வெள்ளி, 16 ஜூலை, 2010

ஆட்சித்துறையில் தமிழ் மொழிபெயர்ப்பு -2 - முனைவர்.மு.வளர்மதி

தற்காலத்தில் ஆட்சிமுறை பல்வேறு துறைகளாகப் பல்கிப் பெருகி விரிவடைந்துள்ளதால் ஆட்சித்துறை மொழிபெயர்ப்பில் ஈடுபடுகின்ற‌ மொழிபெயர்ப்பாளருக்கு மேலும் மேலும் புதிய புதிய சொற்கள் தேவைப்படுகின்றன. ஆகையால் இதனை நிறைவு செய்து கொள்ளும் வகையில் பேச்சு வழக்குச் சொற்கள், இலக்கிய வழக்குச் சொற்கள், கல்வெட்டில் உள்ள சொற்கள், புதிய சொல்லாக்கம் என்ற வழிமுறைகளில் சொற்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று கருதி அவ்வாறு தமிழில் பல நூறு சொற்களை அரசுப் பணிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

‘Department’ என்ற சொல் 'இலாகா' என்று வழங்கி வந்தனர். ஆட்சித்துறையில் தமிழ் என்னும் திட்டம் செயல் வடிவம் பெறும் நிலையில் இச்சொல் துறை என்று இடம் பெற்றது. ‘Pension’ என்ற சொல் அப்படியே வழங்கப்பட்டது. பின்னரே 'ஓய்வூதியம்' என வழங்கப்பட்டது. 'Salary ' என்ற சொல் சம்பளம் என்று வழங்கும் நிலை மாறி 'ஊதிய‌ம்' என‌ப்ப‌ட்ட‌து. இவ்வாறு ஆட்சித் துறையில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் சொற்க‌ள் உரிய‌ த‌மிழ்ச் சொற்கள் இடம் பெறும் போக்கு உருவாகிய‌‌து.
  1. House rent allowance வீட்டு வாடகைப்படி
  2. Conveyance allowance வண்டிப்படி
  3. Traveling allowance - பயணப்படி
  4. Daily allowance --தினப்படி
  5. Fixed Traveling allowance -பதிவானப் பயணப்படி
ஆட்சித்துறையில் பயன்படுத்தப்படும் இதுபோன்ற கலைச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்கள் வழங்கப்பட்டன. 1. Assistant 2. Deputy 3. Joint 4. Vice. இந்நான்கையும் தமிழில் எழுதும் பொழுது துணை என்ற ஒரே சொல்லைப் பயன்படுத்துவது பெருவழக்காக இருந்து வந்தது.
1. Assistant Director ---‍‍ உதவி இயக்குநர்
2. Deputy Collector ---‍ துணை ஆட்சியர் ‍
3. Joint Secretary ‍‍‍ --- கூட்டுச் செயலர்
4. Vice Chairman ----‍ மாற்றாள் தலைவர்
ஒரே பொருளைக் குறிக்கும் இத்தகைய சொற்கள் அந்தந்த இடத்திற்கும் துறைக்கும் ஏற்றவாறு பயன்படுத்தப்படும் வகையில் மொழிபெயர்ப்பில் வழங்கப்பட்டன. இதைப்போன்றே 1. Board 2.Council 3. Corporation 4. Assembly 5. Parliament ‍‍ போன்ற சொற்கள் பின்வருமாறு இடம் பெற்றுள்ளன.
1. Panchayat Board ---‍‍ ஊர்மன்றம்/ ஊராட்சிமன்றம்
2. Municipal Council ---‍‍‍ நகரமன்றம்
3. Madras Corporation ‍‍‍ ---சென்னை மாநகராட்சி
4. State Assembly ‍‍‍ --- மாநிலச் சட்டமன்றம்
5. Council of the State ‍‍‍ ---அரசு மன்றம்
6. Parliament --- ‍‍‍‍‍‍நாடாளுமன்றம்
ஒரு துறையில் வழங்கப்படும் ஒரு நெறிப்பட்ட இத்தகைய சொற்கள் ஒரே சொல்லில் குறிப்பிடாமல் ஏற்ற சொற்கள் வழங்கும் போது உரிய பொருளோடு ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை அறிய முடிகிறது.
பழம்படி, ‘இசைந்த விலை, ‘ஆவணம், ‘ஆவணக்களரி, ‘பெருவழி, ‘இறையிலி நிலம் ஆகிய கல்வெட்டிலிருந்து பெறப்பட்ட சொற்களைத் தற்காலத்தில் பயன்படுத்தி வருவதைக் காண‌லாம்.
சில சொற்றொடர்கள் மொழிபெயர்ப்பில் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைச் சில சான்றுகள் மூலம் அறியலாம்.

1
It has not seen the light of the day
அந்தப் புகார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
2
Interested testimony
தன்னலம் பேணும் சாட்சியம்/ பற்றுள்ள சாட்சியம்
3
Got the relief without prejudice
நிவாரணத் தொகை பெற்றுக் கொண்டவர் அப்போது அதுபற்றி எவ்விதக் க‌ருத்து முர‌ண்பா‌டும் தெரிவிக்க‌வில்லை
4
Untoward incident
விரும்ப‌த்தகாத‌ நிக‌ழ்ச்சி
இவை பொருளுண‌ர்ந்து அத‌ற்கேற்ற‌வாறு த‌மிழில் வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். மூல‌த்தில் உள்ள‌தை உண‌ர்ந்த‌வாறு பெய‌ர்த்த‌ல் -‍ இதை contextual expressions and meaning என ஆங்கில‌த்தில் வ‌ழங்குகிறோம். இது போன்று பொருள‌றிந்து மொழிபெய‌ர்க்கும் த‌ன்மை ஆட்சித்துறை மொழிபெய‌ர்ப்பில் பின்பற்ற‌க் கூடிய‌ ஒரு வ‌ழிமுறையாக‌வும் உள்ள‌து. (-டு)
“The land reforms policy over the successive plans aimed at removing such impediments to agricultural development as arisen from agrarian structure inherited from the past and elimination of exploitation and social injustice within the agrarian system so as to ensure equality of tenurials status and opportunity to all ”(3)
இதன் தமிழாக்கம் பின்வருமாறு:
கடந்த பல ஐந்தாண்டுத் திட்டங்களின் போது தொடர்ச்சியாக அரசு மேற்கொண்டிருந்த நிலச் சீர்த்திருத்தக் கொள்கை பன்னெடுங்காலமாக வழி வழி வந்துள்ள நமது வேளாண்மை சமுதாய கட்டமைப்புகளிலிருந்து தோன்றக்கூடிய வேளாண்மை வளர்ச்சிக்கு எதிரானத் தடைகளை அகற்றுவதையும் நில குத்தகை உரிமையில் சம தகுதி நிலை வழங்குவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குதல் ஆகியவற்றிற்கு உறுதி செய்யும் வகையில் வேளாண்மை அமைப்பினுள் காணப்படும் சுரண்டலையும் சமூக அநீதியையும் ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டது."(4)
ஆட்சித் துறையில் தமிழின் மொழியின் இயல்புடன் இத்தகைய மொழிபெயர்ப்புகள் இடம் பெறுகின்றன என்பதை அறியலாம். ஆட்சிச் சொல்லகராதிகள் இப்பணிக்கு உறுதுணையாக உள்ளன. ஆட்சித் துறையின் ஒரு பெரும் பகுதியாக அமைவது சட்டத்துறை. சட்டத் தமிழில் அகராதியை தயாரிக்கும் ப‌ணி அர‌சு சார்பாக‌ 1957 ஆம் ஆண்டு ந‌வ‌ம்ப‌ர்த் திங்க‌ள் தொட‌ங்கி இன்று வ‌ரை ந‌ட‌ந்து வ‌ருகின்ற‌ பெரும் ப‌ணியாகும். ச‌ட்ட‌த் த‌மிழ், ஆட்சித் த‌மிழ், அறிவிய‌ல் த‌மிழ் என்று மூன்று துறைக‌ளில் த‌மிழ் கால‌த் தேவைக்கேற்ப‌ வ‌ள‌ர்ச்சியுற்று வ‌ருகின்றன‌. தற்கால‌த்தில் ஆட்சிமொழிக் கென‌த் தனியே (1996) அமைச்ச‌க‌ம் உருவான‌ பின்ன‌ர் கோப்புகள் மிகுதியாகத் தமிழில் இடம்பெறுகின்றன. பலநேர்வுகளில் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கொண்டு வரும்போது த‌மிழ்ச் சூழ‌லுக்குப் புதுப் பொருள் கிடைக்கின்ற‌ அனுப‌வ‌த்தையும் இப்ப‌ணியில் ஈடுப‌டுவோர் பெறுகின்ற‌ன‌ர்.
"1968 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் வெள்ளோட்டப் பணியாக ஆங்கிலச் சொற்களிலிருந்து மொழிபெயர்த்து சட்டச் சொல் அகராதி வெளியானது.".(5) ச‌ட்ட‌த்துறை அக‌ராதி த‌யாரிப்பில் ஈடுப‌டுவோர், " தூய‌ த‌மிழ், க‌ல‌ப்புத் த‌மிழ், எளிய‌ த‌மிழ் எனும் மொழிநடைகள் சட்டத் தமிழிலும் புகுந்து கணிசமான மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ஆனால் சட்டத்துறை உட்பட பல துறைகளில் புதிய புதிய தமிழ் நூல்கள் வெளிவந்துள்ளவற்றை அரசுப் பணியாளர்கள், மாணவர்கள், அலுவலர்கள் இன்னும் போதிய அள்வில் ஊன்றிப் படிக்கும் வாய்ப்பில்லை. அலுவலர்களின் ஆட்சித் தமிழின் தரம் இன்னும் வளர்ந்தாக வேண்டும். இதற்காகத் தமிழ் வளர்ச்சித் துறை, ஆட்சித் தமிழ் சிறப்புரை நிகழ்த்துகிறது. சட்டம் சொல்லும் கருத்தினில் பல பொருளிருக்கும். சட்டத் துறையிலும் தற்போது கணிசமான அளவில் தமிழ் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது"(6) என்ற கருத்தினை வழங்கியுள்ளனர்.
தமிழில் ஆட்சிச் சொற்கள்' எனும் தலைப்பில் ஆய்வு செய்துள்ள சி.செல்வராஜ் தமிழில் ஆட்சிச் சொற்களுக்கான ஆராய்ச்சி மூலங்கள் எனத் தொட‍‍ங்கி, பண்டைய சங்க, சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களிலுள்ள ஆட்சிச் சொற்கள், பல்லவ, பிற்காலச் சோழ, பாண்டிய சேரர் காலத்து ஆட்சிச் சொற்கள், முகலாயர் காலத்து ஆட்சிச் சொற்கள், விடுதலைக்குப் பின் ஆட்சிச் சொற்கள் என்று பகுத்து ஆராய்ந்துள்ளார். இதில் ஆங்கிலத்தில் மிக நுணுக்கமாக வழங்கப்படும் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை வழ்ங்க முடியும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
அசல் (மூலம், முதல்), அமுல் (செயல்படுத்துதல்), கஜானா (கருவூலம்), கிஸ்து (ஆண்டு நிலத்தீர்வைத் தவணை), ஜாமீன் (பிணையம்), ஜப்தி (கைப்பற்றுதல்), ஜவாப் (மறுமொழி) போன்ற பல அரபுச் சொற்கள்/ குமாஸ்தா (எழுத்தர்), சராசரி (நிரல்), பந்தோபஸ்து (காப்புச் செய்தல்), பினாமி (இரவல் பெயர்), வாபஸ் (மீளாப்பெறல்), தஸ்தாவேஜி (ஆவணம்), மனுதாரர்‍ (விண்ணப்பதாரர்) போன்ற பாரசீக மொழிச் சொற்கள்/ ஆஸாமி (ஆள்), சாயா (தேநீர்), டேரா (கூடாரம்), டோபிகானா (வெளுப்பகம்), பைஸா (காசு), மேஸ்திரி (மேற்பார்வையாளர்) போன்ற பல இந்துஸ்தானிச் சொற்கள்/ சர்க்கார் (அரசு), ஜாபிதா (பட்டியல்), ராஜிநாமா (பதவி விலகல்), பாக்கி (நிலுவை) மாகாண‌ம் (மாநில‌ம்) போன்ற‌ உருது மொழிச் சொற்க‌ள், அப்ப‌ட்ட‌ம் (வெளிப்ப‌டையான‌து), எக்க‌ச்ச‌க்க‌ம் (மிகுதி), சந்தடி (இரைச்சல்), ஒட்டாரம் (பிடிவாதம்), தொந்தரவு (தொல்லை), சோலி (வேலை), பண்டிகை (பெருநாள்), மச்சு (மேல்தளம்), போன்ற பல தெலுங்குச் சொற்கள்/ அக்க‌ரை (க‌வ‌ன‌ம்), அக்கடா (வாளா), எக‌த்தாள‌ம் (ப‌ரிகாச‌ம்‍), குட்டு (மறைபொருள், மறையம், மந்தனம்) போன்ற‌ க‌ன்ன‌ட‌ச் சொற்கள்/ வில்ல‌ங்க‌ம் (க‌ல‌ங்க‌ம்) ரா‌த்ரீ (இர‌வு‍) போன்ற மராத்தி சொற்கள்/ அக்கிராச‌னாதிப‌தி (அவைத் த‌லைவ‌ர்), அங்கீகார‌ம் (உட‌ன்பாடு), அதிகாரி (த‌லைவ‌ன், முத‌ல்வ‌ன்)‍ போன்ற‌ ச‌ம்ஸ்கிருத‌ச்சொற்க‌ள் போன்று‌ ஏராள‌மான‌ச் சொற‌கள் த‌மிழில் பேச்சு வ‌ழ‌க்கிலும், ஆட்சி முறைக‌ளிலும் இட‌ம் பெற்றுள்ள‌தைச் சுட்டி‌க் காட்டி அத‌ற்கிணையானத்‌ த‌மிழ்ச் சொற்க‌ள் த‌மிழில் ஆட்சித் துறையில் ப‌ய‌ன்ப‌ட்டு வருவ‌தையும் சிக்கல்கள், தீர்வுகள் சிலவும் சுட்டிக் காட்டியுள்ளார். இன்றும் ஆட்சியில் தொட‌ர்ந்து இருந்து வ‌ரும் பிற‌ மொழிச் சொற்க‌ளையும் எடுத்துக் காட்டியுள்ளார். பிறமொழிச் சொற்களுக்கு இணையானத் தமிழ் சொற்கள் வழங்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ், பல்வேறு புதுப்புது வளர்ச்சித் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதால் ஆட்சி முறையிலும் அலுவலக மேலாண்மையிலும் புதிய ஆங்கிலச்சொற்கள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளன. அதற்கேற்ற தமிழ்ச் சொற்கள் உருவாக்கும் தேவையும் மிகுதியாக உள்ளது. குறிப்பாக சட்டத்துறையில் மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயச் சூழலால் 'சட்டத் தமிழ்' என்றே ஒரு கலைச்சொல் உருவாகியுள்ளதைக் காணலாம்.
சட்ட மொழிபெயர்ப்பை பொறுத்தமட்டில் செய்தியும் அதன் அமைப்பும் மிகவும் முக்கியமானதாகக் கொள்ளப்படுகிறது. மூலத்தில் உள்ள‌ சட்டத் தொடரை பெயர்ப்பு மொழியில் நுணுக்கமாக, தெளிவாக, பொருள் மாறுபடாமல், வெளிப்படுத்த வேண்டும். சட்டத் தொடரில் எதையும் சேர்க்கவோ, தவிர்க்கவோ அல்லது விலக்கவோ கூடாது என்பது முக்கியமானதாக‌ க‌ருத‌ப்ப‌டுகின்றது. ஒரு ஆங்கில‌ ச‌ட்டச்‌ சொற்றொட‌ர் இர‌ண்டு அல்ல‌து மூன்று விள‌க்க‌ங்க‌ளை உடைய‌தாக‌ இருந்தால் மொழிபெய‌ர்ப்பிலும் அதே போன்ற‌ கருத்துடைய‌ சொற்றொட‌ரை வ‌ழ‌ங்க‌ வேன்டும். வேறுப‌ட்ட‌ விள‌க்க‌ங்க‌ள் அளிக்க‌ எவ்வித‌ முய‌ற்சியையும் எடுக்க‌க் கூடாது. மொழிபெய‌ர்ப்பில் பொருள் ம‌ற்றும் உண‌ர்வின் ஒவ்வொரு சாய‌லையும் மாற்றிக் கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும், என்பது ஒரு நெறியாகப் பின்பற்றப்படுகிறது.
(-டு) Alternative - இர‌ண்டிலொன்றாக‌
Act - சட்டம்
Abscond - ச‌ட்ட‌த்திற்கு தப்பி ஓடு
Adultery - ம‌ணமுறை பிற‌ழ்ந்த‌ புண‌ர்ச்சி
Bill - சட்ட முன்வரைவு
Bye-law துணை விதி
Civil surgeon - குடியிய‌ல் அறுவை ம‌ருத்துவ‌ர்
Code - தொகுப்புச் ச‌ட்ட‌ம்
Custom - வழக்காறு
Enactment - இய‌ற்றுச் ச‌ட்ட‌ம்
Habitual Offender - வாடிக்கைக் குற்ற‌வாளி
Law சட்ட நெறி
Notification - அறிவிக்கை
Ordinance --அவ‌ச‌ர‌ச் ச‌ட்ட‌ம்
Refreshing one’s - நினைவுப‌டுத்து
Regulation - ஒழுங்குமுறை விதி
Rule - விதி
Statute - செய்ச‌ட்ட‌ம்
சில ஆங்கிலச் சொற்களுக்கு இவ்வாறு பொருள் வழங்கும் முறையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழிக்கே உரிய சில தனி சிறப்பான சட்ட கருதுகோள்கள் மொழி பெயர்ப்புக்குத் தடையாக உள்ளது. இவ்வகையில் புதிய சொற்கள் உருவாக்குதல் தேவையாகின்றது".
"Legal language எனப்படும் சட்ட மொழி வளர்ச்சிக்காக நம் அரசு ஆவன செய்து வருகின்றது என்பதை நாம் நன்கறிவோம். சட்டமொழி ஓர் அறிவியல் நுட்பமானது. வழக்குரைஞர்களும், நீதிபதிகளும் சட்டத்துறை வல்லுநர்கள் மட்டுமே தெரிந்துள்ள பல சொற்களையுடையது. சட்ட கருத்துக்களைக்கூறும் பல அரிய சொற்களஞ்சியங்கள் இன்று ஆங்கிலத்தில் கிடைப்பது போல் தமிழில் போதிய அளவில் இல்லை. இக்குறை தீர மாநில ஆட்சிமொழி ஆணையம் பல காலம் அரிய சட்டச் சொல் அகராதிகளை வெளியிட்டு அருந்தொண்டாற்றியுள்ளது. சட்டத் தமிழ் வரைவு செய்வத்ற்கு இவை அடிப்படையாக உள்ளன."(7)
(-டு)
Minority - இளமை
Majority - முதிர்மை
Proposal - தெரிப்புரை
Disfigurement - உருக்குலைத்தல்
Payment - செலுத்தம்
Stipulation in a contract - ஒப்பந்தத்தில் ஒரு உடன்படுகை
Probate - உயில் மெய்ப்பிதழ்
எனும் சொற்கள் சட்ட மொழிபெயர்ப்பில் புதுமையாக்கமாக இடம் பெறுவதைக் காணமுடிகிறது.
த‌மிழ‌க‌ அர‌சின் இசைவுட‌ன் சென்னை உய‌ர்நீதிம‌ன்ற‌ம் வெளியிடும் திங்க‌ளிதழான‌ தீர்ப்புத் திர‌ட்டு இத‌ழிலும் ஆங்கில‌த்தில் உள்ள‌ தீர்ப்புகளில் கையாள‌ப்ப‌ட்டிருக்கு ஆங்கில‌ச் ச‌ட்ட‌ச் சொற்க‌ளின் நேரிணையான‌ த‌மிழுருவ‌ம் இட‌ம் பெற்று வ‌ருகிற‌து.


1
Authoritarianism
அதிகார‌ ஆதிக்க‌ம்; ஆட்சி ஆதிக்க‌ம்; சுத‌ந்திர‌த்தை அட‌க்கும் ஆதிக்க‌ம்.
2
Solemnly
சிற‌ப்புட‌ன், ம‌ன‌ப்பூர்வ‌மாக‌, வினைமையுட‌ன், ம‌திப்பார்வ‌த்துட‌ன், அச்ச‌ அமைதியுட‌ன், வீறார்ந்த‌ பெருமித‌த்துட‌ன்
3
Stuck down (Law)
அடித்து அக‌ற்ற‌ப்ப‌ட்ட‌து (ச‌ட்ட‌ம்)

இவ்வாறு தீர்ப்புக‌ளில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் த‌மிழாக்க‌ம் செய்ய‌ப்ப‌டுகின்ற‌ சொற்க‌ளை வெளியிட்டு அறிமுக‌ப்ப‌டுத்தும் முய‌ற்சி ந‌டைபெற்று வ‌ருகிற‌து.
ச‌ட்ட‌ மொழிபெய‌ர்ப்பு எவ்வாறு அமைகிற‌து என்ப‌தை ஒரு எடுத்துக்காட்டு மூல‌ம் அறிய‌லாம். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 149 பின்வருமாறு:
“149. Every member of unlawful assembly guilty of offence committed in prosecution of common object: -
If an offence is committed by any member of an unlawful assembly in prosecution of the common object of that assembly or such as the members of that assembly know to be likely to be committed in prosecution of that object, every person who at the time of the committing of that offence, is a member of the same assembly is guilty of that offence."(8)
இதன் தமிழாக்கம் பின்வருமாறு:
“149.பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுகையில் செய்யப்பட்ட குற்றத்திற்கு சட்டவிரோதமான கும்பலின் உறுப்பினர் ஒவ்வொருவரும் குற்றவாளியாவார்:-
சட்ட விரோதக் கும்பல ஒன்றின் உறுப்பினர் எவராலேனும், அந்தக் கும்பலின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுகையில் ஒரு குற்றம் அநேகமாகச் செய்யப்படுமானால் அல்லது அந்த நோக்கத்தை நிறைவேற்றுகையில் செய்யப்படக் கூடுமென்று அந்தக் கும்பலின் உறுப்பினர்கள் அறிந்திருந்த தன்மையதான ஒரு குற்றம் செய்யப்படுமானால் அந்தக் குற்றம் செய்யப்படும் காலத்தில் அதே கும்பலின் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொருவரும் அக்குற்றத்தைச் செய்தவராவார்"(9)
இவ்வாறு சட்ட மொழிபெயர்ப்பு என்பது ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ள சொற்கள் குறிக்கும் பொருளை உரிய முறையில் கூட்டுதலோ அல்லது குறைத்தலோ இன்றி தமிழில் இடம் பெற்று வருவதைக் காணலாம்.
இதைப்போன்றே அரசு வெளியிடுகின்ற ஆணைகளும் இடம் பெறுகின்றன என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் அறியலாம். 02.01.2009 தேதியிட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(சா‍-மெ.1) துறையின் அரசாணை (நிலை) எண்.1 இன் ஒரு பகுதி எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
“Based on the opinion given by the Advocate General of Tamil Nadu and Additional Advocate General, High Court of Madras the Government have issued favourable orders in certain cases, considering the individuals born to Christian Adi Dravidar parents converted to the Hinduism at a later date and accepted by their caste people, are entitle for the privileges conferred under the Constitution of India and therefore the Government have issued orders to them for appointment against the Schedule Caste Quota, in the recruitment made by the Tamil Nadu Public Service Commission.”(10)
இதன் தமிழாக்கம் பின்வருமாறு:
ஆதிதிராவிடர் கிருத்துவ பெற்றோர்களுக்குப் பிறந்தோர், பின்னாளில் இந்துவாக மதம் மாறினால் அவர்களுடைய இனமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் இன மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை துய்க்கத் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்கின்ற அடிப்படையில், கிருத்துவ பெற்றோர்களுக்கு பிறந்த சிலருக்கு(Born Christian), அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் கருத்துரையின் பேரில் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக, ஆதிதிராவிடர்(Schedule Caste) மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், பணி நியமனம் செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.”(11)
இவ்வாறு அரசு ஆணைகளும் ஆங்கிலத்திலும் தமிழிலும் இடம்பெறும் வகையில் தற்காலத்தில் வெவ்வேறு தளங்களில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவைஇ நேர்பெயர்ப்பு என்றளவில் பொருள் பெயர்ப்பாக இடம் பெறுவதென்பது ஆட்சித் துறையில் இடம் பெறுகின்ற வழி முறையாகும் என்பதை மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் மூலம் அறியலாம்.
"அரசுத்துறைகளிலெல்லாம் தமிழைப் பயன்படுத்த எல்லோரும் உருதுணையாக இருக்க வேன்டும்.... தமிழ் நம் இரத்தத்தோடு இரத்தமாகக் கலந்துவிட்ட மொழி. நாம்தான் அதை மறந்திருந்தோமே தவிரத் தமிழ் நம்மை மறக்கவில்லை"(12) என பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து அரசு அலுவலகர்களிடையே ஆற்றிய கருத்துரையை மன‌த்திற் கொண்டு ஆட்சி மொழித் திட்டத்தைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டியது அரசு அலுவலர்-‍ பணியாளர்தம் கடமையாகும். பேரறிஞர் அண்ணாவின் கனவு நனவாக நம்பிக்கையுடன் உழைப்போம்; உயர்வோம்.
அடிக்குறிப்புகள்
1. Translation-Theory and application, (Ed) M.Valarmathi, N.Murugaiyan, Syed Abdur Raheem, International Institute of Tamil Studies, Chennai 113, P.75
2.ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் மொழிபெயப்பின் பங்கு,(கட்) த.பெரியாண்டவன், மொழிபெயர்ப்பியல் தொடர் சொற்பொழிவு-3, நாள்.24.10.1990, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை- 113, ப. 5-6.
3. Translation-Theory and application, (Ed) M.Valarmathi, N.Murugaiyan, Syed Abdur Raheem, International Institute of Tamil Studies, Chennai 113, P.83
4. Ibid, P.84
5. ஆட்சிமொழியும் மொழிபெயர்ப்பும், வீ.சந்திரன், பாரிநிலையம், சென்னை-14, டிச. 1993, .173-174
6. www.tamilvu.org, தமிழும் அகராதியும், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், ப.4.
7. ஆட்சிமொழியும் மொழிபெயர்ப்பும், வீ.சந்திரன், பாரிநிலையம், சென்னை-14, டிச. 1993, . 76-77
8. Section 149, Indian Penal code, 1960
9. தீர்ப்புத் திரட்டு, ஜன‍பிப், 1995, தலைமைப் பதிப்பாசிரியர், உயர்நீதி மன்றம், சென்னை ‍ 104, ப.15.
10. Adhi Dravidar and Tribal Welfare (CV-1) Department, G.O.Ms. No. 1 dated 02.01.2009, p.1.
11. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(சா மெ1)துறை, அரசாணை (நிலை) எண்.1 நாள்.02.01.2009, ப.2.
12. . ஆட்சித் தமிழ், ச.நாகராசன், தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, சென்னை, 1999, .133.
துணை நூற் பட்டியல்
1. ஆட்சித் தமிழ், ச.நாகராசன், தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, சென்னை, 1999
2.ஆட்சிமொழியும் மொழிபெயர்ப்பும், வீ.சந்திரன், பாரிநிலையம், சென்னை-14, டிச. 1993.
3. தமிழில் ஆட்சிச்சொற்கள், சி.செல்வராஜ், அன்புபதிப்பகம், சென்னை-14, டிச 1993.
4. அரசுப் பணியில் மொழிபெயர்ப்பு, (கட்) ம.இராசேந்திரன், மொழிபெயர்ப்பியல் பயிற்சிப் பட்டறை, 29.01.1991, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113
5. ஆட்சி மொழிச்செயலாக்கத்தில் மொழிபெயப்பின் பங்கு, த. பெரியாண்டவன், மொழிபெயர்ப்பியல் தொடர் சொற்பொழிவு - 3, நாள். 24.10.1990, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113.
6. Translation - Theory and Application, M.Valarmathi, International Institute of Tamil Studies, Chennai 113.


1 கருத்து:

  1. வணக்கம். நாம் பிரேம்குமார். கடந்த பத்தாண்டுகளாக மொழிபெயர்ப்புத் துறையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறேன். மிகச் சிறப்பான இந்த பதிவு கண்டு அக மகிழ்ந்தேன். சரியான பார்வையில் தெளிவான நடையின் வாயிலாக சிறந்த கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள். நன்றி! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு