ஞாயிறு, 24 மே, 2009

சிறுகதை

5. சிறுகதை
சிறுகதை, கைத்தொழில் நாகாீகத்தில் நவீனப்பட்டுவரும் சமூகத்துக்குாிய ஒரு புதிய இலக்கிய வடிவமாகும். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் மேலைத் தேசங்களில் தோன்றி வளர்ந்த இவ்விலக்கிய வடிவம், ஆங்கிலேயர்களின் தொடர்பினாலும் அவர்களின் ஆதிக்கத்தினாலும் நவீன மாற்றங்களுக்குள்ளாகி வந்த தமிழர் சமூகத்தில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தோன்றியது. 1920ஆம் ஆண்டுகளில் பாரதியார் மொழிபெயர்த்த தாகூாின் சிறுகதைகளும், மாதவையா, வா.வே.சு.ஐயர் ஆகியோாின் சிறுகதைகளுமே தமிழில் இவ்விலக்கிய வடிவத்தை அறிமுகம் செய்தன. 1930 ஆம் ஆண்டுகளில் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன். பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா, மௌனி முதலிய எழுத்தாளர்கள் தமிழில் சிறுகதைக்கு ஒரு பூரண வடிவத்தைக் கொடுத்தனர்.

இலங்கையைப் பொறுத்தவரை 1930 ஆம் ஆண்டுகளின் பின் அரைவாசியிலேயே சிறுகதை தோன்றி வளரத் தொடங்கியது. சுமார் ஒன்றரை நூற்றாண்டுகால ஆங்கில ஆட்சியின் பயனாக நமது சமூகத்தில் எற்பட்டுவந்த மாற்றங்களின் விளைவே இது எனலாம்.

"பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பண்பாட்டுத்துறை விழிப்பின் காரணமாக, மதத்துறை இலக்கியமே தமிழ், சிங்கள மொழிகளில் முக்கிய இடத்தைப் பெற்றுவந்தது. ஆனால், குடியேற்ற நாட்டாட்சி இலங்கையின் அரசியல், பொருளியல் வாழ்க்கையை நன்கு பீடித்திருந்தமையால், ஆங்கில மொழி மூலம் மேனாட்டு நாகாீகம் பரவிக்கொண்டே வந்தது. விவசாயப் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டு, ஆங்கிலக் கல்வியே ஊதியமூலமாக அமைந்த யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இம்மாற்றம் மற்றத் தமிழ்ப் பகுதியாம் மட்டக்களப்பிலும் பார்க்க வேகமாகப் பரவிற்று. ஆங்கிலக் கல்வியுடன் புனைகதையும் பரவிற்று" என, கலாநிதி கா. சிவத்தம்பி இது தொடர்பாக தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூலில் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.

புதிய சமுதாய மாற்றமும் ஆங்கிலக் கல்வியும் மட்டுமன்றி, தமிழக சஞ்சிகைகளினதும் சிறுகதை எழுத்தாளர்களினதும் செல்வாக்கும் இலங்கையில் சிறுகதை தோன்றுவதற்கான முக்கிய காரணியாக இருந்துள்ளது. ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவரான சி. வைத்தியலிங்கம் தனது சகாவான இலங்கையர்கோனை நினைவுகூர்ந்து எழுதிய, "இலங்கையர்கோனும் நானும்" என்னும் கட்டுரையில் குறிப்பிடும் பின்வரும் செய்திகள் இவ்வுண்மையை நன்கு தௌிவு படுத்துகின்றன.

"உன்னதமான இலட்சியங்களும் கனவுகளும் எங்கள் வாழ்க்கையில் நிரம்பி இருந்த நாட்கள் இவை. இலக்கியத்தைப் படிப்பதிலும், நாடகங்களைப் பார்ப்பதிலும், சங்கீத இரசனையிலும் எங்கள் இருவருக்கும் எப்பொழுதுமே பொிய ஆர்வம். எழுதவேண்டும் ஏதாவது சிருஷ்டிக்க வேண்டும் என்ற உணர்ச்சி என்றும் சிறகடித்துக்கொண்டிருக்கும் சோ. சிவபாதசுந்தரம், சோ. நடராஜா, திருநீலகண்டன், இலங்கையர்கோன், நான் எல்லோருமே சேர்ந்து இலக்கியங்களை விமர்சனம் செய்வதிலும் அக்காலத்தில் எழுத்துலகில் பிரபலமாகி இருந்த சிறுகதையாசிாியர்களின் சிருஷ்டிகளைப் பற்றி ஆராய்வதிலும் கவனம் செலுத்தி வந்தோம். மணிக்கொடி பத்திாிகையின் புதிய பாணி இலங்கையர்கோனை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டது. சினிமாவுக்கு வசனம் எழுதி இப்போது பிரபல்யம் அடைந்திருக்கும் இளங்கோவனின் எழுத்துக்களை அவர் எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருப்பார். அவருடைய வசனங்களையும் வர்ணனைகளையும் மனனம் செய்து எங்களுக்கு ஆவேசத்துடன் அடிக்கடி சொல்லி வருவார். அவ்வளவு தூரம் இளங்கோவனின் எழுத்து அவரைக் கவர்ந்திருந்தது. இந்த வெறியுடன் தான் இலங்கையர் கோன் எழுத்தில் மும்முரமாக ஈடுபட்டார் என்று நினைக்கின்றேன்." இலங்கையர்கோன் மட்டுமன்றி அவரது சமகாலத்தவர் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தமிழகப் பத்திாிகைகளாலும் எழுத்தாளர்களாலும் தூண்டுதல் பெற்றவர்களே எனலாம்.

இத்தகைய பின்னணியிலே 1930களின் பிற்பாதியில், சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், க.தி. சம்பந்தர், சோ. சிவபாதசுந்தரம் முதலியோர் இலங்கையில் பிரக்ஞை பூர்வமாக சிறுகதைத்துறையில் ஈடுபட்டார்கள். இவர்களுள் முதல் மூவரும் முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்களே ஈழத்துச் சிறுகதையின் முன்னோடிகள், அல்லது முதல்வர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். 'இலட்சியக் கனவுகளும் எதையாவது எழுத வேண்டும் என்ற ஆர்வமும்' இவர்களது படைப்பு முயற்சிகளுக்கு உட்தூண்டுதலாக அமைந்தன. கலைமகள், கிராம ஊழியன், சூறாவளி, மணிக்கொடி, ஆனந்த விகடன் முதலிய தென் இந்தியச் சஞ்சிகளில் இவர்களது சிறுகதைகள் வௌிவந்தன. ஈழகேசாியும் இவர்களது எழுத்து முயற்சிக்குக் களமாக அமைந்தது.

வைத்தியலிங்கம், சம்பந்தர், இலங்கையர்கோன் ஆகியோர் சமகாலத்தவர்கள் எனினும் முதல் இருவரும் 1940ம் ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகம் எழுதியதாகத் தொிய வில்லை. இலங்கையர்கோன் சிறுகதைத்துறையை விட்டு விலகி இருந்தாலும் தனது மரணத்துக்கு முந்திய சில ஆண்டுகளில் குறிப்பாக 1960-1961ம் ஆண்டுகளில் சிறுகதைப் படைப்பில் முழுமூச்சாக ஈடுபட்டவர். அந்த வகையில் சுமார் முப்பது ஆண்டு கால இலங்கைச் சிறுகதை வரலாற்றோடு அவருக்கு உறவு உண்டு என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும்.

சி. வைத்தியலிங்கம் சுமார் இருபத்தைந்து கதைகள் வரை எழுதினார் என்று தொிய வருகின்றது, அவரது தொகுப்பு நூல்கள் எவையும் இதுவரை வௌிவராதிருப்பது ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை துரதிஷ்ட வசமானதே. ஆயினும் மூன்றாம் பிறை, கங்கா கீதம், பாற் கஞ்சி ஆகிய கதைகள் சில தொகுப்பு நூல்களில் வௌிவந்துள்ளன. நெடுவழி, பிச்சைக்காரர், அழியாப் பொருள், உள்ளப் பெருக்கு, இப்படிப் பல நாள், விதவையின் இருதயம், தியாகம், பைத்தியக்காாி, களனி கங்கைக் கரையில், மின்னி மறைந்த வாழ்வு, என் காதலி, நந்த குமாரன், டிங்கிாி மெனிக்கா, பூதத்தம்பி கோட்டை முதலியன அவர் எழுதிய வேறு சில கதைகள்.

க.தி. சம்பந்தரும் சுமார் இருபது கதைகள் வரை எழுதியுள்ளார் என்று தொிய வருகின்றது. அவரது கதைகள் எதுவும் தொகுப்பு நூலாக இதுவரை வௌிவரவில்லை. எனினும் 1967ல் இவரது ஐந்து சிறுகதைகள் விவேகி சஞ்சிகையில் ஒன்றாக வௌியிடப்பட்டன. விதி, மனிதன், புத்தாின் கண்கள், தாராபாய், துறவு, கூண்டுக்கிளி, தூமகேது, மனித வாழ்க்கை, சபலம், சலனம், அவள், இரண்டு ஊர்வலங்கள், கலாஷேத்திரம், மகாலட்சுமி முதலியன இவர் எழுதிய சில கதைகள்.

இலங்கையர்கோனின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்று வெள்ளிப்பாதசரம் என்ற பெயாில் 1962ம் ஆண்டு அவாின் மனைவியின் முயற்சியால் வௌியிடப்பட்டது. ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவாின் படைப்புக்களை மொத்தமாகத் திரட்டித்தரும் ஒரே நூல் இதுவே. இத் தொகுப்பில் இடம்பெறாத இவாின் வேறு சில கதைகளும் உள்ளன. வஞ்சம், சமாதானம், கடற்கரைக் கிளிஞ்சல், தேவலோகக் காதல், கடலிலே ஒரு மீன், அந்தத் தந்தி, தேவியும் தவமிருந்து, செங்காந்தள் முதலியன அவற்றுள் சில.

ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளான இம் மூவாின் கதைகளிலே அவர்களுக்கே உாிய தனித் தன்மைகளும், வேறுபாடுகளும் காணப்படுகின்றன எனினும் சில பொதுப் பண்புகளும் உள்ளன.

வரலாற்று இதிகாச நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு கதைகள் புனைதல் இக்காலப் பகுதிக்குரிய ஒரு பொதுப்போக்காகக் காணப்படுகின்றது. இலங்கையர்கோனே இத்தகைய கதைகளில் அதிக ஈடுபாடு காட்டினார் எனினும் ஏனையவர்களும் இதற்குப் புறம்பானவர்களல்லர். இலங்கையர்கோனின் அனுலா, மரியா மதலேனா, மேனகை, தாய், யாழ்பாடி, சிகிரியா, தேவலோகக் காதல், மணப்பரிசு, கடற்கோட்டை முதலிய கதைகள் வரலாற்று, இதிகாச நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவையே. வைத்தியலிங்கத்தின் நந்தகுமாரன், தியாகம், பூதத்தம்பி கோட்டை, சம்பந்தரின் புத்தரின் கண்கள் முதலியனவும் இத்தகைய படைப்புக்களே, சில வேளைகளில் இவர்களது வரலாற்றுக்கதைகள் சிறுகதை உருவத்துக்குள் பிடிபடாத வரலாற்றுச் செய்திகளாகவே அமைந்து விடுகின்றன. இலங்கையர்கோனின் சிகிரியா, அனுலா, மரியா மதலேனா முதலியவை இவ்வாறு சிறுகதை வடிவ அமைப்புக்குப் புறம்பானவை.

தனி மனித இன்னல்களை அல்லது உணர்வு நிலைகளை சமுதாயப் பின்னணியில் வைத்து நோக்கும் யதார்த்தப் பண்பு பொதுவாக இவர்களது கதைகளில் காணப்படுவதில்லை. இலங்கையர்கோன், வைத்தியலிங்கம் ஆகியோாின் சில கதைகளிலே நடப்பியல் வாழ்வுடன் ஒட்டிய யதார்த்தப் பண்பு ஓரளவு காணப்படுகின்றது எனினும் பொதுவாக இவர்கள் ஒரு கற்பனையான கனவுச் சூழலிலேயே தங்கள் பாத்திரங்களை உலாவ விடுகின்றனர். சம்பந்தர் யதார்த்தப் பண்பை கொள்கை ாீதியாகவே நிராகாிப்பவராகவும் காணப்படுகின்றார்.

"யதார்த்தச் சித்திாிப்பால் நமது மனம் தூய்மையடைவதற்குப் பதிலாக மேலும் மோசம் அடைகின்றது. யதார்த்தம் என்பது பைத்தியக்காரத்தனம். இத்தகைய யதார்த்தப் பண்பில் எழும் தேசிய இலக்கியங்கள் சர்வதேசிய இலக்கியங்களுக்கு ஒவ்வாதது-தேவை இல்லாதது." என்ற சம்பந்தாின் கூற்றுக்கு ஏற்பவே

அவரது கதைகளும் யதார்த்தத்துக்குப் புறம்பான அழகிய கற்பனைச் சித்திரங்களாக உள்ளன. வைத்தியலிங்கத்தின் மூன்றாம் பிறை, உள்ளப் பெருக்கு, புல்லுமலையில் முதலிய கதைகளும் கற்பனையான உணர்வுப் பின்னல்களே. இலங்கையர்கோனின் வரலாற்று இதிகாசக் கதைகளும், நாடோடி, சக்கரவாகம், கடற்கரைக் கிளிஞ்சல் போன்றவையும் இத்தகையனவேயாகும். ஆயினும் மற்ற இவருடனும் ஒப்பு நோக்குகையில் நடப்பியலோடு ஒட்டிய யதார்த்தப் பண்பு, இலங்கையர்கோனிடம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது எனலாம். ஆரம்பகாலக் கதைகளான முதற்சம்பளம்,வெள்ளிப்பாதரசம், தந்தைமனம் முதலியவையும் பிற்காலத் கதைகளான மச்சாள், அனாதை, தாழைநிழலிலே போன்றவையும் இத்தகையன. இவற்றுள் பிந்திய மூன்றும் 1960ஆம் ஆண்டில் எழுதப்பட்டவை என்பதையும் மனம்கொள்ள வேண்டும்.

ஆண்பெண் உறவு அல்லது பால் உறவையே இவர்கள் பொிதும் தங்களின் கதைப்பெருளாகக் கொண்டனர். சம்பவங்களை அல்லது பாத்திரங்களின் இயக்கங்களை விபாிப்பதைவிட உணர்வுநிலைக்கே அதிக அழுத்தம் கொடுத்தனர். அந்த வகையில் உணர்ச்சி மிகைப்பு இக்காலக் கதைகளில் ஒரு பொதுப் பண்பாகவும் உள்ளது. உணர்ச்சி மிகைப்பை வௌிப்படுத்துவதற்கு காவியப்பாங்கான அலங்கார மொழி நடை அவசியமாகும். இக்காலக் கதைகள் பொிதும் இத்தகைய மொழி நடையிலேயே அமைந்துள்ளன. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோாின் சில கதைகளிலே வழக்குத்தமிழ் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது எனினும் அது அவர்களின் பிரக்ஞைபூர்வமான இலக்கியக் கொள்கையின் வௌிப்பாடு என்று கருதுவதற்கில்லை. இக்காலத்தில் எழுந்த பெரும்பாலான கதைகளில் விபரணத்திலும் உரையாடலிலும் காவியப்பாங்கான மொழிநடையே பயன்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியலிங்கத்தின் புல்லுமலையில் என்ற கதையில் வரும் பின்வரும் உரையாடலை இதற்கு ஒரு உதாரணமாகத் தரலாம்.

"குமு, அதோபார்! முழுநிலா, புல்லுமலையைத் தழுவி முத்தமிட வந்தது. எங்களைக் கண்டதும் நாணத்தால் முகம் சிவந்து தயங்கிநிற்கிறது....."

"என்ன, நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்களா அல்லது புல்லுமலையையும் சந்திரனையும் பார்க்க வந்தீர்களா?"

"குமு இந்த நிலாவும், புல்லுமலையும், இளந் தென்றலும் இல்லாவிடில் நீ ஏது? நான் எப்படி இங்கு வந்திருப்பேன்? இந்தப் புல்லுமலையல்லவா உன்னைப் பெற்று வளர்த்த தாய்?"

இந்த உரையாடல் பகுதியிலே உணர்ச்சி மிகைப்பும். அலங்கார நடையும் ஒன்றிணைந்து இருப்பதை நாம் காணலாம்.
2

ஈழத்து சிறுகதையின் இரண்டாவது தலைமுறை 1940ஆம் ஆண்டுகளில் உருவாகியது. இக்காலத்தில் இலக்கிய ஆர்வம் உடைய ஓர் இளைஞர் குழு யாழ்ப்பாணப் பகுதியில் தோன்றியது. ஈழகேசாி இவர்களின் பிரதான வௌியீட்டுக் களமாகவும் அமைந்தது. இவர்களுள் சிலர் ஒன்றிணைந்து, 'மறுமலர்ச்சி' என்ற ஒரு சஞ்சிகையையும் வௌியிட்டனர். அதைச் சுற்றி ஓர் இலக்கியக் குழுவாகவும் உருவாகினர், ஈழத்து முன்னோடி எழுத்தாளர்கள் இவர்களுக்கு ஆதர்சமாக அமைந்தனர். தமிழகச் சஞ்சிகைகளும் அவற்றில் வௌிவந்த படைப்புக்களும் இவர்களின் எழுத்தார்வத்துக்கு தூண்டு கோலாக அமைந்தன.

இக்காலப்பகுதியில் சிறுகதை உலகில் புகுந்த எழுத்தாளர்களுள், அ.செ.முருகானந்தம், தி.ச. வரதராசன், அ.ந. கந்தசாமி, கனக செந்திநாதன், தாழையடி சபாரத்தினம், சொக்கன், சு.வேலுப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் பலர் 50, 60 களிலும் தொடர்ந்து எழுதினர். சிலர் இன்னும் எழுதுகின்றனர். சிலர் 50, 60 களில் தான் குறிப்பிடத்தக்க கதைகளையும் எழுதினர். ஆயினும் இவர்கள் இலக்கிய உலகில் பிரவேசித்த காலத்தில் இவர்களிடம் உருவாகி அமைந்த பண்புகள் தொடர்ந்தும் நீடித்து வந்திருப்பதை நாம் காணலாம். இதே காலப்பகுதியில் இலங்கையர்கோன் வைத்தியலிங்கம் சம்பந்தன் முதலியோரும் தொடர்ந்து எழுதி வந்தனர் என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும்.

இக்காலப்பகுதியில் தோன்றிய எழுத்தாளர்களுள் அ.செ. முருகானந்தம் படைப்புகளின் எண்ணிக்கையாலும் தரத்தினாலும் முதல் இடம் பெறுகின்றார். சுமார் நூறு கதைகள் இவரால் எழுதப்பட்டன என்று தொியவருகின்றது. இவரது வண்டிச் சவாாி. மனிதமாடு, எச்சில் இலை வாழ்க்கை முதலிய கதைகள் ஈழத்து விமர்சகர்களால் கிலாசித்துப் பேசப்படுகின்றன. இவ்வளவு கதைகளை எழுதிய இவரது தொகுப்பு நூல் ஒன்று கூட வௌிவராதிருப்பது வருந்தத்தக்கதாகும்.

1940இல் ஈழகேசாியில் வௌியான கல்யாணியின் காதல் என்ற கதையுடன் சிறுகதை உலகில் பிரவேசித்தவர் தி.ச. வரதராசன். வரதர் என்ற புனைபெயாில் தொடர்ந்து கதைகள் எழுதி வந்துள்ளார். அவரது பன்னிரெண்டு கதைகள் கொண்ட கயமை மயக்கம் என்ற தொகுப்புநூல் ஒன்றும் வௌிவந்துள்ளது.

ஈழத்து இலக்கியத்தில் இடதுசாாிச் சிந்தனையை அறிமுகப் படுத்திய அ.ந. கந்தசாமி சுமார் அறுபது கதைகள் வரை எழுதி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆயினும் இவரது கதைகளும் தொகுப்புநூலாக வௌிவரவில்லை. இரத்த உறவு, நாயிலும் கடையர் போன்ற இவரது கதைகளை ஈழத்து விமர்சகர்கள் புகழ்ந்து பேசுவர். இக்காலப்பகுதியில் எழுதத் தொடங்கிய கனக செந்திநாதனின் வெண்சங்கு, சொக்கனின் கடல், சு. வேலுப்பிள்ளையின் மண்வாசனை, தாழையடி சபாரத்தினத்தின் புதுவாழ்வு ஆகிய சிறுகதைத் தொகுதிகள் 1960, 70 களில் வௌி வந்துள்ளன. கனக செந்திநாதன், சொக்கன், சு.வே. ஆகியோாின் தொகுப்புகளில் உள்ள கதைகள் பெரும்பாலும் 1950, 60 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

பண்பு அடிப்படையில் இக்காலப் பகுதியில் தோன்றிய எழுத்தாளர்கள் முந்திய தலைமுறை எழுத்தாளர்களில் இருந்து அதிகம் வேறுபட்டவர்கள் அல்லர். 1930ஆம் 40 ஆம் ஆண்டுகளில் ஈழத்துச் சமுதாய அரசியல் போக்குகளில் அதிக மாற்றங்கள் இன்மையே இவர்களில் காணப்படும் ஒற்றுமைக்கான அடிப்படை எனலாம். அவ்வகையில் 30ஆம் 40 ஆம் ஆண்டுச் சிறுகதைகளை ஒருசேர நோக்குவதும் பொருந்தும். ஆயினும் கிராமிய பண்பாட்டுப் பிரக்ஞை முந்திய தலைமுறை எழுத்தாளர்களைக் காட்டிலும் இவர்களிடம் முனைப்பாகக் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அ.செ.மு., கனக செந்திநாதன், சொக்கன், சு.வெ. போன்றோாின் பலகதைகளிலே யாழ்ப்பாணக் கலாச்சாரக் கூறுகள் பலவற்றை நாம் காணலாம். இவர்கள் மூலமே யாழ்ப்பாணக் கிராமியப் பண்பாடு பரவலாகக் சிறுகதைகளில் இடம்பெறத் தொடங்கியது. எனினும் முந்திய தலை முறையைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் போலவே சமூக நடைமுறைகளை ஆழமாக நோக்கும் பார்வை விசாலம் இவர்களிடமும் காணப்படவில்லை. வழிவழி வந்த பண்பாட்டுணர்வும், மனிதாபிமானமும் இவர்களின் பொதுப்பண்பு எனலாம். அதற்கேற்றவகையில் சீர்திருத்த நாட்டமும் இவர்களின் கதைகயில் இழையோடக்காணலாம். புதிய மாற்றங்களை அங்கீகாிக்காது, பழமைக் கனவுகளில் ஆழும் மனோபாவமும் இவர்களுட் சிலாின் கதைகளில் காணப்படுகிறது. கனக செந்திநாதன், குறிப்பாக இப்போக்கின் சிறந்த பிரதிநிதி எனலாம். தனது வெண்சங்கு தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையில்,

"அன்பு, முயற்சி, கலை, போலித்தன்மையில் வெறுப்பு, விதியின்பிடி, பணஆசை என்ற நிலைத்துநிற்கும் பொருள்களை வைத்து ஓரளவு பழமையுடனும் சமயச் சூழலுடனும் சித்திாிக்க முயன்றிருக்கின்றேன். பழைய யாழ்ப்பாணக் கலாச்சாரம் இப்புதிய சிறுகதைகளுக்கு வலுவான பகைப்புலமாக அமைந்திருக்கின்றது...... யாழ்ப்பாணப் பழமை, சமயச் சூழல். பழமையான கதை சொல்லும் உத்தி என்ற என் தனித்துவத்தை நான் இழந்துவிடத் தயாராக இல்லை." என்று கூறுகின்றார். அவரது தொகுப்பில் உள்ள பல கதைகள் இப்போக்கை நன்கு பிரதிபலிக்கின்றன.

மொழி நடையைப் பொறுத்தவரை முந்திய தலைமுறையினரைப் போல் கவித்துமான அலங்கார நடையை இவர்கள் கையாளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பேச்சுவழக்கு மொழியை பிரக்ஞை பூர்வமாகக் கையாண்டதாகத் தொியவில்லை. இவர்களது கதாபத்திரங்கள் பல 'இலக்கணசுத்தமான' இலக்கிய நடையிலேயே உரையாடுகின்றன. உதாரணமாக வரதாின் கற்பு என்ற கதையில் வரும் வின்வரும் உரையாடலைக் காட்டலாம்.

"மாஸ்டர், நீங்கள் கலைச்செல்வியைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?" என்று கேட்டார் ஐயர்.

"ஓமோம், ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். ஆனால் எல்லா விஷயங்களையும் படித்திருக்கிறேன் என்று சொல்லமுடியாது. ஏன் என்ன விஷேசம்?"

"கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை......."

"யார் எழுதியது?"

"எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவம் தான் மனதை உறுத்திக்கொண்டே இருக்கின்றது."

"சொல்லுங்கள் நினைவு வருகிறதா பார்க்கலாம்."

1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்திலே வரதர் எழுதிய இக் கதையில் கூட உரையாடலில் இலக்கிய வழக்கு நடையின் செல்வாக்கையே காண முடிகிறது. இது 40 ஆம் ஆண்டுகளில் உருவான எழுத்தாளர்களிடம் பரவலாகக் காணப்படும் ஒரு பொதுப் பண்பாகும். அ.செ.மு., கனக செந்திநாதன், அ.ந. கந்தசாமி முதலியோாின் பல கதைகளில் இத்தகைய மொழி நடையைக் காணலாம். யதார்த்தப் பண்பு இவர்களது கதைகளிலும் பூரண வடிவம் பெறவில்லை என்பதையே இது காட்டுகின்றது.
3
1950 ஆம் ஆண்டுகள் ஈழத்துச் சமுதாய, அரசியல் வரலாற்றில் முக்கியமான காலகட்டமாகும். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதாயினும் தேசிய நலனை முன்வைத்த உண்மையான போராட்டம் 1950 ஆம் ஆண்டுகளில் தான் ஆரம்பித்தது. சமுதாய முரண்பாடுகளும், போராட்டங்களும் கூர்மையடைந்து அரசியல் வடிவம் பெறத் தொடங்கின. 1953 இல் நிகழ்ந்த ஹர்த்தால் கஷ்டப்பட்ட மக்களின் எழுச்சிக் குரலாக அமைந்தது. 1956 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்துக்கும் அது வழி கோலியது. தேசிய சக்திகள் அரசியல் அரங்கில் ஆதிக்கம் பெற்றன. தேசிய பண்பாட்டுணர்வு, சோஷலிச சிந்தனை என்பன பொதுமக்கள் மயமாகத் தொடங்கின. அதேவேளை சிங்கள தேசியவாதிகளின் தீர்க்கதாிசனமற்ற, சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளால் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாகியது. தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியாத பெரும் சிக்கலாக இது மாற்றியது. 1958 இல் நாடு பரந்த இனக்கலவரத்துக்கு இது வழியமைத்தது. ஒருபுறம் பொதுவுடைமை, தேசிய ஐக்கியம் முதலிய கருத்துக்கள் வளர்ச்சியடைய மறுபுறம் இன உணர்வு, இனவிடுதலைக் கொள்கை என்பன வலுப்பெறத் தொடங்கின.

இத்தகைய சமுதாய அரசியல் பின்னணியிலேயே ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் உருவாகினர். வ.அ. இராசரத்தினம், செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா, கே.டானியல், எஸ்.பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, நீர்வை பொன்னையன், என்.கே. ரகுநாதன்,பித்தன், அ.ஸ.அப்துஸ்ஸமது, என்.எஸ்.எம். ராமையா, நந்தி, மு.தளையசிங்கம், கே.வி.நடராசன், அ. முத்துலிங்கம், இ.நாகராஜன், அகஸ்தியர், தௌிவத்தை ஜோசப் முதலியோர் இக் காலப் பகுதியில் சிறுகதை உலகில் பிரவேசித்தவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்களாவர். 60, 70 களில் இவர்களது சிறு கதைகள், பல தொகுப்பு நூல்களாகவும் வௌிவந்துள்ளன.

1950 ஆம் ஆண்டுகளில் தான் அரசியல் சார்பான இலக்கியப் பிாிவுகள் இலங்கையில் தோன்றின. இக்கால எழுத்தாளர்களை அவர்களின் அரசியல், இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் இரண்டு பிாிவுக்குள் அடக்கலாம். சமுதாய அரசியல் போராட்டங்களுடன் இலக்கியம் பிாிக்கமுடியாத உறவுடையது என்று கருதுவோர் ஒரு சாரார். இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உறவினை மறுப்பவர்கள் அல்லது அது பற்றிய பிரக்ஞையற்றோர் மறுசாரார்.

செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா, டானியல், ரகுநாதன், காவலூர் ராசதுரை, நீர்வை பொன்னையன், அகஸ்தியர் முதலியோர் முதலாவது பிாிவுள் அடங்குவர். இவர்கள் மார்க்ஸீய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்ற வகையில் சமுதாய அரசியல் பிரக்ஞை இவர்களின் கதைகளில் முனைப்பாகக் காணப்படுகின்றது. சமுதாய ஏற்றத் தாழ்வு, தொழிலாளர் போராட்டம், சாதி அடக்குமுறை, தீண்டாமை, வறுமை, சுரண்டல் ஆகியன இவர்களின் சிறு கதைகளில் காணப்படும் பொதுப் பொருள்களாகும். சுருக்கமாகச் சொல்வதானால் சமுதாய வர்க்கங்களுக்கிடையே நடக்கும் போராட்டமே இவர்களது கதைப் பொருளாக உள்ளது.

அடிநிலை மக்களின் துயர் நிறைந்த வாழ்வும் ஆளும் வர்க்கம் அவர்களைச் சுரண்டும் விதங்களும், புதுவாழ்வு ஒன்றினைப் போராடி வென்றெடுக்கும் வகையில் அவர்கள் விழிப்படைந்து வருவதும் இவர்கள் கதைகளில் சித்திாிக்கப்பட்டுள்ளன. இவர்களது கதைகளில் சமுதாய சீர்திருத்த நோக்குக்குப் பதிலாக சமுதாய அமைப்பை முற்றாக மாற்றி அமைக்கும் புரட்சிகர உணர்வே பொதுவாக வௌிப்பாடு பெற்றுள்ளது எனலாம். செ. கணேசலிங்கனின், சங்கமம், ஒரே இனம், நல்லவன்; டொமினிக் ஜீவாவின் பாதுகை, தண்ணீரும் கண்ணீரும், சாலையின் திருப்பம்; கே. டானியலின் டானியல் கதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன; ரகுநாதனின் நிலவிலே பேசுவோம்; நீர்வை பொன்னையனின் மேடும் பள்ளமும், உதயம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளிலே உள்ள பெரும்பாலான கதைகள் இதற்கு உதாரணங்களாகும். ஆயினும் சில வேளைகளில் இவர்களது அரசியல் உணர்வு கலாபூர்வமான வடிவ அமைதி பெறத் தவறி விடுவதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாகக் கணேசலிங்கனின் பிற்காலக் கதைகளிலே இதை வௌிப்படையாகக் காணலாம். அவரது கொடுமைகள் தாமே அழிவதில்லை என்ற தொகுப்பில் உள்ள கதைகள் உருவச் சிதைவு அடைந்த பிரச்சாரமாகவே அமைந்துள்ளன.

காவலூர் ராசதுரை முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர் எனினும் அவரது கதைகள் ஏனைய முற்போக்கு எழுத்தாளர்களின் கதைகளில் இருந்து ஒரு வகையில் வேறுபட்டவை எனலாம். இவரது பெரும்பாலான கதைகள் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்டவை. அவர்களது மனப் போக்குகளையும் நடத்தைகளையும் துல்லியமாகச் சித்திாிப்பவை. இரு கூறுபட்ட வர்க்க முரண்பாடுகள் இவரது கதைகளில் அதிகம் இடம் பெறுவதில்லை. அந்த வகையில் ஏனையோர் கதைகளில் காணப்படுவது போல் இவரது கதைகளில் அரசியல் அம்சம் வௌிப்படையாகத் தொிவதில்லை. இவருடைய குழந்தை ஒரு தெய்வம், ஒருவகை உறவு ஆகிய தொகுதிகளில் குறிப்பிடத் தகுந்த பல கதைகள் உள்ளன.

இரண்டாவது பிாிவைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் பல்வேறு சிந்தனைப்போக்கு உடையவர்கள் உள்ளனர். வ.அ. இராசரத்தினம், நந்தி, முத்துலிங்கம், கே. வி. நடராசன் முதலியோர் திட்டவட்டமான அரசியல் சிந்தனைப் போக்குகளைத் தங்கள் சிறுகதைகளில் வௌிக்காட்டாத போதிலும் சமுதாயவாழ்வின் பல்வேறு உள் முரண்பாடுகளையும் கலாசார அம்சங்களையும் மனிதாபிமான உணர்வுடன் அவற்றில் பிரதிபலித்துள்ளனர். வ.அ.வின் தோணி, நந்தியின் ஊர் நம்புமா, முத்துலிங்கத்தின் அக்கா, கே.வி. நடராசனின் யாழ்ப்பாணக் கதைகள் முதலிய சிறுகதைத் தொகுதிகள் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

50ஆம் ஆண்டுகளில் எழுதத் தொடங்கிய எஸ்.பொன்னுத்துரை, மு. தளையசிங்கம் ஆகியோர் 60, 70களில் முற்போக்கு இலக்கியத்தின் பிரதான எதிர் விமர்சகர்காளகவும் வளர்ச்சியடைந்தனர். எஸ்.பொ. ஈழத்துச் சிறந்த சிறுகதையாசிாியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். உள்ளடக்கத்தைவிட உருவ பாிசோதனைக்கே இவர் முதல் இடம் கொடுப்பவர். பால் உணர்வின் வக்காிப்பினையே (Sexual Pervertion) இவர் தன் கதைகளில் அதிகம் சித்திாித்துள்ளர். வீ என்ற பெயாில் வௌிவந்துள்ள இவரது சிறுகதைத் தொகுப்பில் புனைகதை எழுதுவதில் இவரது பல்வேறுவகையான ஆற்றல்களை வௌிக்காட்டும் நோக்கில் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தளையசிங்கத்தின் கதைகளில் பால் உணர்வும் ஆன்மீகத் தேடலும் பிரதான இடம் பெறுகின்றன. உருவச் செழுமை மிகுந்த பல கதைகளை இவர் படைத்துள்ளார். கஃப்கா, ஹெமிங்வே போன்ற மேலைத்தேச எழுத்தாளர்களின் செல்வாக்கு இவாிடம் உண்டு என இவரே குறிப்பிட்டுள்ளார். இவரது புதுயுகம் பிறக்கிறது ஈழத்தில் வௌிவந்த நல்ல சிறுகதைத் தொகுதிகளுள் ஒன்றாகும். 1960-65 காலப்பகுதிகளில் இவர் எழுதிய கதைகளே இத்தொகுதியில் உள்ளன.

பித்தன், அ.ஸ.அப்துஸ்ஸமது ஆகியோர் கிழக்கிலங்கை முஸ்லீம்களின் வாழ்க்கைப் பின்னணியில் பல கதைகள் எழுதியுள்ளனர். பித்தன் குறைவாக எழுதி பிற்காலத்தில் எழுத்துலகில் இருந்து முற்றாக ஒதுங்கியபோதிலும் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த ஒருவராகக் கருதப்படுகின்றார். மதவாதிகளின் ஆசாடபூதித்தனத்தைக் குத்திக்காட்டும் இவரது பாதிக்குழந்தை ஒரு நல்ல சிறுகதையாகும். அப்துஸ்ஸமதின் எனக்கு வயது பதின்மூன்று என்ற சிறுகதைத் தொகுதி வௌிவந்துள்ளது. என்.எஸ்.எம். ராமையா, தௌிவத்தை ஜோசப் ஆகியோர் மலைநாட்டு மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்டு பல நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளனர். 30 ஆம் 40 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பிரதேசத்தவர்களால் மட்டும் எழுதப்பட்ட சிறு கதை 50 ஆம் ஆண்டுகளில் இவ்வாறு நாடுபரந்த ஒர் இலக்கிய வடிவாக வளர்ச்சியடைந்தது.

50 ஆம் ஆண்டுகளில், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்த இன உணர்வு கவிதைத் துறையில் செல்வாக்குச் செலுத்தியதுபோல் வசன இலக்கியத்தில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறமுடியாது. இனக்கலவரகால நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன எனினும் அவை இன உணர்வைத் தூண்டும் விதத்தில் அன்றி மனிதாபிமான உணர்வைக் கிளறும் முறையிலேயே எழுதப்பட்டுள்ளன என்பது குடிப்பிடத்தக்கது. பொதுவாகக் கூறுவதானால் தேசியாீதியிலான சமுதாய அரசியல் இயக்கத்தின் இலக்கிய வௌிப்பாடாகவே இக்காலச் சிறுகதைகள் அமைந்தன எனலாம். தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு இக்காலப்பகுதியிலேயே வளர்ச்சியடைந்தது. வைத்தியலிங்கம், சம்பந்தன் முதலிய ஆரம்பகால எழுத்தாளர்கள் கால இடப் பிரக்ஞை அற்றும் இந்தியச் சூழலில் இந்தியக் கதாபாத்திரங்களைக் கொண்டும் கதைகள் எழுதியுள்ளார்கள். மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களும் பிரக்ஞைபூர்வமான தேசிய உணர்ச்சிகொண்டவர்கள் அல்லர். ஆனால் 50 களிலேதான் நமது மக்கள், நமது பிரச்சினைகள், நமது கலாச்சாரம், நமது மொழி என்பன இலக்கியத்தில் இடம் பெறவேண்டும் என்ற எண்ணம் கோட்பாட்டு ாீதியான வடிவம் பெற்றது. தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம் என்ற கொள்கைகள் ஆதிக்கம் பெறத் தொடங்கின. இதுவே 50க்கு பிற்பட்ட ஈழத்து இலக்கியத்தின் பிரதான பொதுப் போக்காகவும் அமைந்தது. இவ்வாறு 1950 ஆம் ஆண்டுகளில் தோன்றிய எழுத்தாளர்களால் தான் ஈழத்துச் சிறுகதைகளில் யதார்த்தம் பூரண வடிவம் பெற்றது. பேச்சு மொழி பிரக்ஞைபூர்வமாகக் கையாளப்பட்டது. உருவஉத்திப் பாிசோதனைகள் இடம் பெற்றன. சிறுகதையின் உள்ளடக்கமும் உருவமும் வளம்பெற்றன.
4

1950 ஆம் ஆண்டுகளின் சிறுகதைப் போக்குகள் 60 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதைக் காணலாம். உண்மையில் 50 களில் அரும்பிய போக்குகள் 60 களில் முதிர்ச்சி அடைந்தன என்று கொள்வதே பொருத்தம். 50 களில் தோன்றிய எழுத்தாளர்கள் பலர் 60 களிலேயே அதிக ஆற்றலுடன் எழுதத் தொடங்கினர். புதிய எழுத்தாளர்கள் பலர் எழுத்துலகில் புகுந்தனர்.

1956இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து இடதுசாாிச் சிந்தனைப் போக்கின் செல்வாக்கு 60 ஆம் ஆண்டுகளில் ஆழமாகவும் பரவலாகவும் ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் இடம் பெறத் தொடங்கிற்று. இதேகாலப் பகுதியில் சர்வதேச ாீதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஏற்பட்ட சித்தாந்தப் பிளவு இலங்கையையும் பாதித்தது. 'சமாதானம் மூலம் சமூகமாற்றம்' என்ற திாிபுவாதக் கருத்தை எதிர்த்து 'புரட்சியின் மூலம் சமூகமாற்றம்' என்ற புரட்சிகரக் கருத்தை முன்வைத்தவர்கள் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தனியாகப் பிாிந்து சென்றனர். முற்போக்கு எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் அவர்களுடன் சேர்ந்தனர். பல்கலைக் கழகங்களில் சோஷலிசப் படிப்பு வட்டங்கள் உருவாகின. 1956க்குப் பின் நடைமுறைக்கு வந்த சுயமொழிக் கல்வியினால் உருவாகிய பட்டதாரி மாணவர்கள் பலர் இவ்வியக்கங்களால் ஈர்க்கப்பட்டனர். அவர்களுள் சிலர் சிறுகதை ஆசிாியர்களாகவும் உருவாகினர். செ. யோகநாதன், யோ.பெனடிக்ற்பாலன், செ.கதிர்காமநாதன், முத்து சிவஞானம் போன்றோர் இவ்வாறு பல்கலைக் கழகத்தில் இருந்து புரட்சிகர இடதுசாாிச் சிந்தனைப்போக்கின் செல்வாக்குடன் வளர்ச்சியடைந்த சிறுகதையாசிாியர்களாவர். செம்பியன் செல்வன், செங்கையாழியான் பவானி ஆழ்வாப்பிள்ளை முதலியோரும் பல்கலைக்கழகத்தில் இருந்து இக்காலப் பகுதியில் உருவாகியவர்களே.மருதூர்க் கொத்தன், மருதூர்க் கனி, சண்முகம் சிவலிங்கம், புலோலியூர் சதாசிவம் போன்ற வேறு சிலரும் 60 களில் சிறுகதைத் துறையை வளப்படுத்தினர்.

ஆரம்பத்தில் சிறுகதைகளே எழுதிய யோகநாதன் பிற்காலத்தில் குறுநாவல்களில் அதிக அக்கறை காட்டியுள்ளார். இவரது யோகநாதன் கதைகள் என்ற நூல் குறிப்பிடத் தகுந்த சிறுகதைத் தொகுப்பு ஆகும். காவியத்தின் மறுபக்கம், ஒளி நமக்கு வேண்டும் ஆகிய குறுநாவல் தொகுப்புகளும் வௌியிட்டுள்ளார். உண்மையில் இவற்றுள் சில சிறுகதைகளாகவே கருதப்பட வேண்டியன. அண்மையில் கண்ணீர் விட்டே வளர்த்தோம் என்ற இவரது சிறுகதைத் தொகுப்பும் வௌிவந்துள்ளது. யோ.பெனடிக்ற் பாலனின் சிறுகதைகள் நூல் உருவம் பெறவில்லை. ஓரே லயக் காம்பராவில் என்ற இவரது கதை மலையகத் தோட்டத் தொழிலாளாின் வாழ்க்கை நொிசலைத் தாக்கமான முறையில் சித்திாிக்கின்றது. இக் கதையே இவரது சொந்தக்காரன் நாவலின் வித்து எனலாம். கருத்துக்களை அழுத்திச் சொல்வதற்குச் சிறுகதையை விட குட்டிக்கதை சிறந்த வடிவம் என்று கருதுவதால் போலும் இவர் பிற்காலத்தில் அதிகமாகக் குட்டிக் கதைகளே எழுதியுள்ளார். இவரது குட்டிக் கதைகள் தனிச்சொத்து என்ற தொகுப்பாக வௌிவந்துள்ளன.

செ. கதிர்காமநாதன் சுயமாக எழுதியது மட்டுமன்றி பிரபல இந்திய முற்போக்கு எழுத்தாளர் கிஷன்-சந்தாின் சில சிறுகதைகளை மொழி பெயர்த்தும் உள்ளார். ஆற்றல் உள்ள சிறுகதைப் படைப்பாளியான இவர் இளம் வயதிலேயே இறந்து போனது இலங்கைச் சிறுகதைத் துறைக்கு ஒரு நஷ்டமேயாகும். இவரது கொட்டும் பனி சிறந்த சிறுகதைத் தொகுப்பு. கிஷன்-சந்தாின் மொழி பெயர்ப்புக் கதையை உள்ளடக்கிய நான் சாக மாட்டேன் என்பதும் குறிப்பிடத் தகுந்த ஒரு நூல் ஆகும்.

செம்பியன் செல்வன், செங்கையாழியான், புலோலியூர் சதாசிவம் ஆகியோர் யாழ்ப்பாணக் கிராமிய மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்ட பல கதைகளைப் படைத்துள்ளனர். செங்கையாழியான் பிற்காலத்தில் நாவல்களிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளார். இவரது கதைகள் செங்கையாழியான் கதைகள் என்ற பெயாில் நூல் உருப் பெற்றுள்ளன. செம்பியன் செல்வனின் அமைதியின் இறகுகள், சதாசிவத்தின் யுகப்பிரவேசம், பவானியின் கடவுளருளும் மனிதரும் ஆகிய நூல்களும் வௌிவந்துள்ளன. மருதூர்க் கொத்தன், மருதூர்க்கனி ஆகியோர் மருதமுனைக் கிராமத்து முஸ்லீம்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் படைத்துள்ளனர். மருதூர்க் கொத்தன் இக்காலப்பகுதியில் தோன்றிய சிறந்த சிறுகதையாசிாியர்களுள் ஒருவராவர். இவரது கதைகள் இன்னும் நூல்உருப் பெறவில்லை. சண்முகம் சிவலிங்கம் மிகக் குறைவாக எழுதி அதிக கவனத்தைக் கவர்ந்த ஒரு படைப்பாளி. இவரது கதைகள் பெரும்பாலும் சுயதாிசன வௌிப்பாடாக உள்ளன. ஈழத்துச் சிறுகதையுலகில் இத்தகைய படைப்புக்கள் மிக அபூர்வமாகும். இவ்வகையில் இவரது மழை, நீக்கம் முதலிய கதைகள் குறிப்பிடத் தக்கன.
5

1970 ஆம் ஆண்டுகளில் மேலும் ஒரு புதிய இளம் தலைமுறையினர் சிறுகதை உலகில் புகுந்தனர். அ. யேசுராசா, குப்ளான் சண்முகம், ஐ.சாந்தன், அ.லெ.முருகபூபதி, திக்வல்லை கமால், எம்.எல்.எம். மன்சூர், டானியல் அன்ரனி, நந்தினி சேவியர், முத்துராசரத்தினம், எஸ்.எல்.எம். ஹனிபா, மண்டூர் அசோகா, சிறிதரன், சட்டநாதன் தெணியான், உமா வரதராசன் முதலியோர் குறிப்பிடத்தகுந்த சமகாலச் சிறுகதையாசிாியர்களாவர். இவர்களிற் சிலாின் படைப்புக்கள் மூலம் இலங்கைத் தமிழ்ச் சிறுகதையின் உருவம், உள்ளடக்கம், மொழி நடை ஆகியவற்றில் சில புதிய போக்குகள் வௌிப்படத் தொடங்கியுள்ளன.

நகரமயமாதலின் அல்லது முதலாளித்துவ சமுதாய முதிர்ச்சியின் அடிப்படையில் ஏற்படும் தனிமனித அக உளைச்சல்களும், அன்னிய மாதலும் (alienation) இக்காலப் பகுதியில் தோன்றிய சில சிறுகதைகளில் சிறப்பாக வௌிப்பாடு பெற்றுள்ளன. யேசுராசாவின் ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது. குப்ளான் சண்முகனின் எல்லைகள், இலுப்பமரமும் இளம்சந்ததியும்; மன்சூாின் முரண்பாடுகள், சிறிதரனின் நிர்வாணம் முதலிய கதைகள் இப்பண்புக்குச் சிறந்த உதாரணங்களாகும். இக்கதைகளில் சமூகத்தோடு, அல்லது வீட்டோடு ஒட்டமுடியாது அன்னியப்பட்டுச் செல்லும் இளைஞர்களைக் காண்கிறோம். இது ஈழத்துச் சிறுகதையின் ஒரு புதிய பாிமாணம் எனலாம்.

மரபுாீதியான சிறுகதை வடிவத்தில் இருந்து வேறுபட்ட கதைகளையும் இவர்களில் சிலர் புனைந்துள்ளனர். சாந்தன் யேசுராசா ஆகியோாின் பல கதைகள் இத்தகையன. அவை பெரும்பாலும் அளவில் சிறிய நினைவுச் சித்திரங்களாக அல்லது அனுபவ வௌிப்பாடாக அமைந்துவிடுகின்றன. தென் இலங்கை முஸ்லீம்களின் வாழ்வும் பேச்சு வழக்கும் இக்காலப் பகுதியிலேயே சிறுகதைகயில் இடம் பெறத் தொடங்கின. திக்வல்லைக் கமால் போன்றோாின் சிறுகதைகள் மூலம் ஒரு புதிய வாழ்க்கைப்புலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகியது. இக்கால எழுத்தாளர்களின் படைப்புக்கள் சில தொகுப்புக்களாகவும் வௌிவந்துள்ளன. யேசுராசாவின் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும், சாந்தனின் ஓரே ஒரு ஊாிலே, சண்முகனின் கோடுகளும் கோலங்களும், முருகபூபதியின் சுமையின் பங்காளிகள், மண்டூர் அசோகாவின் கொன்றைப் பூக்கள் முத்துஇராசரத்தினத்தின் சிலந்தி வயல் என்பன அவற்றுட் சில.

1930 ஆண்டுகளில் தோன்றிய ஈழத்து சிறுகதை சுமார் ஐம்பது ஆண்டுகளாக இங்கு பன்முகப்பட்ட வளர்ச்சி பெற்று வந்திருப்பதை இதுவரை பார்த்தோம். ஆரம்ப காலத்தில் ஈழத்து உணர்வு குறைவாகக் காணப்படினும் 1950 க்குப் பின் பூரணமான தேசியப் பண்பைப் பெற்று இங்கு சிறுகதை இலக்கியம் வளர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான சிறுகதைத் தொகுதிகள் வௌிவந்துள்ளன. அவற்றுள் பதினைந்து இருபது நல்ல தொகுதிகளையேனும் நாம் இனம்காண முடியும். ஜனரஞ்சகமான வியாபாரப் பத்திாிகைகள் இங்கு தோன்றாததாலும், சமூகப்பிரக்ஞை இங்கு ஓர் இலக்கிய இயக்கமாகவே வலுப்பெற்றதனாலும் மலினமான பத்திாிகைக் கதைகளுக்குப் பதிலாக, காத்திரமான விஷய கனமுள்ள கதைகள் இங்கு அதிகம் எழுதப்பட்டன. இது ஈழத்துச் சிறுகதையின் ஒரு சிறப்பம்சம் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக