வெள்ளி, 21 ஜனவரி, 2011

தமிழர் தேசிய விழா


மொழி ஒரு இனத்தின் அடையாளம். ஒரு தனித்தப் பண்பாட்டின் அடையாளம். இனமானத்தின் அடையாளம். தமிழ், தமிழருக்கு மொழி மானமாக அமைந்தது. அவ்வகையில் பெரும் தொன்மை வாய்ந்த‌ பண்பாட்டுக்குரிய தமிழ் மக்கள், தங்களின் மொழியை உழைப்பு மொழியாக, கலை மொழியாக, ஆட்சி மொழியாக, ஆளுமைத் திறன்மிக்க மொழியாக வளர்த்தெடுத்தனர்.
 

கவினுறு மலைகள் ஏறிக் களைத்து
எங்கள் கடலொடு நதி பல நீந்தித் திளைத்து
காடுகள் சோலைகள் பூத்து
எங்கள் கைகள் வரைக்கும் காய்த்து
ஆடுகள், மாடுகள், பன்றிகள் மேய்த்து
சமவெளி உழைப்பினில் உயிர்மெய் வியர்த்து
உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில்
ஒன்று கலந்து வளர்ந்த தமிழே! தலைமுறைக் குரலே!
பிழைப்பு மொழி பேசாத உழைப்புத் தினவே!
உயிர் உறை கனவே! பரம்பரை உழைப்பே!
பாட்டாளி வர்க்க விடுதலை அழகாய் விளங்கிடு தமிழே!

என்று தமிழரின் மொழி வரலாற்றை புதிய நோக்கில் காணுகின்றார் கவிஞர் துரை.சண்முகம். தமிழரிடமிருந்து கொள்ளை போன செல்வங்கள் பல. தலைமுறைக் குரலாக இன்று மிச்சப்பட்டு இருப்பது மொழி ஒன்றே. தமிழரின் பண்பாட்டு விழாக்களில் இன்று நம்மை இனங்காட்டி நிற்பது உழவர் திருநாள், அறுவடைத் திருநாள், தைத்திருநாள், பொங்கள் திருநாள் என்பது மட்டுமே.

உழவே 'தலை' என்றுணர்ந்தவர்கள் தமிழர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று அய்ந்து வகை நிலவியல் கூறுகளுக்கு ஏற்பத் தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டவர்கள் பண்டைத்தமிழர்கள்.

பயிர்த் தொழில், நெசவுத்தொழில், தச்சுத் தொழில், மட்கலத் தொழில், கொல்லுத் தொழில், உலோகத் தொழில், அணிகலத் தொழில், தோல்தொழில் என்ற கைத்தொழில்களும், கால்நடை வளர்ப்பு, வேட்டையாடுதல், மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல் என்ற நிலஞ்சார்ந்த தொழில்களும், ஓலைத் தொழில், பொம்மை செய்தல், சாயப்பாக்கு, சுண்ணம் தயாரித்தல், கயிறு திரித்தல், நூல் தொழில் ஆகிய கைவினைத் தொழில்களும், கள் அடுதல், சலவைத் தொழில், கட்டடத்தொழில், விறகு வெட்டுதல், யானைப் பாகன், தேர் ஓட்டுபவன், துடியன் எனும் பிற தொழிலாளர் தொழில்களும் அரசர், அமைச்சர், ஒற்றர், தூதுவர், காவலர், அறங்கூறவையகத்தார், அறிவர், ஆசிரியர், ஆவணமாக்கள், கணியன், நாழிகைக் கணக்கர், புலவர், மருத்துவர் ஆகிய அறிவுசார் தொழில்களும் பண்டை நாளில் நடைபெற்று வந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இப்படிப் பல தொழில்கள் இருந்து வந்த போதிலும் சமுதாயம் முழுமைக்கும் பயன்தரும் வகையில் மக்களின் பசியைப் போக்கும் உற்பத்தியாளனாக உழவன் இருந்தத‌னால் 'உழவே தலை' என்றும் , உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்' என்றும் போற்றப்பட்டது; சிறப்பிக்கப்பட்டது.

வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி

எனத் தொல்காப்பியரும் சுட்டிக் காட்டியுள்ளார். பெரும்பாணாற்றுப்படையில் உருத்திரங் கண்ணனார் 'குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்' என்று சிறப்பித்துக் கூறுகிறார். இப்படி இலக்கியங்கள் உழவர்களைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றன. ஆனால் இலக்கியங்கள் இப்படி யெல்லாம் நம்மைச் சிறப்பித்துக் கூறுகின்றன என்று உழவர் சமுதாயம் பூரித்துப் புளகாங்கிதம் அடையும் நிலையைக் காண முடிவதில்லை.

கழனியில் இரவும் பகலும் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த நாள் ஒன்றுதான் உழவர்களுக்கு மகிழ்ச்சியான நாளானது. புதுநெல்லரிசி, புதுப்பானை, புதிய கரும்பு, புதிய பூசனைக்காய், புதிய இஞ்சி, புதிய மஞ்சள் கொத்து வைத்து, புத்தாடை உடுத்திக் கதிரவனை வணங்குவதும், தம்மோடு உழைப்பில் பங்கெடுத்துக் கொண்ட மாடுகளை அலங்கரித்துப் பொங்கல் சோறு ஊட்டி மகிழ்வதும் ஒரு வழி வழி மரபாகத் தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கிறது.

இந்த அறுவடைத் திருநாளை உழவர்களின் விழாவாக, பொங்கல் வழாவாகக் கொண்டாடி வந்த இந்தப் பின்னணீயில், காலப்போக்கில் 'மகரசங்கிராந்தி' என்று சொல்லப்படும் இந்திரன் கதையும் இதில் புகுந்து கொண்டது.தைத் திங்கள் முதல் நாளன்று ஞாயிறு மகர ராசியில் வந்து உத்தராயணம் தொடங்குவதால் வைதீக முறையில் இதனை மகர சங்கிராந்திப் பண்டிகையென்பர். இதனால் உழவர்களே யன்றி எல்லோரும் இந்நாளைக் கொண்டாடுவர்.. திருமால் கண்ணனாக அவதரித்தபோது, ஆயர்கள் இந்திரனை வழிபடுவதைக் கண்டு அவ்வழிபாட்டை நிறுத்தினார். இந்திரன் சினந்து, பெருமழை பெய்வித்து ஆநிரைகளுக்குத் துன்பமுண்டாக்கினான். கண்ணன் கோவர்த்தனம் என்னும் மலையைக் குடையாகப் பிடித்து, ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான். தன் ஆற்றல் செல்லாததால் இந்திரன் கண்ணனை வணங்கித் தன்னையும் ஆயர்கள் வழிபடும்படி அருள் செய்ய வேண்டிக் கொண்டான். அவ்வாறே போகியன்று இந்திரனையும் பொங்கலன்று கண்ணனையும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளையும் கன்றுப் பொங்கலன்று கன்றுகளையும் மக்கள் வழிபட்டன‌ர்என்று நூல்கள் கூறும் (கலைக் களஞ்சியம், தொகுதி ஏழு, ப.645). ஆரியத்தின் சூழ்ச்சி, பொங்கலையும் விட்டு வைக்கவில்லை. இதற்கும் ஒரு கதை கூறித் தங்களுக்குரியதாக்கி வைத்திருக்கிறது.

'உழவு' என்பது 'உழத்தல்', 'உழைப்பு' என்பதையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். உழைப்புடன் தொடர்புடையதாகத் தங்களுடைய விழாவை அமைத்துக் கொண்டவர்கள் தமிழர்கள். பின்னாளில் ஆரியத்தின் கலப்பில்லாத சூழ்ச்சி மேற்கூறிய கதைப்படி இந்த விழாவிலும் புகுந்து கொண்டது.

இன்றளவில் தைப்பூசம், தை அமாவாசை, தை கிருத்திகை, மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரா பெளர்ணமி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆயுத பூசை, சரஸ்வதி பூசை, விஜயதசமி, விநாயக சதுர்த்தி, தீபாவளி, கந்த சஷ்டி, ரம்ஜான், பக்ரீத், முகரம், கிருஸ்மஸ் என்ற பண்டிகைகளோடு இன்னும் பல்வேறு கோவில் கும்பாபிஷேகங்கள், பருவ கால வழிபாடாக அய்யப்பன் வழிபாடு..... இப்படி இன்னும் எத்தனையோ விழாக்களையும் பண்டிகைகளையும் தமிழ் நிலத்தில் வாழும் தமிழர்கள் பெரும் பணமும் நேரமும் செலவிட்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்தி‌ வருகிறார்கள். இது அறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பானது என்று இப்போதைய தமிழர்களுக்கு நினைக்க நேரமில்லை. போதாக் குறைக்கு மார்வாடிகளின் 'ஹோலி' பண்டிகையும் இப்பொது தமிழர்களின் முகங்களில் சாயம் பூசியிருக்கிறது. கொண்டாட்டம், களியாட்டம் என்ற பெயரில் இளைஞர்களிடையே இழிவான செயல்பாடுகள் வளர்ந்து வருகின்றன.

இத்துணைப் பார்ப்பனப் பண்டிகைகளை திருவிழாக்களைக் கொண்டாடிவரும் தமிழர்களிடையே பொங்கல் விழாவிற்கு உரிய தனித்தன்மையும், தனிச்சிறப்பும் மங்கி வருகின்றது என்றே கூறலாம். ஏனெனில் இன்று உலகம் தகவல் தொழில் நுட்ப அறிவியல் வளர்ச்சியில் ஒரு கிராமம் போல் சுருங்கி வருகிறது. நிலங்களை உழுதுண்டு வாழும் நினைப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. நீர்வளம், நிலவள‌ம் குறைந்து வருவதும் ஒரு காரணமாகும். அந்நிய ஏகாதிபத்திய நாடுகளின் ஒப்பந்தங்களும், தொழில் ரீதியான ஊடுருவல்களும் தமிழர்களின் வாழ்வை உலுக்கிப் பார்க்கிறது. கல்வி முறை ஏழைகளை மிரள‌ வைத்திருக்கிறது; வேலைவாய்ப்புத் தேடி தமிழர்களை அந்நிய நாடுகளுக்குத் துரத்துகிறது. பாட்டாளிகளை, கூலி உழைப்பாளர்களை நகரை நோக்கி ஓட வைக்கிறது.

இளைஞர்களையும், இளைய தலைமுறைகளையும் விரைவில் பணக்காரர்களாகி, வாழ்வில் சுகபோகிகளாக வாழ்வதெப்படி என்பதை நோக்கித் திசை திருப்புகிறது. அரசியல் கட்சிகள் சாதிச் சங்கங்களாகச் சுருங்கிப் பேயாட்டம் ஆடுகின்றன. மதவாதம், இன வாதம் என்ற பிடிவாதங்கள் மனித நேயத்தின் வேர்களை வெட்டி வீழ்த்துகின்றன. பெண் இனத்தின் பிறப்புரிமையே தடுக்கப்படுகின்றது. இந்தச் சூழலில் உழவனை உழவனே நினைத்துப் பார்க்கவும் மற்றவர்கள் அவன் நிலையை எண்ணிப் பார்க்கவும் ஒரிரு நாட்கள் என ஒதுக்கப்படுகின்றன.

ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும், மாமழை போற்றுதும் என்று இயற்கையுடன் இணைந்து, அகம், புறம் பாடிய முன்னோரின் சிறப்பினை மறந்து தமிழன் ஆரியத்தின் சூழ்ச்சியில் வீழ்ந்து, சுயமரியாதை, பகுத்தறிவு, தேசியப் பெருமிதம் எல்லாவற்றையும் உதிர்த்து விட்டதால் அறியாமையும், அற்பத்தனங்களும் தமிழனின் அடையாளமாகி விட்டது. இந்த இழிவைத் துடைத்து, மானமும் அறிவும் உள்ள இனமாக மாற்றும் முயற்சியால் தான் திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் ஒரு பண்பாட்டுப் புரட்சியைத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக பொங்கலைத் தமிழரின் தேசியத் திருவிழாவாக கொண்டாட அறிவுறுத்தியது.

'பொங்கல்' என்ற சொல் உயர்ச்சி, கிளர்தல், சமைத்தல், பொலிதல், மிகுதி, கள் என்ற பல பொருளைக் குறிப்பதாகும்.(பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து (சிலப்.5.69); பொங்கல் வெண்காழ் (அகம் 129.9); பொங்கல் வெண்மழை (நெடு. 19; அகம் 219). பொங்கலைத் தமிழர்களின் விழாவாக, உழவர்களுக்குரிய திருநாளாகக் கருதி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதை ஓர் இயக்கமாக நடத்திக் காட்டியவர் நல்லாசிரியர் கா. நமச்சிவாயர் அவர்கள். உழவர்களின் விழாவை உழவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கொண்டாட வேண்டும் என்ற உண‌ர்வு முதல்முதலில் வளர்க்கப்பட்டது இப்பேராசிரியர் பெருமகனாரால்தான். தொடர்ந்து திராவிட இயக்கச் சிந்தனையாள‌ர்கள் இவ்விழாவின் உண்மை நோக்கத்தை விள‌க்கி இந்து மதப் பண்டிகைகளைக் கண்டித்து பேசினர்; எழுதினர். பாவேந்தர் பாரதிதாசனும் இதனை அறிவியற் பாங்கான விழா என்று போற்றினார். தான் நடத்தி வந்த 'குயில்' ஏட்டின் சார்பில் ஒவ்வோராண்டும் சிறப்பு மலர் வெளியிட்டார். பொங்கல் வாழ்த்துக் குவியல்' என்னும் கவிதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டார். 'பொங்கல் புதுநாளில் உங்கள் தொண்டு என்ன?' என்ற தலைப்பில் 'குயில்' (30.12.1958) ஏட்டின் மூலம் தமிழர்கள் மூன்று கொள்கைகளை நெஞ்சில் நிறுத்திச் செயல்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். அவை
"1.தமிழ்நாட்டைத் தமிழன் அடைய வேண்டும்.
2. தமிழ்மொழி வாழ வேண்டும்; இந்தி தொலைய வேண்டும்.
3. சாதி ஒழிய வேண்டும்; 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் வள்ளுவர் வாய்மொழியை இறப்பு வரும் நேரத்தும் இன்னா நேரும் நேரத்தும் நினைக்க வேண்டும்" என்பனவாகும்.

'தமிழர் திருவிழா' என்பது உணவுக்கும் உடைக்கும் உறையுளுக்கும் மூலாதாரமாய் இருக்கும் வான் சிறப்பைப் போற்றுதாக அமைந்துள்ளது. பாரதிதாசன் வள்ளுவர் வழி நின்று காலத்திற்கேற்ப முளைத்த அய்யங்களைக் களைந்து, மழை வணக்கமே தமிழர் திருநாள் விழாவின் குறிக்கோள் என்பதை 'அமிழ்து எது?' என்னும் புதுமைப் படைப்பில் தெளிவு செய்துள்ளார்' என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும். பொங்கல் விழா என்பது முழுக்க முழுக்க உழைப்புடனும், உழவர்களுடனும் தொடர்புடையதாகத் தோன்றியது என்பதை இன்னும் நாம் எடுத்துக்கூற வேண்டியதாக உள்ள‌து. ஆகையால்தான் தந்தை பெரியார் 'பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாடவேண்டும்' என்பதை ஒரு பிரச்சாரமாகச் செய்து வந்தார்.

"திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக்குத் தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ள‌து. இதன் காரணம் என்னவென்றால் பிற கலாச்சாரங்களைத் த‌மிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாகத் தமிழ்நாட்டில் தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவது கூட மிக மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டு விட்டன என்பது மாத்திரமல்லாமல் தமிழனுக்கு வரலாறு சரித்திரம் என்பது கூட இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டது" என்பதைக் குறிப்பிட்டுக் காட்டி, பொங்கல் விழாவைத் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்று கூறினார்.

மதம் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத் தக்கதாகவே இருந்து வருவ‌தால் - பயனளித்து வருவதால் அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து, தங்களை மானமும் அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ளவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மானமும் அறிவுமே மனிதற்கழகு என்று 13.01.1970 ஆம் நாளன்று 'விடுதலை' இதழில் பொங்கல் விழா பற்றிய அறிக்கையில் தந்தை பெரியார் 'மானமும் அறிவும் மனிதற்கழகு' என்ற வரலாற்றுப் புகழ் மிக்க வரிகளை எழுதினார்.
"வரலாற்று மூதாதைத்
தமிழினம் வாழ்ந்ததை
வாழ்வதைப் பார்த்திட்ட தை


உரியதை மீட்கவும்
உள்ளதைக் காக்கவும்
ஓங்கிடும் செம்பதாகை"

எனும் கவிஞர் தணிகைச் செல்வன், தைப்பாதை கவிதை வரிகள் நம் இருப்பையும், இழப்பையும், நம் எதிர்ப்பையும் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழ்நாட்டின் தற்காலச் சூழ்நிலை ஒருவித அச்சத்தையே நம்மிடையே உருவாக்கி வருகிறது. நுகர்வுக் கலாச்சாரத்திலும், கடவுள் பெயராலும், மதங்களின் பெயராலும் நடைபெற்று வரும் களியாட்டங்களில் மயங்கிக் கிடக்கும் தமிழர்களுக்குப் பொங்கலும் ஒரு சடங்காக மாறிவிட்டது.

தமிழா! ஆல் மரந்தன்னை
வீழ்த்துமோ விழுது!
தாய்மொழி அழித்தாயே
ஆங்கிலம் தொழுது!


தமிழா! பாரடா உன் தாய்
துடிக்கின்றாள் அழுது
தைப் பொங்கல் வாழ்த்தேனும்
தமிழிலே எழுது.

'’தமிழ்ப் பொங்கல் செய்வோம்' என்று இன்றைய தமிழ் சமூகத்தை சுட்டிக் காட்டுகிறார் கவிஞர் காசி ஆனந்தன்.

இந்நிலையிலும் 'நாம் தமிழர்' என்பதை நினைவூட்டும் வகையில் உழைக்கும் மக்களின் விழாவாக, உழைப்புத் திருநாளாகப் பொங்கல் விழாவை தமிழ்த் தேசிய விழாவாகக் கொண்டாடுவது தமிழர்களின் கடமையாகும்; தமிழர்களின் உரிமையுமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக