திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -2-

படைப்பு நெறிமுறைகள்


சிறுவர்களை முன்னிலைப்படுத்தி சிறுவர் பாடுவது, சிறுவர்களுக்குப் பாடுவது என்ற இரண்டு முறைகளில் கவிஞர்கள் தங்கள் பாடல்களை வழங்கியுள்ளனர். தற்காலத்தில் சிறுவர்களே சிறுவர் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளாக உருவாகி வள‌ர்ந்து வருகின்றனர்.

பாப்பா பாட்டு பாடிய பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோர் சிறுவர் இலக்கியப் பாடல்களைப் பாடிய முன்னோடிகளில் சிலர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட நூல்களில் சிறுவர்களுக்கு அறிவூட்டும் பாடல்களைப் படைத்தப் படைப்பாளிகளும் இவ்விலக்கியத்தின் முன்னோடிகளாவர். இருந்த போதிலும் பலர் சிறுவர் இலக்கியங்களை படைப்பதை முழுநேரப் பணியாகக் கொண்டனர்.


அழ. வள்ளியப்பா, நாரா நாச்சியப்பன், நாக முத்தையா, தணிகை உலகநாதன், பு.ஆ.முத்துக்கிருஷ்ணன், துமிலன், கு.அழகிரிசாமி, மு.அண்ணாமலை, புவனை கலைச்செழியன், வாசுதேவன், தாமரைக் கண்ணன், மணி. திருநாவுக்கரசு, மயிலை சிவமுத்து, பெரியசாமித்தூரன், பூவண்ணன், வானொலி அண்ணா ஏ. அய்யாசாமி, தமிழ் ஒளி, ஆலந்தூர் கோ. மோகனரங்கன், ஆ. கோவிந்தராசலு, குழ.கதிரேசன், பி.வி.கிரி, ஏ.ஜி.எஸ்.மணி, ஜவகர், காண்டீபன், சதாசிவம், செம்பை சேவியர், ரேமா, இறை.பொற்கொடி, கலியபெருமாள், துரை. மூர்த்தி, த.பரசுராமன், புலமைப்பித்தன், ஜே.ஆர்.சுரேந்திரன், இரத்தினவேலன், ஆ.முத்துக்கிருஷ்ணன், ந.தி.சுப்ரமணி, கலைப் பொழிலன், அரங்க. சீனிவசன், மின்னூர் சீனிவாசன், அடிகளாசிரியர், கோ.கந்தசாமி, பெரியண்ணன், கோ.ஜெயச்சந்திரன், திருமால், இந்திர சிங், தமிழ்நெஞ்சன், பூவை அமுதன், எஸ். விஜயலட்சுமி, கோவி.தமிழ்ச் செல்வன், தமிழோவியன், தமிழப்பன், இமயபாரதி, ப.கணேசன், ஆற்றலரசு, சுராஜ், எஸ்.ஆர். ஜி.சுந்தரம், சக்திகனல், நன்மொழி, வெ.சுந்தரம், சி.வேலாயுதம், ஆ.தி.கிருஷ்ணசாமி ஆகியோரும் இன்னும் பலரும் சிறுவர் இலக்கியம் எனும் பெரும்பரப்பில் பாடல்கள் வழங்கிய கவிஞர்களாவர். அண்மைக் காலத்தில் குழந்தைகள் பாடல்கள் குருந்தகடுகளில், ஒலிப்பேழைகளில், வானொலியில், தொலைக்காட்சி, அலைவரிசைகளில், பாடநூல்களில், திரைப்படங்களில், குறும்படங்களில், கலை நிகழ்ச்சிகளில்,, கவியரங்குகளில் எனப் பலநிலைகளில் சிறுவர் பாடல்கள் இடம் பெற்று வருகின்றன.

“வள்ளியப்பாவின் பாடல்கள் நூற்றுக்கு நூரு சிறுவர் பாடல்கள். இவர் முதலில் சிறுசிறு நூல்களாகத் தம் பாடல்களை வெளியிட்டார். பின்னர் 'மலரும் உள்ளம்' (முதல்தொகுதி) என்னும் பெரிய தொகுதியாக வெளியிட்டார். இன்றுவரை அதிகப் பதிப்புகள் (ஒன்பது பதிப்பு) வெளிவந்து அதிக அளவு விற்ற (முப்பதாயிரம் பிரதிகள்) தொகுதியும் இதுவே. அரசினரின் பரிசுகளை மூன்று முறை பெற்ற ஒரே தமிழ் நூலும் இதுவே.

இந்நூலின் இலக்கிய வெற்றியும், விற்பனை வெற்றியும் கண்டே, குழந்தைக் கவிஞர்கள் துணிந்து தம் பாடல்களை நூல்களாக வெளியிட்டனர். அழ.வள்ளியப்பா 'குழந்தைக் கவிஞர்' எனும் பட்டம் பெற்றவர். இவரைத் தொடர்ந்து குழந்தைக் கவிஞர் பரம்பரை, நாட்டிலே உருவாகியுள்ளது. இது குழந்தைக் கவிஞர்களில் இவர் மட்டுமே பெற்ற பெறற்கரும் சிறப்பு. வள்ளியப்பாவின் முன்னுரையோடு வந்த சிறுவர் கவிதை நூல்கள் முப்பதுக்கும் மேற்பட்டவை. பிற குழந்தைக் கவிஞர் தம் நூலில் வள்ளியப்பாவைப் பாடற் பொருளாகக் கொண்டு பாடல்கள் எழுதியுள்ளமை. இவரைப் பற்றி ஒரு கவியரங்கம் நடந்தமை ஒரு சிறப்பே.

மலரும் மாலையும் நூலுக்குப் பின் 30 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களை ஒரு பகுதியாகக் கொண்டு வெளிவந்த பெரியதோர் கவிதைத் தொகுதி, 'இதயச்சுவடி'. இதன் ஆசிரியர் 'வானொலி அண்ணா' ஏ.அய்யாசாமி. இவர் சிறுவர் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் பெருமைப் பெற்றவர். வானொலியில் சிறுவர் நிகழ்ச்சிக்குப் பொறுபேற்றதின் மூலம் குழந்தை இலக்கியத்தை வளப்படுத்தியவர். நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைக் கவிஞர்கள் உள்ளனர் என்பதைத் தமிழுலகுக்கு அறிவித்தவர். அக்குழந்தைக் கவிஞர்களின் பாடல்களை இசையமைப்போடு வானொலியில் ஒலி பரப்பியர். படிப்பவர்களாக இருந்த சிறுவர்களைப் பாடுபவர்களாக மாற்றியவர்".(2)

சிறுவர் இலக்கியத்தில் சிறுவர் பாடல்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன‌. குழந்தைப் பாடல்களை இயற்றுவது எளிதல்ல. ஏனெனில் குழந்தைகள் பாடுவது போல் பாடுதல், குழந்தைகளுக்காகப் பாடுதல், என்ற இரண்டு போக்குகளிலும் குழந்தை மனம், குழந்தையின் இயல்பு, குழந்தையின் செயல்பாடுகள், அடிப்படையாக அமைய வேண்டும். மழலையர் மற்றும் சிறுவர்களின் உளவியலைச் சார்ந்து இப்பாடல்கள் அமைகின்றன.

“பச்சைக்கிளியே வா வா

பாலும் சோறும் உண்ண வா”

என்று கவிமணி ஒரு சிறு பிள்ளையாகத் தன்னை மனதில் கொண்டு எழுதினார் பறவைகளை, விலங்குகளை, குழந்தைகள் தோழமையுடன் அழைத்து விளையாடவும், பங்கிட்டு உண்ணவும் அழைப்பது போல் பாடல்களை இயற்றுவது முதல்படியாக அமைகிறது. இவை அனைத்தையும் பொம்மை வடிவில் அவர்களுக்கு அறிமுகப் படுத்துவது எளிதாக உள்ளது. இவை குழந்தையே பாடுவது போல் அமைகின்றன.

“பொம்மை பொம்மை பொம்மை பார்

புதிய புதிய பொம்மை பார்

கையை வீசும் பொம்மை பார்

கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்

தலையை ஆட்டும் பொம்மை பார்

தாளம் போடும் பொம்மை பார்

எனக்கு கிடைத்த பொம்மை போல்

ஏதும் இல்லை உலகிலே” (3)

என்று தணிகை உலகநாதன் கையில் பொம்மையுடன் இருக்கும் ஒரு குழந்தையாக தன்னை மனதில் இருத்திக் கொண்டு எழுதினார். இன்றைய கவிஞர்களும் புதிய முறையில் அறிவியல் பார்வையுடன் குழந்தைகளாகி பாடுகின்றனர்.

“காலை நேரம் வந்ததும்

காக்கை நீரில் குளிக்குது!

நீந்தும் மீன்கள் குளத்திலே

நன்றாய் மூழ்கிக் குளிக்குது

நானும் சோப்புப் போட்டுத்தான்

நல்லாத் தேச்சுக் குளிக்கிறேன் !

உடம்பில் அழுக்குப் போகுது

உற்சாகந்தான் வருகுது!” (4)

என்று 'பாடுவோம் அறிவியல்' என குழ.கதிரேசன் எழுதுகிறார். குழந்தைகளுக்காகப் பாடுவது என்ற போக்கில் ஏராளமான கவிஞர்கள் த‌ங்கள் கவிதைகளை எழுதியுள்ளனர்.(எ.டு)

“காக்கா பறக்குது பார் தம்பி!

கருப்பா இருக்குது ஆனாலும்

சோக்கா இருக்குது அதன் மனசு!

சுயநலம் இல்லாப் பெருமனசு!”(5)

என்று கவிஞர் புலமைப் பித்தன் சிறுவனுக்கு சொல்லுவது போல் காக்கையின் சிறப்பை 'கிள்ளைப் பாடல்கள்' தொகுப்பில் வழங்கியுள்ளார்.

“பள்ளி செல்வாய் தவறாமல்

பாடம் படிப்பாய் நாள்தோறும்

துள்ளி எழுவாய் இப்போதும்

காலம் கழிந்து செல்லாதே

கடமை செய்யத் தவறாதே

காலம் போனால் திரும்பாதே

கடமை தவறின் இழிவாமே!”(6)

என்று குழந்தைகளுக்கு கல்வி கற்க பள்ளி செல்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் ந.தி.சுப்பிரமணியன். (குழந்தைத் தெய்வங்கள்)

சில பாடல்கள் குழந்தைகளை சிந்திக்க வைக்கும் வகையில் இயற்றப்படுகின்றன. இவை சற்று புதிர் போல கூறி அதற்கு விடையறிவும் பாங்கில் அமைந்துள்ளன. (எ‍ - டு) தம்பி என்ன தெரியுமா?

நெட்டையான காலுடனே

நீளமான கழுத்துடனே

சுட்டுப் பொசுக்கும் மணலில் கூடச்

சுமையைத் தூக்கிச் செல்லும்

அது என்ன தெரியுமா? தம்பி என்ன தெரியுமா?

முறத்தைப்போன்ற காதுடனே

முகத்தில் ஒற்றைக் கையுடனே

உரலைப் போன்றகாலுடனே

ஊர்வலத்தில் வருமே அது

என்ன தெரியுமா? தம்பி என்ன தெரியுமா? (7)

கவிஞர் அழ.வள்ளியப்பா. இப்பாடலை சிறுவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒரு குழு பாடலைப் பாடுவதும், மற்றொரு குழு விடையைக் கூறுவது போன்று அமைத்து எழுதியுள்ளார். சிறுவர்கள் இது போன்ற பாடல்களை இசையுடன் பாடுவதுடன் எளிதில் சிந்திக்கும் ஆற்றலையும் வளர்க்கவும் ஊக்கமளிக்கின்றன.

1 கருத்து:

  1. நல்ல பதிவு. குழந்தைக் கவிஞர்கள் பற்றிய ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தி நிற்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் (இன்னும்) பலப்பல. நல்வாழ்த்துக்களுடன் தமிழன் கா இரி சதிஷ், புதுச்சேரி

    பதிலளிநீக்கு