4. நாவல்
பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, மேலைநாட்டு இலக்கியப் பரிச்சயம் முதலியவை தமிழ் இலக்கியப் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணிகளாயின. நாவல், சிறுகதை முதலிய நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் இவற்றுளொன்றாகும். பத்தொன்பதால் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற நாவலிலக்கியம் இன்று பல்வேறு வளர்ச்சிப் போக்குகளையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்துக்கு சுமார் ஒரு நூற்றாண்டு கால வரலாறுண்டு. சித்திலெப்பையினால் எழுதப்பட்டு 1885-ம் ஆண்டு வௌியிடப்பட்ட அஸன்பேயுடைய கதையே ஈழத்தின் முதல் நாவலாகக் கொள்ளப்படுகிறது. ஈழத்தவரால் எழுதப்பட்டதாயினும் இந்நூல் சென்னையிலேயே வௌயிடப்பட்டது. மிஸர் தேசத்து அரசகுமாரனான அஸன்பேயின் வாழ்க்கை நிகழ்ச்சிகளினூடாக இஸ்லாமிய கலாசாரத்தின் பெருமையை நிலைநாட்ட ஆசிரியர் முனைந்திருக்கிறார் எனலாம். அஸன்பேயுடைய கதை வௌிவந்து பத்து ஆண்டுகளின் பின்ன திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி என்ற நூல் வௌியாயிற்று. இந்நூல் தஞ்சை நாயக்கர் வரலாற்றில் இடம்பெறும் ஒரு சிறு சம்பவத்தைக் கருவாக வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்டதாகும்.
இவ்வாறு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஈழத்தவர் புதியதொரு இலக்கிய வடிவத்தைப் படைப்பதில் ஈடுபட்டனர். எனினும் வசனத்திலமைந்த நீண்ட கதைகளாக இவை அமைந்தனவே தவிர நாவல் என்ற நவீன இலக்கிய வடிவத்தின் பண்புகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. சமகால வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கருவாகக் கொள்ளாமல் இதிகாச அல்லது கற்பனைக் கதைகளையே வசனத்தில் இந்நூல்கள் கூற முனைந்தன. இந்நிலைமைக்கு இன்னோர் சிறந்த உதாரணமாக சி.வை. சின்னப்பபிள்ளையின் விஜய சீலத்தை (1916) குறிப்பிடலாம். விஜயன் இலங்கைக்கு வந்தமை, குவேனியை மணந்தமை ஆகிய இதிகாச நிகழ்ச்சிகளை மையமாக வைத்து இக்கதை எழுதப்பட்டது. சி.வை.சின்னப்ப பிள்ளையின் வேறும் இரு நூல்கள் 20 ஆம் நூற்றாண்டின் சன்மார்க்க ஜெயம் (1905) உதிரபாசம் அல்லது இரத்தினபவானி (1915) ஆகிய அவரது நூல்கள் சமகாலப் பாத்திரங்களைக் கொண்டவைபோன்று அமைந்திருப்பினும் கற்பனையான கதைகளே. இக்கற்பனைக் கதைகளில் அக்காலத் தன்மைகள் சில இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. வன்னி, உதாரணமாக வீரசிங்கன்கதையில் அதன் கதைத் தலைவன் அனுரதபுரம், திருகோணமலை முதலிய பல இடங்களுக்கும் போவதாகக் கூறப்படுகிறது. ஆயினும் அவ்வவ்விடங்களுக்குரிய இயல்பு, அங்குள்ள வாழ்க்கை யதார்த்தம், அதற்கும் கதைத் தலைவனின் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு அக்குறிப்பிட்ட சூழலில் பிறக்கும் மனித குணாம்சங்கள் ஆகியவை நாவலில் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்திலிருப்போர் உத்தியோகத்துக்காகவும் பிற தொழில்களுக்காகவும் ஏனைய பிரதேசங்களுக்குச் செல்லுதல் 20 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட ஒரு புதிய நிலைமையாகும். இநிலைமையை வெறும் நிகழ்ச்சியாக இவ்வாசிரியர்கள் கண்டனரே தவிர அந் நிலைமைகள் தனிமனித, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்திய புதிய பரிமாணங்களைத் தமது எழுத்தில் சிறைப்பிடிக்க முனைந்தாரல்லர். இதனாலேயே இந் 'நாவல்கள்' யதார்த்தத்தை இழந்த கற்பனைக் கதைகளாகின. இந்லையில் கதை கொழும்பில் நிகழ்ந்தாலும் கோலாலம்பூரில் நிகழ்ந்தாலும் ஒன்றாகவேஅமையும் விபரீதத்திற்குள்ளாகிறது. இந்நிலைமை இந் நூற்றாண்டின் பிற்பாதி வரை தொடர்ந்து எமது நாவலுலகில் நிலவி வந்துள்ளது. கதைகளினூடு நல்வழி உபதேசம் செய்யும் பண்பே இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் அரசோச்சி வந்துள்ளது எனலாம். சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல்கள், ஒழுக்கப் பிறழ்வுகள் அனைத்தையும் அறக்கண் கொண்டே நாவலாசிரியர் நோக்கினர். ஏனையோருடன் ஒப்பிடும்போது அதிகளவு சமூக நிலைமைகளைக் கருத்திற் கொண்டு நாவலெழுதியவர் என்று போற்றப்படும் ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை பின்வருமாறு கூறியுள்ளார்.
"செந்தமிழ்ப் பயிற்சி குன்றி ஆங்கிலக் கல்வியே அதிகரித்து வரும் இக் காலத்தில் நமது தமிழ் மக்கள் பத்திய ரூபமாகவுள்ள புராணேதிகாசங்களையும் மற்றும் நீதி நூல்களையும் இலகுவிற் பயின்று அவைகளிற் சொல்லப்பட்ட நீதிகளையும் பிறவற்றையும் அறிந்து நல்வழியடைய முடியாதவர்களாயிருக்கிறார்கள். இக் காரணம் பற்றியே இராமாயணம், பாரதம், முதலிய இதிகாசங்களும், கந்தபுராணம், பெரியபுராணம் , திருவிளையாடற் புராணம் முதலிய புராணங்களும் அறிஞரால் வசன நடையில் எழுதி வௌியிடப்படலாயின. மேலைத்தேசக் கொள்கையைப் பின்பற்றிப் பல நவீன கதைகள் தமிழ்ப் பாஷையில் எழுதப்படுவதும் இக் காரணம் பற்றியேயாம்.".
இப் பண்பு இந்நூற்றாண்டின் பிற்பாதி வரை எழுந்த கதைகளில் காணப்படும் பொது நிலைமையாயினும் அவற்றுள் காணப்படும் சில சாயை வேறுபாடுகளையும் வேறு பண்புகளின் தோற்றத்தையும் கருதி அவற்றை மூன்று உட்பிரிவுகளாக நோக்குதல் இக் காலப் பகுதி நாவல் இலக்கிய வரலாற்றைத் தௌிவாக்க உதவும்.
1) 1915 ஆம் ஆண்டு வரை நீண்டதும் வசன ரூபத்தில் அமைந்தனவுமான கற்பனைக் கதைகளே முதன்மை பெறுகின்றன. அஸன்பேயுடைய கதை, மோகனாங்கி, உதிரபாசம், விஜயசீலம், வீரசிங்கன்கதை ஆகிய மேலேபார்த்த நூல்கள் இக் காலத்தில் வௌிவந்தவையாகும். இவற்றின் பொதுப் பண்புகளை மேலே பார்த்தோம். இவற்றை நாவல்கள் என அழைப்பதை விட ரோமான்ஸ் எனக் கூறுவதே பொருத்தமானது.
2) 1915-ம் ஆண்டுக்குப் பின்னர் அதிகளவு சமுக நிலைமைகளைக் கவனத்திற் கொள்ளும் போக்கு நாவல் உலகில் அரும்பத் தொடங்குகிறது. பாத்திர உருவாக்கம், பாத்திர உரையாடல் ஆகியவற்றிலோ, கதைப் பின்னலிலோ ஆசிாியர்கள் அதிக கவனம் செலுத்தாவிடினும் அக்காலத்துச் சமூக நிலைமைகள் சமூகத்தில் நிலவிய கருத்தோட்டங்கள் ஆகியவற்றைச் சிறிதளவாவது தமது நாவல்களில் பிரதிபலித்துள்ளனர். வெறும் கதை கூறும் போக்கிலிருந்து விடுபட்டு சமூக உணர்வுடன் நாவல்கள் எழுதப்பட்டமைக்கும் அக்காலச் சமூக நிலைமைகட்கும் தொடர்பிருந்தது. ஆங்கிலேயர் இலங்கையில் ஏற்படுத்திய பொருந்தோட்டப் பயிர்ச் செய்கை, விருத்தி செய்த வர்த்தகம், அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, அதுசார்ந்த பதவிகள் ஆகியவை நாட்டில் புதிய நிலைமையைத் தோற்றுவித்தன. பணம் சம்பாதிப்பதில் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். அத்துடன் கிறிஸ்தவ மிசனாிமாாின் தீவிரமான மதமாற்ற முயற்சிகளும் இடம்பெற்றன. சுருங்கக் கூறின் பாரம்பாிய சமூக அமைப்பினுள் ஏற்பட்ட சலனங்கள் மக்கள் நடைமுறைகளையும் கருத்துக்களையும் பாதித்தன எனலாம். இக்காலப் பகுதியில் மக்களின் மனோபாவங்களிலும் நடைமுறைகளிலும் ஏற்பட்ட மாறுதல்களைக் கூர்ந்து அவதானித்திருந்த பாவலர் துரையப்பாபிள்ளை Ceylon National Review என்ற பத்திாிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
"கவனத்தை ஈர்க்கும் மாறுதல் இப்போது நம் மக்களிடை ஏற்படத் தொடங்கியுள்ளது. மக்கள் நடை முறையில் அக்கறையுடையோராகவும் பணம் உழைப்பதில் கவனம் செலுத்துவோராகவும் காணப்படுகின்றனர். அவர்கள் சமூக விழாக்கள், விளையாட்டுகள், பொழுது போக்குகள் என்பவற்றைச் சிறுபிள்ளைத்தனமாகக் கணிக்கின்றனர்."
இப் புதிய நிலைமைகளில் காணப்பட்ட மனித ஒழுக்கலாறுகள் இலக்கிய கர்த்தாக்களின் சிந்தையைக் கிளறும் விஷயங்களாயமைந்தன. மக்களிடையே காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகள், சீர்கேடுகள் ஆகியவற்றுக்கு பாிகாரம் கூறும் நோக்குடன் அறவியல் சமய அடிப்படையில் இவர்கள் எழுதினர். மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம் (1914) தேம்பாமலர் (1929) தம்பிமுத்துப்பிள்ளையின் சுந்தரன் செய்த தந்திரம் (1918) ம.வே. திருஞானசம்பந்த பிள்ளையின் காசிநாதன் நேசமலர் (1924) கோபாலநேசரத்தினம் (1927) துரைரத்தினம் நேசமணி(1927) இடைக்காடாின் நீலகண்டன் அல்லது ஒரு சாதி வேளாளன் (1925) ஆகியவை இப் பண்புக்கு உதாரண விளக்கங்களாகும்.
சுந்தரன் செய்த தந்திரம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம் நேசமணி, நீலகண்டன் ஆகிய நூல்களில் அக்கால யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் நிலவிய சீர்கேடுகள் சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகின்றன. சாதி காரணமாக மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகள், உயர்சாதியினாிடை காணப்படும் ஊழல்கள், சீதன வழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், மதுபானப் பழக்கத்தால் ஏற்படும் கேடு ஆகியவை இவற்றுள் பிரதானம் பெற்றன. மக்கள் நல்லாசாரங்களைக் கைக்கொள்வதன் மூலம் சமூகத்தில் இவற்றைக் களைந்துவிடலாம் என்பது இந் நாவல்களை எழுதியோாின் கருத்தாகவிருந்தது. சமூகக் குறைபாடுகளைத் தனிமனிதக் குறைபாடுகளாகக் கண்டதின் விளைவே இதுவெனலாம். இக் குறைபாடுகளுக்குாிய சமூகவியல் காரணிகளை இந் நாவலாசிாியர்கள் கருத்தில் கொள்ளவில்லை. கடவுள் நம்பிக்கை, தர்ம விருப்பு, கல்வி அறிவினால் உண்டாகும் மன விசாலிப்பு ஆகியவை ஏற்பட முழுச் சமூகமுமே மேற்கூறிய குறைபாடுகளிலிருந்து நீங்கும் என இவர்கள் எண்ணினர்.
மேற்கூறிய நாவல்கள் சிலவற்றில் இன்னோர் பண்பும் முதன்மை பெற்றது. 19ஆம் நூற்றாண்டிலிருந்தே இலங்கையில் இடம்பெற்ற கிறிஸ்தவ மதமாக்கல் முயற்சியும் அதற்கு எதிராக சுதேசிகளிடம் தோன்றிய சுதேச மதப் பற்றும் 20 ஆம் நூற்றாண்டிலும் முக்கிய அம்சங்களாகக் காணப்பட்டன. இவற்றின் பிரதிபலிப்பும் மேற்கூறிய சில நாவல்களில் இடம் பெற்றன. மங்கள நாயகம் தம்மையாவின் நொறுங்குண்ட இருதயம் கிறிஸ்தவ சமய நெறியில் சன்மார்க்க சீவியம் நடத்த மக்களுக்கு வழிகாட்டும் முயற்சியாகவே எழுதப்பட்டதெனலாம். சைவசமய பாிபாலன சபையினர் வௌியிட்ட இந்துசாதனப் பத்திாிகையின் ஆசிாியராகப் பணிபுாிந்த ம.வே. திருஞானசம்பந்தபிள்ளையின் கோபாலநேசரத்தினம் சுதேச மத விழிப்புணர்வைப் பிரதிபலிப்பதாகும். "சைவசமயச் சிறுமியரை அந்நிய மதத்தினர் வைத்து நடத்தும் வித்தியாசாலைகளில் கல்வி பயிலவிடவொண்ணாவென்பதை இந்நூல் எடுத்துக் காட்டும் இயல்பினது" என ஆசிாியரே அந் நூல்முகத்தில் கூறுகிறார்.
சமூக நிலைமைகளையும், சமூகத்தில் நிலவிய கருத்தோட்டங்களையும் பிரதிபலிப்பனவாக மேலே பார்த்த, 1915-30க்கிடைப்பட்ட நாவல்கள் அமைகின்றன. அதே வேளையிலேயே அவை மரபு வழிப்பட்ட அறவியல் அடிப்படையிலேயே பிரச்சினைகளை அணுகின என்பதும் வற்புறுத்தப்பட வேண்டியதாகும்.
3) 1930 ஆம் ஆண்டையடுத்து மீண்டும் எண்ணிக்கையில் அதிகமாகக் கற்பனைக் கதைகள் நாவல் என்ற பெயாில் வௌிவரத் தொடங்கின. சமூக நிலைமைகள் எவற்றையும் கவனத்திற் கொள்ளாமல் வெறும் கற்பனாாீதியில் அமைந்த இவை குறிப்பிடத்தக்க நீளமும் உடையனவாயிருந்தன. மக்களிடையே விருத்தியடைந்த வாசிப்புப் பழக்கமும், தினசாிப் பத்திாிகையின் தோற்றமும் இத்தகைய நூல்கள் தோன்ற வழிவகுத்தன எனலாம். இது தொடர்பாக 1931 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரகேசாி பத்திாிகை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் அதன் ஆசிாியராகவிருந்த எச். நெல்லையா இப் பத்திாிகையில் தொடர்ந்து கதைகளை எழுதினார். இவரது நூல்களாக சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி (1934), இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி (1938), காந்தாமணி அல்லது தீண்டாமைக்கு சாவுமணி (1938) (1938), பிரதாபன் அல்லது மகாராஷ்டிர நாட்டு மங்கை (1941), சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு (1940) ஆகியவை வௌிவந்துள்ளன. நெல்லையாவுக்குப் பின்னர் வீரகேசாி ஆசிாியராகவிருந்த கே.வி.எஸ் வாஸும் இவ்வகை நாவல்கள் பலவற்றை எழுதியுள்ளார். ரஜனி என்ற புனைபெயாில் குந்தளப் பிரேமா, நந்தினி, பத்மினி, தாாிணி, மலைக்கன்னி, உதய கன்னி ஆகியவற்றை இவர் வீரகேசாியில் எழுதினார். 1949-55 காலப் பகுதியில் இவை வீரகேசாியில் தொடராக வௌிவந்தன. இவற்றை விட வேறும் பல நூல்களும் வௌிவந்துள்ளன. இராசம்மாள் எழுதிய சரஸ்வதி அல்லது காணாமல் போன பெண்மணி (1929), ஏ.சி. இராசையாவின் அருணோதயம் அல்லது சிம்மக்கொடி (1933), பவளகாந்தன் அல்லது கேசாி விஜயம் (1932),சிவராமலிங்கம் பிள்ளையின் பூங்காவனம் (1930), சி.வே. தாமோதரம்பிள்ளையின் காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (1936), வே.க. நவரத்தினத்தின் செல்வரத்தினம் (1935), எம். செல்லாப்பாவின் சந்திரவதனா அல்லது இன்பக் காதலர் (1937) முதலியன இவற்றுட் சில.
இந்நாவல்களில் பாத்திரங்களின் வீரசாகசச் செயல்களும், மர்ம நிகழ்ச்சிகளும் நிறைந்திருக்கும். கொலை, கொள்ளை ஆகியவை தாராளமாக இடம்பெறும் எனினும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற கருத்து வற்புறுத்தப்படும்.
"மக்கள் செய்யும் நல்வினைத் தீவினைப் பயன்கள் அவர்களைத் தொடர்ந்து சென்று இறுதியில் அதன் பலாபலனை அனுபவிக்கச் செய்கிறது என்ற உண்மையை இச் சாிதை தௌிவாயெடுத்து விளக்குகிறது. ஒவ்வொருவரையும் மக்களின் ஈடேற்றத்திற்காகவும் தேச முன்னேற்றத்திற்காகவும் உழைத்து வரும்படி இது தூண்டி விடுகிறது. நல்லொழுக்கங்களிலிருந்து தவறி நடப்போரை இந்நாவல் இரக்கமின்றித் தண்டிக்கிறது."
மேற்கண்டவாறு அருணோதயம் அல்லது சிம்மக்கொடி என்ற நாவலின் ஆசிாியர் வரணியூர் ஏ.சி. இராசையா குறிப்பிடுவது மேற்கூறிய அறவியற் பண்புக்கு ஒரு உதாரணமாகும்.
இவ்வாறு அறவியல் நோக்கும், கதைச் சுவைக்காக திடுக்கிடும் சம்பவங்களும் கொண்ட நாவல்கள் தோன்றுவது முக்கிய போக்காக இருந்த அதே சமயம் அதற்குச் சமாந்தரமாக இன்னோர் போக்கும் காணப்பட்டது. குடும்ப உறவுகளையும் அவற்றில் தோன்றும் உணர்ச்சிப் போராட்டங்களையும் முக்கிய பொருளாகக் கொண்டு நாவல்கள் எழுதும் இப்போக்கு நாற்பதாம் ஆண்டுகளில் காணப்பட்டது. க.தி. சம்பந்தனின் பாசம், 1947 ஆம் ஆண்டு ஈழகேசாிப் பத்திாிகையில் தொடராக வௌிவந்தது. க. சச்சிதானந்தனின் அன்னபூரணி ஈழகேசாியில் 1942ல் தொடராக வந்தது. சு. வேலுப்பிள்ளையின் மன நிழல் என்ற நாவல் 1948ம் ஆண்டு வௌிவந்தது. க. சிவகுருநாதனும் கசின் என்ற புனைபெயாில் ஈழகேசாியில் தொடராக நாவல்களையும் குறுநாவல்களையும் எழுதினார். சகட யோகம் (1949), இதய ஊற்று, (1951), குமாாி இரஞ்சிதம் (1952) முதலியன இவற்றுட் சில. அ.செ. முருகானந்தம் பத்திாிகைத் தொடராக யாத்திரை என்ற நாவலையும் எழுதினார். கனக செந்திநாதனின் விதியின் கை (1953), வெறும் பானை (1956) ஆகியவையும் ஈழகேசாியில் தொடராக வௌிவந்தது. இவற்றுள் விதியின்கை 1977-ல் வீரகேசாிப் பிரசுரமாக, நூல்வடிவம் பெற்றது. வ.அ. இராசரத்தினத்தின் கொழுகொம்பு நாவலும் ஈழகேசாிப் பத்திாிகைத் தொடராக (55-56) வௌிவந்தது பின்னர் 1959-ல் நூலுருவம் பெற்றதாகும்.
மேற்கூறிய நாவல்களின் பண்புகளை ஒன்று திரட்டி நோக்கும் போது அவை தனிமனித உறவுகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் கூறுவனவாக இருப்பதைக் காணலாம். காதல், நட்பு, பாசம் என்ற உறவு நிலைகளையும் அவற்றால் ஏற்படும் பிரச்சினைகளையும் இவை எடுத்துக்காட்டுகின்றன. எனினும் இவ்வுறவுகளையும் உணர்ச்சிகளையும் காட்டும் பாத்திரங்கள் யதார்த்தமான சமூக நிலையிற் காலூன்றாத "மனவௌி மனிதர்களா" கவேயமைந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். விதியின் கை, கொழு கொம்பு போன்ற சிலவே இந்நிலைக்கு விதிவிலக்காயமைந்து சற்றேனும் ஈழநாட்டுப் பின்னணியைக் கொண்டிருந்தன. விதியின் கை யாழ்ப்பாணக் கிராமமொன்றினையும், கொழுகொம்பு கிழக்கிலங்கையையும் மலைநாட்டையும் பின்னணியாகக் கொண்டவையாகும்.
மர்மப் பண்பு கொண்ட நாவல்களும் குடும்ப உறவுகளைப் பொருளாகக் கொண்ட நாவல்களும் முப்பதுகளிலிருந்து ஐம்பதுகளின் பிற்பகுதி வரை ஈழத்து நாவலுலகில் முதன்மை பெற்றன என்பது மேலே எடுத்துக்காட்டப்பட்டது. இவை ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் பொருளிலோ வடிவிலோ பாாிய மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லையாயினும் புனைகதை வாசகர் தொகை அதிகாிக்க உதவின. பத்திாிகைத் தொடராகவும், நூல்களாகவும் பிரசுரம் செய்யப்பட்ட இந் நாவல்கள் எமது இலக்கிய உலகில் நாவல் வடிவம் உறுதியாகக் காலூன்றியமையைக் குறிக்கின்றன.
2
1950 களின் பிற்பகுதியிலிருந்து ஈழத்து நாவல்களின் புதியதொரு சகாப்தம் அரும்புகிறது எனலாம். நாவல் இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட இம் மாற்றத்துக்கும், நாட்டு நிலைமையில் ஏற்பட்ட மாற்றம் முக்கிய காரணமாயமைந்தது 1956-ம் ஆண்டு பண்டாரநாயக்காவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியமை தேசிய முதலாளித்துவம் அதிகார முதன்மை பெற்றதைக் குறிப்பதாகும். இக் காலத்திலேயே தேசியம் என்ற கோட்பாடும் வலுப்பெற்றது. தேசிய மரபுகளும் பண்பாட்டம்சங்களும் பேணப்பட்டன. ஈழத்துத் தமிழரைப் பொறுத்தும் இது ஒரு முக்கியமான காலகட்டமே. நாட்டின் பொதுவான தேசிய எழுச்சியால் அவர்கள் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி இக் காலத்தில் தோன்றிய தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டனர். தமிழர் ஈழத்தின் தேசிய இனம் என்ற கருத்தும், ஈழத்தவர் என்ற முறையில் அவர்களுக்கெனத் தனிப் பிரச்சினைகள் உண்டென்ற உணர்வும் எற்பட்டன. இவை மட்டுமன்றி இக்காலப் பகுதியை அடுத்து ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் முதன்மை பெற்ற ஸ்தாபனமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயற்பட்டது. இடதுசாாி அரசியல் சித்தாந்தத்தைப் பொதுவாகச் சார்ந்திருந்த இச் சங்கம் இலக்கியத்தில் தேசியப் பிரச்சினைகள் இடம்பெறவேண்டும் என்பதை வற்புறுத்தியது. அறுபதுகளில் எமது இலக்கிய உலகில் பிரதானம் பெறும் எழுத்தாளர்களிற் பெரும்பாலோர் இச் சங்கத்தைச் சார்ந்திருந்தோரே. இளங்கீரன், டானியல், நீர்வை பொன்னையன், காவலூர் இராசதுரை, செ. கணேசலிங்கன், க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, டொமினிக் ஜீவா முதலியோரை உதாரணங்களாகக் கூறலாம்.
மேலே பார்த்த தேசியம் என்ற கோட்பாட்டின் வளர்ச்சி இடதுசாாி அரசியல் சித்தாந்த செல்வாக்கு ஆகியவை ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து ஈழத்து உலகில் ஏற்பட்ட பொருள்மாற்றத்துக்குாிய பிரதான காரணிகளாகின. சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளும் அன்றாட அனுபவங்களும் இலக்கியத்தில் தயக்கமின்றி இடம் பெற்றன. நாவலுக்கு மட்டுமின்றிச் சிறுகதை இலக்கியத்திற்கும் இது பொதுப் பண்பாயிற்று. ஆரம்பத்தில் அறவியல் நோக்குடன் சமூகப் பிரச்சினைகளை நோக்கிய நாவல்களைப் போலல்லாது அப் பிரச்சினைகளைச் சமூகவியல் நோக்கில் இக்கால நாவல்கள் அணுகின. இலக்கியத்தில் யதார்த்தம் பற்றிய உணர்வு இக்கால நாவல்களில் தலைகாட்டத் தொடங்கியது. யதார்த்த வாதத்தை எழுத்தாளர் சித்தாந்த ாீதியாக ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி செயலிலும் பாிசீலிக்கத் தொடங்கியிருந்த இக் காலத்திலேயே நாவல் நவீன இலக்கிய வடிம் என்பதன் அர்த்தம் தௌிவாக தொடங்கியது.
1959-ம் ஆண்டு நூலுருவில் வௌிவந்த இளங்கீரனின் நீதியே நீ கேள் என்ற நாவல் மேற்கூறிய புதிய பண்பின் தொடக்கத்தைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து நகரமொன்றின் கடைச் சிப்பந்தியை பிரதான பாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலில் சமூக வர்க்கங்களுகிடையேயுள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், அவ்வேற்றத்தாழ்வுகளால் மனித உறவுகள் பாதிக்கப்படுதலும் காட்டப்படுகின்றன. இளங்கீரனது நாவல்கள் பலவும் பத்திாிகைத் தொடர்கதைகளாக வந்தவையே. தென்றலும் புயலும், சொர்க்கம் எங்கே, மண்ணில் விளைந்தவர்கள், இங்கிருந்து எங்கே, அவளுக்கு ஒரு வேலை வேண்டும் முதலியன இவரது குறிப்பிடத்தக்க படைப்புக்கள் எனலாம்.
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் மூத்தவராக மதிக்கப்படும் இளங்கீரன் சரளமாகக் கதை கூறும் வல்லமை கொண்டவர். சமூகப்பிரச்சினைகளுக்கு முதன்மை கொடுப்பவர். சம்பவப் பின்னல்களும் கருத்து வௌிப்பாடும் இவரது நாவல்களில் முதன்மை பெறுகின்றன. அவ்வகையில் தொடர் கதைகளுக்குாிய பல பலஹீனங்களை இவரது நாவல்கள் பலவற்றில் காணலாம். ஆயினும் 'அவளுக்கு ஒரு வேலை வேண்டும்ரு என்ற தொடர்கதைக் குறைபாடுகளை மீறிய இவரது சிறந்த படைப்பு எனலாம்.
மார்க்ஸீய சமூகவியல் நோக்கில் சமூக நிலைமைகளை அவதானித்து அவற்றை நாவல்களின் பொருளாகக் கொண்டோாில் செ. கணேசலிங்கம் முக்கியம் பெறுகிறார். அறுபதாம் ஆண்டின் பிற்பகுதியில் இவரது நாவல்கள் தொடர்ச்சியாக வௌிவந்தன. நீண்ட பயணம் (1965), சடங்கு (1966), செவ்வானம் (1967), தரையும் தாரகையும் (1968) , போர்க்கோலம் (1969), மண்ணும் மக்களும் (1970) ஆகியவை இவரது நாவல்களாகும். நீண்ட பயணம் யாழ்ப்பாணத்துச் சாதியடக்குமுறைக்கு இலக்காகும் தாழ்த்தப்பட்ட மக்களனின் போராட்டத்தைச் சித்திாிக்கிறது. போர்க்கோலமும் இதே கருவைக் கொண்டதாகும். சாதி வேறுபாடுகளை வர்க்க வேறுபாடுகளின் வௌிப்பாடாகவே காணும் ஆசிாியர் அவற்றில் யாழ்ப்பாணத்துச் சமூக வர்க்க அமைப்பில் ஏற்படும் மாறுதல்களும், அங்கு பரவிய அரசியற் கருத்துகளும் ஏற்படுத்திய தாக்கத்தையும் காட்ட முனைகிறார். செவ்வானம் 63-64ம் ஆண்டு அரசியலைப் பின்னணியாகக் கொண்டதாகும். அக்காலப் பிரச்சினைகள் சமூக வர்க்கங்களைப் பாதிக்குமாற்றையும் அதில் மனிதர்களின் இயக்கப்பாட்டையும் இந்நாவலில் தௌிவுபடுத்த முயன்றார் கணேசலிங்கன். தரையும் தாரகையும் மத்தியதர வர்க்க மாந்தாின் திாிசங்கு நிலையைச் சித்தாிப்பதாகும். இந்நாவலின் மூலம் உயர் வர்க்கத்தினைப் பார்த்து ஏங்கு மத்தியதரவர்க்க மாந்தர் அவ்வர்க்கத்தினர் போல உயர முடியாதென்பதையும் தொழிலாள வர்க்கத்தினருடன் இணைந்து போராடுவதே வழி என்பதையும் ஆசிாியர் காட்டுகிறார்.
தமிழ் நாட்டு நாவல்களை விட ஈழத்துத் தமிழ் நாவல்கள் கூடியளவு சமூகப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டன என்று கூறுவோர் கணேசலிங்கனின் நாவல்களைத் தவறாமல் உதாரணம் காட்டுவர். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியவராகிய கணேசலிங்கன், தனது படைப்புக்கள் அனைத்தையும் தொடர்கதைகளாக அன்றி முழுநாவல்களாகவே எழுதினார். இளங்கீரன் போல் இவரும் கருத்துக்களுக்கே முதன்மை கொடுப்பர். அதனால் இவரது கதாபாத்திரங்கள் பல அனுபவச் செழுமை குறைந்த, கருத்துக்களின் பிரதிநிதிகளாகவே காட்சியளிக்கின்றனர். தத்துவத் தௌிவு இருக்கும் அளவு அதனை வாழ்க்கை அனுபவமாக வௌிப்படுத்துவதற்குாிய அனுபவ வளம் இல்லாமலிருப்பது இதற்குக் காரணமாகலாம். இவரது கடைசிப்படைப்பான 'மண்ணும் மக்களும் ' நாவலாக அன்றி கருத்துப் பிரசாரமாகவே அமைந்து விட்டதற்கும் இதுவே காரணம் எனலாம். ஆயினும் அவரது சடங்கு, தரையும் தாரகையும் ஆகியவை இக் குறைபாட்டுக்குள் அடங்காத நல்ல நாவல்கள் ஆகும்.
அடிநிலை மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் எழுத்தில் வடிக்கும் முயற்சியில், தமிழ் மக்களிடையே அடக்குமுறையின் வடிவமாக இருக்கும் சாதிப் பிரச்சினையும் நாவல்களில் இடம் பெற்றன. குறிப்பாக அறுபதுகளில் யாழ்ப்பாணப் பகுதியில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டம், ஆலயப் பிரவேச இயக்கங்கள் ஆகியவை இலக்கியத்திற்கும் உந்துதலை அளித்தன. இத்தொடர்பில் செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம், போர்க்கோலம் ஆகியவை பற்றி மேலே கூறப்பட்டது. கே. டானியலின் பஞ்சமர் நாவலும் (1972) இப் போராட்ட அனுபவங்களின் அடிப்படையில் எழுந்ததாகும்.
"இந்த நாவலுக்கான மூலக்கருவை வலிந்து தேட வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கேற்படவில்லை. இதில் நடமாடும் பாத்திரங்களும் நான் சிருட்டித்தவையல்ல. இதில் வரும் சம்பவங்களும் கற்பனா லோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவையல்ல. எல்லாம் யதார்த்த உலகில் அன்றாட வாழ்வில் எளிய மக்கள் எனக் கூறப்படும் பஞ்சப்பட்ட மக்கள் தம் மீது சுமத்தப்பட்டுள்ள நுகத்தடியைச் சுழற்றியெறிந்து, தம்மீது சுமத்தப்பட்டுள்ள வாழ்வை நிமிர்த்த எடுத்த முயற்சிகள், நடவடிக்கைகள், போராட்டங்களிலிருந்து பெற்ற அனுபவங்களே."
மேற்கண்டவாறு தமது பஞ்சமர் நாவலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார் கே.டானியல். கதை சொல்லும் கலை நன்கு கைவரப்பெற்ற டானியல் தனது அனுபவங்களின் பின்னணியில் இந் நாவலை எழுதினார். டானியலின் இன்னோர் நாவலான போராளிகள் காத்திருக்கிறார்கள் பஞ்சமர் அளவு முக்கியத்துவம் பெறவில்லை.
அடிநிலை மக்களைச் சார்ந்து இலக்கியம் படைத்தோாில் பெனடிக்ற் பாலனும் இடம் பெறுகிறார். அவரது சொந்தக்காரன் மலைநாட்டுத் தோட்டத் தொழிலாளாின் அவலமிக்க வாழ்க்கையையும், போராட்டத்தையும் சித்தாிப்பதாகும். இந் நாவலுக்குச் சில ஆண்டுகள் முன்னர் வௌிவந்த நந்தியின் மலைக்கொழுந்தும் (1964) இதே பிரச்சினையைத் தொட்டதெனினும் நந்தியின் அணுகுமுறை மனிதாபிமானக் கண்ணோட்டம் கொண்டதாகும். கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை (1964) நாவலும் மலைநாட்டுத் தொழிலாளர் பற்றியது. இந்தியாவிலிருந்து தொழிலாளர் இலங்கைக்கு வரத் தொடங்கிய காலத்திலிருந்து அடுத்த மூன்று தலைமுறை காலத்தைப் பின்னணியாக்கி இயற்பண்புடன் தொழிலாளாின் அவலநிலையைச் சித்தாித்தது இது. இத் தொடர்பில் தௌிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை என்ற நாவலையும சேர்த்துக் கொள்ளலாம்.
சி. சுதந்திரராஜா, செ. யோகநாதன், எஸ். அகஸ்தியர் ஆகியோரும் இடதுசாாி அரசியல் சித்தாந்தத்தால் கவரப்பட்ட எழுத்தாளர்களாவர். இவ்வகையில் சுதந்திரராசாவின் 'மழைக்குறி'யும் யோகநாதனின் சில குறுநாவல்களும் குறிப்பிடத்தக்கன.
ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தில் ஏற்பட்ட மாறுதலும் புதிய போக்கும் இதுவரை சுட்டப்பட்டது. அடிநிலை மக்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டது மட்டுமல்லாது அவர்களது வாழ்க்கையையும் போராட்டத்தையும் மார்க்சீய அரசியல் கண்கொண்டு நோக்கிய இப்புதிய பண்பானது எழுபதின் முற்பாதியிலும் கூட நாவலிலக்கியத்தின் பிரதான போக்காகவேயிருந்தது.
இதே காலப்பகதியில் இப் போக்குக்குப் புறம்பான சில நாவல்களும் வௌிவந்துள்ளன. எஸ். பொன்னுத்துரையின் தீ (1961) சடங்கு (1971) ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கன. எழுத்தாற்றல் கைவரப்பெற்ற எஸ்.பொ.வின் தீ பொருளிலும் வடிவிலும் ஏனைய ஈழத்து நாவல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் பாலியலை துணிச்சலுடன் வௌிப்படையாகக் கையாண்டது என்பதைத் தவிர இந்நாவல் எவ்வகையிலும் இலக்கிய முதிர்ச்சியை வௌிக்காட்டவில்லை. அவரது சடங்கு யாழ்ப்பாணத்துக் கீழ்மத்தியதர மாந்தரின்மனோ விகாரங்களை இயற்பண்புடன் அணுகியதாகும். அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயதுவந்துவிட்டது (1973) பலரது பாராட்டுதல்களையும பெற்ற நாவல். எழுபதுக்குப் பின் நாவலிலக்கியத் துறையில் புகுந்தவரான அருள் சுப்பிரமணியம், சிங்களப் பெண்ணைக் கலப்பு மணம் புாிந்த பாத்திரமொன்றைக் கதாநாயகனாகக் கொண்டு அதன் பின்னணியையும் பிரச்சினைகளையும் நேர்த்தியாகச் சித்திாித்துள்ளார். சமீபத்தில் வௌிவந்த அக்கரைகள் பச்சையில்லை அன்னிய நாட்டுக் கப்பல்களில் வேலை செய்யும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டது என்ற வகையில் முற்றிலும் புதியதோர் பொருளை அறிமுகப்படுத்தினும் நடைமுறைக்கு ஒத்துவராத நிகழ்ச்சிகள் நாவலின் யதார்த்தத்திற்கு ஊறு விளிவிக்கின்றன. இவரது இன்னொரு நாவலான நான் கெடமாட்டேன் இவருக்குத் தோல்வியையே தந்தது. முதல் நாவல் சிறந்த படைப்பாயிருக்க அதற்குப் பிந்தியவை தரமிழந்து போவது கவனிக்கத்தக்கது.
எழுபதில் பிரபலம் பெற்ற இன்னோர் நாவலாசிாியர் செங்கை ஆழியானாவர். ஆக்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, நந்திக்கடல், பிரளயம், இரவின் முடிவு முதலானவற்றை அவர் எழுதியிருப்பினும் 1977-ல் வௌியான காட்டாறு என்ற நாவலே இலக்கிய உலகில் அவரைத் தகுதிபெற வைத்தது. வன்னிப் பிரதேசக் குடியேற்றப் பகுதிகளில் அரசாங்க அதிகாாிகள், முதலாளிகள் ஆகியோர் சாதாரண விவசாயிகளைச் சுரண்டுவதையும், குடியேற்றப் பகுதி வாழ்க்கையின் உள்முரண்பாடுகளையும் அவற்றின் இயல்பு குன்றாத வகையில் தமது நாவலில் காட்ட முனைந்துள்ளார் செங்கையாழியான். அ.பாலமனோகரனும் வன்னிப் பகுதிக் கிராமப் பின்னணியில் நிலக்கிளி, குமாரபுரம் ஆகிய நாவல்களை எழுதியுள்ளர். எஸ். ஜோன்ராஜன் மட்டக்களப்புப் பகுதிக் கிராமமொன்றினை பின்னணியாகக் கொண்டு போடியார் மாப்பிள்ளையை எழுதியுள்ளார். வை. அகமதின் புதிய தலைமுறை, சாந்தனின் ஒட்டுமா ஆகியவையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இதுவரை யாழ்ப்பாணம், கொழும்பு, மலைநாடு ஆகிய பகுதிகளைப் பகைப்புலங்களாகக் கொண்டு மட்டும் நாவல் எழுதப்பட்ட நிலையிலிருந்து மாறி வவனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளையும் பின்னணியாகக் கொள்ளும் நிலை எழுபதுகளில் வௌியான நாவல்களின் சிறப்பம்சம் எனலாம். மேலே காட்டிய சில நாவல்கள் இதற்கு உதாரணங்களாகும்.
3
நாவலின் பொருளைப் பொறுத்தும் அணுகு முறையைப் பொறுத்தும் மாறுதலும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதெனினும் உருவத்திலோ கதை கூறும் முறையிலோ அடிப்படையில் பாாிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையெனலாம். சுருக்கமாகச் சொன்னால் நாவல் இலக்கியத்தில் இங்கு பாிசோதனை முயற்சிகள் இடம்பெறவில்லை. மார்க்ஸீய நாவலாசிாியர்களின் நாவல்களில் கலைச் செழுமை குறைவு என்ற குற்றச்சாட்டு உண்டு ; அதில் உண்மையில்லாமலும் இல்லை. ஆனால் அதற்குப் புறம்பான நாவலாசிாியர்களின் படைப்புகளில் ஆழமான தேடலும் கலைச்செழுமையும் உடைய சிறந்த நாவல்கள் ஒன்றுகூட இல்லை. தமிழக நாவல் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பிரதான காரணிகளில் முதன்மையானது பிரசுர வசதிக் குறைவாகும். பிரசுர நிறுவனங்கள் வளர்ச்சி பெறாத நிலையிலும், புத்தக வௌியீட்டுச் செலவு உயர்ந்திருக்கும் நிலையிலும் இலக்கிய ஆர்வம் கொண்ட எழுத்தாளர் சிலர் சொந்தப் பணத்திலேயே நாவல்களை வௌியிட்டுள்ளனர். தரமான நாவல்களை வௌியிட முன்வந்த நிறுவனங்கள் கூட நிதிப்பலம் அற்றவையாகவிருந்தன. இன்றுள்ள நிலையில் வீரசேகாி நிறுவனம் ஒன்றே வெற்றிகரமாகப் பல நாவல்களை வௌியிட்டு விற்பனை செய்து வருகின்றது. 1971-ம் ஆண்டு தென்னிந்திய சஞ்சிகைகள், நூல்கள் ஆகியவற்றின் இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டின் விளைவாக இந் நூல்வௌியீட்டு நிறுவனம் 72 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்றுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை வௌியிட்டுள்ளது. அண்மைக்காலத்தில் எழுத்துலகிற்கு அறிமுகமாகிய பாலமனோகரன், கே. விஜயன், ஞானசேகரன், ஞானரதன், கே. ஆர். டேவிட், வை. அஹமத் முதலியோரது நாவல்களை இந் நிறுவனமே வௌியிட்டது. எனினும் வியாபாரத்தையே முதல் நோக்கமாகக் கொண்ட நிறுவனம் இலக்கியத் தரத்திலோ பொருளிலோ எத்தகைய அக்கறை செலுத்தும் என்பது ஐயப்பாட்டிற்குாியது. தூரத்துப்பச்சை, காட்டாறு, நான்சாகமாட்டேன், போராளிகள் காத்திருக்கின்றனர் முதலிய குறிப்பிடத்தக்க நூல்களை இந் நிறுவனம் வௌியிட்டிருப்பினும் அதன் சாய்வு சுவைமிகுந்த கதையம்சம் கொண்ட நாவல்கள் பக்கமே என்பது தௌிவு. இந் நிறுவனம் வெயிட்ட நா. பாலேஸ்வாி, கமலா தம்பிராசா, அன்னலட்சுமி இராசதுரை, இந்துமகேஸ், உதயணன் முதலியோரது நாவல்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். வாசக ரசனையை குறிப்பிட்ட ாீதியில் உருவாக்குவனவாகவும். எழுத்தாளரைக் கட்டுப்படுத்துவனவாகவும் இத்தகைய நிறுவனங்கள் அமைந்துவிடும் அபாயம் எப்போதும் உண்டு. இதுமட்டுமன்றி நூல் வௌியீட்டுச் செலவுகள் மேன்மேலும் உயரும் நிலையிலும், இறக்குமதிக்கட்டுப்பாடு சமீபகாலத்தில் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தென்னிந்திய சஞ்சிதைகள் நூல்கள் ஆகியவற்றின் போட்டியை எதிர்நோக்க வேண்டிய நிலையிலும் நாவலிலக்கிய வளர்ச்சி மட்டுமன்றி ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சியே தேக்கடையும் அபாயம் ஏற்படக்கூடும். எழுத்தாளர் பரந்த கொள்கை அடிப்படையில் இணைந்து செயல்படுவதற்கான அவசியத்தை இந்நிலமை வற்புறுத்துகிறது.
அருமை
பதிலளிநீக்கு