ஞாயிறு, 24 மே, 2009

விமரிசனம்

6. விமர்சனம்
இலக்கிய விமர்சனம் என்பது, இலக்கியப் படைப்புக்களை வகைப்படுத்துதல், வரையறை செய்தல், விளக்கியுரைத்தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒரு அறிவுத்துறை என்று கூறுவர். பொதுவாக விமர்சனம் இரு வகைகளாகப் பாகுபடுத்தப்படுகின்றது. ஒன்று கோட்பாட்டு விமர்சனம் அல்லது விமர்சனக் கோட்பாடுகள். மற்றது செயல்முறை விமர்சனம்.

இலக்கியப்படைப்புக்களை விளக்குவதற்கும், அவை பற்றி அபிப்பிராயம் கூறுவதற்கும் அவற்றை வகைப்படுத்தி மதிப்பிடுவதற்கும் உாிய பொதுவான அடிப்படைகளையும் அளவுகோள்களையும் வகுப்பதைக் கோட்பாட்டு விமர்சனத்துள் அடக்குவர். ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பை அல்லது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குாிய இலக்கியப் படைப்பை நுணுக்கமாக ஆராய்ந்து, விளக்குவது, அல்லது மதிப்பிடுவதை செயல்முறை விமர்சனத்தின் பாற்படுத்துவர். எனினும் செயல்முறை விமர்சனம் வௌிப்படையாகவோ, மறைமுகமாகவோ விமர்சனக்கொள்கைகளாலேயே நிர்ணயிக்கப்படும் என்பது ஒரு பொதுவான உண்மையாகும். இப்பரந்த பொருளில், இலக்கிய விமர்சனம் 20 ஆம் நூற்றாண்டில் இருந்துதான் ஈழத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியது. நவீன இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியே இத்தகைய விமர்சன முறையின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர், இலக்கியம் பற்றிய சிந்தனை முனைப்பாக இல்லாவிடினும், இலக்கிய, இலக்கண, தத்துவ சாத்திர நூல்களுக்கு உரை எழுதும் மரபு இங்கு இருந்து வந்துள்ளது. உரையின் போது பல்வேறு சான்றுகளைக் காட்டித் தம்மதம் நிறுவும் தர்க்க முறையும் கடைப்பிடிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் உரையோ, விளக்கமோ செய்யுள் நூல்களுக்கே எழுதப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறுமுக நாவலரை எமது இலக்கிய விமர்சன மரபின் முன்னோடி எனக் கூறுதல் மரபு. சைவ மதம் சாராத இலக்கியங்களையும் அவர் பதிப்பிக்க எண்ணி இருந்தார் எனினும் சைவசித்தாந்த மரபில் வந்த இலக்கியங்களையே அவர் போற்றினார்.

'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டதே முதனூலாகும்,' அதை அடியொற்றியே வழிநூலும் சார்பு நூலும் தோன்றும்; அறம், பொருள், இன்பம், வீடு தருதலே நூற்பயன் என்பன போன்ற இலக்கியம் பற்றிய தீர்க்கமான கருத்துக்களை மரபு மரபாக எற்றுக்கொண்டிருந்த அக்கால உரையாசிாியர்களோ, அறிஞர்களோ முனைவன் கண்ட முதல் நூல்களையோ, அதை ஒட்டிய சார்புநூல், வழி நூல்களையோ உரைத்துப்பார்த்து மதிப்பீடு செய்திருப்பர் என நாம் எதிர்பார்க்க முடியாது. எனினும் தாம் சார்ந்த மத அளவுகோல் கொண்டு இலக்கியத்தினைப் பாகுபடுத்தும் தன்மையினை 20 ஆம் நூற்றாண்டின் முன்னர் காண்கின்றோம்.

அக்கால கட்டத்தில் சைவ சித்தாந்த கலாச்சாரத்தைப் பேணுவதிலும் வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலக்கியங்களுள் கந்தபுராணம், பொியபுராணம் என்பவற்றுக்கே முதன்மை கொடுக்கப்பட்டது. சிலப்பதிகாரம் போன்றவை போற்றப்படவில்லை. பாடலுக்கு விளக்கம் தரும் போது தத்தம் கல்வி அறிவுகளுக்கு ஏற்ப பாடலில் உள்ள சொற்களுக்குப் புதுப்புது வியாக்கியானங்களைத் தந்தனர். சில இடங்களில் சொற்களுக்கு வலிந்து பொருள் காணும் முயற்சிகளாகவும் இவை மாறின.

இவ்வியாக்கியான முறையில் இலக்கிய இரசனையே முக்கியமானதாகக் கொள்ளப்பட்டது. இலக்கிய ஆய்வு இங்கு மேற்கொள்ளப்படவில்லை. இதனோடு ஒட்டி எழுந்ததே புராணபடனமாகும். கோயில்களில் மக்கள் முன்னிலையில் புராணங்களுக்கு உரை கூறுவதில் இம் மரபின் தாக்கத்தைக் காணலாம்.

இவ்வண்ணம் தத்துவங்களையும் இலக்கணங்களையும் ஆதாரம் காட்டி கற்பனையும் இரசனையும் கலந்து உரை செய்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ச. பொன்னம்பல பிள்ளையாவர் (1837-1897). இவர் பற்றிப் பண்டிதமணி கணபதிப்பிள்ளை பின்வருமாறு கூறுவர்.

"பொன்னம்பலப்பிள்ளை அழகுகள், நவரசங்கள் சொட்டச் சொட்ட பாடல்களுக்கு உரை விாித்தற்கென்றே பிறந்தவர் என்று சொல்லுவார்கள். அவரை மாணவர்களாகிய மதுகரங்கள் எப்போதும் சூழ்ந்து கொண்டே இருப்பார்கள். உச்சியில் இருந்து உள்ளங்கால் பாியந்தம் பொன்னம்பலப்பிள்ளையினது உருவம் இலக்கிய இரசனையால் ஆனது. புதிது புதிதாகத் தனக்குத் தோன்றுகின்ற இலக்கிய இரசனையை யாருக்காவது வௌிப்படுத்தாமல் இருக்கமாட்டாமை பொன்னம்பலப்பிள்ளையின் நித்திய கலியாண குணங்களில் ஒன்று."

பொன்னம்பலப்பிள்ளை பற்றிப் பண்டிதமணி கூறும் இக்கருத்து ஏனைய உரையாசிாியர்களுக்கும் பொருந்தக்கூடியதே. பொன்னம்பலப்பிள்ளையுடன் கந்தபுராண உரையாசிாியர்களான உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம். அண்மைக் காலம் வரை இம்மரபு ஆற்றல் வாய்ந்ததாக இருந்து வந்துள்ளது. தொல்காப்பிய உரையாசிாியர் கணேசையர் (1878-1958), திருவாசக உரையாசிாியர் நவநீதக் கிருஷ்ண பாரதியார் (1889-1954), பதிற்றுப்பத்து உரையாசிாியர் பண்டிதர் சு. அருளம்பலவனார், கந்தபுராண தக்ஷகாண்ட உரையாசிாியர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆகியோர் இம்மரபினரே. இவர்களுள் பண்டிதமணி கணபதிப் பிள்ளையும் அவரது பரம்பரையினரும் தனியாக நோக்கப் படத் தக்கவர்கள். இவர்கள் பழைய உரையாசிாியர்கள் வழி வந்தவர்களாயினும் பல விடயங்களில் இவர்கள் பழையவர்களில் இருந்தும் வேறுபடுகின்றனர்.

முன்னைய உரையாசிாியர்களைப்போல இவர்கள் சித்தாந்தக் கோட்பாட்டை அடியொற்றி எழுந்த இலக்கியங்களை மாத்திரம் போற்றவில்லை. இலக்கிய இன்பம் தரும் எந்த நூலையும் வரவேற்றனர். பண்டைய தமிழ்ப் புலவர்களை மட்டுமன்றி தமது சமகால ஈழத்துப் புலவர்களின் பாடல்களிலும் இலக்கிய நயம் கண்டனர். பாடல்களில் வரும் சொற்கள், அதன் அமைப்பு முறை, ஓசைநயம் ஆகியவற்றை இலக்கிய ரசனையின் மூலாதாரமாகக் கொண்டனர்.

பண்டிதமணி கணபதிப்பிள்ளை திருநெல்வேலி ஆசிாிய பயிற்சிக்கலாசாலையில் தமிழ் ஆசானாக இருந்தமையினாலும் கலாசாலையை மையமாகக் கொண்டு அவர் காவிய பாடசாலை ஒன்றை நடத்தியமையினாலும் தம்முடைய இலக்கியரசனை முறையினை மாணாக்கர் மத்தியில் அவரால் பரப்ப முடிந்தது. இக்கால கட்டத்தில் கோப்பாய் அரசினர் ஆசிாிய கலாசாலையில் கடமையாற்றிய குருகவி மகாலிங்கசிவமும் இத்தகைய இரசனை முறையினைத் தம் சொற்பொழிவுகளின் மூலம் வளர்த்தார்.

இம்மரபில் வந்தவர்களாக கனக. செந்திநாதன், க.ச. அருள்நந்தி. பொ.கிருஷ்ணபிள்ளை, கா.பொ. இரத்தினம், க.வேந்தனார் ஆகியோரைக் குறிப்பிடலாம். அக்காலத்தில் வௌிவந்த பத்திாிகைகளில் இவர்கள் எழுதிய கட்டுரைகளிலே இவர்களின் இலக்கிய நோக்கினைக் காண முடிகிறது. பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் இலக்கியவழி, கந்தப்புராண கலாச்சாரம், பாரத நவமணிகள்; பொ.கிருஷ்ண பிள்ளையின் இலக்கியச் சோலை, க.பொ. இரத்தினத்தின் இலக்கியம் கற்பித்தல் ஆகிய நூல்கள் இவர்களின் இலக்கிய ரசனை முறையை வௌிக்காட்டுவனவாய் உள்ளன.

பண்டிதமணி பரம்பரையில் கனக. செந்திநாதன் தனியாகக் குறிப்பிடத்தக்கவர். தனிப் புலவர்களை விமர்சனம் செய்து நூலாக வௌியிடும் மரபினை முதல்முதல் ஈழத்து விமர்சன உலகில் தொடக்கி வைத்தவர் இவரே. பண்டிதமணி பற்றிய இவரது மூன்றாவது கண், சோமசுந்தரப் புலவர் பற்றிய இவரது மூன்றாவது கண், சோமசுந்தரப் புலவர் பற்றிய திறவாத படலை, கவிஞர் மு. செல்லையா பற்றிய கவிதைவானில் ஓர் இளம்பிறை ஆகிய நூல்கள் இதற்கு உதாரணங்களாகும். கனக. செந்திநாதன் பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் இரசனை மரபில் வளர்ந்தவராய் உள்ள அதேவேளையில், பண்டிதர் பரம்பரையினர் சிலரால் 'இழிசனர் இலக்கியம்' என அழைக்கப்பட்ட நவீன புனைகதைத் துறையினை இலக்கியம் என ஏற்று விமர்சனம் செய்தவராகவும் காணப்படுகின்றார். எனினும் இவரது நவீன புனைகதை பற்றிய மதிப்பீடுகளிலும் இரசனை முறையின் பாதிப்பை ஓரளவு காணக்கூடியதாக உள்ளது.

பண்டிதமணி பரம்பரையினரால் வளர்க்கப்பட்ட இலக்கிய இரசனை முறை, இன்றுவரை பாடசாலைகளிலும் ஆசிாிய பயிற்சிக் கலாசாலைகளிலும் செல்வாக்குச் செலுத்திவருகின்றது. அன்று கல்வி அதிகாாிகளாக இருந்த க.ச. அருள்நந்தி, அ.வி.மயில்வாகனம், சதாசிவ ஐயர் போன்றோர் இவ்விரசனை முறையினை ஏற்று அதற்கு அளித்த ஊக்கமும் இம்மரபில் வந்தோரே ஆசிாிய கலாசாலைகளிலும் பாடசாலைகளிலும் இலக்கியம் பயிற்றுவோராக இருந்தமையும் இவ்விரசனை முறை பாடசாலைகளில் செல்வாக்குப் பெறக் காரணமாயிற்று.

இரசனை அடிப்படையில் அமைந்த இலக்கிய விளக்கமே இவர்களது இலக்கிய விமர்சன முறையாக அமைந்தது. எனினும் ஆரம்பத்தில் காணப்பட்ட சைவ சித்தாந்தம் என்ற சமய எல்லையை மீறி 'இலக்கியம்' என்ற பரந்த தடத்தினில் இலக்கிய ரசனை செல்வதனையும் அது ஈழத்து இலக்கியத்தைப் போற்றும் தன்மை கொண்டதாக அமைவதனையும் இவர்களிடம் காணலாம். இரசனை முறையாளர்கள் மரபுவழிச் செய்யுள்களில் அமைந்த பிரபந்தங்களையும், தனிப்ப்பாடல்களையுமே ஆராய்ந்து சுவை கண்டனர். உரைநடையில் எழுந்த நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதை. நாடகம் ஆகியவற்றை இவர்களிற் பெரும்பாலோர் இலக்கியங்களாக ஏற்கவில்லை. இலக்கியம் பற்றி இவர்கள் வைத்திருந்த கொள்கையே இதற்குக் காரணம் எனலாம்.
2
உரைநடையில் அமைந்த நவீன இலக்கியங்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கியதை அடுத்து 1940 களிலேயே ஈழத்தில் நவீன விமர்சனம் துளிர்விடத் தொடங்கியது எனலாம். இக்கால கட்டத்தில் புனைகதைத் துறையில் ஈடுபட்டோரே இவ்விமர்சனத் துறையிலும் ஈடுபட்டனர். நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் நவீன சிந்தனை முறையின் தோற்றமும் ஆகும். அதனால் பழைய சிந்தனை மரபுக்கும் புதிய சிந்தனை மரபுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்த முரண்பாட்டின் விளைவாகவே நவீன இலக்கிய விமர்சனம் தோன்றியது. தாம் படைத்த இலக்கியங்களின் புதுமையை நியாயப்படுத்தி எழுதவேண்டிய அவசியம் இக்கால எழுத்தாளர்களுக்கு இருந்தது.

இலக்கிய உலகிலே பழைய, வரட்டுத்தனமான பண்டித மனப்பான்மையின் செல்வாக்கை எதிர்த்த, உயிர் உணர்ச்சியுள்ள ஒரு கவிஞனை கதாபாத்திரமாகக் கொண்டு 1940 அளவில் இலங்கையர்கோன் எழுதிய 'நாடோடி' என்னும் கதையில், இலக்கியத்தில் இப்பண்டித மனப்பான்மைக்கு எதிரான கலகக் குரலையும் நவீன இலக்கிய விமர்சனக் கண்ணோட்டத்தின் தொடக்கத்தையும் காணலாம்.

"காளிதாசனுடைய ஒப்புயர்வற்ற தெய்வக் காவியமாகிய இரகு வம்சத்தைச் சுவை நைந்த உயிரற்ற வெறும் சொற் குவியலாகத் தமிழில் மொழிபெயர்த்த அரசகேசாியின் சகாக்களிடம் இருந்து நான் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்! பழமை பழமையென்று பிதற்றிக் கண்களை மூடிக்கொண்டு தம் அற்பத் திறமையில் இறுமாந்து உட்கார்ந்திருக்கும் இவர்களுக்குப் புதுமையும் முற்போக்கும் எங்கே பிடிக்கப்போகின்றது? திருக்கோவையாரைப் படித்துவிட்டு அதில் வெட்டவௌிச்சமாய் இருக்கும் அழகையும்,ஜீவனையும், ஓசையையும் தேனையும் அமுதத்தையும் சுவைத்து உணர முடியாது அதற்குள் ஏதோ சித்தாந்தக் கருத்து மறைந்து கிடக்கிறது என்று பாசாங்கு செய்யும் இந்தப் பழமைப்புலிகள்....."

"இனி வரப்போகும் தமிழின் மறுமலர்ச்சிக்கு வந்தனை செய்கின்றேன்."

இலங்கையர்கோனின் கதையில் வரும் மேற்காட்டிய கூற்றுக்கள் ஈழத்தில் நவீன இலக்கிய சிந்தனையின் தோற்றத்தைக் காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. அரசகேசாி காலத்தில் அவர் கதையை அமைத்திருந்தாலும், அது அவரது சமகால இலக்கியப் பிரச்சினையின் வௌிப்பாடேயாகும். இவ்வாறு புதுமைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு 1940களில் இலக்கிய விமர்சனத் துறையில் ஈடுபட்ட எழுத்தாளர்கள் பற்றி பேராசிாியர் க. கைலாசபதி பின்வருமாறு கூறுகின்றார்.

"இவர்கள் பெரும்பாலும் சமகால இலக்கியங்களைப் படித்துச் சுவைத்து அவைபற்றித் தர்க்கித்துச் சொல்லாடி இலக்கியத்தில் ஆத்மார்த்த அனுபவத்தையும், நிறைவையும் தேடியவர்கள். திறனாய்வு அவர்களின் பிரதான அக்கறையாக இல்லாதுவிடினும் தமது தொழிலின் நுட்பங்களைப் பற்றிய வாதப் பிரதிவாதங்களிலும் சர்ச்சைகளிலும் இவர்கள் தயங்காது பங்கு பற்றினர்."

மேல்நாட்டு இலக்கியங்களை ஆங்கில மொழி மூலமாகவே அறிந்துகொண்ட இவர்களின் விமர்சன அளவுகோலும் ஆங்கில மொழி வழியாகப் பெறப்பட்டதேயாகும். 'ஈழகேசாி' இவர்களுக்கு வௌியீட்டுத் தளமாயிற்று. சோ.சிவபாதசுந்தரம், சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோரும் ஈழகேசாியில் சமகாலப் புனைகதை இலக்கியம் பற்றி விமர்சனக் கட்டுரைகள் எழுதினர். அத்தோடு நாடகம், பிறகலைகள் பற்றியும் அவர்களின் விமர்சனம் அமைந்தது. இவ்வகையில் அகிலனின் சிநேகிதி, க.நாராயணனின் லட்சியப்பாதை, சு.வித்தியானந்தனின் தமிழர் சால்பு ஆகிய நூல்கள் பற்றியும் பேராசிாியர் கணபதிப்பிள்ளையின் தவறான எண்ணம் நாடகம் பற்றியும், டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக விழா பற்றியும் இலங்கையர்கோனின் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்கன. அகிலனின் 'சிநேகிதி' பற்றி இலங்கையர்கோன் ஈழகேசாியில் எழுதிய ஒரு விமர்சனக் குறிப்பை உதாரணமாகத் தரலாம்.

"......தமிழில் ஒரு துணிகரமான முயற்சி என்றே சொல்ல வேண்டும். ஐரோப்பிய நாவல்கள், நாடகங்கள் பலவற்றில் இப்பொருள் பல கோணங்களில் வைத்து ஆராயப்பட்டிருக்கிறது. விரசமான விசயமாக இருந்தாலும் அதை அலசிப் பார்க்கும் முறை கொஞ்சமும் விரசம் இல்லாமலே கையாளப்பட்டிருக்கிறது...... கள்ளக் காதல் மனித வாழ்க்கைக்குப் புறம்பானதல்ல. ஆனால் நாராயணசாமி என்ற பாத்திரம் புறம்பானவராகவே காணப்படுகிறார். ஒரு கணவன் தான் விரும்பி மணந்துகொண்ட மனைவியை, அவன் எவ்வளவுதான் நாபுஞ்சகனாக இருந்த போதிலும், இன்னொருவனை வீட்டுக்கு அழைத்துத் தன் மனைவியுடன் பழகச் செய்து பிறகு அவளை அவனுடைய கையில் ஒப்படைப்பதென்றால்-அந்தக் கணவனை என்ன என்று சொல்வது?- நாவலின் போக்கும் தமிழ் நடையும் அகிலனுக்குாிய சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது."

இவை எல்லாம் செயல்முறை விமர்சனத்தின் பாற்படும் கட்டுரைகளேயாகும். இதே காலப்பகுதியில் இலக்கிய விமர்சனக் கொள்கைகளை முன்வைக்கும் கட்டுரைகளும் எழுதப்பட்டன. இலக்கியத்தின் உருவம் உள்ளடக்கம், அதன் சமூகச் சார்பு முதலியவைபற்றி கொள்கைாீதியாக இக்கட்டுரைகள் அமைந்தன. இலங்கையர்கோன், அ.ந. கந்தசாமி, கே.கணேஷ், பேராசிாியர் கணபதிப்பிள்ளை, போன்றோர் இக்காலப் பிாிவில் இத்தகைய கட்டுரைகள் பலவற்றை எழுதினர். இலக்கியத்தின் நோக்கம், சமூகப்பணி ஆகியவை பற்றி அ.செ.முருகானந்தம் 1942-ல் வௌிவந்த ஈழகேசாியில் பின்வருமாறு எழுதினார்.

"தமிழின் கதை இலக்கியத்தின் காணப்படும் முக்கிய குறைபாடு இதுதான். அதாவது லக்ஷியக்கதைகள், சீர்திருத்தக்கதைகள் மிகவும் குறைவு. அத்தியாவசியமாக வேண்டப்படுவதும் அதுதான். பொழுதுபோக்குக்கதைகள் போதுமென்றபடி ஏராளமாகச் சேர்ந்துவிட்டன. இனி அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தமிழ் நாட்டை அப்படியே தூக்கி காட்டும், தேசத்தின் வறுமை, துன்பம். அரசியல் நிலைமை முதலியவற்றை உணர்ச்சி ஊட்டக் கூடிய கூடிய முறையில் சித்திாிக்கும் லக்ஷியக் கதைகள் பெருகவேண்டும், எழுத்தாளர் என்று பேனா தூக்கியவர்கள் இனி இத்துறையில் முயற்சிப்பார்களா?"

தேசத்தின் வறுமை, துன்பம், அரசியல் நிலைமை என்பனவே எமது இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்ற அ.செ. மு.வின் கூற்று புனைகதையின் உள்ளடக்கத்தை வலியுறுத்தியது. நமது தேசத்தின் அபிலாஷைகளை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும் என்ற தேசிய இலக்கிய நோக்கு விமர்சகர்களிடம் ஏற்படத் தொடங்கியது. இக்காலகட்டத்தில் மறுமலர்ச்சிப் பத்திாிகையில் இது சம்பந்தமான கட்டுரைகள் வௌிவந்தன. இப்பத்திாிகையில் இலங்கையர் கோன் எழுதிய 'தமிழின் மறுமலர்ச்சி' என்ற கட்டுரை முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் கே. கணேஷ் நடத்திய 'பாரதி' இதழிலும் இலக்கியத்தின் சமுதாயப் பணியை வற்புறுத்திக் கட்டுரைகள் வௌியாயின.
3
இவ்வாறு 1940 ஆம் ஆண்டுகளிலேயே நவீன இலக்கிய விமர்சன முயற்சிகள் தொடங்கப்பட்டன எனினும் 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில்தான் ஈழத்தில் அவை சிறப்பாக வளர்ச்சியுற்றன. 50ஆம் ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 1956க்கப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஈழத்தில் ஏற்பட்ட தேசிய பண்பாட்டு உணர்ச்சியின் விளைவாக இலக்கியத்திலும் தேசிய தனித்துவச் சிந்தனை வளர்ச்சியுள்ளது. இதன் பெறுபேறாக தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு வடிவம் பெற்றது. 50 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து 60 ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை, ஈழத்தின் இலக்கிய மேடைகளிலும், பத்திாிகை சஞ்சிகை போன்ற பொதுத் தொடர்புச் சாதனங்களிலும் தேசிய இலக்கியம் பற்றிய சர்ச்சைகள் நடைபெற்றன. ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். ஆங்கில இலக்கியத்துக்கும் அமொிக்க இலக்கியத்துக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை உதாரணமாகக் கொண்டு தமிழக இலக்கியத்துக்கும் ஈழத்து இலக்கியத்துக்கும் இடையே அழுத்திக் கூறினர். தேசிய இலக்கியம் பற்றி எழுதிய அ.ந.கந்தசாமி பின்வருமாறு குறிப்பிட்டார்.

"ஒரு மொழிக்கு ஒரு இலக்கியம் என்பது மொழிகள் கடந்து பரவி நிலைபெற்ற இக்காலத்துக்கு ஒவ்வாது. கடந்த இருநூறு ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவரும் ஆங்கில மொழி பல தேசிய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இன்று நாம் வெறுமனே ஆங்கில இலக்கியம் என்று கூறினால் அது அமொிக்க இலக்கியத்தையோ ஆஸ்திரேலிய இலக்கியத்தையோ கனேடிய இலக்கியத்தையோ குறிக்காது.

தேசிய இலக்கியம் என்ற நமது இயக்கம் சர்வதேசியத்துக்கு முரண்பட்ட ஒன்றல்ல. உயிருள்ள இலக்கியத்துக்கு தேசிய சமுதாயப் பின்னணி அவசியம். இவ்விதப் பின்னணியில் உருவாகும் தேசிய இலக்கியமே காலத்தையும் கடலையும் தாண்டி சர்வ தேசங்களையும் ஈர்க்கும் வல்லமை பெற்றதாகும்."

இக்காலப் பகுதியிலே நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியத்துறையில் ஈழத்து வாழ்க்கை யதார்த்த பூர்வமான வடிவம் பெற்றது என்பதை முன் அத்தியாயங்களில் பார்த்தோம். அதைப் பலப்படுத்துகின்ற பிரக்ஞை பூர்வமான இலக்கிய சித்தாந்த வௌிப்பாடாகவே இத்தேசிய இலக்கியக் கோட்பாடு அமைந்தது.

தேசிய இலக்கியம் என்பது எவ்வித வேறுபாடும் காட்டாது முழு மொத்தமான தேசியப் பண்பாட்டையும் உள்ளடக்கும் ஓர் இலக்கியக் கோட்பாடாகும். ஆனால் அதற்குள்ளே வர்க்க முரண்பாடுகள் உள்ளன. வர்க்க முரண்பாடுகளுக்கு இலக்கியத்தில் முதன்மை கொடுக்கும்போது, தேசிய இலக்கியத்தின் அடியாக பிறிதொரு இலக்கியக் கோட்பாடு உதயமாகிறது. அதுவே முற்போக்கு வாதமாகும். பரந்துபட்ட வெகுஜனங்களின் நலனையும், அவர்களின் பிரச்சினைகளையும், அவர்களது விமோசனத்துக்கான வேட்கையையும் இலக்கியத்திற் பிரதிபலிக்க வேண்டும் என்ற கொள்கையே முற்போக்கு வாதத்தின் சாராம்சமாகும். காலத்துக்குக் காலம் முற்போக்கு என்ற சொல்லுக்கு உாிய பொருள் வேறுபடலாம். நமது காலத்திலே முதலாளித்துவ சமூக முறையில் இருந்து, சோசலிச சமூக முறைக்கு மாறிச் செல்லும் போக்கினையே இது குறிக்கும். ஆகவே முற்போக்கு வாதம் தவிர்க்க முடியாமல் மார்க்ஸீய சித்தாந்தத்துடன் பிணைந்துள்ளது. அவ்வகையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைவிட முற்போக்கு இலக்கியக் கோட்பாடு திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட அரசியல் சார்பு உடையதாகின்றது.

ஈழத்து இலக்கிய விமர்சனத் துறையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைப் பிரசாரப் படுத்துவதில் முன்னணியில் நின்ற விமர்சகர்களே 1950, 60 களில் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்கு வாதத்தை, அல்லது மார்க்ஸீய அணுகுமுறையைப் பிரயோகித்தனர். க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகிய இருவரும் இதில் முதன்மையாகக் குறிப்பிடத் தக்கவர்கள். அ.ந. கந்தசாமி, கே.கணேஷ் இளங்கீரன், ஏ.ஜே. கனகரத்தினா, பிரேம்ஜி. சில்லையூர் செல்வராசன், எச்.எம்.பி. முகையதீன் முதலியோரும் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்குக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினர்.

முற்போக்கு விமர்சகர்கள் இயல்பாகவே இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கத்தில் அதிக அக்கறை காட்டினர். இலக்கியத்தை ஒரு கலை வடிவமாக மட்டுமின்றி அதை ஒரு சமூக சாதனமாகவும் இவர்கள் கண்டனர். ஒரு படைப்பு வௌிப்படுத்தும் தொனிப் பொருளைத் தங்கள் கண்ணோட்டத்தில் மதிப்பிடுவது மட்டுமின்றி, இலக்கியத்தின் நோக்கம், பணி, பயன்பாடு ஆகியவற்றை வரையறுத்துக் கூறுவது மட்டுமன்றி, பரந்த அர்த்தத்தில் இலக்கிய வடிவங்களின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை இயக்கும் சமுதாயக் காரணிகளை மார்க்ஸீய அடிப்படையில் விளக்குவதும் இவர்களின் நோக்கமாய் இருந்தது, 60-ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலேயே முற்போக்கு விமர்சனம் இதைச் சாதிக்கக் கூடிய முதிர்ச்சி பெற்றது. இதனால் 60க்குப் பிறகு இலக்கிய ஆய்வு, இலக்கியப் புலமை, இலக்கிய வரலாற்றுணர்வு ஆகியன ஈழத்தில் வளர்ச்சியுற்றன. கலாநிதி க. கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம், அடியும் முடியும், ஒப்பியல் இலக்கியம், பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் ஆகிய நூல்களும், கலாநிதி கா.சிவத்தம்பியின் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், நாவலும் வாழ்க்கையும். ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆகிய நூல்களும் முல்லைசான்ற கற்பு, திணைக்கோட்பாட்டின் சமுதாய அடிப்படை முதலிய அவரது கட்டுரைகளும் இவ்வகையில் முக்கியமான ஆக்கங்களாகும். இவற்றிலே இலக்கிய ஆய்வுக்கு சமுதாய வரலாற்றை ஆராரமாகக் கொள்ளும் போக்கினையும் சமுதாய பண்பாட்டு வரலாற்று ஆய்வுக்கு இலக்கியத்தைச் சான்றாக கொள்ளும் போக்கினையும் சமுதாய பண்பாட்டு வரலாற்று ஆய்வுக்கு இலக்கியத்தைச் சான்றாக கொள்ளும் போக்கினையும் நாம் அவதானிக்கலாம்.

முற்போக்கு விமர்சகர்கள் பொதுவாகவே உள்ளடக்க ஆய்வுக்கே முதன்மை கொடுத்ததால், தனிப்பட்ட படைப்புக்களையும் படைப்பாளிகளையும் மதிப்பிடுவதில் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சிலவேளை வௌிப்படையாக அரசியல் கோசங்களையும் கருத்துக்களையும் வௌிப்படுத்தும் படைப்புக்களும் படைப்பாளிகளும் விதந்துரைக்கப்பட்டும், உயர்ந்த சில கலைஞர்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டும் உள்ளனர். இக்குறைபாடு 70 களில் முற்போக்கு விமர்சகர்களாலேயே பரவலாக உணரப்பட்டது.

உருவ உள்ளடக்கப் பிரச்சினை இலக்கிய விமர்சனத்தில் ஒரு சிக்கலான பிரச்சினையாகவே இருந்துவருகின்றது. இது பற்றிக் கொள்கையளவில் சாியான கருத்துக்கள் முன்வைக்கப் படினும், மதிப்பீட்டின் அகநிலைத்தன்மை காரணமாக செயல்முறையில் தவறுகள் ஏற்பட அதிய வாய்ப்புண்டு. எவ்வாறெனினும் 70 களில் இலக்கியத்தில் உருவ உள்ளடக்க இயைபினையும் இலக்கியத்தின் கலைப் பெறுமானத்தையும் அழுத்தும் விமர்சனக் குரல்கள் முற்போக்கு விமர்சன உலகில் ஒலிக்கத் தொடங்கின. எம்.ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ஏ.ஜே. கனகரத்தினா முதலியோர் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். ஏ.ஜே. கனகரத்தினா மாக்ஸீய அழகியல் பற்றிய சில கட்டுரைகளை பாடும்மீன், அலை, மல்லிகை முதலிய இதழ்களில் எழுதினார். சண்முகம் சிவலிங்கம், நுஃமான் ஆகியோாின் கருத்துக்கள் கவிஞன் இதழ்களிலும் ஏனைய சஞ்சிகைளிலும் வௌிவந்தன. சண்முகம் சிவலிங்கம் இது பற்றி எழுதுகையில்,

"......எங்களுடைய இலக்கியம் எங்கள் வாழ் நிலையை எங்களின் அனுபவம் ஆக்கித்தர வேண்டும். எங்களின் உண்மையான வாழ்நிலை பிரதிபலிக்கப் பட்டால் அந்தப் படைப்பு நிச்சயமாக இயக்க இயல் ாீதியான சமூக மாற்றத்துக்கு இட்டுச் செல்கிறது. இந்த உண்மையை முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் சில விமர்சகர்கள் புாிந்து கொண்டதாகத் தொியவில்லை. அவர்கள் முற்போக்கு இலக்கியம் பற்றிய சில வாய்ப்பாட்டு உருக்களைச் செபித்துக் கொண்டு எமது உழைப்பாளர் வர்க்கத்தின் கலைவளத்தை வறளச் செய்து விடுவார்களோ என்ற அச்சம் எம்மிற் பலருக்கு உண்டு" என்று குறிப்பிட்டார்.

பிரசாரப் பாங்கான கருத்து நிலையில் இருந்து அனுபவ நிலைக்கு முற்போக்கு இலக்கியம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே இவர்களின் பொதுக் கோட்பாடாக அமைந்தது.
4

தேசிய இலக்கியக் கொள்கை இறுக்கமான அரசியல் சார்பை வௌிக்காட்டாததால் பொதுவாக எல்லோராலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் முற்போக்கு இலக்கியக் கொள்கை திட்டவட்டமான அரசியல் சார்பை உள்ளடக்குவதனால் அதற்கு எதிரான இலக்கியக் கோட்பாடுகள் உருவாகுவதற்கு அது வழிகோலியது. அந்த வகையில் 1960 களின் பிற்பகுதியில் ஈழத்து விமர்சன உலகில் இரண்டு புதிய இலக்கியக் கொள்கைகள் முன்வைக்கப் பட்டன. ஒன்று நற்போக்கு இலக்கியம், மற்றது பிரபஞ்ச யதார்த்த வாதம்.

நற்போக்கு இலக்கியக் கொள்கையை முன்வைத்தவர் எஸ். பொன்னுத்துரையாவர். 1950 களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நின்று 'மக்கள் இலக்கிய'த்தை ஆதாித்துப் புதுமை இலக்கியம் இதழில் கட்டுரை எழுதிய எஸ்.பொ. 60 களில் முற்போக்கு இலக்கியத்தின் பிரதான எதிர் விமர்சகர்களுள் ஒருவராக மாறினார். முற்போக்கு என்ற சொல்லுக்கு எதிராக நற்போக்கு என்பதைப் பயன்படுத்தியரைத் தவிர திட்டமான கருத்துக்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை. ஆகவே ஈழத்தில் இவரால் மட்டுமே முன்வைக்கப்பட்ட ஒரு இலக்கியக் கோசமாக அது மறைந்தது. சிறந்த படைப்பாளியான எஸ்.பொ. சில நல்ல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியவர். எனினும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை விடக் கண்டனங்களிலேயே இவர் அதிக சக்தியைச் செலவிட்டுள்ளர். பந்தநூல் மூலமும் உரையும் என்ற இவரது நூல் இவரது விமர்சன ஆளுமை விரயமாக்கப்பட்டதற்குச் சிறந்த உதாரணமாகும்.

மு. தளையசிங்கம் பிரபஞ்ச யதார்த்த வாதம் என்ற கொள்கையை முன்வைத்தார். முற்போக்கு இலக்கியத்துக்கு எதிராக காத்திரமான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தவர் இவரே. முற்போக்கு இலக்கியத்தின் சித்தாந்த தளமான மார்க்ஸீய தத்துவத்தையே இவர் விமர்சனத்துக்கு உட்படுத்தினார். இந்தியாவில் மார்க்ஸீயம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆத்திரமுற்று அவஸ்தைப்படும் வெங்கட் சாமி நாதன் போல் அன்றி, மு. தளையசிங்கம் மார்க்ஸீயத்தை ஒரு தத்துவார்த்த சமயவழி நின்று விமர்சித்தார். மார்க்ஸீயத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டு அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதே இவரது கருத்தாகும்.

"மார்க்ஸீயத்தை மறுக்கும் தௌிவற்ற கலைஞர்களும் சிந்தனையாளர்களும் முதலில் அதை உணர்ந்து ஒப்புக் கொண்டால்தான் அவர்களின் மறுப்பு வெறும் மறுப்பாகவே நின்றுவிடாமல் இன்று சாித்திரம் காட்டிநிற்கும் புதிய தருணத்தை இனம் கண்டு பயன்படுத்தி மார்க்ஸீயத்தையும் மீறி வளரும் வெற்றியாக மாறுவதற்கு வழிபிறக்கும். அதாவது அந்த உண்மையை ஒப்புக் கொண்டால்தான் அந்த உண்மையின் அடுத்த பக்கத்தையும் உணரலாம்" என்று தளையசிங்கம் எழுதியுள்ளார். மேலைத்தேய மார்க்ஸீய எதிர்ப்புச் சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் அரவிந்தர் போன்றவர்கள் பிரதிபலித்த இந்திய ஆன்மிக வாதத்தையும் ஒன்றிணைத்ததே இவரது கொள்கையாகும். அவர் தமது இலக்கியக் கோட்பாடு பற்றி எழுதுகையில் 'இனி வரவேண்டிய கோட்பாட்டை 'பிரஞ்ச யதார்த்தம்' என்று கூறலாம்; விஞ்ஞானமும் ஆன்மிக ஞானமும், வாழ்க்கை ஆகியவற்றுக் கிடையே பேதம் இருக்காது. வாழ்க்கையே கலையாகும். கலையை அழிக்கும் கலை இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம் இவையே இனித் தோன்றப் போகின்றன. அதுவே மெய்யுள் என்பது இவரது கலை இலக்கியம் பற்றிய கருத்துக்களின் சாரமாகும், அந்தவகையில் இவர் தர்க்க முரண் நிறைந்த ஆன்மிகக் கற்பனாவாதியேயாவார். மு.பொன்னம்பலம், என்.கே. மகாலிங்கம், இமையவன் முதலியோர் இவரது கருத்துக்களின் செல்வாக்கு உட்பட்டவர்களாவர், தளையசிங்கத்தின் போர்ப்பறை, மெய்யுள் ஆகியவை ஈழத்தின் ஒரு குறிப்பிட்ட இலக்கியச் சிந்தனையை வௌிக்காட்டும் மிக முக்கியமான நூல்களாகும். இவரது ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - அவசரக் குறிப்புக்கள் என்ற கட்டுரைத் தொடரும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாம் நோக்கியதில் இருந்து 1960 ஆம் ஆண்டுகளில் இலக்கிய விமர்சனக் கொள்கைகள் ஈழத்தில் சித்தாந்த ாீதியில் வளர்ச்சியுற்றன என்பதைக் காணலாம். முற்போக்கு இலக்கியம், தேசிய இலக்கியம் என்ற கோட்பாடுகள் காத்திரமாக வளர்ச்சியுற்றதால் அரசியல் ாீதியில் அதை எதிர்த்தவர்களும் சாியாகவோ, பிழையாகவோ தவிர்க்க முடியாமல் புதிய கோட்பாடுகளையே முன்வைக்க வேண்டி இருந்தது. அதன் விளைவே நற்போக்கு வாதம், பிரபஞ்ச யதார்த்தம் வாதம் என்பனவாகும்.
5

இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கம் பற்றிய கோட்பாடுகளும் அணுகு முறைகளும் இங்கு வளர்ச்சியடைந்தது போல் இலக்கியத்தின் உருவம் பற்றிய விமர்சனக் கோட்பாடுகளும் ஈழத்தில் இக்காலப் பகுதியில் வளர்ச்சியடைந்தன. இலக்கிய வடிவங்கள், இலக்கியப் பாகுபாடு, இலக்கிய ரசனை என்பவை பற்றிய சிந்தனைகளை இவை உள்ளடக்கின. இவ்வகையில் கவிதைக் கோட்பாடுகளை வகுத்துக் கூறும் முருகையனின் ஒரு சில விதி செய்வோம், முருகையனும், கைலாசபதியும் எழுதிய கவிதை நயம், ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. கைலாசபதியின் இலக்கியமும் தினாய்வும் என்னும் நூலும் இப்பிாிவில் அடங்கக்கூடியதே. புனைகதை வடிவம் பற்றிய சிவத்தம்பியின் புனைகதையும் கதைப்பின்னலும் என்னும் கட்டுரையும் கவிதை நாடகம் பற்றி எம்.ஏ. நுஃமான், மு. பொன்னம்பலம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும், புதுக் கவிதையின் அமைப்பு பற்றி சிறிபதி, சபா ஜெயராசா ஆகியோர் எழுதிய சில கட்டுரைகளும் இலக்கிய வடிவங்கள் பற்றிய குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகும்

இலக்கிய விமர்சனம், இலக்கியக் கொள்கை, இலக்கிய வரலாறு ஆகியவை தனித்தனித் துறைகள் எனினும் அவை முற்றிலும் வேறுபட்டவை அல்ல. ஒன்றை ஒன்று சார்ந்தும் உள்ளடக்கியும் செல்வன. அவ்வகையில் விமர்சன பூர்வமான இலக்கிய வரலாற்று நூல்கள் சிலவும் இங்கு தோன்றின. இவ்வகையில் பேராசிாியர் வி. செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறு பலருக்கு ஆதர்சமாகவும் முன்னோடியாகவும் அமைந்தது. கலாநிதி ஆ. வேலுப்பிள்ளையின் தமிழ் இலக்கியத்தின் காலமும் இலக்கியத்தின் ஈழத்தறிஞர் பெரு முயற்சிகள், கனக செந்திநாதனின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி, சொக்கனின் ஈழத்து நாடக இலக்கிய வளர்ச்சி, சுப்பிரமணிய ஐயாின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் முதலிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.

தனிப்பட்ட படைப்புக்கள் படைப்பாளிகள் பற்றி விமர்சன பூர்வமான மதிப்பீடுகள் இங்கு பெருமளவு செய்யப்படவில்லை எனினும் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன. கைலாசபதியின் இரு மகாகவிகள், சிவத்தம்பியின் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தில்லைநாதனின் வள்ளுவர் முதல் பாரதிதாசன் வரை, செம்பியன் செல்வனின் ஈழத்துத் தமிழ் சிறுகதை மணிகள் ஆகிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன. இவற்றுள் செம்பியன் செல்வனின் நூலே முற்றிலும் ஈழத்துப் படைப்பாளிகள் பற்றியது. இவ்வகையில் மஹாகவி பற்றி சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ. நுஃமான் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பிடத் தக்கன. தனிப்படைப்பு என்ற வகையில் மஹாகவியின் சாதாரண மனிதனது சாித்திரம் பற்றி சண்முகம் சிவலிங்கம் எழுதிய விாிவான விமர்சனம் ஈழத்து விமர்சன முயற்சிகளுள் மிக முக்கியமான கவனத்துக்குாிய ஒன்றாகும். இவைதவிர ஈழத்தில், இலக்கிய விமர்சனத்துறையில் ஆ. சிவநேசச்செல்வன், கலா பரமேஸ்வரன், சித்திரலேகா, மனோன்மணி சண்முகதாஸ், மு. நித்தியானந்தன், செ. யோகராசா, துரை மனோகரன், க.சண்முகலிங்கம், எஸ்.எம்.ஜே. பைஸ்தீன், கே.எஸ். சிவகுமாரன், எம்.எச்.எம். சம்ஸ், சி. மௌனகுரு முதலியோரும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் செய்துள்ளனர்.

சமீப காலமாக ஈழத்து இலக்கிய விமர்சன முயற்சிகளில் மொழியில் அறிவின் செல்வாக்கையும் காண முடிகின்றது, இலக்கியம் மொழியினால் ஆகும் ஒரு கலை என்ற வகையில் மொழியில் அறிவு இலக்கிய விமர்சனத்தில் நன்கு பயன்பட முடியும். மேலைத் தேயங்களில் இத்துறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் வௌிவந்த முத்துச்சண்முகனின் இலக்கியக் கோட்பாடு என்ற நூலில் மொழியில் அறிவு நன்கு பயன்பட்டுள்ளதைக் காணலாம். ஈழத்தில் கலாநிதி சண்முகதாஸ், எம்.ஏ.நுஃமான் ஆகியோர் இத்துறையில் சிறு முயற்சிகள் செய்துள்ளனர். சண்முகதாஸின் ஆக்க இலக்கியமும் மொழியியலும், கவிஞரும் மொழியும், எம்.ஏ. நுஃமானின் ஆக்க இலக்கியமும் நடையியலும், ஈழத்து நாவல்களின் மொழி முதலிய கட்டுரைகள் இத்துறையில் ஆரம்ப முயற்சிகளாகக் கருதத்தக்கன.

பின்னிணைப்பு
ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு உதவும் நூல்களும் சிறப்பிதழ்களும்

1. நூல்கள்
கணபதிப்பிள்ளை, சி. இலக்கிய வழி, சுன்னாகம், 1964
கணபதிப்பிள்ளை மு., ஈழநாட்டின் தமிழ்ச்சுடர்மணிகள். சென்னை, 1967
கணேசையர், ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சாிதம், யாழ்ப்பாணம், 1939
கந்தையா வி.சீ. மட்டக்களப்புத் தமிழகம், யாழ்ப்பாணம், 1964
குமாரசாமிப்புலவர், தமிழ்ப்புலவர் சாித்திரம், யாழ்ப்பாணம், 1916
சதாசிவம் ஆ., ஈழத்துத் தமிழ்க்கவிதை களஞ்சியம், கொழும்பு 1964
சதாசிவம்பிள்ளை ஆர்ணோல்ட், பாவலர் சாித்திர தீபகம், யாழ்ப்பாணம், 1886
சலீம் ஏ. ஆர். எம்., ஈழத்து முஸ்லீம் புலவர்கள், கொழும்பு, 1962
சிவத்தம்பி, கா, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், சென்னை 1968,
சிவத்தம்பி, கா. ஈழத்தில் தமிழ் இலக்கியம், சென்னை, 1978.
சுப்பிரமணியம், நா., ஈழத்துத் தமிழ் நாவல்கள், நூல் விபரப்பட்டியல், யாழ்ப்பாணம், 1977.
சுப்பிரமணியம், நா., ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம், யாழ்ப்பாணம், 1978.
செந்திநாதன் கனக., ஈழத்துத் தமிழ்நாவல் வளர்ச்சி, சென்னை, 1967.
செம்பியன் செல்வன், ஈழத்துச் சிறுகதை மணிகள், யாழ்ப்பாணம், 1973.
சொக்கலிங்கம் க., ஈழத்துத் தமிழ்நாடக இலக்கியம்,யாழ்ப்பாணம், 1978.
சொர்ணலிங்கம், ஈழத்தில் நாடகமும் நானும், யாழ்ப்பாணம், 1968.
நடராசா, எம்.எக்ஸ்.சி. ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு, கொழும்பு, 1972.
பூலோகசிங்கம், பொ., தமிழிலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெருமுயற்சிகள், கொழும்பு, 1971.
Sivakumaran K.S. Tamil writings in Sri Lanka, Colombo, 1974
Cassiee Chetty Symon, Tamil Plutarch, 1859.
2. சிறப்பிதழ்கள்
இளந்தென்றல், தமிழ்ச்சங்கம், கொழும்பு வளாகம் 1971-72
தமிழ் சாகித்திய விழா மலர், இலங்கைக் கலாசாரப் பேரவை வௌியீடு, கல்முனை 1975.
தமிழ் இலக்கிய விழா மலர், இலங்கைக் கலாசாரப் பேரவை, யாழ்ப்பாணம், 1972
தினகரன் நாடக விழா மலர், கொழும்பு, 1969.
நாவலர் மாநாட்டு விழா மலர், ஆறுமுக நாவலர் சபை, யாழ்ப்பாணம், 1969.
பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழா மலர், நூற்றாண்டு விழாச்சபை வௌியீடு, யாழ்ப்பாணம்,1972.
புதுமை இலக்கியம், தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கொழும்பு, 1975.
மறுமலர்ச்சிக் காலம், இலக்கியச் சிறப்பிதழ். கலைப் பெருமன்றம், தெல்லிப்பளை, 1973.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக