சனி, 9 ஏப்ரல், 2011

திராவிட இயக்க இதழ்கள் அன்றும் இன்றும்

இதழ்களால் வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம். குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உயிரோட்டமாக இயங்கிக் கொண்டிருப்பது இயக்கம் ஆகும். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனத் தொடங்கி நீதிக்கட்சி - திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பல்வேறு பரிமாணங்களில் தோற்றம் பெற்றுள்ளன.


இந்த அத்துணைப் பரிமாணங்களிலும் ‘பார்ப்பனரல்லாதாரின்’ இயக்கம் என்பது மட்டும் அடிப்படையாக அமைகின்ற கொள்கையாகும். ‘பார்ப்பனரல்லாதார்’ என்பதைக் குறிக்க திராவிடர்’ என்ற சொல்லாட்சி உருவாக்கம் பெற்றது. ‘திராவிட’ என்ற சொல்லாட்சி ‘பிராமணியம், பார்ப்பனீயம்’ என்ற சொல்லாட்சிக்கு எதிரான ஒரு சொல்லாக தந்தை பெரியார் நிறுவிக் காட்டினார். திராவிட இனத்துக்குரிய கொள்கைகளை வளர்த்தெடுக்க முதல் கருவியாகப் பயன்பட்டவை இதழ்களாகும். திராவிட இயக்கத்தின் போர் முரசாக திராவிட இயக்க இதழ்கள் விளங்கின. அறிவுப் பணியாற்றுவதில் முன்னணி படை வீரர்கள் போல் செயல்பட்டன.

காங்கிரஸ் பேரியக்கமும், பொது உடைமை இயக்கமும் இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்ற இந்தியாவில், திராவிட இனத்தின் பழமையையும், மொழியின் வளத்தையும், சிறப்பையும், தமிழரின் பெருமையையும், தனித்தப் பண்பாட்டையும் தமிழ் மக்களிடமும், பிறரிடமும் எடுத்துரைக்க புறப்பட்ட இதழ்களே திராவிட இயக்க இதழ்கள். மூன்று விழுக்காடே உள்ள பார்ப்பனர்களின் வருணாசிரமக் கொள்கையினால் தொண்ணூற்று ஏழு விழுக்காடாக உள்ள உழைக்கும் மக்களான திராவிடர், ‘சூத்திரர்’ எனப் பெயரிடப்பட்டு தீண்டத்தகாத இழிபிறவிகளாக நடத்தப்படும் நிலைமையை எடுத்துரைத்து ‘திராவிடர்’ ‘தமிழர்’ என்ற இன உணர்ச்சியும் மொழி உணர்ச்சியும் பெறுவதற்காக பிரச்சார ஊடகமாக வலம் வந்தவை திராவிட இயக்க ஏடுகள். திராவிடர் என்ற சொல் அன்று மக்களையும் திராவிட இயக்கத் தலைவர்களையும் ஒன்றிணைத்தன. சாதாரண பாமரனையும் படிக்க வைத்தது. கல்வி அறிவுப் பெற்றோரை சமுதாய விழிப்புணர்வு அளித்து விவரமானவர்களாக்கின. இந்த ஏடுகளினால் முடிதிருத்தும் நிலையங்கள் மூளை திருத்தும் நிலையங்களாயின. தேநீர்க் கடைகள் விவாதக் கூடங்களாயின. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு தமிழாசிரியர்கள் தமிழுணர்வை ஊட்டினர். கல் உடைக்கும் தொழிலாளியும், மூட்டை சுமப்பவர்களும், இயக்க ஏடுகளை படித்ததினால் இயக்க உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். அதன்

கொள்கைகளை தத்தம் வாழ்வில் கடைபிடிப்பதால் தான் வெறும் மனிதன் அல்ல; தனக்கென ஒரு இலட்சியம் உண்டு. அதற்காக நாங்கள் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருப்போம்; உழைப்போம்; சமத்துவ சமுதாயப் பணி மேற்கொள்ளுவோம் என்ற உறுதியுடன் செயல்படத் தொடங்கினர். இதனால் இவர்கள் Ôஇலட்சிய வீரர்களாக’ திகழ்ந்தனர். இதனால் மற்றவர்கள் இவர்களை தனித்துவம் மிக்கவர்களாக உணர்ந்தனர். கறுப்புச் சட்டைக்காரர்களாக அடையாளம் பெற்றனர். பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க சிந்தனையாளர்கள் திராவிட இயக்க இதழ்களை நடத்தக் களமிறங்கினர். பலர் படைப்பாளிகளாக தங்கள் எழுதுகோலை ஏந்தினர். இந்த இதழ்கள் மக்களிடம் வலம் வர உழைத்தவர்கள் ஏராளமானோர்.

‘தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆங்கில திராவிட இயக்க இதழ்களின் எண்ணிக்கை 257. திராவிட இயக்க இதழ்களின் முன்னோடியாக வெளிவந்தவை 14 என திராவிட இயக்க சிந்தனையாளர் க. திருநாவுக்கரசு 'திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் திராவிட இயக்க இதழ்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். ‘நாம் கொடுத்திருக்கிற பட்டியலும் முழுமையானது அன்று. கிடைத்தவற்றைச் சலித்து எடுத்து வெளியிட்டு இருக்கின்றோம். இப்பட்டியலில் தனித்தமிழ் இதழ்களையும் மொழி இயல் இதழ்களையும் தமிழ்த் தேசிய இதழ்களையும் இணைக்கவில்லை. அவையும் ஒரு வகையில் திராவிட இயக்க இதழ்களே ஆகும்’ என்று இந்நூலின் முன்னுரையில் க. திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார். இந்தப் பட்டியலில் உள்ள 257 இதழ்களைக் காணும்பொழுது திராவிட இயக்கத்தாரின் சிந்தனை ஆற்றலும், முயற்சியும், உழைப்பும் கொள்கைப் பிடிப்பும் கண்டு வியப்படையாமல் இருக்க முடியாது. இவை அனைத்தும் நிலவி வந்த சமுதாய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புறமாக இருந்து செயல்பட்டு மிகப் பெரிய மாற்றத்திற்குக் காரணமாக இருந்தன. திராவிட நாடு திராவிடருக்கே, பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என்ற பிரச்சாரத்துடன் பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம் என்ற இலட்சியத்தை நோக்கி செல்லும்பொழுது திராவிட இயக்க ஏடு நடத்தியோரும், எழுத்தாளர்களும் போர்க்களத் தளபதிகளாக, அணி அணியாகச் செயல்பட்டனர்.

திராவிட தீபிகை, திராவிட வர்த்தமானி, திராவிடப் பாண்டியன், திராவிட ரஞ்சனி, திராவிட மஞ்சரி, திராவிட வாணி, திராவிட கோகிலம் ஆகிய இதழ்கள் (19ஆம் நூற்றாண்டில்) 1847இல் தொடங்கி திராவிட இயக்க இதழ்களுக்கு முன்னோடியாக ‘திராவிட’ என்ற சொல்லாட்சியுடன் வலம் வந்தன. அதற்குப் பிறகு 20ம் நூற்றாண்டில் திராவிடன், திராவிட அரசு, திராவிட ஏடு, திராவிடன் குரல், திராவிடக் கூட்டரசு, திராவிடக் கேசரி, திராவிட சினிமா, திராவிட நாடு, திராவிடமணி, திராவிட முரசு, திராவிடன் வீரம் என 13 இதழ்கள் வெளிவந்துள்ளன.

19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் வெளியான பெரும்பாலான இதழ்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல; லோகோபகாரி, தேசோபகாரி, தேஜோபிமானி, ஜனாநுகூலன் போன்ற பெயர்களான இருந்தன. இந்நிலையில் பெரியார் ‘குடிஅரசு’ எனும் தமிழ்ப் பெயர் தாங்கி இதழைத் தொடங்க வேண்டும் என்று 1922ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் சிறைவாசம் இருந்தபோது நினைத்தார்.

‘குடிஅரசு என்னும் பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதன்முதல் நானும் எனது நண்பர் தங்கப்பெருமாள் பிள்ளையும் 1922-ல் கோயம்புத்தூர் ஜெயிலில் சிறைவாகம் செய்யும்போதே நினைத்தோம்’ என்று தெரிவிக்கும் பெரியார் மூன்றாண்டுகள் கழிந்த பின் தன் நினைப்பை நடப்பாக்கினார். கொடுமைகள் களைய, புதுமைகள் விளைய 2.5.1925 ஆம் நாள் குடிஅரசு தொடங்கப்பட்டது. ‘ஜனநாயகம் என்பது வடமொழிச்சொல், அதை வேண்டாமென்று ஒதுக்கி ‘குடி அரசு’ என்ற பெயரை வைத்தேன் என்று அவரே வெளியிட்டிருக்கிறார். தூய தமிழ்ப்பெயர் சூட்டுவதில் அவருக்கிருந்த நாட்டத்தை இது காட்டுகிறது. சிறையிலிருந்தபோது திட்டமிட்ட வண்ணமே, ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த கற்றறிந்த வழக்குரைஞரும் பண்பாடு நிரம்பிய பேராயக் கட்சி முன்னோடியும் பெரியாரின் நடவடிக்கைகளுக்குத் தோள் கொடுக்கத் தயங்காதவருமாகிய திரு. தங்கப்பெருமாள் அவர்களையும் இதழ் தொடங்கும் தம் முயற்சிக்குத் துணையாக வைத்துக் கொண்டார். இதழாசிரியர்களாக ஈ.வெ.இராமசாமி நாயக்கர், வ.மு. தங்கப் பெருமாள் பிள்ளை என இருவர் பெயர்களும் சாதிப் பின்னொட்டுகளுடன் இடம் பெற்றிருந்தன’ (இதழாளர் பெரியார், அ. இறையன்)

இதழ்களை சுயமரியாதை இயக்கத்தின் உயிர்ப்பாகக் கருதினார் பெரியார். பல்வேறு தடைச் சட்டங்களும், அடக்குமுறைகளும், ஒடுக்குதலும், பறிமுதலும், சிறைத் தண்டனையும், தண்டத் தொகை செலுத்துதலும், வழக்குகளும் நடைபெற்று அனுபவித்து வந்த போதிலும் விடாமல் தொடர்ந்து இதழ்களை நடத்தி தன் முயற்சியில் வெற்றி பெற்றவர் பெரியார். ‘தமிழ்க் கிழமை இதழ் குடிஅரசு, ஆங்கில மாதிகை ரிவோல்ட் (ஸிமீஸ்ஷீறீt) தமிழ்க்கிழமை இதழ் புரட்சி, தமிழ் நாளிதழ் ‘பகுத்தறிவு’, தமிழ்க் கிழமை இதழ் ‘பகுத்தறிவு’, தமிழ் மாதிகை ‘பகுத்தறிவு’, தமிழ் நாளேடு விடுதலை, ஆங்கில மாதிகை ‘ஜஸ்டிசைட்’ (யிustவீநீவீtமீ) தமிழ் மாதிகை ‘உண்மை’, ஆங்கில மாதிகை ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ (ஜிலீமீ விஷீபீமீக்ஷீஸீ ஸிணீtவீஷீஸீணீறீவீst) நீதிக்கட்சியின் நாளேடு ‘திராவிடன்’ ஆகியவற்றின் பொறுப்புகளை மேற்கொண்டு நடத்திய நாற்பத்தியெட்டு ஆண்டுக் காலப் பட்டறிவுப் பழமாக விளங்கினார் பெரியார் (இதழாளர் பெரியார், அ. இறையன்).

‘சுயமரியாதை உணர்ச்சியைத் தமிழ்நாட்டில் துவக்கிவிட்டவர் நாயக்கர் ஆவார். பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்த பெருமையையும் அவருக்கே உரித்தானது. இன்று இம்மாகாணம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நமது இயக்கம் கொண்டப்படுகிறது. அம்மகத்தானப் பெருமைக்கு அருகர் நாயக்கரே. ‘குடிஅரசி’ன் பெருமை மிக ஆகும். ஆடாததையெல்லாம் ஆட்டி வைத்த பெருமை ‘குடிஅரசு’க்கே உரித்தானதாகும். இதற்குக் காரணம் பெரியாரின் சொல்லும் எழுத்தும் வன்மை கொண்டதாக இருந்ததே. அவருடைய ‘குடிஅரசு’ பத்திரிகையில் மக்கள் மனத்தைக் கவரத்தக்க அளவு கடந்த சக்தி இருப்பதற்குக் காரணம் தன் உள்ளக் கிடக்கையில் உள்ளதை அப்படியே எடுத்துச் சொல்வதுதான். உண்மையிலேயே எத்தகைய கல்வியாளரும் கோடிக்கணக்கான ஜனசமூகமும் திகைக்கத் தக்க பத்திரிகையை, இவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.’’ - என்று குடிஅரசின் சிறப்பைப் பற்றித் தமிழ் ஆர்வலர் டி.கே. சிதம்பரநாதர் குறிப்பிட்டுள்ளதை ஒரு சான்றாகக் காட்டலாம். பெரியார் என்றால் சுயமரியாதை! சுயமரியாதை இயக்கமே குடிஅரசு இயக்கம் என்ற பெரும் வரவேற்பைப் பெற்றது. குடிஅரசு இயக்கத்தின் விளைவுதான் தமிழினமான மீட்பு நிகழ்வு என்ற வரலாறு படைக்கப்பட்டது.

தொடர்ந்து குத்தூசி, அறிவுப்பாதை, அறிவுக்கொடி, கிளர்ச்சி, இனமுழக்கம், முரசொலி, இனமுரசு, ஈரோட்டுப்பாதை, மன்றம், தமிழ் மன்றம், தம்பி, தோழன், தென்னாடு, நம் நாடு, காஞ்சி, தனி அரசு, புதுவை முரசு, புது உலகம், நகரத்தூதன், பொன்னி, மறுமணம், மறவன்மடல், வெள்ளிவீதி, மாலைமணி, வெற்றி முரசு, சிந்தனையாளன், குறள்முரசு, குறள்நெறி, முன்னேற்றம், முன்னணி, முல்லைச்சரம், போர்வாள், முப்பால் ஒளி, தனிநாடு, தன்னாட்சி, தன்மானம், தமிழ்த் தென்றல், தாயகம், தாய்நாடு, தாய்மண், சண்டமாருதம், சமதர்மம், கொள்கை முரசு, சுயமரியாதை எனத் தனித்துவம் மிக்க தலைப்புகளில் நாளேடுகளும், வார ஏடுகளும், மாத இதழ்களும் வெளிவரலாயின.

திராவிட இயக்க எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், அந்தக் கொள்கைகளை மக்கள் மனதில் நிலைநிறுத்தவும், பின்பற்றவும் முயற்சித்தவர்கள் திராவிட இயக்க சிந்தனைகளை பிற நாட்டாரும், பிற மொழியினரும் அறிந்துகொள்ள 18 ஆங்கில இதழ்களை நடத்தியுள்ளனர். 1940-1950களில் தொடங்கப்பட்ட இதழ்களும், நின்று போன இதழ்களும் மிகுதி. அக்காலக் கட்டத்தில் இயக்க ஏடுகளை மிக அதிக அளவில் விலை கொடுத்து வாங்கிப் படித்தவர்கள் திராவிட இயக்கத்தினர். பட்டிதொட்டிகளிலெல்லாம் படிப்பகம் தொடங்கப்பட்டு ஆங்காங்கு இவ்வேடுகளை இடம் பெறச்செய்வதும் ஒரு இயக்கப் பணியாக இருந்தது.

குடிஅரசு தலையங்கம் ஒன்றில் பெரியார் எழுதியது போல Ôஎந்த மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளை செய்ய வேண்டுமென்று கருதினோமோ, அந்த மக்களே எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுயமரியாதை இயக்கம் செயல்பட்டது. இந்துக்களின் மீது அவர்களின் உயிர் போன்ற உணர்ச்சிகளின் மீது தாக்குதல் தொடுத்தது. அது ஓர் இரத்தப் புரட்சி செய்வதைக் காட்டிலும் கடினமானது. அல்லவா? இத்தகைய மிகக் கடினமான காரியம் ஆற்றுவதற்குத் தொண்டர்கள் தேவை. ஆம். அது தொண்டர்களை ஒழுங்கமைப்பதும், பயிற்றுவிப்பதும் தேவை. அப்படிப்பட்ட பயிற்றுவிப்பாளனாக, ஒழுங்கமைப்பாளனாக இருந்தவைதான் சுயமரியாதை இயக்க ஏடுகள்.’’ இவற்றில் ‘விடுதலை’ (1935 முதல்) 75 ஆண்டுகள்; Ôமுரசொலி’ இதழ் (1942 முதல்) 68 ஆண்டுகளாக இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட நாடு வார இதழ், 1942 முதல் 1963 வரை 21 ஆண்டுகள் வெளியிடப் பட்டது. பல இதழ்கள் இடையிடையே நின்று போயின. திராவிட இயக்க இதழ்கள் வெளிவந்த கால அளவு எப்படியிருந்த போதிலும் திராவிட இன உணர்ச்சியோடு சிறந்த தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் நிரம்பியதாக வெளிவந்தன என்பது இதன் தனிச் சிறப்பாகும்.

திராவிட இதழ்களைத் தொடங்கியவர்களில் பெரும்பாலோர் பொருள் வசதி அற்றவர்கள்; இயக்கத்தின் மீது உள்ள பற்றும், ஆர்வமும், தொண்டுள்ளமும்தான் அவர்களின் முதலீடு. இதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகள் தரலாம். ‘போர்வாள் : 1947 இல் இந்த இதழ் தொடங்கப்பட்டபோது இந்த இதழின் ஆசிரியராக இருந்த எனக்கு தலையங்கங்கள் முதலிய கட்டுரைகளை எழுதுவதற்குத் தனி அறை இல்லை. தனி மேசை கூட இல்லை. குடியிருந்த வீட்டின் மாடிக் கைப்பிடிச் சுவரின் மீது எழுதுவதற்குரிய தாள்களை வைத்து, வாரந்தோறும் நான் எழுதிக் கொண்டிருந்தேன்’ என்று பேராசிரியர் மா. இளஞ்செழியன் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டலாம். திராவிட இன உணர்ச்சியும், பொதுமை நோக்கும், தமிழ்ப் பற்றும் கொண்ட இந்த இதழ்கள் ஏற்படுத்திய சாதனைகள் ஏராளம். பார்ப்பனீய ஆதிக்கத்திற்கு வேராக இருந்த வருணாசிரமக் கொள்கைகள் மீது சரிமாரியாகத் தொடுத்தக் கருத்துப் போரினால் சாதி ஆணவம் சரிந்தது. இது இன்னும் உயிருடன் இருந்தாலும் தீண்டாமைக் கொடுமைகளை பெருமளவிற்கு குறைத்தது. மூட நம்பிக்கைகளை முற்றாக ஒழிக்க முடியவில்லை என்றாலும் அதன் இரும்புப் பிடியைத் தளர்த்தி விழிப்புணர்வையூட்டின. தமிழ்ப் பெயர் சூட்டுதல், தொழில் நிறுவனங்களுக்கு பெயரிடுதல், இதழ்களுக்குப் பெயரிடுதல் என்பதில் வடமொழி ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டி வெற்றி பெற்றன. தமிழ் இதழ்களின் மொழி நடையில் பெரும் மாற்றத்தை உருவாக்கின. வடசொல் நீக்கி இனிய தமிழ் நடை என்பது திராவிட இயக்க இதழ்களின் அடையாளமாகியது. மேலும் இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை என்ற வடமொழித் தழுவல் இலக்கியத்திற்கு இருந்த முக்கியத்துவத்தை நீக்கி சங்க இலக்கியங்களும், திருக்குறளும், நீதி நூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பேரு மதிப்புடன் போற்றப்பட்டன.

உலகமெங்கும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களும், அதற்கானத் தத்துவங்களையும், சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், வால்டேர், ரூஸோ, பெட்ரண்ட் ரஸ்ஸல், இங்கர்சால், பெர்னாட்ஷா, காரல்மார்க்ஸ், லெனின் என இன்னும் பல்வேறு புரட்சிகர சிந்தனையாளர்களை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தின. புத்திலக்கியங்களை படைத்துக் காட்டின. இதனால் திராவிட இயக்க ஏடுகள் கருத்துக் கருவூலங்களாக அனைத்துத் தரப்பினராலும் போற்றப்பட்டன. பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற உணர்வையூட்டின. மொத்தத்தில் இவை தமிழகம் எழுச்சிபெற புத்துலகப் பாதையைக் காட்டின. ஆனால் இன்று மேற்குறிப்பிட்ட தகுதிகளுடன் வெளிவருபவை விடுதலை, உண்மை, ஜிலீமீ விஷீபீமீக்ஷீஸீ ஸிணீtவீஷீஸீணீறீவீst, பெரியார் பிஞ்சு, சிந்தனையாளன், றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ ணிக்ஷீணீ, பெரியார் முழக்கம், கருஞ்சட்டைத் தமிழன் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லிவிடலாம். பெரியாரின் வழி நின்று செயல்படுவோர் பல பிரிவுகளாக இருந்த போதிலும் இன்றுவரை தங்கள் பணியை சிறப்புடன் செய்து வருகின்றார். அன்றைய திராவிட இயக்க ஏடுகளுடன் இன்று ஒப்பிட்டால் ஏமாற்றமும், ஏக்கமும்தான் மிஞ்சும். பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் தோய்வில்லாமல் இலட்சியத்தையே உயிர்ப்பாகக் கொண்டு சிந்தனையாளனாக பணியாற்றிவரும் வே. ஆனைமுத்து அய்யா அவர்களின் பணி அளப்பரியது. அன்றும், இன்றும், என்றும் போற்றக் கூடியதாகும்.

இயக்க இதழாளர்கள்

சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை மக்களிடையே பரப்புவதற்காக நடத்தப்பட்ட இதழ்களின் மூலம் சாதாரணத் தொண்டனும் சிறந்தப் பேச்சாளராக விளங்கினர். ‘சுயமரியாதை இயக்கத்தவரைப் போன்று பேசும் திறமையுடையவர்கள், மற்ற இயக்கத்தில் மிகச் சிலரே. இயக்கத் தொண்டர்கள் பேசும் திறமையே திறமை. . . .! இவ்வாற்றலையுடைய மக்கள், ஒரு காலத்தில் அரசியல் துறையில் நுழையுங்காலை, இவர்களை வெல்வார் யார். . .? இவர்கள் முன் யார் நிகர்? எந்தக் கட்சியினராய் இருப்பினும் சுயமரியாதை இயக்கத் தொண்டர் முன், பேசும் திறமையில் நிகர் யாருமில்லை என்றே சொல்லலாம்’ (குடிஅரசு 13.11.1932) என்று தந்தை பெரியார் எழுதினார்.

1967இல் ஒன்பது பேர் கொண்ட தி.மு.க. அமைச்சரவையை அறிஞர் அண்ணா அமைத்தபோது, அதில் ஐந்துபேர் இதழாசிரியர்களாக இருந்தவர்கள் என்பது, திராவிட இதழியல் வரலாற்றில் மட்டும் அல்லாமல், இந்திய இதழியல் வரலாற்றிலேயே தனித்து இடம் பெறத் தக்க ஒரு சிறப்பு செய்தியாகக் குறிப்பிடப்படுகிறது. அறிஞர் அண்ணா 'திராவிட நாடு’ இதழில் தி.மு.கழகப் பேச்சாளர்களின் பேச்சு எப்படி இருக்கும் என்பதை பின்வருமாறு எழுதிக் காட்டினார். ‘நாவலர் நடையில், தமிழ் இலக்கியம் ஆட்சி செய்கிறது; நடராசன் பேச்சிலோ எளிமையும் தோழமையும் சுவை தருகிறது; கருணாநிதியின் பேச்சு கலை முரசு; கண்ணதாசன் பேச்சில், காரம் கவிதை வடிவில் கிடைக்கிறது; ஆசைத்தம்பியின் பேச்சில், அழுத்தம் திருத்தம் அழகு - பெறுகிறது, சீனுவாசன் பேச்சிலே சிந்துபைரவி கேட்கிறது; இளங்கோ பேச்சில் எதிரியை மடக்கிடும் முறுக்குத் தெரிகிறது; சம்பத்து பேசுகிறார். . . . ‘சம்மட்டி அடி’ என்கின்றனர் எதிரிகள்; என்.எஸ்.இராமசாமி பேசுகிறார் எதிரியின் மனமும் இளகிவிடுகிறது; சிற்றரசு பேசுகிறார். சீறிவருவோரும் சிரித்தபடி குழைகின்றனர்; சத்தியவாணி பேச்சிலே சுவையும் சூடும் கலந்து கிடைக்கிறது; குடந்தை நீலமேகம், அனுபவத்தைக் கொட்டுகிறார்; மதுரைமுத்து, தமிழ் மரபாம் வீரத்தை விளக்குகிறார்; கோவை இராஜமாணிக்கம், கோலோச்சும் வழியே கூறுகிறார்; ப.உ. சண்முகம், பண்பும் பயனும் காண்கிறோம்; காஞ்சி அண்ணாமலை, கனிவு பொழிகிறார்!’ என்று அறிஞர் அண்ணா எழுதிக் காட்டியதின் மூலம் திராவிட இயக்கத்தாரின் பேச்சும் எழுத்தும்-வேறு எந்த இயக்கத்திலும், கட்சியிலும் இத்தகைய ஆற்றல்மிக்கவர்கள் ஒருங்கிணைந்து படைவீரர்கள் போல் செயல்பட்டுள்ளதைக் காணமுடியாது.

‘சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு 953 இல் ‘தீப்பொறி’ என்ற ஏட்டைச் சொந்தமாக நடத்தினார். 1959இல் ‘இனமுழக்கம்’ என்ற ஏட்டிற்கு ஆசிரியராக இருந்தார். இருபதிற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், நாடகம், திரைப்படம் போன்ற கலைத்துறைக்கும் தமது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். லெனின் நடத்திய ‘இஸ்கரா’ (ஷிஜீணீக்ஷீளீ) ஏட்டை நினைவுபடுத்தும் விதமாக இப்பெயர் அமைந்துள்ளது. ஏடு நடத்துவோர் எத்துணையோ இடர்ப்பாடுகளை சந்தித்தப் பொழுதும் மறுபுறம் தமது சொற்பொழிவுப் பணிகளையும் தொடர்ந்து செய்தனர். சிந்தனைச் சிற்சி சி.பி. சிற்றரசு, சிறு சிறு தொடராகப் பேசுவார். மக்கள் சிரித்துக் கொண்டே கேட்பர். அவரது பேச்சுகளில் செய்திகள் துணுக்குகளாக இடம்பெறும். அதனை இணைத்து, பிரச்சினைகளினூடே கலந்து, மக்கள் முன் வைப்பார். ஒரு ‘பதிவை’ அவர்களிடம் உண்டாக்கி விடுவார்.


இவரது பேச்சில் ‘ரூசோ’ வருவான்; வால்டேர் பேசுவான்; சாக்ரடீஸ் கேள்விக் கணை தொடுப்பான்; சாக்கிய சிம்ம புத்தன் ஒளிர்வான்; உலகை திருத்திய உத்தமர்களெல்லாம் உலா வருவர்! இடையிடையே நகைச்சுவை சிரிப்பொலி. இவரது பேச்சு நகைச்சுவைக்கு முதலிடம் தருவது போன்ற எண்ணத்தை உருவாக்கும். ஆனால் அது ஒரு பெரிய விஷயத்தை புரிய வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு எழுத்து ஒரு புறம், பேச்சு, செயல்பாடுகள் மற்றொரு புறம் என்று இயங்கி வந்தனர் திராவிட இயக்க எழுத்தாளர்கள். இதனால் கலை, இலக்கியம் வேறு சமுதாயப்பணி வேறு, அரசியல் வேறு என்ற நோக்கு மறைந்து ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக மாறின.

‘வேலெடுத்து போர்தொடுத்த வீரம் எங்கே? வெங்குருதி வாளெங்கே? தோள்கள் எங்கே? கோலெடுத்த பேரெல்லாம் ஆள வந்தார் கொட்டாவி விட்டபடி தூங்குகின்றார்; மாலுடத்த தமிழ்மகனே; மானம் எங்கே? மயங்காதே விழி! எழு! பார்! உலகை நோக்கு! கால்பிடித்து வாழ்வதுமோ தமிழ வாழ்வு? கானத்து புலிப்போத்தே! வீரம் காட்டு!’

இப்படி வீரம் தெறிக்க எழுதுபவர் கவிஞர் முடியரசன். திராவிட இயக்கம் நடத்திய ஏராளமான இதழ்களில் எழுதிய பெருமைக்குரிய கவிஞர். இப்படி எழுதிய எழுத்தாளர்கள் ஏராளமானோர். திராவிட இயக்கத்தின் ஒவ்வொரு ஏட்டிற்கும், ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்த முக்கியத்துவம் உண்டு. ஏராளமான நிகழ்வுகள் உண்டு. இவை அனைத்தும் சேர்ந்தவையே திராவிட இயக்க இதழ் வரலாறாகும். ஒரு கட்டுரையில் எழுதி முடித்துவிடக் கூடியது அல்ல; ஒட்டுமொத்தமாகக் கூறவேண்டமானால் ஆயிரமாயிரம் தமிழ் இதயங்களைக் கவர்ந்த இலட்சிய முழக்கங்களாக வலம் வந்த அன்றைய திராவிட இயக்க ஏடுகளின் பணி ஈடு இணையற்றது.

முனைவர் மு. வளர்மதி

























1 கருத்து: