புதன், 7 செப்டம்பர், 2011

சிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -3


மூன்று நிலைகள்

பூமியிலும், வானத்திலும் உள்ள ஏராளமான இயற்கைக் கூறுகளை, மனிதன் படைக்கின்ற செயற்கைப் பொருள்களை சிறுவர்களுக்கு புரியும் மொழியில் ஒருவர் எழுதலாம். ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளக்கூடியதைத் தான் அப்படி எழுத முடியும். "இளம்பிள்ளைப் பருவத்திலே குழந்தைகளுக்கு அதிகம் படிக்கத் தெரியாது. அந்தப் பிராயத்தில் இளம் குழந்தைகள் தங்கள் கண்களை மலர விழித்து, தங்களைச் சூழ உள்ள அற்புதம் ஒவ்வொன்றையும் வியப்போடு நோக்குகின்றன; களிக்கின்றன; சிற்சில வேளைகளில் மழலைச் சொற்களால் தம் ஐயங்களை வெளியிடுகின்றன. ஓயாமல் கேள்விகளைக் கேட்கின்றன”.(8) இந்த உளவியல் பாங்கு சிறுவர் இலக்கியத்தின் மையப்புள்ளியாக, படைப்பு நெறியாக அமைகின்றன. பாடல்களின் நெறியும் இதுவேயாகும்.

சிறுவர்களுக்கான இலக்கியங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றுள் மூன்று நிலைகள் உள்ளடங்கியுள்ளன.

1.சூழலுக்கு அழைத்துச் செல்லுதல்

2.காட்சிப் படுத்துதல்

3.ஒன்றச் செய்தல்

என்பனவாகும். "குழந்தைகளுக்குச் செவிப்புலன் கூர்மையாக இருப்பது போலவே கட்புலனும் கூர்மை உடையது. எதையும் பார்த்து பார்த்து மகிழும் ஆர்வம் குழந்தைகளுக்கு இயல்பானது. எனவே தான் அடம் பிடித்தழும் குழந்தையிடத்துப் புதுமையான ஒன்றைக் காட்டினால் அது சட்டென அழுகையை நிறுத்திவிடுகிறது".(9) இந்த உளவியல் தன்மையை நன்றாக அறிந்தவர்கள் இவ்விலக்கியப் படைப்பாளர்கள்.

“தவளையார்

கொட்டும் மழையின் சத்தம் கேட்டுக்

கொர் கொர் என்று தவளையார்

எட்டிப் பார்த்து நாக்கை நீட்டி

இன்பம் கொண்டு பாடினார்.


சொட்டும் மழையின் சத்தம்

கேட்டுச் சொகுசுக் காரத் தவளையார்

மட்டில்லாத மகிழ்ச்சி கொண்டே

மாறிமாறிப் பாடினார்

பொட்டுப் பொட்டாய் மழையும் பெய்யப்

பூரிப் பெய்தி தவளையார்

முட்டி மோதி நீரைத் தள்ளி

முகத்தை காட்டி ஓடினார்.” (10)

கவிஞர் செல்ல‌ கணபதி ஒரு இயல்பான சூழலையும் இப்பாடலில் காட்சிப் படுத்தி சிறுவரின் கவனம் அப்பாடலில் இணைந்து செல்லுமாறு இயற்றியுள்ளார்.

பாடல் வகைகளும் படைப்பின் நோக்கமும்

1.பொருளிலிப் பாடல்கள்

ஆங்கில வழியில் கல்விப் பயிலும் மழலையருக்கு ரைம்ஸ் (Rhymes) சொல்வதுபோல பலரும் தமிழில் பாடல்களை வழங்கியுள்ளனர். இதைத் தமிழில் பொருளிலிப் பாடல்கள், செவிலியப் பாடல்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

"வெங்கு, வெங்கு, வெங்கு

வெங்கு ஊதினான் சங்கு

நுங்கு நுங்கு நுங்கு

நுங்கில் எனக்குப் பங்கு," (11)

இந்தப் பொருளற்றப் பாடல் எழுதுவதின் நோக்கம் குழந்தைகளுக்கு பேச்சுக் கற்றுக் கொடுப்பதற்காக எனப்படுகின்றது. குழந்தைகளும் வாய்விட்டுப் பாடுவதால் சொற்களை வேகமாகப் பாடிப் பழகுகின்றனர். இசை நாட்டமும், மற்றவர்களுடன் சேர்ந்துப் பாடுவதால் ஒற்றுமை உணர்ச்சியும் கற்றல் திறனும் உருவாகின்றன.

2. விளையாட்டுப் பாடல்கள்

சிறுவர்களுக்கு உணவைப் போலவே விளையாட்டும். சிறுவர்களின் உடலும் உள்ளமும் விளையாட்டால் வளர்ச்சி அடைவதுடன், கற்பனைத்திறன் ஊக்கம், செயல்பாட்டுத் திறன், முயற்சி, ஆகிய பண்புகளும் வளர்ச்சி அடைகின்றன. பாடல்களைப் பாடிக் கொண்டே விளையாடுவது போன்ற பாடல்கள் சிறுவர்களிடம் வரவேற்பைப் பெறுகின்றன.

“பூம், பூம் என்ற சப்தமுடன்

போகுது மோட்டார் பார் பார்

ஜாம் ஜாம் என்றே அதிலேறிச்

சவாரி செய்வோம் வா வா.” (12)

சிறுவர்கள் சிரித்து, மகிழ்ந்து, விளையாடி, களிப்படைவது இவ்வகைப் பாடல்கள் எழுதுவதின் நோக்கமாகும்.

3. வேடிக்கைப் பாடல்கள்

"பாரதிதாசன் ஐந்து பாடல்களும், அழ.வள்ளியப்பா இருபத்தைந்து பாடல்களும் , தணிகை உலக நாதன் ஏழு பாடல்களும் இவ்வகையில் புனைந்திருக்கக் காணலாம் . இக்கவிஞர்களின் வேடிக்கைப் பாடல்களில் கருவாக அமையும் பொருள்களைப் பின்வருமாறு பகுத்துக் காட்டலாம்.

1. மக்கள், உயிரினங்கள், ஆகியவற்றின் இயல்புகள்

2. குழந்தைகளின் குறும்புத்தனம்

3.எதுகை எழுப்பும் ஓசை நயம்

4.சொற்களின் ஓசையைப் பொருளாகக் கொண்ட புதிர்கள்

5.உயிரினங்கள் தெய்வம் முதலியவற்றின் தோற்றம்" (13) என ஆய்வாளர் தனலக்குமி பகுத்துக் காட்டியுள்ளார். (எ-டு)

"முறுக்கு முறுக்கு முறுக்கு

வாயிலே போட்டு நொறுக்கு

அரக்கு அரக்கு அரக்கு

தீயிலே காட்டி உருக்கு" (14)

இத்தகைய வேடிக்கைப் பாடல்களில் எதுகை எழுப்பும் ஓசை கருவாகத் திகழ்கிறது. ஓசை நயம் என்பது சிறுவர் பாடல்களின் பொதுவானப் படைப்பு நெறியாக அமைகின்றது.

4. கதைப்பாடல்கள்

‍ சிறுவர்கள் கதைகளை மிகவும் விரும்பிக் கேட்கின்றனர். பாடல் வடிவில் கதைகளை வழங்குவது ஒரு வகையான உத்தி முறையாக பின்பற்றுப்படுகின்றது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ‘ஊக்கமுள்ள காகம்’, ‘நெற்பனையும் எலியும்’, ‘அப்பந் திருடின எலி’, ‘ஒளவையும் இடைச் சிறுவனும்’ ஆகிய இவருடைய கதைப் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பாடநூல்களிலும் இவை மிகுதியாக இடம்பெற்றன. அழ.வள்ளியப்பா, பெரியசாமித் தூரன், மயிலை சிவமுத்து, நாகமுத்தையா, அ.செல்வகணபதி, தணிகை உலகநாதன், தமிழ் ஒளி, முரசு நெடுமாறன், பூவண்ணன், குழ.கதிரேசன், தமிழ் முடி, மு.வை.அரவிந்தன், இரா.தண்டாயுதம், ஆகியோர் இத்தகையப் பாடல்களைப் புனைந்துள்ள‌னர். 'எலி கடித்த பூனை' எனும் குழ.கதிரேசன் எழுதிய பாடலை சுட்டிக் காட்டலாம். பூனைக்கும் எலிக்கும் எப்போதும் பகைதான். ஆனால் இக்கவிதையில் எலிகள் பார்த்துப் பயந்த பூனை பிளாஸ்டிக் பூனை. அதை அறிந்து கொண்டபின் எலிகளுக்குக் கொண்டாட்டம் ஏற்படுகிறது. பூனையைக் கடித்து குதறிவிடுகின்றன. எலியைத் துரத்தப் பூனையைக் கொண்டு வந்த வேணு என்ற சிறுவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

"கடித்துக் கடித்துப் பூனையைக்

கண்ட துண்டம் செய்தன

விடிந்து வந்து பார்த்ததும்

வேணு அதிர்ச்சி அடைந்தனன்

எலியைத் துரத்தப் பூனையாய்

இருக்கு தென்றே வருந்தினான்"(15)

என்று ஒரு சிறுகதையை இப்பாடலில் வழங்கியுள்ளதை இங்கு சுட்டிக் காட்டலாம். இத்தகையப் பாடலை சிறுவர்கள் விரும்பிப் படிப்பர் என்பதில் அய்யமில்லை.

5. நீதிப் பாடல்கள்

நீதிகளை நேரடியாகச் சுட்டிக் காட்டாமல் இலைமறைக் காய்போல் அமைவது இப்பாடல்களின் முறைமையாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதை நினைவில் கொண்டு சிறுவயது முதலே பாடல்களின் வழியாக நீதி நெறிகளை எடுத்துக் கூறுவது இதன் அடிப்படை நோக்கமாகும். மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டுவது நீதி இலக்கியத்தின் நோக்கமாகும். ஆகையால் சிறுவர்களுக்கு வழங்கும் பாடல்களில் மிகுதியாக இடம் பெறுவது நீதி புகட்டும் பாடல்களாகும்.

" உதவி என்று வந்தொருவன்

உன்னைக் கெஞ்சி நிற்பானேல்

அதனைச் செய்தல் அறமாகும்

அன்பை வள‌ர்க்கும் நெறியாகும்." (16)

என்று நீதிகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி ஒரு பாடலிலோ அல்ல‌து பல பாடல்களை வழங்குவதில் பல படைப்பாளிகள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

6. விடுகதைப் பாடல்கள்

சிறுவர் பாடல்களில் விடுகதை உத்தி முறையைக் கையாண்டு அவர்களின் சிந்தனைக்குத் தூண்டுகோலாக, புதிர்களை விடைதேடும் முயற்சிக்கு ஒரு பயிற்சியாகவும் படைப்பாளிகள் இம்முறையைக் கையாண்டுள்ளனர்.

அழ.வள்ளியப்பா ‘அந்த மிருகம்'’ அதுதான்.... போன்ற தலைப்புகளில் சில விடுகதைகளையும், 'வெளிநாட்டு விடுகதைகள்' என்ற நூலையும் குழந்தைகளுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"மூக்கு வெளுத்திருக்கும்

முட்டிக்கால் தட்டிடுமாம்;

காதுமே நீண்டிடுமாம்;

'காள்கா ளெ’ன்று கத்திடுமாம்" (17)

என்று புதிர் போட்டு அதுதான் க...ழு....தை என்று விடையும் குறிப்பிட்டுள்ளார். (குழந்தைக் கவிஞரின் இலக்கியத் திறன்.ப.41)

"என்னிடம் ஒரு தாள் உண்டு;

மடிக்க முடியாது.

ஏராள‌மாய்ப் பணம் உண்டு

எண்ணமுடியாது.

கண்ணைக் கவரும் ஆப்பிள் உண்டு;

கடிக்கமுடியாது.

பளபளக்கும் வைரம் உண்டு;

பார்க்க முடியாது" (18)

விடை: வானம், நட்சத்திரம்.

என்ற விடுகதைப் பாடல் சிறுவர்களுக்கு விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும், சிந்திக்கத் தூண்டுவதாக இருப்பதைக் காட்டுவதைச் சான்றாகக் கொள்ளலாம்.

7. வினாவிடைப் பாடல்கள்

‍ மழலையர், சிறுவர் இரு பிரிவினருமே அது என்ன? இது என்ன? என்று எதையும் கேள்வி கேட்டு அவற்றைப்பற்றி அறிவதில் ஆர்வமுடையர்கள். அவர்களின் இவ்வியல்பை ஒரு உத்தி முறையாகக் கொண்டு வினா விடைப் பாடல்களை கவிஞர்கள் வழங்கியுள்ளனர்.

"வண்ணக் கிளியே, வீடெங்கே?

மரத்துப் பொந்தே என்வீடு.

தூக்கணாங்குருவி, வீடெங்கே?

தொங்குதுமரத்தில் என் வீடு" (19)



"மண்ணுக்குள்ளே மண்புழுவே

என்ன செய்கிறாய்? நான்

மண்ணைக் கிளறி மரம் வளர

உதவி செய்கிறேன்" (20)

இவ்வினாவிடைப் பாடல்கள் புதிய சொற்களையும், அறிவியல் செய்திகளையும், கவித்துவ முறைகளையும், எளிமையாக அறிவதற்கு ஏற்றவகையில் இத்தகையப் பாடல்களை கவிஞர்கள் இயற்றியுள்ளனர்.

8.வரலாற்றுப் பாடல்கள்

சிறுவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பெருமைக்குரிய பெரியோரது வாழ்க்கை வரலாற்றை பாடல்கள் மூலம் எடுத்துக் காட்டுவது இவ்விலக்கிய வரிசையில் குறிப்பிடத் தக்கதாகும். அரிய செயல்களைச் செய்து மனித சமூகத்திற்கு தொண்டாற்றி வழிகாட்டியவர்களை இப்பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டுவதால், தாமும் அத்தகைய பாதையை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் முயற்சியே இத்தகைய பாடல்கள் எழுதப்படுவதின் நோக்கமாக அமைகின்றது.



நேருவின் இளமைக் கால நிகழ்ச்சிகளையும், நேரு குழந்தைகளோடு தொடர்பு கொண்ட செய்திகளையும் 'நேரு தந்த பொம்மை' என்ற நூலில் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா வழங்கியுள்ளார்.

"அருமை நேரு பிறந்தது

அலகா பாத்து நகரிலே

இளைஞர் நேரு படித்தது

இங்கிலாந்து நாட்டிலே

தீரர் நேரு வாழ்ந்த்து

தில்லை நகரம் தன்னிலே

இன்று நேரு வாழ்வது

எங்கள் பிஞ்சு நெஞசிலே" (21)

என்று இனிய சந்தத்துடன் முதல் பாடல் அமைகின்றது. வாழ்க்கை வரலாற்றை, எளிய நடையில் சிறு சிறு தொடர்களில் அமைத்து எழுதுவது கடினமானப் பணியாகும். ஆனால் படைப்பாளி, சிறுவர்களின் புரிந்து கொள்ளக்கூடிய சொற்களைக் கையாண்டு அவற்றைப் படைத்துள்ளார்.

9.அறிவியல் பாடல்கள்

குழந்தைகள் தம் இளமை முதலே அறிவியல் அறிவு பெற்று வளர்வார்களே யானால் நாட்டைச் செழிப்பாக்கும் அரிய கண்டுபிடிப்புகளைச் செய்வதில் ஊக்கத்துடன் ஈடுபடுவர் என்பது படைப்பின் நோக்கமாகும். பாடல்களில் அறிவியல் கூறுவது கடினமானது. ஆனால் சிறப்பானது. அறிவியல் வளர வளரத் தற்காலத்தில் அறிவியல் செய்திகளும், கண்டுபிடிப்புகளும் கருவிகளும் இப்பாடல்களில் இடம் பெறுகின்றன. ஒரு காலத்தில் மிதிவண்டி, மோட்டார் வண்டி, இரயில் வண்டி என்ற போக்குவரத்து வாகனங்கள் மிகுதியாக இடம் பெற்றிருந்தன. தற்காலத்தில் சிறுவர்களின் இயல்புக் கேற்றவாறு அறிவியற் செய்திகளை எழுத்தாளர்கள் வழங்குகின்றனர்.

அறிவியல் கருத்துகளைக் குழந்தைகளின் மொழியில் எளிமையான நடையில் எழுதி சிறுவர் இலக்கியத்திற்கு செம்மை சேர்த்த எழுத்தாள‌ர்கள் அதற்காகப் பல பரிசுகளையும் பெற்றுள்ளனர்.

1 கருத்து: