ஞாயிறு, 24 மே, 2009

நாடகம்

6. நாடகம்
ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிாிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகளும் நவீன நாடகங்களாகும்.

மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாதுவிடினம் ஈழத்தில் நாடக வடிவ இலக்கியங்களான பள்ளு குறவஞ்சி நூல்களின் தோற்றக் காலமான 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஈழத்தில் பல மரபுவழி நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாகத் தோன்றத் தொடங்கின என்று அறிகிறோம். கணபதி ஐயரே (1709-1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முதலாசிாியர் என்பர். இவர் வாளபீமன் நாடகத்தை எழுதினார். இதுவரை கிடைத்த பல்வேறு தகவல்களிலிருந்து ஈழத்தில் ஏறத்தாள 200க்கு மேற்பட்ட மரபுவழி நாடக நூல்கள் இருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் ஏட்டுருவிலோ அன்றி அச்சுருவிலோ கையிற் கிடைப்பவை அவற்றினும் பாதியே.

போத்துக்கேயர் வருகையின் பின் ஈழத்தில் வளர்ச்சி பெற்ற கத்தோலிக்க மதத் தாக்கத்தினால் கத்தோலிக்க மதச் சார்பு பொருந்திய கூத்துக்களும் தோன்றின. என்றிக் எம்பரதோர் நாடகம், ஞானசவுந்தாி நாடகம் என்பன இதற்கு உதாரணங்களாகும். ஈழத்து மரபுவழி நாடகங்களில் கத்தோலிக்காின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய இடங்களிலெல்லாம் இம் மரபு வழி நாடகங்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இவற்றிற்கிடையே பிரதேசத்திற்குப் பிரதேசம் சிற்சில வேறுபாடுகளிருப்பினும் இவை அனைத்தும் ஓாிடத்திலுருவாகி, பின்னர் ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களிற் சுவறின என்பதற்கு ஆதாரங்களுண்டு. இம்மரபுவழி நாடகங்களே ஈழத்து நாடக மரபின் ஆரம்பமாகும்.

பார்ஸி வழி நாடகக்காரரது வரவினால் 18 ஆம் நூற்றாண்டில் விலாசம் என்றொரு நாடக வடிவம் ஈழத்தில் வந்து புகுந்தது. அாிச்சந்திர விலாசம் மதனவல்லி விலாசம் என்பன இதற்கு உதாரணம். கூத்திலிருந்த ஆட்ட முறைகள் நீக்கப்பட்டமையும் கர்னாடக சங்கீத இசை இடம் பெற்றமையும் விலாசத்தை கூத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டிய அம்சங்களாகும். கூத்து ஆட்ட முறைகளை விட்டு கர்னாடக இசையுடன் மேற்கத்திய, இந்துஸ்தானி இசைகளும் கலந்து சபா, டிறாமா போன்ற நாடக வடிவங்களும் 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்தன. நாட்டுக்கூத்திற் காணப்படாத காட்சியமைப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் இந்நாடகங்களின் பிரதான அம்சங்களாகும்.

நவீன நாடக மரபு உருவாகியதைத் தொடர்ந்தும், தென்னிந்திய சினிமாக்களின் வருகையினாலும் இம் மரபுவழி நாடகங்கள் நகரப்புறங்களிற் செல்வாக்கு இழந்து, கிராமங்களைச் சென்றடைந்தன. இந் நாடக மரபு மீண்டும் ஈழத்து நாடக உலகில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் பிரகாசம் பெறத்தொடங்குகிறது.

ஆங்கிலேயர் வருகையுடன் இலங்கை வரலாற்றில் புது அத்தியாயம் ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது. இன்று வரை எமது நாட்டின் பொருளாதாரத் தலைவிதியாக இருந்து வந்துள்ள காலனித்துவப் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே. இப்பொருளாதார அமைப்புமுறை ஈழத்திற் பல அடிப்படையான மாறுதல்களை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் தமது அரசியற் தளத்தை ஸ்திரப் படுத்துவதற்காகப் பலவகைக் கலாசார ஆக்கிரமிப்பிலும் ஈடுபட்டனர். ஆங்கில மொழி, கிறித்தவ மதம் ஆகியவற்றின் மூலம் சுதேசிகளை ஐரோப்பிய மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆங்கில அறிவு முக்கியமானதாக மாத்திரமன்றி வருமானம் தருவதாகவும் மாறியது. பிாிட்டிசாாின் நிர்வாக சேவையில் வேலை செய்ய ஆங்கிலம் கற்ற லிகிதர்கள் கூட்டம் ஒன்றும், அவர்களுக்குத் தேவையாக இருந்தது. ஸ்தாபிக்கப்பட்ட புதிய பாடசாலைகளில் இவர்களும், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிாியர்களும் உற்பத்தி செய்யப்பட்டார்கள். இவர்களே ஈழத்து அரசியல் அரங்கில் புதிதாகத் தோன்றிய மத்தியதர வர்க்கத்தினராவர்.

இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியத்தில் இவ் வகுப்பினாிலிருந்து வந்தோாின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களே நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல் ஆகியவற்றை ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகம் செய்து வைத்தனர். நாடகத்துறையிலும் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்துக் கூத்து மரபிலிருந்து விடுபட்டு நவீன நெறியில் நாடகம் செல்லக் காலாயிருந்தோர் இவர்களே.

மேனாட்டு இலக்கியப் பயிற்சி காரணமாக இவர்கள் நாடகத்தைப் புதிய திசைக்கு எடுத்துச் சென்றார்கள். தமிழ் நாட்டில் சுந்தரம்பிள்ளை போன்ற பேராசிாியர்களும், பம்மல் சம்பந்த முதுலியார் போன்ற நியாயவாதிகளும் நாடகத் துறையுட் புகுந்தனர். ஈழத்திலும் இதுவே நடந்தது. நாடகத்தினைத் தொழிலாகக் கொள்ளாமல் சபாக்கள் அமைத்தும், மன்றங்கள் தொடங்கியும் இவர்கள் நாடகத்தினை வளர்த்தனர். 1913 ஜுலையில் கொழும்பில் லங்கா சுபோதசபை ஸ்தாபிக்கப்பட்டது. 1914 இல் யாழ்ப்பாணத்தில் சரஸ்வதி விலாச சபை அமைக்கப்பட்டது. 1920 இல் மட்டக்களப்பில் சுகிர்த விலாச சபை தோன்றியது. 1933 இல் The Tamil Amatevr Dramatic Society என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட நாடக சபை கொழும்பில் அமைந்தது.

இச் சபைகளில் ஆங்கிலம் கற்ற மத்தியதர வகுப்பினரே பெரும்பங்கு கொண்டனர். 1913 ஜுலையில் கொழும்பில் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா சுபோத சபைக்குத் தலைவராயிருந்தவர் பிரபல அப்புக்காத்தும் சட்டசபை அங்கத்தவருமான சேர் அம்பலவாணர் கனகசபை ஆவர். உபதலைவர் கோபாலசிங்கமும் இத்தகைய தகுதிகள் வாய்ந்தவரே. காாியதாிசியான ஏ.தளையசிங்கம் அப்புக்காத்தாக இருந்தவர். தனாதிகாாி நெஷனல் வங்கிச் சிறாப்பராவர். இத் தகவல்களிலிருந்து நாடக உலகில் மத்தியதர வர்க்கத்தினாின் வருகை துல்லியமாகப் புலனாகின்றது.

இம் மத்தியதர வகப்பினாின் வருகையுடன் அவர்களின் இரசனைக்கும், ஓய்வு நேரத்திற்கும், கல்வித் தரத்திற்கும் ஏற்ப புதிய நாடக மரபு உருவாயிற்று. பாடல்கள் குறைந்து வசனம் பெருமிடத்தைப் பிடித்தது. நாடகம் இறுக்கமான ஒரு வடிவத்தைப் பெறலாயிற்று. நாடக இலக்கியம் என்ற பேச்சும் எழலாயிற்று. ஆங்கில நாடகப் பண்புகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் மதங்க சூளாமணி, விபுலானந்த அடிகளால் எழுதப்பட்டு இக் காலகட்டத்தில் (1926 இல்) மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வௌியிடப்பட்டது.

இந் நவீன நாடக மரபில் கலையரசு சொர்ணலிங்கம் முக்கிய இடம் பெறுகிறார். கலையரசு அவர்கள் இலங்கையில் அக் காலத்திற் பெருமதிப்புப் பெற்றிருந்த ஆங்கில நாடகக் கோட்பாடுகளுக்கியைய குறைந்த நேரத்தில் பொருத்தமான அரங்க அமைப்பும், வேடப் புைைவும், நடிப்புத் துாிதமும் கொண்ட நாடகங்களை மேடையேற்றினார்.

வளர்ந்து வந்த நகர்ப்புற மக்களுக்கு இத்தகைய நாடகங்கள் சிறந்த பொழுதுபோக்காயின. கலையரசின் நாடகங்கள் அதிகமாகக் கொழும்பு நகாிலேயே மேடையேறின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நிலமானிய அமைப்பு முற்றாகச் சிதையாமல் இருந்தமையினால் கூத்துக்களின் செல்வாக்கினின்றும் நவீன நாடகம் தன்னை முற்றாக விடுவித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. உருவத்தைப் பொறுத்தவரை சிறிது மாறுபாடிருப்பினம் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை இந் நவீன நாடகங்கள் பழைய புராண இதிகாசக் கதைகளையே கொண்டனவாகவும். ஆங்கில - சமஸ்கிருத மொழிபெயர்ப்புகளாகவும் இருந்தன. சேக்ஸ்பியாின் செல்வாக்கினை இக்காலத்தெழுந்த பல நாடகங்களிற் கண்டு கொள்ள முடிகின்றது.

இக்காலத்தெழுந்த கதிர்காமர் கனகசபையின் நற்குணனில் (1927) ஆங்கில நாடக முறையைத் தழுவி Blank Verse இனை ஒத்த அகவல் யாப்பில் நாடகப் பாத்திரங்களின் உரையாடல் அமைந்துள்ளது. ஆங்கில நாடக மரபைப் பின்பற்றி தமிழில் தான் செய்த முயற்சியே இது என நூலின் ஆசிாியர் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தில் அச்சு வடிவில் வந்த முதற் கவிதை நாடகம் இது என்பர். பேராசிாியர் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியம் போன்று இது நடிப்பதற்கன்றி படிப்பதற்கேயுகந்தது. ஆங்கில சமஸ்கிருத நாடக முறைகளைப் பின்பற்றி எழுந்த இப் புதிய மரபு நாடகங்களுக்கு உதாரணமாகப் பிரான்ஸ் கிங்ஸ்பொியின் சந்திரகாசம் (1940) மனோன்மணியம் (1941) வெள்ளவத்தை மு.இராமலிங்கத்தின் அசோகமாலா (1943) பேராசிாியர் கணபதிப்பிள்ளையின் மாணிக்கமாலை (1943) ஆகியவற்றைக் கூறலாம்.

கிறித்தவ மதத்திற்கு எதிராக எழுந்த இந்துசமய மறுமலச்சியின் மரபில் வந்த படித்தவர்கள் நாடகத்தைத் தம் கொள்கை பரப்பும் ஊடகமாகவும் கொண்டனர். கிறித்தவம் தமது மரபுகளையும் ஒழுக்கங்களையும் விழுமியங்களையும் சிதைப்பதாகக் கருதிய இவர்கள் அப் பாரம்பாியத்தை மீண்டும் நிலைநாட்டக் கருதி நாடகத்தில் அறநெறிப் பண்புகளைப் போதித்தனர். க.சிதம்பரநாதனின் சாவித்திாிதேவி சாிதம் (1917), க. இராமலிங்கத்தின் நமசிவாயம் அல்லது நான் யார் (1929), சோமசுந்தரப் புலவாின் உயிாிளங்குமரன் (1936), சு. செல்வநாயகத்தின் சாமளா அல்லது இன்பத்தில் துன்பம் (1937) சாரா எழுதிய சத்தியேஸ்வாி (1938) என்பவற்றை இந்நாடகங்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

ஐரோப்பிய, வடமொழி நாடக மரபையொட்டி எழுதப்பட்ட மேற்குறிப்பிட்ட நாடகங்களில் பெரும்பாலானவை வடமொழி மரபைப் பின்பற்றித் தலைமைப் பாத்திரங்களும் உயர்வான பாத்திரங்களும் செந்தமிழ் நடையில் உரையாடுவதாகவும் வேலைக்காரன் போன்ற சமூக மதிப்பற்ற பாத்திரங்கள் பேச்சுத்தமிழைக் கையாள்வதாகவும் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. இக் காலகட்டத்தில் பேச்சுத் தமிழ் நகைச்சுவைக்கே பயன்படுத்தப்பட்டது. எனினும் பேச்சுமொழி நாடகத்தில் இடம்பெறத் தொடங்கியமை ஒரு சிறப்பு அம்சமே. படிமுறை வளர்ச்சிப் போக்கில் பார்க்கையில், ஆரம்பத்தில் பாடல் வடிவில் அமைந்த கூத்து முறையில் இருந்து விலகி வசன அமைப்பில் உருவாகிய நவீன நாடக மரபு, பேச்சு மொழியினைத் தன்னுட் சேர்த்துக் கொள்ளும் பண்பினைக் காண்கின்றோம். சமூக அரசியல் வளர்ச்சி காரணமாக சாதாரண மனிதர்கள் சமூகத்தில் முக்கியத்துவம் பெற அவர்கள் நாடகத்திலும் இடம் பெறத் தொடங்கினர். நாடகத்தில் இடம்பெறும் சகல பாத்திரங்களும் பேச்சு மொழியிலேயே பேசுவதனை நவீன நாடக வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற் காணுகிறோம்.
2
ஆங்கிலக் கல்வி சிருட்டித்துவிட்ட மத்தியதர வர்க்கத்தின் ஒரு பிாிவினர் மேனாட்டு மொழிபெயர்ப்பு நாடகங்களையும் புராண இதிகாசக் கதைகளையும் கையாண்டு நாடகத்தைப் பொழுதுபோக்குச் சாதனமாகக் கொள்ள இன்னொரு பிாிவினர் ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் மண்வளம் ததும்பிய சமூகநாடகங்களை நாடக உலகுக்கு அளித்தனர். இவர்களே ஈழத் தமிழ் நாடக உலகில் இயற் பண்பு வாய்ந்த நாடக நெறி ஒன்றினை உருவாக்கினர். இவர்கள் கையில் நாடகம் வெறும் பொழுதுபோக்குச் சாதனமாகவன்றி சமூகமாற்றச் சாதனமாயிற்று. இப்போக்கின் முன்னோடி பேராசிாியர் கணபதிப்பிள்ளை ஆவார். அவருடைய நாடகங்கள் 1936 முதல் மேடையேற்றப்பட்டன. இலங்கைப் பல்கலைக்கழகம் பேராசிாியர் நாடகங்களுக்குக் களமாக அமைந்தது. பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவரும் மாணவியரும் பேராசிாியர் நாடகங்களில் நடித்தமை குறிப்பிடத்தக்கது.

பேராசிாியாின் நாடகங்கள் பெரும்பாலும் சமூகப்பண்புடையனவாகக் காணப்பட்டன. யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்துக் குடும்ப, சமூகப் பிரச்சினைகளை பேராசிாியர் கணபதிப்பிள்ளை தமது நாடகங்களிற் கொணர்ந்தார். சாிந்து கொண்டு வந்த நிலமானிய உறவுகளையும் நகர வாழ்க்கை மனித உறவுகளைப் பாதிக்கும் விதத்தினையும் நகர வாழ்க்கை மனித உறவுகளைப் பாதிக்கும் விதத்தினையும் இவரது நாடகங்கள் எடுத்துக்காட்டின. ஈழத்துத் தமிழ் நாடக உலகில் முதன் முதலாக ஈழத்துக் கதா பாத்திரங்கள் - சிறப்பாக யாழ்ப்பாணத்துக் கதா பாத்திரங்கள் உலவத் தொடங்கின. பேராசிாியர் கணபதிப்பிள்ளையவர்கள் மொழியியல் துறையில் விற்பன்னராய் இருந்தமையினால் போலும் முன்னைய நாடக ஆசிாியர் போலன்றி பிரக்ஞை பூர்வமாகப் பேச்சு மொழியினைக் கையாண்டார். இவர் நாடகங்களிற் தோன்றிய பாத்திரங்கன் அன்றாடம் தாம் பேசும் மொழியிலேயே பேசின. தமது நாடக முன்னுரையில் பேராசிாியர் இது பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"......நாடகம் என்பது உலக இயல்பை உள்ளது உள்ளபடியே காட்டுவது. ஆகவே வீட்டிலும் வீதியிலும் பேசுவது போலவே அரங்கிலும் ஆடுவோர் பேச வேண்டும். இந் நான்கு நாடகத்திலும் வழங்கிய பாடை யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பொதுவாகவும் பருத்தித்துறைப் பகுதிக்குச் சிறப்பாகவும் உள்ளது."

உலக இயல்பை உள்ளது உள்ளபடி காட்டுவது என்ற அவர் கூற்றில் அவரது இயற்பண்பு வாத நெறிசார்ந்த போக்கும் புலப்படுகிறது. பிரச்சினைகளை இவை வௌிப்படுத்தினவே தவிர அதற்கான காரணங்களை ஆராய்ந்து வழிகாட்டவில்லை. எனவேதான் இவரை இயற்பண்பு நாடக நெறி ஆசிாியர் என்று விமர்சகர் கூறுவர்.

சுருங்கக் கூறின் கற்பனாலோகத்தில் வாழ்ந்த நாடக உலகை நடப்பியல் உலகுக்கு இழுத்து வந்த பெருமை இவருக்கேயுண்டு. ஈழத்தில் மாத்திரமன்றி முழுமையாகத் தமிழ் நாடக உலகிலேயே இம்மாற்றத்தை ஏற்படுத்திய பெருமையும் இவருக்கேயுண்டு, பேராசிாியாின் நாடகங்கள், நானாடகம் (1930), இருநாடகம் (1952), மாணிக்கமாலை (1952), சங்கிலி (1953) என்ற பெயர்களில் நூலுருப் பெற்றன. இவற்றுள் மாணிக்கமாலை சமஸ்கிருத நாடகமான ரத்னாவலியின் தழுவல் நாடகமாகும். சங்கிலி சாித்திர நாடகமாகும்.

இவ்வண்ணம் நவீன நாடக மரபு கலையரசு வழியில் ஒரு மரபாகவும். பேராசிாியர் கணபதிப்பிள்ளை வழியில் இன்னொரு மரபாகவும் இரு கிளைப்பட்டு வளர்ந்தது.

1950களில், தமிழ் நாட்டில் அரசியல் ாீதியில் வளர்ச்சியடைந்த திராவிடர் முன்னேற்றக் கழகம் இங்குள்ள இளைஞர்களுக்கு ஆதர்சமாயிற்று. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் நூல்களும், ஏடுகளும் ஈழத்துக்கு இறக்குமதியாயின. இவை ஈழத்து நாடக உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.

திராவிட முன்னேற்றக் கழக நாடகங்கள் போலமைந்த சீர்த்திருத்தக் கருத்துக்கள் மலிந்த செயற்கைப் பாங்கான பல தமிழ் நாடகங்கள் இங்கு உருவாயின. நாட்டின் பல பாகங்களிலும் இத்தகைய நாடகங்கள் பெருவாாியாக மேடையேறினும் நூலுருவம் பெற்றவை குறைவே. அப்பாஸ் எழுதிய கள்ளத்தோணி (1960) அ.பொ. செல்லையா எழுதியார் கொலைகாரன் என்பன. இதற்கு உதாரணங்களாகும். இத்தகைய நாடகங்களிற் தமிழ்ச் சினிமாவின் செல்வாக்கையே பெருமளவு காணமுடிகிறது. பெரும்பாலான தமிழ்ப் பிரதேசங்களில் இன்றும் இம்மரபு நின்று நிலைக்கிறது.

1956ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தையொட்டி தேசிய உணர்வும், தமது சொந்தப் பண்பாடு பற்றிய பிரக்ஞையும் ஈழத்தில் ஏற்பட்டது.

சுய பண்பாட்டுப் பிரக்ஞையின் வௌிப்பாடாகவே 1959 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஒரு தசாப்த காலம் வரை ஈழத்து நாடக உலகில் பாரம்பாியக் கூத்துக்களை பேணுகின்ற, அவற்றை நவீனப்படுத்துகின்ற தன்மைகளைக் காணுகின்றோம்.

1957க்குப் பின்னர் அரசாங்க ஆதரவில் இயங்கிய கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு, பேராசிாியர் சு. வித்தியானந்தன், பேராசிாியர் கா. சிவத்தம்பி ஆகியோாின் வழிகாட்டலின் கீழ் செயற்படத் தொடங்கியது. கலைக் கழகத் தலைவராயிருந்த பேராசிாியர் வித்தியானந்தன் அவர்களின் முயற்சியினால் மரபு வழி நாடக வளர்ச்சியில் பாாிய பாதிப்பினைக் கலைக் கழகத்தால் ஏற்படுத்த முடிந்தது. மரபு வழி நாடகங்கள் பலவற்றைக் கலைக் கழகத்தின் ஆதரவுடன் பேராசிாியர் வித்தியானந்தன் பதிப்பித்தார். மட்டக்களப்பு தென்மோடி நாடகமான அலங்கார ரூபன் (1962), என்றிக் எம்பரதோர் (1964), மூவிராசாக்கள் நாடகம் (1966), ஞானசௌந்தாி (1967) ஆகியவை இவரால் பதிப்பிக்கப்பட்டன, பேராசிாியர் கா. சிவத்தம்பி பல்கலைக் கழக இந்து மாணவ மன்றத்தின் ஆதரவில் மார்க்கண்டேயன் (1961) வாளபீமன் (1963) ஆகிய நாடகங்களைப் பதிப்பித்தார்.

ஏட்டுருவில் இருந்த பழைய மரபு வழி நாடகங்கள் அச்சுருவில் வந்தமை ஈழத்து நாடக உலகில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். கலைக் கழகம் தானே நூல்களைப் பதிப்பித்ததுடன் பிரதேச கலாமன்றங்களையும் இப்பணியில் ஊக்குவித்தது. இதன் காரணமாக அனுருத்திர நாடகம் (1969) இராம நாடகம் (1969) எஸ்தாக்கியார் நாடகம் (1967) மாியதாசன் நாட்டுக் கூத்து (1972) தேவசகாயம் பிள்ளை நாட்டுக் கூத்து (1974) விஜய மனோகரன் (1968) போன்ற நாட்டுக் கூத்து நூல்கள் அச்சில் வந்தன. அச்சிடப்பட்டவற்றுள் பல, பழைமையானவை. சில, புதிதாக ஆசிாியர்களால் இயற்றப்பட்டவை. தவிர, கலைக் கழகம் அண்ணாவிமார் மகாநாடுகள் நடத்தியும், அண்ணாவிமாரைக் கௌரவித்தும், பாடசாலைகளுக்கிடையே நாட்டுக் கூத்துப் போட்டிகள் நடத்தியும் நாட்டுக் கூத்து உணர்வு மக்களிடம் வளரக் காலாயமைந்தது.

நாட்டுக் கூத்துக்களைப் பேணுகின்ற முயற்சி மாத்திரமன்றி அவற்றை நவீனப்படுத்தும் முயற்சியும் இதேகால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. பேராதனைப் பல்கலைக் கழத்தில் சிங்களத் துறையைச் சேர்ந்த பேராசிாியர் சரச்சந்திர போன்றோர் 1956 முதல் புகழ்பெற்ற மனமே, சிங்கபாகு போன்ற நவீனப்படுத்தப்பட்ட சிங்களக் கூத்துக்களைத் தயாாித்து மேடையேற்றினர். இதே பணியினை 1960களிலே பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ் துறையைச் சார்ந்த பேராசிாியர் சு.வித்தியானந்தன் அவர்கள் செய்தார். 1962 தொடக்கம் 1968 வரை அவர் பல்கலைக் கழக மாணாக்கரைக் கொண்டு மட்டக்களப்புக் கூத்துக்களை நவீனப்படுத்தியளித்தார். யாழ்ப்பாண அண்ணாவி மரபு நாடகத்தைப் பிரபல்யப்படுத்தினார். கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலிவதை என்பன அவர் நவீனப்படுத்திய மட்டக்களப்புக் கூத்துக்களாகும். நவீன மேடை, ஒலி, ஒளி உத்திகளைக் கையாண்டு, கிராமங்களில் இரா முழுவதும் ஆடப்படும் கூத்துக்களின் கால அளவைச் சுருக்கி அவர் நகர்ப்புறப் பார்வையாளர்களும் இரசிக்கக்கூடியதாக்கினார். ஈழத் தமிழாின் மரபு வழி நாடக மரபு நகர்புற மேடைகளில் நகர்ப்புற மாந்தரால் வரவேற்கப்பட்டது.

நாட்டுக் கூத்தினை வளர்த்த கலைக்கழகம் நவீன நாடக எழுத்துப் பிரதிகட்குச் சன்மானம் வழங்குவதன் மூலமும், அவற்றை அச்சிடுவதன் மூலமும் நவீன நாடகத் துறையை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.

சொக்கனின் சிலம்பு பிறந்தது (1962), சிங்ககிாிக்காவலன் (1963), முத்து சிவஞானத்தின் சேரன் சமாதி (1968) ஆகிய கலைக்கழகப் பாிசு பெற்ற நாடக நூல்களைக் கலைக்கழகமே வௌியிட்டது. கலைக்கழகப் பாிசுபெற்ற ஏ.ாி. பொன்னுத்துரையின் நாடகம் என்னும் நாடகம் (1969), தேவனின் தென்னவன் பிரமராயன் (1963), முல்லைமணியின் பண்டாரவன்னியன் (1970), சண்முகசுந்தரத்தின் பூதத்தம்பி (1964) போன்ற நூல்கள் பின்னாளில் நூலுருவம் பெற்றன. கலைக்கழகப் பாிசுபெற்ற நாடகங்களில் பெரும்பாலானவை வரலாற்று நாடகங்களாகும். அத்தோடு சமய, இலக்கிய நாடகங்களும் இவற்றுட் காணப்பட்டன. இலக்கிய வரலாற்று நாடகங்கள் கலைக்கழகப் பாிசுபெற்று அச்சில் வந்தமையைத் தொடர்ந்து இதே தன்மை கொண்டதான பல நாடகங்கள் ஈழத் தமிழ் நாடக உலகில் எழ ஆரம்பித்தன. சண்முகசுந்தரத்தின் வாழ்வுபெற்ற வல்லி (1962), இறுதி மூச்சு (1965), சதா ஸரீனிவாசனின் இலங்கை கொண்ட இராஜேந்திரன் (1960), சி.ந. தேவராஜனின் விஜயன் விஜயை திருமணம் (1965), கங்கேஸ்வாி கந்தையாவின் அரசன் ஆணையும் ஆடக சவுந்தாியும் (1965), செம்பியன் செல்வனின் மூன்று முழு நிலவுகள் (1965), கரவை கிழானின் தணியாத தாகம் (1968), மு.கனகராஜனின் கைமுனுவின் காதலி, எஸ், பொன்னுத்துரையின் வலை (1972) ஆகியவற்றை இப்போக்கிற்கு உதாரணங்களாகக் காட்டலாம்.

இவற்றுட் சில நாடகங்கள் இன உணர்வும் பழமைச் சிறப்பும் பேசின. சில நாடகங்கள் இன ஒற்றுமையை மறைமுகமாகக் கூறின. சில இந்திய சாித்திர நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டன.

இக்கால கட்டத்தில் முன்னணியில் நின்ற நாடக ஆசிாியர்களாக தேவன். சொக்கன், ஏ.ாி, பொன்னுத்துரை ஆகியோரைக் குறிப்பிடலாம்.

1956 இன்பின் இலங்கைத் தமிழாிடையே தோன்றிய இன உணர்வும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடகத்துறைச் செல்வாக்கும் இத்தகைய நாடகங்கள் பெருவாாியாக எழக் காரணங்களாயின. புனைகதைகளிலும் பார்க்க நாடகம்மூலம் மொழி அபிமானத்தை எடுத்துணர்த்துவது சுலபமாகும். எனவேதான் மொழி அபிமானமும், இன உணர்வும் தமிழர் மத்தியில் அரசியல் வடிவம் பெற்ற காலத்தில் இத்தகைய பல நாடகங்கள் தோன்றத் தொடங்கின.

தம்மை எதிர் நோக்கிய சமூக மாறுதல்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு போராடி வெல்ல முடியாத தமிழர் சமூகம் தன்னுடைய பழமைக்குள் நிம்மதி தேடியது. யுசென்ற காலம் இனி மீளாதா?ரு என்று பழைய காலத்தை இந்நாடகங்களிற் சில மீண்டும் நினைவு கூர்ந்தன. பண்டைய மன்னர்களைத் தமிழ் உணர்வு பெற்றவர்களாகச் சித்தாித்துத் தமிழ் மக்களிடை தமிழ் உணர்வு ஊட்ட முயற்சித்தன. இத்தகைய நாடகங்கள் உருவ அமைப்பில் தமக்கு முன்னோடியாக விளங்கிய கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடக மரபினையே பின்பற்றின. நவீன நாடக அரங்கு பற்றிய சிந்தனை இவற்றில் காணப்படவில்லை என்பது மனம் கொள்ளத் தக்கது.

இயற்பண்பு சார்ந்த நாடக நெறி பேராசிாியர் கணபதிப்பிள்ளைக்குப் பின் இரு கிளைப்பட்டு வளர்ந்தது. ஒரு பிாிவினர் பேராசிாியர் கையாண்ட யாழ்ப்பாணத் தமிழை வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை, கிண்டல் நாடகங்களைத் தயாாித்தனர். நூலுருவம் பெற்ற அசட்டு மாப்பிளை இதற்கு உதாரணமாகும். இது தவிர புரோக்கர் கந்தையா, பார்வதி பரமசிவன், கலாட்டா காதல், ஆச்சிக்குச் சொல்லாதே, லண்டன் கந்தையா, புளுகர் பொன்னையா ஆகியவையும் இத்தகைய நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகும்.

வரலாற்று, சமய, இதிகாச, புராண நாடகங்களும் இத்தகைய நகைச்சுவை நாடகங்களுமே இன்று தமிழ் மக்களிடையே ஜனரஞ்சகப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றுப் புராண நாடகங்களை விட இந்நகைச்சுவை நாடகங்களில் கையாளப்படும் மொழி பார்ப்போாிடையேயும் ஓர் அன்னியோன்ய உறவை ஏற்படுத்துகிறது. நடிகர்கள் சொல்ல ரசிகர்கள் சிாிப்பதே இதன் பயன்பாடாகும். பார்ப்போரை வாய்விட்டுச் சிாிக்கப்பண்ணுவதே இவற்றின் நோக்கமாகும். ஒருவகையில் இவை நாடகங்களே அல்ல. நாடக எழுத்துப் பிரதி, மேடை ஒழுங்கு, பாத்திர வார்ப்பு என்பன எவையுமின்றி சம்பாஷணையை மாத்திரமே கொண்டுள்ள இத்தகைய நாடகங்களே இன்று பெரும்பாலான தமிழ் மக்களால் நாடகம் என்று ஏற்கவும்படுகின்றன.

பேராசிாியர் கணபதிப்பிள்ளை அறிமுகம் செய்த பேச்சுத் தமிழையும், இயற்பண்பு நாடக நெறியையும் நன்கு புாிந்து கொண்டு நாடக நிலை நோக்குடனும், பிரக்ஞையுடனும் ஈழத்தில் தமிழ் நாடகத்தை வளர்த்தவர்கள் பல்கலைக்கழகத்தினரும் பல்கலைக்கழக வழிவந்தோருமே. அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கிருந்தன.

அ. முத்துலிங்கத்தின் சுவர்கள், பிாிவுப்பாதை, சொக்கனின் இரட்டை வேஷம், அ. ந. கந்தசாமியின் மதமாற்றம் என்பன பேராசிாியர் மரபில் பல்கலைக்கழகம் மேடையேற்றிய நாடகங்களாகும். இவற்றுள் அ.ந. கந்தசாமியின் மதமாற்றம் குறிப்பிடத்தக்கது.

இவ்வியற்பண்பு நாடகங்கள் பேராசிாியாின் நாடகங்கள் போன்று மத்தியதர வர்க்கத்து மக்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டன. அவர்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் போராட்டங்களையும் அவர்கள் மொழியில் உரையாடின.

ஆரம்பத்தில் மத்தியதர வர்க்கத்தினரையும் அவர்தம் பிரச்சினைகளையும் எடுத்துக் காட்டிய இவ்வியற்பண்பு நாடக நெறி சமூக வளர்ச்சிப் போக்கினாலும் அரசியல் பொருளாதார மாற்றங்களினாலும் தொழிலாளர்களையும் அடிமட்டத்தில் வாழ்ந்த மக்களையும் அவர்தம் பிரச்சினைகளையும் பிரதிபலிக்கும் வகையில் பாிணமித்தது. 1969, 70 களிலே சமகால அரசியல் சமூகப் பிரச்சினைகளைக் கூறும் பண்புடைய நாடகப் போக்கு உருவாகியது. ஈழத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இடதுசாாிச் சிந்தனை வளர்ச்சியுமே இப்போக்கினை உருவாக்கின. தொழிலாளர் தலைமை தாங்கும் சமூக மாற்றம் ஒன்றினாலேயே சமகால வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும் என்பதை இந் நாடகங்கள் மறைமுகமாகவும் வௌிப்படையாகவும் வற்புறுத்தின. 1960 ஆம் ஆண்டுகளில் புனைகதைத் துறையில் இடம்பெற்ற இப்பண்பு 1970 களிலேதான் நாடகத் துறையில் இடம்பெறலாயிற்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இ. சிவானந்தனின் விடிவை நோக்கி, காலம் சிவக்கிறது ஆகிய நாடகங்களும், நா. சுந்தரலிங்கத்தின் விழிப்பும் மாத்தளைக் கார்த்திகேசுவின் போராட்டங்களும் இதற்கு உதாரணங்களாகும்.

இ.சிவானந்தனின் விடிவை நோக்கி என்ற நாடகம் தொழிலாள வர்க்கப் பெண்ணொருத்தி டொக்டராக வந்து தன் வர்க்க நிலையினின்று மாறுபட்டுச் செல்வத்தைச் சித்திாிக்கிறது. அவரது காலம் சிவக்கிறது என்ற நாடகம் தமிழ், சிங்களத் தொழிலாளர்கள் அனைவரும் தம்மைச் சுரண்டும் முதலாளிக்கு எதிராகத் திரள்வதைச் சித்தாிக்கிறது. நா. சுந்தரலிங்கத்தின் விழிப்பு வேலையில்லாப் பிரச்சினையால் தவிக்கின்ற இளைஞர், தொழிலாளர் நடத்தும் சமூக விடுதலைப் போாில் தம் விடுதலையும் இணைந்துள்ளது என்பதை உணர்வதைக் காட்டுகிறது. மாத்தளைக் கார்த்திகேசுவின் போராட்டங்கள் தமிழ் சிங்கள தொழிலாளர் தோட்ட முதலாளிக்கு எதிராகச் செங்கொடியின் கீழ் அணிதிரள்வதைச் சித்தாிக்கிறது.

இத்தகைய பண்பு கொண்ட சிறு நாடகங்களை இக் காலகட்டத்தில் மேடையேற்றிய மாவை நித்தியானந்தன், தில்லைக்கூத்தன் ஆகியோரும் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள்.

அரசியல் ாீதியில் தீர்வு காட்டாதுவிடினும் சமகாலப் பிரச்சினைகளைக் காட்டிய நாடகங்களாக இக் காலகட்டத்தில் மேடையேறிய கலைச் செல்வனின் சிறுக்கியும் பொறுக்கியும், பௌசுல் அமீாின் தோட்டத்து ராணி ஆகிய நாடகங்களைக் குறிப்பிடலாம்.

சமகால சமூக அரசியற் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் இப்பண்பு மரபு வழி நாடகங்களிலும் இக்கால கட்டத்தில் இடம்பெறுவதைக் காணகின்றோம். இப் பண்பினை மரபு வழி நாடகத்தில் புகுத்தியவர். சி. மௌனகுரு ஆவர். இவரது சங்காரம் பழைய கூத்து வடிவத்திற் சமகாலப் பிரச்சினையைப் பிரதிபலிக்கின்றது. காலம் காலமாகச் சமூகப் பிாிவுகளினாலும், ஏற்றத்தாழ்வுகளினாலும் பிளவுபட்டுக்கிடந்த சமூகத்தை பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விடுதலை செய்வதே சங்காரத்தின் உள்ளடக்கமாகும். மட்டக்களப்புக் கூத்து மரபு சங்காரத்தினால் புதிய பாிமாணம் பெற்றது என்பர். அண்மையில், எம்.ஏ.நுஃமானின் நெடுங்கவிதை ஒன்றை அடிப்படையாகக் கொண்ட மௌனகுரு தயாாித்து மேடையேற்றிய அதிமானிடன் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது. மரபுவழி ஆட்டமுறைகளையும், அபிநயங்களையும் பயன்படுத்தி மனிதகுல வளர்ச்சிக் கட்டங்களையும் இன்றைய அதன் போராட்டத்தையும் இந் நாடகம் சித்தாித்தது.
3
ஈழத்துத் தமிழ் நாடகத்தில் சமகால அரசியற் பிரச்சினைகள் இடம்பெறத் தொடங்கிய இக்கால கட்டத்திலேதான் நாடகத்தின் உருவம் பற்றிய சிந்தனையும் நாடக எழுத்தாளர்களிடமும், தயாாிப்பாளர்களிடமும் உருவாவதைக் காணுகின்றோம். சிங்கள நாடக வளர்ச்சியினதும், உலக நாடகப்பரப்பினதும், மரபுவழி நாடக மரபினதும் தாக்கம் பெற்ற இவர்கள் புதுப்பாணி நாடக உரு ஒன்றினை ஈழத் தமிழ் நாடக உலகுக்கு அளிக்கின்றார்கள். ஈழத்துத் தமிழ் நாடக உலகில் நவீன நாடக அரங்கு (Modern Theatre) பற்றிய பிரக்ஞை வலுவாக வளர்ச்சியடையத் தொடங்கியது.

1970 களிலே தமிழ் நாடக உலகின் பிரதான பண்பாகக் காணப்பட்ட சமகால சமூக அரசியற் பிரச்சினைகளே இக்காலத்தெழுந்த பெரும்பாலான புதுப்பாணி நாடகங்களின் உள்ளடக்கமாகவும் அமைந்தன. இத்தகைய புதுப்பாணி நாடக நெறியின் முன்னோடியாக நா. சுந்தரலிங்கத்தைக் குறிப்பிடலாம். இவர் 1971 மார்ச்சில் முருகையனின் 'கடூழியம்' என்ற நாடகத்தை மேடையேற்றினார். கடூழியம் உலகளாவிய தொழிலாளர் பிரச்சினையையும் அவர்களின் விடுதலையையும் கருவாகக் கொண்டது. இவரது அபசுரம் அநர்த்த (absurd) நாடகத்தின் பாற்பட்டது. நா. சுந்தரலிங்கத்தின் பங்கு ஈழத்து நாடக உலகிற் குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து அ. தாசீயஸ், புதியதொரு வீடு, கோடை, காலம் சிவக்கிறது, பிச்சை வேண்டாம், கந்தன் கருணை ஆகியவற்றை புதுப்பாணியில் தயாாித்தார். இதே காலப் பகுதியில் சுஹைர் ஹமீட் தயாாித்த ஏணிப் படிகள், பிள்ளைப் பெத்த ராசா ஒரு நாயை வளர்த்தார், வேதாளம் சொன்ன கதை, பொம்மலாட்டம், நகரத்துக் கோமாளிகள் முதலியவையும், க. பாலேந்திராவின் தயாாிப்பான நட்சத்திரவாசி, மழை, பசி, கண்ணாடி வார்ப்புகள்,புதிய உலகம் பழைய இருவர் ஆகிய நாடகங்களும், மௌனகுருவின் அதி மானிடன், தலைவர் ஆகியவையும் ஈழத்தில் நவீன நாடக அரங்க வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளன. 1975, 1976 ஆம் ஆண்டுகளிலே கலாச்சாரப் பேரவை நடத்திய தமிழ் நாடகப் போட்டியில் பாிசு பெற்ற தமிழ் நாடகங்கள் புதுப்பாணியிலேயே அமைந்திருந்தன. இது நகர்ப்புற நாடக உலகில் இக்கால கட்டத்தில் இந்நாடக நெறி பெற்று வந்த செல்வாக்கினைக் காட்டுகின்றது.

1970 களிலே நாடக உருவ அமைப்பு பற்றிய பிரக்ஞை ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறந்த பல நாடகங்கள் அயல் மொழிகளினின்று மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றப்படும் ஒரு போக்கும் உருவாகின்றது.

ஈழத்தமிழ் நாடக உலகில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் முன்பும் நடைபெற்றுள்ளன. நவாலியூர் நடராஜன் வட மொழியிலிருந்து காளிதாசனின் சாகுந்தலத்தை (1962)யும், மிருச்ச கடிகத்தை பொம்மை வண்டி (1964) என்ற பெயாிலும் மொழிபெயர்த்தார். இ. இரத்தினம் சோபோக்கிளிசின் ஈடிப்பசை ஈடிப்பஸ் மன்னன் (1969) என்ற பெயாில் மொழி பெயர்த்தார். இவை மேடைக்காக அன்றி வாசிப்புக்காகவே செய்யப்பட்டன.

எனினும் உணர்வு பூர்வமாகவும், நாடக உருவ அமைப்பு பற்றிக் காத்திரமான சிந்தனையுடனும் பிறமொழியின் சிறந்த நாடகங்களைத் தமிழில் தழுவியும் மொழி பெயர்த்தும் மேடை ஏற்றும் போக்கினை 60 களிலும் குறிப்பாக 1970 களிலும் காணுகிறோம். இப்ஸனின் Dolls House, பெண்பாவை என்ற பெயாிலும், அன்ரன் செகாவின் The Bear, கரடி என்ற பெயாிலும், ஜே. எம்.சிஞ்ச் எழுதிய Riders to the Sea கடலின் அக்கரை போவோர் என்ற பெயாிலும், எல்மாறைசின் The Adding Machine பொம்மலாட்டம் என்ற பெயாிலும் தழுவலாக்கம் பெற்று மேடையேறின. அலெக்ஸி அர்புசோவின் It Happend In Irkutsk என்னும் நாடகம் ஞானம் லம்பேட்டினால் 1970 இல் பிச்சை வேண்டாம் என்ற பெயாில் மொழி பெயர்க்கப்பட்டது. நிர்மலா நித்தியானந்தன் இந்த நாடக ஆசிாியாின் Old World என்ற நாடகத்தை புதிய உலகம் பழைய இருவர் என்ற பெயாிலும், ரென்னஸி வில்லியத்தின் Glass Menagerie என்ற நாடகத்தை கண்ணாடி வார்ப்புகள் என்ற பெயாிலும் மொழி பெயர்த்தார். இந்நாடகங்கள் மிக வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டமை நவீன ஈழத்துத் தமிழ் நாடக மரபு உலக நாடக மரபுடன் சங்கமிப்பதையே காட்டுகின்றது.
4

ஈழத்துக் கவிதை நாடகங்கள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். கவிதை நாடகம் என்ற பதப்பிரயோகம் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. சிலர் கவிதை நாடகத்தைக் கவிதை வகைகளுள் ஒன்றாகக் கருதுவர். செய்யுள் நடையில் அமைந்துள்ளமையாலேயே இவ்வாறு கருகின்றனர் போலும். இதனால் கவிதை, நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள் பற்றிக் கருத்துக் குழப்பம் ஏற்பட வழியுண்டு. செய்யுள் நடையில் அமைந்திருப்பினும் இவை நாடகங்களே. இவற்றைச் செய்யுள் நாடகம் அல்லது பாநாடகம் என்று அழைப்பதன் மூலம் இக்குழப்பத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

1950ஆம் ஆண்டுகளின் பின் அரைவாசியில் இருந்தே இங்கு பாநாடகங்கள் கணிசமான அளவில் தோன்றத் தொடங்கின. இலங்கையில் முதலாவது பாநாடகமாக கதிர்காமர் கனகசபையின் நற்குணனைச் சொல்வர். ஆரம்ப காலப் பாநாடகங்கள் பெரும்பாலும் நடிப்பதற்கன்றிப் படிப்பதற்கே எழுதப்பட்டன. மஹாகவி, முருகையன் ஆகியோரே இத்துறையில் அதிகம் உழைத்தவர்களாவர். மகாகவியின் அடிக்கரும்பு, சேனாபதி, திருவிழா ஆகியனவும், முருகையனின் தாிசனம், வந்து சேர்ந்தன போன்றவையும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.

60 ஆம் ஆண்டுகளில் மேடைப்பாநாடகங்கள் பல எழுந்தன. நீலாவணனின் மழைக்கை, மஹாகவியின் புதிய தொரு வீடு, கோடை முருகையனின் கடூழியம், கோபுர வாசல், அம்பியின் வேதாளம் சொன்ன கதை முதலியன இக்காலப் பகுதியில் மேடையேறின. இலங்கையில் தோன்றிய பாநாடகங்களைப் பொதுவாக மூன்று வகைக்குள் அடக்கலாம். ஒன்று பழந்தமிழ் இலக்கியச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை. இரண்டு நடைமுறைச் சமூக வாழ்வை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தப் போக்கானவை. மூன்று குறியீட்டுப் பாங்கானவை. வந்து சேர்ந்தன, கோபுரவாசல், மழைக்கை போன்றவை முதல் வகையின. கோடை, புதியதொரு வீடு, போன்றவை இரண்டாம் வகையின. கடூழியம் மூன்றாம் வகையைச் சேர்ந்தது. அண்மையில் பா. சத்தியசீலனின் பாட்டுக்கூத்து என்ற சிறுவர்க்கான பாநாடக நூல் ஒன்றும் வௌிவந்துள்ளது.

ஈழத்து வானொலி நாடகங்களையும் இங்கு குறிப்பிடுதல் அவசியம். வானொலி நாடகங்களிற் பெரும்பாலானவை நூலுருப் பெறவில்லை. இலங்கையர்கோனின் மிஸ்டர் குகதாசனும் (1957) மாதவிமடந்தையும் (1958) முருகையனின் தாிசனமும், எஸ்.பி.கே.யின் பொற்கிழியும் நூலுருப் பெற்ற வானொலி நாடகங்களாகும். பொதுவான ஈழத்து நாடகப் போக்கிற்கு வானொலியும் விதிவிலக்கில்லை. வானொலி ஒரு வெகுஜனத் தொடர்புச் சாதனமானமையினாலும் அரச கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிறுவனமானமையினாலும் சில எல்லைகளை மீறி நாடகம் போட அதனால் முடியவில்லை. எனினும் இடையிடையே சில நல்ல நாடகங்களையும் வானொலி அளிக்காமலில்லை. சிவபாதசுந்தரம், சானா, வாசகர் போன்றோர் வானொலி நாடகத் துறையில் உழைத்தவர்கள். வாசகர் வசனம் எழுதிய தணியாததாகம் வானொலி விசிறிகளின் பாராட்டுதலைப் பெற்றது. முன்னையவர்களை விட வானொலி நாடக வளர்ச்சிக்கு வாசகர் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது. இயல்பான பேச்சு மொழியினை ஜனரஞ்சகப் படுத்தியமையை வானொலி நாடகங்களின் முக்கிய பணியாகக் குறிப்பிடலாம்.

பத்திாிகைகளும் அவ்வப்போது சில நாடகங்களை வௌியிட்டுள்ளன. குறிப்பாக 1967 ஆம் ஆண்டிலே தினகரன் பத்திாிகை நாடக விழா ஒன்றினை அகில இலங்கை ாீதியிலே நடத்தியது. ஈழநாடு பத்திாிகை ஓரங்க நாடகப் போட்டி ஒன்றினை நடத்தி முதன்மை பெற்ற நாடகங்களை விடிய இன்னும் நேரமிருக்கு (1971) என்ற தொகுதியாக வௌியிட்டது. ஈழகேசாி, வீரகேசாி முதலிய பத்திாிகைகளும், அஞ்சலி, கலைச்செல்வி முதலிய சஞ்சிகைகளும் ஓரங்க நாடகங்களை வௌியிட்டன. மல்லிகை நாடக விமர்சனங்களை வௌியிட்டது. இவ்வகையில் பத்திாிகை, வானொலி ஆகிய வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈழத்தமிழ் நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றின.

இவற்றைவிட ஈழத்து நாடகத்துறையில் ஈடுபட்டவர்கள் சிலர் தமது நாடக அனுபவங்களையும், விபரங்களையும் நூலாக வெயிட்டுள்ளனர். கலையரசு சொர்ணலிங்கத்தின் ஈழத்தில் நாடகமும் நானும், ஏ.ாி. பொன்னுத்துரையின் வெள்ளிவிழா மலர் ஆகியன இதற்கு உதாரணங்களாகும். 1917 தொடக்கம் 1973 வரை ஈழத்தில் வௌிவந்த நாடக நூல்களை ஆராய்ந்து முதுகலைமாணிப்பட்டம் பெற்ற சொக்கனின் ஆய்வுக் கட்டுரை விாிவாக எழுதப்பட்டு 1977 இல் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியவளர்ச்சி என்ற பெயாில் வௌிவந்துள்ளது. ஈழத்தமிழ் நாடக நூல் விபரங்களை அறிய விரும்புவோர்க்கு இது சிறந்த வழிகாட்டியாகும்.

நூல் முயற்சிகளை விட ஈழத்தமிழ் நாடக ஆராய்ச்சி, நாடக விமர்சனம், நாடகக் கணக்கெடுப்பு ஆகியனவும் ஓரளவு வளர்ச்சிபெற்று வருகின்றன. பேராசிாியர் கா. சிவத்தம்பி, பேராசிாியர் சு.வித்தியானந்தன், பேராசிாியர் க.கைலாசபதி, சி. மௌனகுரு, கே.எஸ்.சிவகுமாரன், சொக்கன், இ.சிவானந்தன் போன்றோர் இத்துறையிலீடுபட்டு உழைத்து வருகின்றனர்.

இதுவரை நோக்கியதில் இருந்து, ஈழத்தில் மரபுவழி நாடகம் அல்லது நாட்டுக்கூத்து மரபும், பேசி நடிக்கும் நவீன நாடகமும் சமாந்தரமாக வளர்ச்சியடைந்து வந்திருப்பதைக் காணலாம். இவ்விரு நாடக நெறிகளும் 1960களின் பிற்பகுதியில் இருந்து சர்வதேச நவீன நாடக அரங்க நெறிகளுக்கு ஏற்ப தம்மை இயைபுபடுத்திக் கொண்டுள்ளன என்பதையும் காணலாம். ஆயினும் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியம் இன்னும் எவ்வளவோ வளர்ச்சியடைய வேண்டி உள்ளது. நவீன நாடக அரங்கு பற்றிய சிந்தனை வளர்ச்சி பெற்ற விகிதத்தில் நாடக எழுத்து இங்கு வளர்ச்சி பெறவில்லை. அதனாலேயே சமீப காலத்தில் மொழிபெயர்ப்பு நாடகங்களும், இந்திரா பார்த்தசாரதி, தருமுசிவராமு போன்றவர்களின் அபத்த நாடகங்களும் இங்கு மேடையேற்றப்பட்டன. இது எவ்வாறெனினும் சினிமாவினதும் சபாக்களினதும் இறுக்கமான பிடியில் இருந்து விடுபடத்தவிக்கும் தமிழக நாடக அரங்கைவிட ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு வெகுதூரம் முன்னேறி உள்ளது எனலாம். சிங்கள நாடக அரங்கச் செல்வாக்கு இதற்கு ஒரு முக்கிய காரணியாகும். தமிழ் நாட்டில் மிகச் சமீபத்தில்தான் பாீக்ஷா போன்ற பாிசோதனை நாடகக் குழுக்கள் தோன்றியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

___________

ஒரு திருத்தம் (பக்கம் 91)

'பிள்ளைப் பெத்த ராசா ஒரு நாயை வளர்த்தார்'
நாடகத்தை எழுதித் தயாாித்தவர் பௌசுல் அமீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக