எஸ். ஆர். கண்ணம்மாள்
மு..வளர்மதி
பெரியாரின் தங்கை கண்ணம்மாள் 1891 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை வெங்கட்ட நாயக்கர் கன்னட மொழி பேசும் பலிஜ நாயக்கர் வகுப்பினைச் சேர்ந்தவர். அவர் மனைவி சின்னத்தாயம்மாளுடன் ஈரோடு பெருநகரத்தில் அன்றாடம் கூலி வேலை செய்து ஏழ்மை நிலையில் தமது வாழ்க்கையை நடத்தி வந்தார். கடுமையான உழைப்பினால் உயர வேண்டும் என்ற எண்ணத்துடன் வண்டி, மாடுகள் வாங்கி அவற்றின் வாயிலாக வருவாயைப் பெருக்க முனைந்தார். ஈரோடு வணிகச் சிறப்புடையதால் தம் மனைவி சின்னத்தாயம்மாளின் துணையுடன் சிறு மளிகைக் கடை ஒன்றினை வண்டிப்பேட்டையில் துவக்கினார் வெங்கட்ட நாயக்கர். ,முழுமூச்சுடன் உழைத்ததுடன் நாணயமும்,நேர்மையும் மிக்க அவருடைய பண்பு அவரைப் பெரும் மண்டிக்கடையின் உரிமையாளராக உயர்த்தியது.
சில்லரை வாணிபத்திலிருந்து விடுபட்டு பொருட்களை மொத்தமாகக் கொள்முதலும் விற்பனையும் செய்வதில் ஈடுபட்டு மிகப் பெரும் வணிகரானார். ஈரோட்டில் நாயக்கர் என்றால் வெங்கட்டநாயக்கர்தான்; நாயக்கர் மண்டி என்றால் வெங்கட்ட நாயக்கரின் மண்டிக்கடைதான்; நாயக்கம்மாள் என்றால் சின்னத்தாயம்மாள்தான் என்று கூறும் அளவிற்கு அறிமுகமானார்கள்.
செல்வம் பெருகினாலும் சின்னத்தாயம்மளுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை என்ற ஒரு குறை இருந்து வந்தது.
"கூலிக்காரராய் வாழ்வு தொடங்கிய நாயக்கர் ஊழையும் உப்பக்கம் காண்குவராய், உலைவின்றித் தாழாது உஞற்றிக் குன்றெனச் செல்வந்திரட்டி, வணிக வேந்தராய் விள்ங்கினார். பொருள் குவிந்திட்டால் புகழ் பெருகும்; தானதர்மங்கள் பெருகும்; நட்பும் சுற்றமும் நயந்து சூழும்; வீடு மாளிகையாகும்: மாளிகை சத்திரமாகும்; சத்திரத்தில் சாப்பாடு பெருகும்: அந்தஸ்து வளரும்; ஆதரவு நாடுவோர் அலை அலையாய் வருவர்; பக்தி பெருகும்; பாகவதர்கள் வருவர்; வீடே பஜனை மடமாய் மாறும்; இதெல்லாம் நாட்டு வழக்கந்தானே? நாயக்கர் மட்டும் விதிவிலக்கா? பரம பாகவத சிரோமணியானார்; வைணவ சித்தாந்த வள்ளலும் ஆனார் வெங்கட்ட நாயக்கர். அறப்பணியும் திருப்பணியும் அளவு கடந்து செய்தும் தேவைப்பட்ட சிறப்புக் கிடைக்கவில்லை நாயக்கருக்கு. காரணம், திருமணமாகிப் பத்தாண்டுகள் கழிந்தும் சின்னத்தாயம்மாள் இன்னும் தாயாகவில்லையே! பக்தியும் விரதமும் நோன்பும் சிரத்தையும் பெருகின! தொடர்ந்தன!
-2-
வைணவ குலதிலகம் நாயக்கர் மனம் மகிழ (இரண்டு மூன்று பிள்ளைகள் பிறந்தவுடன் இறந்து போயினும்) கடைசியில், 1877- செப்டம்பர் 28 ஆம் நாளில் கிருஷ்ணசாமியும் 1879 செப்டம்பர் 17 ஆம் நாளில் இராமசாமியும் 1881- இல் பொன்னுத்தாயம்மாளும் 1891- இல் கண்ணம்மாளும் மக்களாய்ப் பிறந்தனர்' ( கவிஞர் கருணானந்தம் ' தந்தைபெரியார் வாழ்க்கை வரலாறு' பக்-7-8)
எந்த நேரமும் வீட்டில் பூசைகளும்., புராண கதாகாலட்சேபங்களும், பஜனைப் பாடல்களும், வைணவ சமயச் சடங்குகளும் நடந்தேறிய வண்ணம் இருந்த சூழலில் பிறந்த நால்வரும் தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்திற்கு விதைகளாகவும் வேர்களாகவும் நின்றார்கள். ஈ.வெ. கிருஷ்ணசாமி தமது தம்பி ஈ.வெ. இராமசாமியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வைதிகப் பிடியிலிருந்து விடுபட்டு சுயமரியாதை இயக்கப் பிரச்சாரப்பணியிலும், குடியரசு ஏடு நடத்துவதிலும், அதன் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்டவராக, அதற்கென சிறை சென்றவராக தமது குடும்பத்தினரையும் பகுத்தறிவுப் பாதையில் இட்டுச் செல்லக் கூடியவராக, நெருக்கடியான நிலைகளில் தமது தம்பி ஈ.வெ. இராமசாமிக்கு தோள் கொடுக்கும் துணையாகவும் விளங்கினார்.
எதிலும் சுயசிந்தனையாளராக விளங்கிய ஈ.வெ,.இராமசாமி அக்கால மக்கள் சென்ற பாதையில் செல்லாமல் எதையும் ஏன், எதற்கு என்ற சிந்தனையுடன், ஏற்றத்தாழ்வும், மூடநம்பிக்கையும் அகற்ற முனையும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு உலகம் காணாத ஒப்புயர்வற்ற பகுத்தறிவுச் சிந்தனையாளராக விளங்கியதால் தமிழகமே அவர் பின் செல்லும் அறிவியக்கமாக விளங்கினார். பெரியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றதுடன் 'தந்தை பெரியார்' என்ற பெரும் பெயர் பெற்றார்.
பெரியாரின் தங்கை பொன்னுத்தாய் அம்மாளை கண்ணம்மாளின் கணவர் எஸ். இராமசாமி நாயக்கரின் அண்ணன் கல்யாண சுந்தர நாயக்கருக்கு மணம் முடிக்கப்பட்டது.
பொன்னுத்தாயி அம்மாள் கலியாண சுந்தரம் இணையருக்கு அம்மாயி அம்மாள், அப்பய்யன் என இரு குழந்தைகள் பிறந்தனர். இந்த அம்மாயி அம்மாளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து கணவர் இறந்து போனதால்
-3-
பெரியார் இவருக்கு விதவைத் திருமணம் ந்டத்தித் தமது குடும்பத்தில் புரட்சி செய்து காட்டினார். இந்த வகையில் பொன்னுத்தாயி அம்மாளின் குடும்பம் விதவை மணம் முடித்த முன்னோடிகளாக முதல் முறையினராகத் திகழுகின்றனர். இவ்வகையில் பெரியாரின் தங்கை பொன்னுத்தாயி அம்மாளின் குடும்பம் அம்மாயி அம்மாளின் விதவை மணம் மூலம் சாதனை நிகழ்த்தியது எனலாம்.
கடைசிப் பெண்ணான கண்ணம்மாள் பெரியாருக்கு இரண்டாவது தங்கை, இராமசாமியார் ஓர் நாள் ஊரைவிட்டு யாருக்கும் சொல்லாமல் வெளியேறிவிட்டார். நேரே சென்னை மாநகரம் வந்து சேர்ந்தார். தம்முடன் துணைக்கு இரண்டு மூன்று நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார். அவர்களில் ஒருவர் பெயர் இராமசாமி நாயக்கர் என்னும் மாப்பிள்ளை நாயக்கர்.
ஆம்! இவர் எஸ். இராமசாமி நாயக்கர். வெங்கட்ட நாயக்கரின் மகள் கண்ணம்மாளின் கணவர். இவருக்கு மஞ்சள் மண்டி வணிகம். முதல் மனைவியான கண்ணம்மாளுக்குக் குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி பொன்னம்மாள் மூலமாக ராஜாத்தி என்கிற சுப்புலட்சுமி, காந்தி, சரோஜினி ஆகிய மூன்று பெண்மக்கள், சந்தானம், சாமி இரு ஆண்மக்கள். இவர்களை கண்ணம்மாளின் மக்கள் என்றே அனைவரும் கருதுவர். எஸ். இராமசாமி நாயக்கர் 1951 ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாளும் எஸ். ஆர். கண்ணம்மாள் 1971 பிப்ரவரி 23 ஆம் நாளும் மறைந்தனர். இந்த இராமசாமி நாயக்கரின் மக்கள் எஸ். ஆர். சந்தானம், எஸ்.ஆர். சாமி ஆகியோர் இன்று ஈரோட்டில் பிரமுகர்கள். மாப்பிள்ளை நாயக்கரின் மக்கள் என்று இவர்கள் அன்புடன் அழைக்கப்படுவார்கள் .(தந்தைபெரியார்- வாழ்க்கை வரலாறு- கவிஞர் கருணானந்தம்-பக்.25)
ஈ.வே.கண்ணம்மாள் எஸ். இராமசாமி நாயக்கரை மணம் முடித்த பிறகு எஸ்.ஆர்.கண்ணம்மாள் என்று வழங்கியுள்ளனர். குடிஅரசு இதழ்களில் எஸ்.ஆர்.கண்ணம்மாள் என்றும் சா.ரா.கண்ணம்மாள் என்றும் குறிப்பிட்டிருப்பதை இன்றும் காணலாம்.. ஈ.வே.ரா.வின் தங்கை ஈ.வே.கண்ணம்மாள் என்று வழங்காமல் எஸ்.ஆர்.கண்ணம்மாள் என்று பெயரிட்டிருப்பது சிலரை குழப்பவே செய்யும். இதற்கு விடையளிக்கவே இந்த விளக்கம்.
எஸ். ஆர். கண்ணம்மாள் தமது அண்ணன் ஈ.வே.ரா.வின் பகுத்தறிவுச் சிந்தனைகளை செயல்படுத்துவதில் பெரிதும் முனைப்புக் காட்டியுள்ளார். கதர் உடுத்தி காங்கிரஸ் கொள்கைகளை ஏற்பதில் தொடங்கி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு குடியரசு, புரட்சி ஏடுகளை நடத்தி, கைதாகி சிறைக்குச் சென்று மகளிரிடையே ஒரு
-4-
கருத்துப் புரட்சியை வழங்குபவராகவும் செயல்பட்டுள்ளார். இந்த வகையில் பெரியாரின் அண்னன் தங்கைமார் அவர்களுடைய பிள்ளைகள் என அவருடைய குடும்ப உறுப்பினர்களே பகுத்தறிவுக் களத்தில் வீரர்களாக நின்றார்கள்.
கள்ளுக்கடை மறியல்
காங்கிரசின் மிக முக்கியமன கொள்கையான மதுவிலக்குக் கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்யக் காந்தியடிகள் தேர்வு செய்த ஊர் ஈரோடு. தேர்ந்தெடுத்த இடம் ஈ.வெ.ராமசாமியின் மாளிகை. இங்குதான் காங்கிரஸ் தலைவர்கள் கூடிக் கள்ளுக்கடையின் முன் மறியல் செய்வது என்பதைத் தீர்மானித்தனர். மதுவிலக்குக் கொள்கையில் தீவிரமாக செயல்பட்ட பெரியார் தமது தோட்டங்களில் இருந்த சுமார் அய்ந்நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஒரே நாளில் அடியோடு வெட்டி வீழ்த்தினார் என்பது ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க நடவடிக்கையாகும். இந்த ஈடுபாடே காந்தியாரும் பிற தலைவர்களும் ஈரோட்டில் வந்து போராட்ட வழிமுறைகளை வகுக்கக் காரணமாய் இருந்தது. பெரியார் மீது கொண்ட் நம்பிக்கையால் கங்கிரசார் ஈரோட்டிலேயே கள்ளுக்கடை மறியல் போராட்டத்தைத் துவக்கிட நினைத்தனர். நாகம்மையாரும், கண்ணம்மாளும் பெரும் வீராங்கனைகளாய் நின்று களம் புகுந்தனர். ஈரோட்டில் 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதால் ஆயிரக்கணக்கான ஆண் பெண் தொண்டர்கள் அணி வகுத்து நின்றனர். பல்லாயிரம் பேரை அடைத்து வைக்க சிறைச்சாலையில்லை என அரசு திகைத்து நின்றது. 144 தடை உத்திரவை நீக்கிக் கொள்ள பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. நாகம்மையார் கண்ணம்மாள் இருவரின் கள்ளுக்கடைப் போராட்டம் குறித்து 1922 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 19 நாளிட்ட இந்து நாளேடு வெளியிட்டது.
காந்தி அடிகளின் ஒத்துழையாமைக் கிளர்ச்சிகளை நிறுத்துவதற்கான சமாதானப் பேச்சு வார்த்தைகள் பம்பாயில் நடைபெற்றன. அரசு ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்ததால், பண்டித மாளவியா, சர் சங்கரன் நாயர் ஆகிய இருவரின் முயற்சியால் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. அதில் அவர்கள் இருவரும் கள்ளுக்கடை மறியலை நிறுத்திவிடுங்கள். வேறு நடவடிக்கை துவக்கலாம் என்று கேட்டபோது காந்தியடிகள் மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை அது ஈரோட்டில் உள்ள இரு பெண்மணிகளிடம் உள்ளது, அவர்களைத் தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்தார்.
-5-
பெரியாரின் மறைவிற்குப்(1973, டிச-24) பிறகு டிசம்பர் 26 ஆம் நாள் பெருந்தலைவர் காமராஜர் பெரியாரை நினைவு கூர்ந்து 'காண்டீபம்' என்ற இதழுக்கு செய்திகளை வழங்கும் போது பெரியார் நடத்திய மறியலைக் குறித்து கூறும் பொழுது நாகம்மையார் கண்ணம்மாள் சிறை சென்ற முதல் பெண்மணிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
"பெரியார் பேச்சோடு நில்லாமல் மற்றொரு காரியமும் செய்தார். அதாவது ஈரோட்டில் தானும் தன் துணைவி நாகம்மையாரையும் சகோதரி கண்ணம்மாவையும் அழைத்துக் கொண்டு கள்ளுக்கடை மறியல் செய்தார். இதைக் கேட்ட தமிழ்நாடே அதிசயித்தது. காரணம் திருமதி நாகம்மையும் கண்ணம்மாவும் பெரியாரோடு கைதானார்கள். தமிழ்நாட்டில் இவ்விருவரும் தான் சிறை சென்ற ,முதற்பெண்மணிகள் என்பது என் நினைவு. பெரிய குடும்பத்தாரே சிறை சென்றார்கள் என்று ஈரோடு நகரமே மலைத்து நின்றது.
கள்ளுக்கடை மறியல் அவசியமில்லை என்று சிலர் மகாத்மாவுக்கு எழுதினார்கள். அதற்காக அவர் 'கள்ளுக்கடை மறியல் பற்றி சிலர் சந்தேகங்களைக் கிளப்பி எனக்கு எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இப்பிரச்னையில் பதில் சொல்ல திறமையானவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் தன் குடும்பத்தோடு இம்ம்றியலில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கும் ஈரோடு ராமசாமி நாயக்கர். எனவே அவர்கள் இவரிடம் சென்று தமது சந்தேகங்களைக் கேட்பாளர்களாக! என்றார். மகாத்மாவின் இந்த பதிலைக் கேட்டு அகில இந்தியாவும் பெரியாரைப் பாராட்டியது" என்று பெருந்தலைவர் காமாராஜர் அந்த வரலாற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைக்கம் போராட்டம்
'1924- ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி, வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற 5 பெண்கள் வந்தனர். நாகம்மையார், எஸ். ஆர். கண்ணம்மாள், திருமதி நாயுடு, திருமதி சாண்ணார், திருமதி தாணுமலைப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறி சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றனர். தடை விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். தடையை அகற்ற முயன்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மா, பெரியாரின் துணைவியாரிடம் நீங்கள் எந்த சாதி என்று கேட்டார். இந்தப் போராட்ட அணிக்குத் தலைமைத் தாங்கியவர் பெரியாரின் துணைவியார். 'எங்களில் யார் எந்த சாதி என்று பார்த்து, தாழ்த்தப்பட்ட சாதியினரை மட்டும் அறிந்து அனுமதி மறுக்கலாம் என்று பார்க்கிறீர்களா? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை எல்லோரும் இந்த வீதியில் செல்ல அனுமதிக்க வேண்டும்' என்று நாகம்மையார் கூறினார்.
-6-
மீனவர்கள் மீன் கூடையைத் தூக்கிக் கொண்டு போகக்கூட இங்கே அனுமதிக்கும்போது மனிதர்கள் நடமாட ஏன் அனுமதி மறுக்க வேண்டும் என்று பெரியாரின் சகோதரி கேட்டார். தடையை மீற வந்த பெண்கள் அந்த இடத்தை விட்டு அகல மறுத்து பல மணி நேரம் அதே இடத்திலேயே இருந்தனர்.
இறுதியாக பிச்சு அய்யங்கார் என்ற போலீஸ் கமிஷனர் வந்தார். 'பெண்கள் என்பதற்காக தனிச்சலுகை எதுவும் காட்ட வேண்டாம்; ஆண்களை எப்படி நடத்துவீர்களோ அப்படியே இவர்களையும் நடத்துங்கள்' என்று இன்ஸ்பெக்டர் சர்மாவிற்கு உத்தரவிட்டார். ( மலையாள தினசரி கேரள கவுமதி 1924 மே மாதம் 23 ஆம் தேதி வெளியிட்ட செய்தி.) கிளர்ச்சியில் பங்கு கொண்ட பெண்களை எப்படி நடத்துவது என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருப்பதன் மூலம் இந்தக் கிளர்ச்சியில் முதலில் பங்கு பெற்றவர்கள் தந்தை பெரியார் குடும்பத்துப் பெண்கள்தான் என்பது விளங்குகிறது' என தந்தை பெரியார் 100 ஆவது ஆண்டு பிறந்த நாள் மலர் (பக்.133) 1928 குறிப்பு செய்தியையும் வெளியிட்டுள்ளது.
மூடநம்பிக்கை ஒழிப்பு
பெண்கள் சடங்குமுறைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும் என்ற அவருடைய சிந்தனைக்கு அவருடைய பேச்சு இதற்கு ஒரு சான்று.
" சீமந்தம் வளைகாப்பு என்பதன் பெயரால் கர்ப்ப ஸ்திரீயை நமது நாட்டில் கஷ்டப்படுத்தும் கொடுமையைச் சொல்லி முடியாததாயிருக்கின்றது.. கர்ப்ப ஸ்திரீக்கு பூமுடித்தல் என்பதன் பெயரில் ஊரிலுள்ள புஷ்பங்களை யெல்லாம் சூட்டி மேற்படி வாசனையால் தலைவலி வரச் செய்துவிடுகிறார்கள். மேலும் கர்ப்ப ஸ்திரீக்கு பளுவான புடவைகள் கட்டி 2, 3 மணி நேரம் மனை இருத்தல் என்று சொல்லி இருக்க வைக்கின்றனர். இம்மாதிரியான கஷ்டமான அநாகரீகமான சடங்குகள் எதற்கு என்று கேட்டால் இவைகளெல்லாம் பெரியோர்கள் செய்தது. அதனால் அப்படியே நடக்க வேண்டுமென்று ஏராளமாகப் பதில் சொல்லி விடுகின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் பெரியோர்கள் 20,30 மைல் தூரம் பிரயாணம் போவதாய் இருந்தாலும் கட்டமுது கட்டி
தோள்மேல் போட்டுக் கொண்டு நடந்தே போய் விடுகின்றனர். ஆனால் இக்காலத்திலோ இரயிலென்றும் மோட்டாரென்றும், ஜட்கா என்றும் அநேக வாகனங்கள் இருக்கின்றன.
ஊர்ப்பிரயாணம் போக வேண்டுமாயின் கொண்டு வா மோட்டார் என்கிறார்கள். இது விஷயத்தில் மாத்திரம் பெரியோர்கள் நடந்தபடி நடப்பதில்லையே. ஏன் தற்கால நாகரீகத்துக் கேற்றவாறு நடப்பதால்தானே. அதேபோல தற்கால நாகரீகத்துக்கு
-7-
ஒவ்வாத சடங்குகளையும் ஒழிக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு காதுகுத்தல் போன்ற இம்சையையும் செய்கின்றனர். எனவே இம்மாதிரியான அனாவசியமானதும் அர்த்தமற்றதுமான சடங்குகளை ஒழித்து அதற்குச் செலவிடும் பணத்தை ஏழை மக்களுக்கு படிப்பூட்டினால் மிகவும் நன்மையானதும் பிரயோஜனமானதுமாக இருக்கும்" (திராவிடன், 1929, மே.20) என்று 1929 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் மாலை ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தின் சார்பில் திரு.ஈ.வே.ரா. அவர்களின் மாளிகையில் திருமதி லஷ்மியம்மாள் அவர்களின் தலைமையில் கூடிய ஒரு மாபெரும் கூட்டத்தில் இவ்வாறு பெரியாரைப் போலவே அவருடைய தங்கை கண்ணம்மாளும் பேசியுள்ளார். 1929 ஆம் ஆண்டு இவ்வாறு பேசியது புதுமை என்பதோடு புரட்சி என்றுதான் கருதவேண்டும். அத்துடன் குடிஅரசு, புரட்சி இதழ்களை அச்சிட்டவர், வெளியிட்டவர் என்ற நிலையில் தந்தை பெரியாருடன் எஸ்.ஆர். கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டார். பொதுஉடைமைப் பிரச்சாரத்திற்காகவும் இராஜ நிந்தனைக்காகவும் தோழர்கள் ஈ.வே.. ராமசாமி சா.ரா. கண்ணம்மாள் கைது செய்யப்பட்டார்கள். பெரியார் பகுத்தறிவு பொதுஉடைமைப் பிரச்சாரத்தை தமது பேச்சிலும் எழுத்திலும் முன்வைத்த பொழுது பெரியாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்களும் அதற்கு உறுதுணையாகச் செயல்பட்டுள்ளார். சுயசிந்தனையாளராக செயல்பட்டுள்ளார்.
எஸ்.ஆர். கண்ணம்மாள் கைது
24. 10. 1933 நாளிட்ட குடியரசில் "இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?" என்னும் ஆசிரியவுரை வெளிவந்தமைக்காகப் பெரியாரும் அவரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாவும் 1933 ஆம் ஆண்டு டிச. 20 ஆம் நாள் கைது செய்யப்பட்டார்கள்.
டிசம்பர் 20, மாலை இரண்டு மணி சுமாருக்கு மூன்று சர்க்கில் இன்ஸ்பெக்டர்களும், நான்கு சப் இன்ஸ்பெக்டர்களும் பத்துப் பதினைந்து போலீஸ்காரர்களும் மோட்டாரிலும் மோட்டார் பஸ்களிலுமாக "புரட்சி"க் காரியாலயத்திற்கு வந்து தோழர் ஈ.வே. ராமசாமி அவர்களோடு சுமார் அரைமணி நேரம் தனித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பின்னர் 'புரட்சி' காரியாலத்தில் றீமீttமீக்ஷீ-யீவீறீமீ களைப் பரிசோதனை செய்தும் ஜீக்ஷீமீss தீஷீஷீளீ பார்வையிட்டும் 46 கடிதங்களைக் கைப்பற்றியதோடு ஜீக்ஷீமீss தீஷீஷீளீ லிருந்து மூன்று கடிதங்களின் முக்கியாம்சத்தையும் குறித்துக்கோண்டார்கள். 29.10.33 "குடிஅரசு" பிரதிகளில் பலவற்றையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். மற்றும் குடிஅரசுப் பதிப்பகப் புஸ்தகங்களையும் பலவற்றைக் கவனித்துவிட்டு தோழர்
-8-
ஈ.வெ.ராமசாமி அவர்களை சற்று தங்களுடன் வரும்படியும் தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் மாளிகையையும் பார்க்க வேண்டுமெனவும் அழைத்துச் சென்றார்கள். அதன்படி மோட்டாரில் புரட்சி"க் காரியாலத்திலிருந்து வீடு சேர்ந்து பரிசோதனை செய்துவிட்டு தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் வீட்டுக்கு வந்து அங்கு தோழர் ஈ.வெ. ராமசாமி தங்கியிருக்கும் இடத்தையும் பார்ப்பதற்காகவென்று கேட்டுக் கொண்டு அங்கு சென்றார்கள்.
சிறிது நேரத்தில் தோழர் எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்கள் வீட்டையும், தோட்டங்களையும் (ஆஸ்ரமத்தையும்) பார்வையிட்டு தோழர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்களையும் போலீஸ் ஸ்டேஷ்னுக்கு வரும்படி அழைத்துச் சென்றார்கள். அங்கு இருவருக்கும் இ.பி.கோ. 124 செக்ஷன்படி பொதுஉடைமை பிரச்சாரத்திற்காக வென்றும் இராஜ நிந்தனைக்காக வென்றும் குற்றம் சாட்டியிருப்பதாகவும் சொல்லி கைது செய்தனராம். "குடிஅரசு" பிரசுரகர்த்தாவும் பதிப்பாளருமான தோழர் சா.ரா.கண்ணம்மாள் கைது செய்யப் பட்டதும் பெரிதும் உற்சாகத்தோடு தோழர் ஈ.வெ.ரா அவர்களோடு உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.
தோழர்கள் ஈ.வெ. ராமசாமி, எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்கள் கைது செய்யப்பட்டதும் மாலை 5.30 மணி ரயிலில் கோவைக்கு அழைத்துச்செல்லப் பட்டார்கள். ச்ப் இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீஸ் ஹெட்கான்ஸ்டபிலும் ஆக மூவரும் ஒரே கம்பார்ட்மெண்டில் கோவைக்கு பந்தோபஸ்துக்காக சென்றார்கள். அன்று இரவு கோவை ரயில்வே ஸ்டேஷ்னிலிருந்து ஏராளமான போலிஸ் ஜவான்களோடு பஸ்ஸில் தோழர்கள் ஈ.வெ.ரா. அவர்களையும் சா.ரா.கண்ணம்மாள் அவர்களையும் டவுன் போலீஸ் ஸ்டேஷ்னுக்கு அழைத்துச் சென்று காவலில் (றீஷீநீளீ-uஜீ ) வைத்திருந்தார்கள்.
மறுநாள் காலை கோயமுத்தூர் ஜில்லா கலெக்டர் மிஸ்டர் நி.கீ.வெல்ஸ் மி.சி.ஷி. ஆஜர் செய்தனர். அவர் அவர்களை ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வரை ரிமாண்டில் வைக்கும்படி உத்திரவு பிறப்பித்தார்.
தோழர்கள் ஈ.வெ. ராமசாமி, எஸ்.ஆர். கண்ணம்மாள் ஆகிய இருவர்களும் கோவை சென்ட்ரல் ஜெயிலில் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். நண்பர்கள் பலர் போய் பார்த்து வருகிறார்கள். தோழர்கள் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஏழாவது தடவையாக இது சமயம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்" என இந்நிகழ்ச்சியை பற்றி புரட்சி இதழ் (24.12.1933) வெளியிட்டுள்ளது.
-9-
இந்த வழக்கின் தீர்ப்பு 28.1.1934 ஆம் நாளிட்ட 'புரட்சி' இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கண்ணம்மாள் எவ்வளவு மனத்துணிவுடன் செயல்பட்டுள்ளார் என்பதற்கு இது ஒரு சான்று. ஒரு பத்திரிக்கை வெளியீட்டாளர் என்ற முறையில் முதன்முதலில் கைது செய்யப்பட்ட பெண் வீராங்கனை இவரே எனலாம்.
சுயமரியாதை இயக்கத் தலைவரும் குடிஅரசு, புரட்சி ஆசிரியருமான தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மீதும் அவருடைய சகோதரியும் பத்திரிகையின் பப்ளிஷ்ருமான தோழர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்கள் மீதும் தொடுத்திருந்த ராஜநிந்தனை வழக்கில் 24.1.34 காலை 11 மணிக்கு கோவை ஜில்லா மாஜிஸ்ட்ரேட் கனம் ஜி. டபில்யூ. வெல்ஸ் ஐ.சி.எஸ். தீர்ப்புக் கூறினார்.
சென்ற அகடோபர் மாதம் 24 ஆம் தேதி குடிஅரசு பத்திரிகையில் வெளியான' இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்ற தலையங்கத்திற்காகவே அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்ததின் முக்கிய கருத்தாகும். மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பில் இருவர்களும் குற்றவாளிகளெனக் கூறி தோழர் இராமசாமி அவர்க்ளுக்கு 6 மாதம் வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் அபராதம் செலுத்தத் தவறினால் மீண்டும் 1 மாதம் சிறை தண்டனையும் விதித்தார். தோழர் கண்ணம்மாளுக்கு 3 மாதம் வெறுந்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மீண்டும் 1 மாதம் வெறுங்காவல் தண்டனையும் விதித்தார். 12.30 மணிக்குச் சிரித்த முகத்துடன் தலைவர்கள் வண்டியில் சிறைக்குப் பிரயாணமானார்கள். இனி 'புரட்சி'யைத் தொடர்ந்து நடத்தும் பெரும் பொறுப்பைத் தோழர் ஈ..வெ. கிருஷ்ணசாமி அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
'புரட்சி' இதழின் மீதும் அன்றைய அரசு வழக்குத் தொடுத்தது. புரட்சி பத்திரிகையில் ஆசிரியர் பெயரில்லாது வெளியிட்டதற்காக அதன் பிரசுரகர்த்தா தோழர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்கள் மீது போலீசாரால் டிப்டி கªலெக்டர் முன் வழக்குத் தொடர்ந்து சுமார் 7,8 வாயிதாக்கள் வரை நடந்து சென்று 29.5.1934 ஆம் தேதி பெருந்துறை முகாமில் ஈரோடு டிப்டி கªலெக்டர் சி. துரைராஜ் அவர்கள் தோழர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும் செலுத்தத் தவறினால் ஒரு மாதத் தண்டனையும் விதித்திருப்பதாகத் தீர்மானித்தார்" என 3.6.1934 ஆம் நாளிட்ட 'புரட்சி' இதழ் மூலம் அறிந்து கொள்ளலாம்.. தோழர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்கள் குடிஅரசு புரட்சி இதழ்களுக்காக இரண்டு முறை ஒறுப்புக்கு ஆளாகியுள்ளார். ஏனெனில் கருத்துப் புரட்சியை 'ஏற்படுத்திக் கொண்டிருந்த புரட்சி இதழுக்கு பல தொல்லைகள் ஏற்பட்டன.
-10-
'பெரியார் தளை செய்யப்படும் வரை வெளியான ''புரட்சி' இதழ்களில் அதாவது 24.12.1933 ஆம் நாளிட்ட 'புரட்சி' வரை அவற்றின் முதற்பக்கப் பச்சை அட்டைகளின் மேற்பகுதியில் 'ஆசிரியர் ஈ.வெ. ராமசாமி' என்றும் இறுதிப் பக்க அட்டைகளின் அடிப்பகுதியில் 'உண்மை விளக்கம் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவ்ர்களால் வெளியிடப்பட்டது" என்பதாகவும் பொறிக்கப்பட்டு வந்தது.. அடுத்த கிழமையில் வெளியான அதாவது 31.12.1933 நாளைய ''புரட்சி' இதழிலிருந்து வழமைபோல முதற்பக்கத்தில் 'ஆசிரியர் ஈ.வெ.கிருஷ்ணசாமி' என்றும் கடைசிப் பக்கத்தில் 'உண்மை விளக்கம் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவ்ர்களால் வெளியிடப்பட்டது, என்றும் பொறிக்கப்பட்டது" (இதழாளர் பெரியார். பக்.210)
வெளியீட்டாளர் கண்ணம்மாள் அவர்கள் சட்ட நடவடிக்கைக்கு ஆட்படுத்தப் பெற்ற நிலையில் ஆசிரியராக மட்டும் இன்றி 'புரட்சி'யின் வெளியீட்டாளர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு விட்டார். 4.2.1934 ஆம் நாளிட்ட இதழிலிருந்து 25.3.1934 ஆம் நாளையப் 'புரட்சி' வரையிலும் 'உண்மை விளக்கம் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவ்ர்களால் வெளியிடப்பட்டது" என்னும் வரி இறுதிப் பக்கத்தின் அடியில் இடம் பெற்றது". (இதழாளர் பெரியார். பக்.210)
''புரட்சி' இதழ் தொடர்ந்து வரக்கூடாது என்ற கருத்தில் தொல்லைகள் பல தொடர்ந்தன. ''புரட்சி' ஆசிரியர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மீறும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 2.6.1934 ஆம் நாளன்று கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டார் என்ற செய்தியும் இந்த இதழின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தந்தை பெரியாரின் தமையன் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களும் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு எவ்வாறு துணைநின்றார் என்பதும் புலப்படும் ஈ.வெ.கி. மட்டுமல்லாமல் அவருடைய மகள் மிராண்டா அவர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். தோழர் ஜி. சாமிநாயுடு பி.ஏ. பி.எல்., அவர்களுடைய மகன் கஜேந்திரன் பி.ஏ அவர்களை சீர்திருத்தத் திருமணம் (9.6.1945) செய்து கொண்டவர். இவர்களுடைய திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. இவர்கள் தாலிகட்டாமல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் என்று பாராட்டுப் பெற்றனர். மிராண்டா கஜேந்திரன் அவர்கள் அடைந்தால் 'திராவிட நாடு இன்றேல் சுடுகாடு' என்று வீரமுழக்கமிட்ட ஆற்றல் மிக்க வீர நங்கையாகத் திகழ்ந்தவர்.
பெரியாரின் மனைவி, தங்கை, தனையன், தனையன் மகள் மருமகன் என குடும்ப வழித் தோன்றல்களும் சீர்திருத்த மனப்பாங்குடன் செயல்பட்டனர் என்பதை
-11-
அறியலாம். பெரியாரின் தங்கை பத்திரிகைப் பொறுப்பில் மட்டுமல்லாமல் ஈரோடு முனிசிபல் கவுன்சிலர் ஆகவும் செயல்பட்டுள்ளார் என்பதை குடிஅரசு 11.12.1932 இதழ் மூலம் தெரிய வருகிறது. அச்செய்தி பின்வருமாறு ;-
கண்ணம்மாள் தீர்மானம் ( குடியரசு. டிச. 11, 1932)
ஈரோடு முனிசிபல் கவுன்சிலுக்கு கவுன்சிலர் எஸ்.ஆர். கண்ணம்மாள் அனுப்பிய தீர்மானங்கள்:-
1. ஈரோடு முனிசிபல் கவுன்சில் அதிகார எல்லைக்குட்பட்ட ஸ்தாபனங்களில் பெண்களுக்கு உத்தியோகம் வழங்கப்பட வேண்டுமென இந்தக் கவுன்சில் தீர்மானிக்கிறது.
2. அந்தப்படி வழங்கப்படுவதை அமுலில் நடத்துவதற்காக பெண்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவாவது உத்தியோகங்கள் ஓதுக்கி வைக்க வேண்டுமென்றும், அந்தப்படி ஓதுக்கி வைப்பதில் முக்கியமாய் ஜனன மரண பதிவு வேலை (தீவீக்ஷீtலீ ணீஸீபீ பீமீணீtலீ க்ஷீமீரீவீstமீக்ஷீ), அம்மை குத்தும் வேலை (ஸ்ணீநீநீவீஸீணீtஷீக்ஷீ), கஜான்சி(நீணீsலீவீஷீக்ஷீ), டைப் அடித்தல் (tஹ்ஜீமீ ஷ்க்ஷீவீtமீக்ஷீ), வரி வசூல் (தீவீறீறீ நீஷீறீறீமீநீtஷீக்ஷீ), வார்ட் மேஸ்திரி, ஆபீஸ் அட்டெண்டர் முதலிய உத்தியோகங்களும் மற்றும் சாத்தியமானவைகளையும் ஓதுக்கி வைத்து அவைகளில் பெண்களை நியமிக்க வேண்டுமென்று இந்தக் கவுன்சில் தீர்மானிக்கிறது.
3. மேற்கண்ட இந்த உத்தியோகங்களுக்காக தனி பரிட்சையோ கற்பித்தோ (tக்ஷீணீவீஸீவீஸீரீ) செய்யப்பட வேண்டிய அவசியமிருந்தால் அதற்கும் வேண்டிய உதவி கூடுமானவரை செய்ய வேண்டியது இக்கவுன்சிலின் கடமை என்பதாக தீர்மானிக்கிறது.
4. பள்ளிக்கூடங்களில் உபாத்தியாயர்களை நியமிப்பதில் பெண்கள் பள்ளிக்கூடங்களின் உபாத்தியாயர்கள் அல்லாமல் ஆண்கள் பள்ளிக்கூடங்களிலும் குறைந்த அளவு 1,2,3 ஆவது வகுப்புகளுக்கு பெண்கள் உபாத்தியாயர்களையே நியமிக்க வேண்டுமென்று இந்தக் கவுன்சில் தீர்மானிக்கிறது.
-12-
5. என்னால் அனுப்பப்பட்ட மேற்கண்ட தீர்மானங்கள் பெண்களும் ஆண்களோடு உத்தியோகத்தில் போட்டிபோட வேண்டுமென்ற காரணத்திற்காகவே கொண்டு வரப்பட்டதல்ல. ஆனால் பெண்களுக்கு எவ்விதத் தொழில் செய்யவும் எவ்வித உத்தியோகம் பார்க்கவும் போதிய சாமார்த்தியமும் தைரியமும் நிர்வாகத் திறமையும் உண்டு என்பதை நிதர்சனமாக்கவும் பெண்களுக்கு ஆண்மக்களைப் போலவே சமூக வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் சமபங்கும் சமசுதந்திரமும் பொறுப்பும் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை வற்புறுத்துவதே யாகும். ஆகையால் இத்தகைய தீர்மானங்களைப் போன்று ஒவ்வொரு நகர சபையிலும் உள்ள எனது சகோதரிகளால் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் அந்தப்படியே அவை அமுலுக்கு வர வேண்டுமென்றும் பெரிதும் விரும்புகின்றேன்.
ஷி.ஸி.ரி.
எஸ்.ஆர். கண்ணம்மாள்(ஆ-.ர்)
இச்செய்தியின் மூலம் எஸ்.ஆர். கண்ணம்மாள் ஈரோடு முனிசிபலில் ஓரு கவுன்சிலராகப் பணியாற்றிக் கொண்டு வந்த தீர்மானங்கள் முழுக்க முழுக்க வேலைவாய்ப்பில் பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவமும் வாய்ப்பும் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளன. மேலும் என்னென்ன வேலைவாய்ப்புகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவ்வாறு வாய்ப்பு கொடுக்கப்படும் பொழுது அவர்களுக்கு வேண்டிய பயிற்சியை வழங்குவது கவுன்சிலின் கடமை என்பதையும் முன்னெச்சரிக்கையோடு கூறியிருப்பதும் அவருடைய பரந்த பார்வையும் விரிந்த செயல்பாடும் அறிவுத்திறனும் நம்மை வியப்பில் ஆழ்த்த்துகின்றது. பள்ளிக்கூடங்களில் பெண் ஆசிரியர்களை எப்படி யெல்லாம் நியமித்துக் கொள்ளலாம் என்ற வழிவகைகளையும் இத்தீர்மானத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். இவையெல்லாம் ஏன் செய்ய வேண்டியுள்ளது என்பதையும் சுருக்கமாகத் தெளிவாக வடிவமைத்துள்ளார். ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு போட்டியாகக் கருதாமல் பெண்களுக்கு சம வாய்ப்பும் சுதந்திரமும் பெண்களுக்கு நிகராக வழங்கப்பட்டால் அவர்களுடைய திறமை வெளிப்படும். அனைத்துத் துறைகளிலும் அவர்கள் சாதனையாளர்களாக இருப்பார்கள் என்ற மேலோங்கிய தன்னம்பிக்கையுடன் இத்தீர்மானத்தின் வழியாக பெரியாரின் தங்கை எஸ். ஆர். கண்ணம்மாளின் குரல் கேட்பதை அனைவரும் உணருவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக