வெள்ளி, 16 ஜூலை, 2010

ஆட்சித்துறையில் தமிழ் மொழிபெயர்ப்பு -1 - முனைவர்.மு.வளர்மதி


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியை நடத்த மக்களுக்கானத் தேவைகளை, கடமைகளை நிறைவேற்றப் பயன்படுத்தும் மொழி ஆட்சி மொழி எனப்படும். 07.10.1956 அன்று குளித்தலையில் தமிழ் ஆட்சிமொழி மாநாடு நடைபெற்றது. 1.11.1956 முதல் சென்னை மாகாணம் என்பதிலிருந்து ஆந்திரம், கேரளம் ஆகியவற்றின் பகுதிகள் பிரிந்து தனித்தனியே மொழிவாரி மாநிலங்கள் அமைந்ததால் அந்நாள் முதல் தமிழ் வழங்கும் பகுதி தனி மாநிலமாகச் 'சென்னை மாநிலம்" எனத் தோன்றியது. அதனைத் தொடர்ந்து தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 27.12.1956 அன்று தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின்படி (த.நா.சட்டம்‍ 39/1956) அவ்வப்போது அறிவிப்புகளும் அறிக்கைகளும் தமிழில் வெளியிடப்பட்டு மாநில அரசின் கீழ் இயங்கும் பல்வேறு ஆட்சித்துறை அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1966 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் ஆட்சி மொழி தமிழ் என்பதைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சி மொழிக்குழுவின் தொடக்க விழா நடைபெற்றது. 1967 ஆம் ஆண்டில் கழக அரசு அமைந்த பின் சென்னை மாநிலம் என்பதை அறிஞர் அண்ணா 'தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தது முதல் பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் தமிழ் ஆட்சி மொழிப் பணிகளாக மேற்கொள்ளப்பட்டன.
27.09.1969 ஆம் நாள் அரசின் ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதைப்போன்றே 02.12.1971 ஆம் நாள் அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சார்நிலையில் அமைந்திருக்கின்ற அனைத்து நீதி மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் 14.01.1970 முதல் நீதிமன்ற சாட்சியங்களைத் தமிழில் பதிவு செய்து கொள்ளலாம் என 13.11.1969 ஆம் நாள் ஆணையிடப்பட்டது.
அரசு நிருவாகம் முழுவதிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்குடன் 28.05.1971 அன்று தமிழ் வளர்ச்சி இயக்கம் எனத் தனி ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டது. அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக 13.05.1996 அன்று தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்சிப் பணிகளில் தமிழ் முழுமையாக இடம் பெறும் வகையில் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. கல்வி நிலையிலும் தொடர் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் என்ற நிலையை மாற்றி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற குறிக்கோளை நோக்கி செயல்பட்டு வரும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே ஆங்கிலத்தின் வழியாக செயல்படுத்தப்பட்டு வந்த ஆட்சிப் பணிகள் அனைத்தும் தமிழில் எழுதப்பட வேண்டும் எனும் பொழுது மொழிபெயர்ப்பு என்ற ஒரு பெரும் பணி இன்றியமையாததாகிறது.
துறைசெயல்பாடுகள் தமிழில் அமைவதற்கு அடிப்படைத் தேவையாக உள்ள நிருவாகம் தொடர்பான நூல்கள் பல மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. துறைகளில் பயன்படுத்தப்படும் படிவங்கள் முழுமையாகத் தமிழாக்கம் செய்யப்பட்டு துறைகளின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. 1. மாவட்ட அலுவலக நடைமுறை நூல், 2. வருவாய் வாரிய நிலையாணைகள், 3.காவல்துறை நிலையாணைகள், 4. தமிழ்நாடு தலைமைச் செயலக நடைமுறை நூல், 5. தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள் ‍ தலைமைச் செயலக அறிவுறுத்தங்கள்(advisory), 6. தமிழ்நாடு தனிநிதி விதித் தொகுப்பு, 7. தமிழ்நாடு ஊராட்சிச் சட்டம், 8. தொழில்களுக்கான அரசு நிதியுதவிச் சட்டம், 9. நில அபிவிருத்திச் சட்டம் மற்றும் விதிகள், 10. தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து விதித் தொகுப்புகள், 11. தமிழ்நாடு நிதி விதித் தொகுப்பு, 12. சிறைச்சாலை‍ சீர்திருத்தப்பள்ளி நடைமுறை நூல், 13. தாலுகா கணக்கு நடைமுறை நூல், 14. மீன் துறை நடைமுறை நூல், 15. தமிழ்நாடு தற்காலிகக் கடன்கள் நடைமுறை நூல், 16. தமிழ்நாடு ஊழியர்கள் ‌நடைமுறை நூல். இவைம‌ட்டும் இல்லாம‌ல் பின்ன‌ர் ஏனைய‌ துறைக‌ளுக்குரிய‌ ந‌டைமுறை நூல்க‌ளும் த‌மிழாக்க‌ம் செய்து அச்சிட‌ப்ப‌ட்ட‌ன‌. இம்மொழி பெய‌ர்ப்புப் ப‌ணிக‌ள் ப‌ல‌ரால் செய்ய‌ப்ப‌டுவ‌தால் மொழி அமைப்பிலும் சொற்களின் ப‌ய‌ன்பாட்டிலும் ஒருமைப்பா‌டு இல்லாம‌ல் போவ‌து இய‌ல்பு. இவ‌ற்றை ஆய்வு செய்து ஒழுங்க‌மைவு செய்ய மேலும் ப‌ணியிட‌ங்க‌ள் தோற்றுவிக்க‌ப்ப‌ட்டு ப‌ணிக‌ள் ந‌டைபெறுகின்ற‌ முறைமை உருவாகிய‌து.
அனைத்துத் துறைகளுக்கும் உரிய நடைமுறை நூல்களும் விதிகளும் விதித்தொகுப்புகளும் அனைத்துப் படிவங்களும் ஆங்கிலத்திலேயே இருந்தன. தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இவற்றைத் தமிழில் மொழி மொழிபெயர்க்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியது. தமிழ் வளர்ச்சித் துறை இப்பணிகளை மேற்கொண்டது. மேலும் கல்வி நிலையில் பல்துறை நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடத் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஒன்று நிறுவப்பட்டு மிகச் சிறந்த நூல்களை வெளியிட்டது. இது தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று தனிப்பெயருடன் வழங்கப்பட்டது. மொழிபெயர்ப்புக்குத் தேவையான அகராதிகள் தயாரித்தல், மொழிச் சிறுபான்மையினருக்குப் பயிற்சி அளித்தல் போன்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சட்டமன்றம், ஆட்சி, நீதி என்ற மூன்று பெரும் பகுதிகளைக் கொண்டு விளங்குகின்ற அரசின் பணிகளில் தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழ் ‍வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையின் மொழிபெயர்ப்புப் பிரிவின் பணிகள் குறிப்பிடத்தக்கனவாகும். மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் உடனடியாக மாற்றங்களை உருவாக்குகின்ற பணி தலைமைச் செயலக மொழிபெயர்ப்பு பிரிவின் பணிகளாகும்.
தலைமைச் செயலகத் துறைகளிடமிருந்து தமிழில் மொழிபெயர்த்து அளிக்க வேண்டிய ஆணைகள், கூட்ட முன் வரைவுகள், அவச‌ர அரசாணைகள், சட்டமன்ற விவாதங்கள், வரவு செலவுத் திட்ட அறிக்கை(Budget), பொதுக் கணக்காய்வுக்குழு அறிக்கைகள் (Public Accounts Committee Reports), பொது நிறுவனங்கள் குழு அறிக்கை (Public Undertakings Committee Reports), சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் (Law and Order), அவ்வப்போது அரசு அமைக்கும் குழு தரும் அறிக்கைகள், துறைகளின் கொள்கைவிளக்கக் குறிப்பு (Policy Note), சுற்றோட்டக் குறிப்பு (Circular Note), அறிவிக்கைகள் (Notifications), மத்திய அரசிடமிருந்து பெறப்படும் கடிதங்கள் உரிய அமைச்சர்களுக்கு தமிழாக்கம் செய்தல், அவ்வப்போது தேவையான பத்திரிகைச் செய்திகளைத் தமிழாக்கம் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அரசுப் பணி மொழிபெயர்ப்பில் அடங்குவனவாகும். இம்மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வது அவ்வளவு எளிதானதல்ல.


“Learning the art of translation is not an easy joke. It has to be cultivated by hard work followed by dedication. In Government, we adopt a method of true translation or faithful translation ‘Nothing shall be omitted, nor added’ shall be the principle. Translation has to be expressive and explicit so that we never land in ambiguity” (1)
என்று குறிப்பிடுகிறார் அறிஞர் திரு.கு.பாலசுப்பிரமணியன்.
தலைமைச் செயலக மொழிபெயர்ப்புத் துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அறிஞர் திரு.கு.பாலசுப்பிரமணியன் தன் அனுபவத்தின் வாயிலாக மூலத்திற்கு நேர்பெயர்ப்பாக எதையும் நீக்காமல் அல்லது எதையும் சேர்க்காமலும் அய்யத்திற்கிடமின்றி மொழிபெயர்க்கப்படுகின்ற முறையைப் பன்பற்றுவதாக மேற்குறிப்பிட்டுள்ள கருத்துரையின் மூலம் அறிகிறோம். நேர்பெயர்ப்பாக‌ அமையும் பொழுது எல்லா ஆங்கில மொழிச் சொற்களுக்கும் தமிழ்ச் சொற்கள் அமையாத நிலையில் மொழியாக்கம் அல்லது கலைச்சொல்லாக்கம் செய்ய வேண்டியுள்ளதை பல அறிஞர்களும் தங்களனுபவ வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளனர். நேர் மொழிபெயர்ப்பு என்ற நிலையிலும் சொல்லுக்குச் சொல் பெயர்ப்பது அல்ல என்பது அனுபவ உண்மையாகும்.
உள்ளதை உள்ளவாறே பெயர்ப்பது மொழிபெயர்ப்பு. உள்ளதை உணர்ந்தவாறு பெயர்ப்பது மொழியாக்கம். உள்ளதை உருமாற்றிப் பெயர்ப்பது தழுவல். இம்மூன்று நிலைகளும் மொழிபெயர்ப்பில் பின்பற்றக் கூடியவையாகும். ஆட்சித் துறை மொழிபெயர்ப்பு என்பது உள்ளதை உள்ளவாறே பெயர்க்கின்ற நேர்பெயர்ப்பு முறையாகும். நேர் பெயர்ப்பு எனும் பொழுது அதற்குரிய பொருளுடன் உரிய தன்மையை உணர்த்தும் வகையில் பெயர்ப்பது என்பது கவனிக்கத் தக்கதாகும்.
(-டு) அரசுப் பணியில் அரசுப் பணியாளர்களுக்குக் கடன்கள் வழங்குவதில் சில வரன்முறைகள் உண்டு. சில கடன்கள் மூன்று நான்கு முறைகளுக்கு மேல் வழங்கப்படக் கூடாதென வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகு நிலையில் கடன் ஒப்பளிப்புச் செய்யப்படும் போது சுட்டவேண்டும். அதற்கு ஆங்கிலத்தில் This should be his last loan என்ற தொடர் வருகிறது. இதை அப்படியே மொழிபெயர்த்தால் 'இதுவே இவருக்கு இறுதிக் கடனாக இருக்கும்' என அமையும். Last என்பதற்கு இறுதி என்பதும் loan என்பதற்கு கடன் என்பதும் த‌னித் தனி நிலையில் சரியான மொழிபெயர்ப்பாகும். ஆனால் இவ்விரு சொற்களும் இணைந்து 'இறுதிக் கடன்' என்று வரும் போது அது ஈமக்கடன், நீத்தார் கடன் என்ற வகையில் முரண்பட்ட பொருளைத் தந்து நிற்கின்றது. எனவே இதை 'இதுவே இவருக்கு வழங்கப்படும் இறுதியான கடன் தொகையாகும்' என்று மொழிபெயர்ப்பது நலம் பயக்கும். கருத்து முரண் ஏற்படாத வகையில் மொழிபெயர்க்க வேண்டியது இன்றியமையாததாகிறது".(2) ஆகையால் நேருக்கு நேரான சொல் இருந்த போதிலும் மொழியின் நிலையறிந்து ‍ மரபு அறிந்து இடத்திற் கேற்றவாறு பொருத்தமான மொழிபெயர்ப்பை வழங்க வேண்டும் என்பதை அறியலாம்......
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக