தைகளைப் பற்றிய குறிப்புகள் பல இடம் பெற்றிருப்பினும் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உள்ள நூல்களுள் சிறுவர்களுக்கு நீதி நெறிகளை, அறநெறிகளைப் போதிக்கும் வகையில் பாடப் பெற்ற சில நூல்கள் சிறுவர்களுக்கான அறநூல்கள் எனும் வரிசையில் குறிப்பிடப்படுகின்றன.

1. ஒளவையாரின் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி

2. அதிவீரராம பாண்டியரின் 'வெற்றி வேற்கை'

3. உலகநாத பண்டிதரின் ' உலக நீதி'

4. குமர குருபரின் 'நீதி வெறிவிளக்கம்'

5. சிவப்பிரகாச சுவாமிகளின் 'நன்னெறி'

ஆகிய நீதி நூல்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவையெல்லாம் சிறுவர்களே படித்துப் பொருள் அறிந்து கொள்ளக் கூடியவை அல்ல. பெரியவர்கள், ஆசிரியர்கள் படித்து அவர்களுக்கு பொருள் விளக்கிக் கூற வேண்டியவையாகும். சிறுவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக்கூடியவையே சிறுவர் இலக்கியமாகும். ஆகையால் இவை சிறுவர் இலக்கியமாகாது.

சிறுவர்களுக்கான நூல்கள் எனும் பொழுது எழுத்துப் பயிற்சி நூல்கள், இலக்கணப் பயிற்சி நூல்கள், பாடநூல்கள், பாடல்கள், புதினங்கள், சிறுகதை நூல்கள், நாடகங்கள், சிறுவர்களுக்கான புதிர்க் கதைகள், புதிர்க் கணக்குகள், அறிவியல் நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், கட்டுரைகள், ஆளுமை நூல்கள், விளையாட்டுகள் பற்றிய நூல்கள், சுற்றுப்புறச் சூழலியல் நூல்கள், சிறுவர் பொது அறிவுக் களஞ்சியங்கள், இதழ்கள் எனப் பல்வேறு பிரிவுகளாகவும்,அதற்குள் உட்பிரிவு கொண்டவைகளாவும் உள்ளன. இத‌னால் சிறுவர் இலக்கியம் நவீன இலக்கியத்தின் ஒரு கூறாக இடம் பெற்று வளர்ச்சிப் பெற்றுள்ள‌து. தமிழில் இதுவரை சுமார் 5000 க்கும் மேற்பட்ட நூல்கள் சிறுவர் இலக்கிய‌ம் (அல்லது குழந்தை இலக்கியம்) எனும் பிரிவில் இடம் பெறுமளவிற்கு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான தனி நூலகங்கள், பதிப்பகங்கள், தொடங்கும் அளவிற்குத் தற்காலத்தில் இவை வளர்ச்சிப் பெற்றுள்ளன. சுமார் 200 பதிப்பகங்கள் சிறுவர் நூல்களை வெளியிட்டு வருகின்றன. ‘சிறுவர் இலக்கியவியல்’ என்று குறிப்பிடக்கூடிய அளவிற்கு படைப்புகள் பெருகியுள்ளன.

சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் பிற இலக்கியப் படைப்பாளிகளை விட குறைவு என்று எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

“சிறுவர் இலக்கியம் படைப்பவர்கள் மிக மிகக் குறைவாக இருப்பதற்கான காரண‌ங்களில் ஒன்று, அதைப் படைப்பதற்கு மிக நுட்பமான மன நிலையும் திறமையும் தேவை என்பது.. சிறுவர்களின் மனநிலைக்கு மாற வேண்டும் படைப்பாளி. மனமொழியை உள்வாங்கியிருக்க வேண்டும். வெள்ளந்தியான சுபாவம் வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களில் பெரிய பெரிய மகிழ்ச்சிகளும் உணர்ச்சிகளும் அடைய வேண்டும். தட்டானைப் பார்த்தால் துள்ளிக் குதிக்கிற வெள்ளை மனம் வேண்டும் . மயிலைப்பார்த்தால் கூச்சமில்லாமல் கும்மாளம் போடத் தெரிய வேண்டும்” ((1)

என்று குறிப்பிட்டுள்ளார். தற்காலத்தில் இச்சூழலில் ஓரளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. எழுத்தாளர்களும், படைப்புகளும் பதிப்பகங்களும் பெருகியுள்ளது இதற்கு ஒரு சான்றாகும்.

சிறுவர்களுக்கான தனி இதழ்களும் குறிப்பிடத்தக்க அளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. 1840 ஆம் ஆண்டில் தமிழில் 'பாலதீபிகை' என்ற குழந்தைகளுக்கான இதழ் முதன் முதலாகத் தொடங்கப்பட்டது. இதற்குப் பின் 'சிறுபிள்ளையின் நேசத் தோழன்', 'பாலியர் நேசன்' ஆகிய இதழ்கள் குழந்தைகளுக்கென வெளிவந்துள்ளன. 'விவேக சிந்தாமணி', 'ஜனவிநோதினி', தமிழர் நேசன்' முதலிய இதழ்கள் சிறுவர் பகுதிகளை வெளியிடத் தொடங்கின. 'பாலவிநோதினி', 'பொக்கிஷபரணி', ‘பாலர் மலர்’, ‘டமாரம்’, ‘சங்கு’, ‘பூஞ்சோலை’ 'பாப்பாமலர்', 'அணில்', ‘கல்வி', ‘சித்திரக்குள்ளன்', 'ஜிங்லி, 'பாலராஜ்யம்', 'கோகுலம்', அம்புலிமாமா, கரும்பு', 'கண்ணன்' ஆகிய பல இதழ்கள் குழந்தைகளுக்கெனச் சுவையான கதைகளும் வண்ணப் படங்களுடன் வெளியிட்டுள்ள‌ன.

இன்று பரவலாக மக்கள் ப‌டிக்கும் வார இதழ்களும் செய்தித்தாள்களும் சிறுவர் இதழ்களை வெளியிட்டு வருகின்றன. ஆனந்த விகடன் குழந்தைகளுக்கான 'சுட்டிவிகடன்', எனும் சிறுவர் இதழை வெளியிட்டு வருகிறது. தினமலர் நாளிதழ் 'சிறுவர் மலரை'யும், தினத்தந்தி நாளிதழ் 'சிறுவர் தங்கமலரை'யும், தினமணி நாளிதழ் 'சிறுவர் மணி' இதழையும் வண்ணப்படங்களுடன் சிறுவர்களின் சிந்தையைக் கவரும் வகையில் வெளியிட்டு வருகின்றன. பகுத்தறிவுக் கருத்துக்களைக் கூற 'பெரியார் பிஞ்சு' எனும் சிறுவர் இதழ் வெளியிடப்பட்டு வருகின்றது.

சிறுவர் இலக்கியத் தன்மை

சின்னஞ்சிறுவர்கள் இந்த உலகிற்குப் புத்தம் புதியவர்கள். இவர்கள் உலகை உற்று நோக்குகிறார்கள். வண்ண வண்ண மலர்களும், விதவிதமான ஓசைகளை எழுப்பும் பறவைகளும், விலங்குகளும், நிலவும் கதிரவனும், வானமும் பூமியும் கடலும் மலையும் பல்வேறு மனிதர்க‌ளையும் உற்று நோக்குகின்ற இந்த‌ இளம் இதயங்கள் எழுப்பும் வினாக்களும், அய்யங்களும் பெரியவ‌ர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. உதயமாகும் இவ்வறிவினைக் கண்டு கொண்டு, அதைச் செம்மைப்படுத்தி வழி நடத்திச் செல்லும் பொறுப்பும், கடமையும் பெற்றோர்களுக்கும், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு. இந்த அணுகுமுறைகளுடன் குழந்தைகளுடன் உறவாட பல இதழ்களில் வழியாக, தனிநிலை நூல்களின் வழியாக அவர்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துகள் சுவைபட, அவர்களின் உளவியலுக்கேற்ப பலவிதமான இலக்கிய வகைகள் எழுத்தாளர்களால் இயற்றப்படுகின்றன.

அன்பு காட்டுதல், இரக்கம் கொள்ளுதல், உண்மை பேசுதல், நேர்மை, உழைப்பு ஆகியவற்றின் சிறப்பை உண‌ர்த்துதல், கடமையைச் செய்தல், பணிவுடன் இருத்தல், துணிவுடன் செயல்படுதல், என்ற வாழ்க்கை நெறிகளை சிறுவர்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை வழங்கி வருகின்றனர். சிறுவர் இலக்கியவகை பலவாக இருக்கும் நிலையில் சிறுவர் பாடல்களில் உள்ள படைப்பு நெறிமுறைகளை மட்டும் இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படுகிறது.

2 கருத்துகள்:

 1. பயனுடைய கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள்.
  மொழிபெயர்ப்பு குறித்த தங்கள் பழைய கட்டுரைகளையும் உள்ளிடுங்கள்.

  மு.இளங்கோவன்
  புதுச்சேரி

  பதிலளிநீக்கு
 2. பயனுள்ள கட்டுரை. என் இடுபணிக்குத் தேவையான தகவல்களைக் கிடைக்கப்பெற்றேன்.மேலும் சிறுவர் பாடல் மற்றும் கதை பற்றி தகவல் இருந்தால் எழுதுங்கள். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு