உங்கள் நூலகம்
ஜனவரி - பிப்ரவரி 2008
தமிழ் மொழிபெயர்ப்பின் அரசியல் அ.மங்கை
மொழிபெயர்ப்பு முயற்சிகள் தொழிற்படும் சூழல், தேர்ந்தெடுக்கப்படும் பனுவல், மொழி, வெளியிடும் நிறுவனம், வாசகத் தளம் ஆகியவை அடிப்படையில் அணுகப்பட வேண்டும். அந்த வகையில் தமிழ் மொழி பெயர்ப்புகள் செயல்பட்ட/படுகின்ற களம் குறித்த சில விவாதங்களை இக்கட்டுரை முன்வைக்கிறது. மொழி பெயர்ப்பின் பலாபலன்கள், சரி/தவறு, சிக்கல்கள், அவை முன்வைக்கும் பண்பாட்டுக் கேள்விகள் ஆகியவை மொழிபெயர்ப்பு அரசியல் (Political of Translation) தொடர்பானவை. அவை அனைத்து மொழிகளுக்கும் பொருந்தக்கூடிய கொள்கைசார் விவாதங்களை ஒட்டிச் செய்யப்பட வேண்டியவை. ஆனால், எனக்குரிய பரப்பில் அவற்றை மேற்கொள்ளும் சாத்தியம் இல்லை. எனவே, தமிழ் மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை, மூலநூல்களின் மொழி/நாடு ஆகியவை காட்டும் திசைவழிகள், மொழிபெயர்ப்பு நூல் வெளியீடுகளில் எழும் தகவல் / தகவலின்மை குறித்த குளறுபடிகள் ஆகிய இரண்டு பற்றி மட்டுமே இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறேன்.முருகேச பாண்டியனின் ‘தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம்’ (2004), 1863இல் வெளியிடப்பட்ட ‘ஆதிநந்தவனப் பிரளயம்’ முதலாக 1990 வரை வந்த 1018 மொழிபெயர்ப்பு நூற்களைக் குறிப்பிடுகிறது. வெளியீட்டு எண்ணிக்கை அடிப்படையில் அதிக அளவு நூல்கள் மொழி பெயர்க்கப்பட்ட காலம் 1951-1970க்குட்பட்ட இருபது ஆண்டுகளாகும். இதில் 1961-1970க்குட்பட்ட காலம் குறித்த க.நா.சுவின் மேற்கோளை சிவகாமி தனது இரு நூல்களிலும் (மொழிபெயர்ப்பு, நூற்றொகை: 1983, மொழிபெயர்ப்பு தமிழ்: 2004) கையாள்கிறார்.“1950களிலும் அதற்குப் பின்னரும் சோவியத் அரசாங்க ஸ்தாபனமும் அமெரிக்க அரசாங்க ஸ்தாபனமும் ஏற்பட்டு போட்டி போட்டுக்கொண்டு இதில் ஈடுபாடு காட்டின. அதன் விளைவாக, மொழி பெயர்ப்பாளரின் ரசனையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களுக்குப் பதிலாகப் பணம் தரக்கூடிய நூல்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். இதுவே, நல்ல தரமான இயக்கம் என்று சொல்லும்படியான அளவிற்கு 1956க்குப் பின் சாகித்திய அகாதெமி, இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஏற்பட்டு மொழிபெயர்ப்பில் செயல்படத் தொடங்கியது. இதற்கிடையில் சிறிது சிறிதாக ரஷ்ய, அமெரிக்க அரசாங்கங்கள் மொழிபெயர்க்கப்படும் பணியைச் சுருக்கிக்கொண்டார்கள். 1960க்குப் பின் அவர்கள் நூல்கள் அதிகமாக வெளிவரவில்லை என்று பொதுவான நோக்கில் கருத்துரைப்பர்” என்ற சுதந்திரத்திற்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் என்ற கட்டுரையில் க.நா.சு. கூறுவதாகக் குறிப்பிடுகிறார். (2004 75)ஆனால் க.நா.சு.வின் இந்தப் ‘பொதுவான நோக்கு’ புள்ளி விவரப்படிப் பொருந்தவில்லை என்பதை முருகேச பாண்டியன் கொடுக்கும் மற்றொரு அட்டவணை விளக்குகிறது. 1951-1960, 1961 - 1970 காலகட்டத்தில் இங்கிலாந்து நூல்கள் அதிகபட்சமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ரஷிய, அமெரிக்க நூல்களில் ரஷிய மொழிபெயர்ப்புகள் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ளன. 1971-1980, 1981-1990 காலகட்டத்தில் இங்கிலாந்து, அமெரிக்க நூற்கள் மொழிபெயர்ப்புத் திடீரெனச் சரிந்துள்ளதைக் காணமுடிகிறது. ரஷிய நூல்கள் 1990 வரை ஒரே சீரான அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. முருகேச பாண்டியன் தனது நூலில் க.நா.சு.வின் பொதுவான நோக்கைக் குறித்து ஏதும் சொல்லாமலே போகிறார்.1951-1970 காலத்தில் மொழிபெயர்ப்பு இலக்கிய நூற்கள் வெளியீடு அதிகரித்தமை குறித்து பல காரணங்களை ஊகங்களாக வைக்கிறார் முருகேசபாண்டியன். தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது (1956). மொழிபெயர்ப்பு நூல்களைத் துணைப்பாடமாக வைக்கவேண்டும் என்ற அரசு ஆணை காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்பது அவரது வாதம். கன்னட மொழியிலும் இக்காலகட்டத்தில் மொழிபெயர்ப்புப் பணி தீவிரமாக நடந்ததைக் குறித்து வளமாலா விஸ்நாதா குறிப்பிடுகிறார் Bassnet, Susan, Post Colonial Translation:1999) பாடத்திட்டத்திற்கான மொழிபெயர்ப்பு / சுருக்க மொழிபெயர்ப்பு பற்றி இன்னும் ஆழமாக அணுக வேண்டிய தேவை உள்ளது. 1914இல் Lord Lyttan எழுதிய The Last days of Poempei தமிழில் வெளி வந்துள்ளது. அதன் பின் அட்டையில் மாணவருக்காக எழுதப்பட்டதாகக் குறிப்பு உள்ளதென முருகேச பாண்டியன் நூல் குறிப்பிடுகிறது.“அரசு ஆணையின் காரணமாக 1953லிருந்து 1968 வரை பள்ளி மாணவர் பாடத்திட்டத்தில் 23 ஆங்கில நாவல்களின் சுருக்கங்கள் துணைப்பாடமாக இடம் பெற்றுள்ளன. இவ்வாறு மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட நூற்களின் அரசு ஆணைபற்றிய குறிப்பு உள்ளது” என அவர் குறிப்பிடும் ‘10-05-61 தேதியிட்ட ஆணை 320’ ஆவணக் காப்பகத்தில் தேடியபோது கிடைக்கவில்லை. (இத்தகவல் அறிய உதவிய நங்கை அவர்களுக்கு நன்றி.) இவற்றைப் பள்ளி ஆசிரியர்கள் மொழிபெயர்த்திருப்பர். இத்தகு நூல்களை நூலகங்களில் சேர்க்காமல் இருக்க வாய்ப்புண்டு. எனவே இக்காலத்தில் வெளியிடப்பட்ட நூல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்திருக்கலாம் என்று முருகேசபாண்டியன் விளக்குகிறார். முறையான ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் 1961-1970க் கிடைப் பட்ட கால மொழிபெயர்ப்பு முயற்சிகள், அவற்றில் அரசுப் பாடநூல் நிறுவனத்தின் பங்கு ஆகியவை குறித்து நாம் விரிவாகக் கண்டறிய வாய்ப்புண்டு.இக்காலத்தில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட மொழிபெயர்ப்பாளர்கள் அவர்கள் மொழிபெயர்த்த மூலநூல்களின் மொழி ஆகியவை குறித்த ஒப்பீடு ஆர்வமூட்டுபவையாக உள்ளன. அதிக அளவில் ரஷிய மொழியில் இருந்து மொழிபெயர்த்த முகம்மது செரிபு, அமெரிக்க நூல் எதனையும் மொழிபெயர்க்கவில்லை. வி. எஸ். வெங்கடேசன் ஒரே ஒரு அமெரிக்க நூலை மொழிபெயர்த்திருக்கிறார். கா. அப்பாதுரை, கு. பரமசிவம் தலா இரண்டு ரஷிய நூல்களை மொழிபெயர்த்துள்ளனர். ரஷிய நூல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட எஸ். சங்கரன், முல்லை முத்தையா, புதுமைப்பித்தன், ரகுநாதன், முகமது ஷெரீபு, எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் அமெரிக்க நாவல்களை எதையும் மொழிபெயர்க்கவில்லை. அதேபோல அமெரிக்க நூல்களை மொழிபெயர்த்த க.நா.சு, என். கே. வேலன், சோ. சண்முகம், ஜான். துரைராஜ், எஸ். வேதரத்னம், தெய்வ சிகாமணி ஆகியோர் ரஷிய மொழி நூலை மொழிபெயர்க்கவில்லை.க.நா.சு., அப்பாதுரை ஆகியோர் பிறமொழி நூல்களைக் கூடுதலாக மொழிபெயர்த்துள்ளனர். அவற்றை ஆங்கிலவழியாக மொழி பெயர்த்திருக்கலாம். மொழிபெயர்ப்புப் பணியில் தெளிவாக வெளிவந்துள்ள இரு முகாம்கள் படைப்பு இலக்கியத் துறையில் வெளிப்பட்ட எழுத்தாளர்களின் கோட்பாட்டுச் சர்பை ஒட்டியே உள்ளதைக் காண முடிகிறது. அமெரிக்க இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்தவர்களும் ரஷ்ய நாவல்களை மொழி பெயர்த்தவர்களும் முழுக்க முழுக்க இருவேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காணமுடிகிறது.ரஷ்ய, அமெரிக்க நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முறைமை குறித்தும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. ரஷ்ய நூல்கள் இந்திய - சோவியத் உறவின் அடிப்படையில் ராதுகா, முன்னேற்றப் பதிப்பகம், அயல்மொழிப் பதிப்பகம் ஆகியவற்றின் விற்பனை என்.சி.பி.எச் சார்ந்து இயங்குவது நாமறிந்ததே.ஸ்டார் பிரசுரத்தின் பதிப்புரை ஒன்று உலக மொழிகளின் உண்மைகளைத் தமிழில் தரும் நோக்கத்தை வெளிப்படுத்தும்போது, “குறைந்த செலவில், குறைந்த பக்கங்களில் அமெரிக்க நீலமணி நூல்கள் போல், நமது தமிழிலும் நூல்களைக்கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வமே, இந்த முயற்சியில் எங்களை ஈடுபடச் செய்வதாகும்” என்று கூறுவதை மேற்கோள்காட்டி தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டில் அமெரிக்க நாட்டுப் பதிப்பக வெளியீட்டு முறையினைப் பின்பற்றுவதாகக் குறிப்பிடுவது முக்கியமானது (2004 80) என்கிறார் முருகேசபாண்டியன்.தென்னிந்திய மொழிகள் புத்தக டிரஸ்ட், இந்தியாவின் வெளியீடாக வந்த கோன்-டிகி என்ற நூலின் நூன்முகத்திலிருந்து சிவகாமி (2004 : 86) மேற்கோள் காட்டுகிறார். தென்னிந்திய மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் அறிவும் கலையும் நிறைந்த நூல்களைக் குறைந்த விலைக்கு வெளியிடுவதை ஆதரிப்பதேயாகும்” என்று குறிப்பிட்டு இந்நிறுவன அமைப்பாளர்கள் பற்றி மேலும் சொல்கிறது. ‘போர்டு நிலையத்தாரும் தென்னிந்திய பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஏழ்வரும் சேர்ந்து சிந்தித்து.....’ இதனை நிறுவிய குறிப்பு அவர்கள் நூல்களில் இருப்பதாகச் சிவகாமி குறிப்பிடுகிறார்.அமெரிக்க அரசு ‘தமிழ் மொழிபெயர்ப்பில் நேரடியாக ஈடுபடவில்லை’ எனக் குறிப்பிடும் முருகேச பாண்டியன் இந்த ஃபோர்ட் நிறுவன இடையீட்டைக் குறிப்பிடவில்லை. பம்பாயில் உள்ள பெர்ல் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் அமெரிக்க அரசு பம்பாயில் உள்ள பெர்ல் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் அமெரிக்க அரசு செய்துகொண்ட ஒப்பந்தப்படி 10 நூற்கள் தமிழில் வந்துள்ளதென அவர் குறிப்பிடுகிறார்.யுனெஸ்கோ நிறுவனமும் மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டியதைக் காணமுடிகிறது. ஆண்டுதோறும் இந்நிறுவனம் வெளியிடும் மொழிபெயர்ப்பு நூற்றொகையில் (International Bibiliography of Translation) உலக மொழிகளில் நிகழும் மொழிபெயர்ப்பு பட்டியல் இடம் பெறுவது இவ்வியலுக்கு மிக முக்கிய ஆதாரமாகும். அதன் அடிப்படையில் தமிழ் சார்ந்து நடந்த கொடுக்கல் வாங்கல்கள் இன்னும் முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை.மொத்தத்தில் 1950-1970 காலகட்டத்தில் காலனிய அரசு மூலம் ஏற்பட்ட தொடர்பு காரணமாகப் பிரித்தானிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க் கப்படுவது தொடர்ந்து நடந்து வந்துள்ளது. அண்டையில் உள்ள பாண்டிச்சேரியில் பிரெஞ்சு தொடர்பு காரணமாகப் பிரெஞ்சு நூற்கள் மொழிபெயர்ப்பு சீராக இருந்துள்ளது.ரஷ்ய நூல்கள் மொழிபெயர்ப்புக்கு நிறுவன மயமாக்கப்பட்ட அமைப்பு நிலைபெற்றது. அமெரிக்க நூல்கள் மொழிபெயர்ப்பு நேரடியாக இல்லாவிட்டாலும் தமிழ்ப் படைப்பாளிகளது கொள்கை சார்பு, நிதி ஆதாரம் ஆகியவை மூலம் தொடர்ந்தன.மொழிபெயர்ப்பு நூல் வெளியீடுகள் தொடர்பான சில விவாதங்களையும் எழுப்புவது பொருத்தமாகத் தோன்றுகிறது. முருகேச பாண்டியன் இச்சிக்கல்களைப் பின்வருமாறு தொகுக்கிறார்: “தமிழில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ள சில பதிப்பகங்கள் மூலநூல், ஆசிரியர் பற்றிய தகவல்களை மட்டும் முன் அட்டை அல்லது தலைப்பு பக்கத்தில் தந்துள்ளன. சில பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு நூற்களின் முன்னுரையில் மட்டும் மொழிபெயர்ப்பு நூல் என்ற குறிப்பு உள்ளது. சில பதிப்பகங்களை மூலநூலின் பெயரை மட்டும் குறிப்பிட்டு விட்டு மூல ஆசிரியர் பெயரைக் குறிப்பிடவில்லை. மூலப் பதிப்பகம், மூலநூல் வெளியான இடம், மூல நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு போன்ற தகவல்களைச் சில பதிப்பகங்கள் மூலநூலை வெளியிட்ட நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது என்ற தகவலையும் தந்துள்ளன” (2004:94)இவை தவிர மூல ஆசிரியர் அனுமதி, பதிப்புரிமை ஆகியவை குறித்தும் சிக்கல்கள் எழுகின்றன. கூடுதலாக, பிறமொழி ஆசிரியர்கள், அவர்கள் காலம் குறித்த நமது அறியாமையும் இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக முருகேச பாண்டியன் “வால்டர் ஸ்காட், ஆலிவர் கோல்ட்ஸ்மித், சார்லஸ் டிக்கன்ஸ்” போன்றோரை ‘இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த’ படைப்பாளிகள் பட்டியலோடு சேர்த்துள்ளார். (2004:95) முப்பதாண்டுகளுக்கு முற்பட்ட வெளியீடுகளின் நிலைமையிலிருந்து நாம் இன்னமும் மாறவில்லை என்பதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன. 1950-1970கள் மற்றும் எண்பதுகளில் வெவ்வேறு சிறு பத்திரிக்கைகளில் வந்த மொழிபெயர்ப்புகள் பல இப்போது மறுபதிப்பு செய்யப்படுகின்றன. இவற்றின் பதிப்பு அறம் குறித்த சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.வாண்டா வாலிலெவ்ஸ்காவின் ‘வானவில்’ நாவலின் ஆர். ராமநாதன் - ஆர்.எச். நாதன் மொழிபெயர்ப்பு அலைகள் வெளியீடாக 2005இல் வெளிவந்துள்ளது. மறுபதிப்பு என வெளியீட்டு விவரக் குறிப்பில் இல்லாமல் போவதற்கு அரசு நூலகத்திட்டத்தின் கீழ் விற்பனை கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். ஆனால், பதிப்புரையில் பெ.நா.சிவம் அவர்கள் முதல் மொழிபெயர்ப்பு பவானி பிரசுரத்தால் வெளியிடப்பட்டது என்ற தகவலையும் மொழிபெயர்ப் பாளர்கள் 20-05-1946இல் எழுதிய முகவுரை குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதிய ‘டால்ஸ்டாய்’ என்ற நூல் சந்தியா பதிப்பகத்தாரால் 2002ல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் நூன்முகத்தில் ஆசிரியர், “ஆங்கிலத்தில் டால்ஸ்டாயின் சரிதம் 1000 பக்கம் கொண்டது. தமிழில் அவரது விரிவான சரிதத்தை வெளியிடவேண்டிய அவசியமெனத் திரு. வி. க முதலியார் விரும்பினார். அதற்கேற்ப அவ்விரிந்த சரித்திரத்தின் சாரம் முழுமையும் என்னால் இயன்றவரை இப்பதிப்பில் கொண்டுவர முயன்றிருக்கிறேன்” எனக் குறிப்பிடுகிறார். திரு. வி. க.வின் அணிந்துரை, ஜமதக்னியின் முகமலர் ஆகியவற்றோடு மறுவெளியீடாகி இருக்கும் இந்நூலில் முதல் வெளியீடு குறித்த நாள், ஆண்டு பற்றிய எந்தவிதக் குறிப்பும் இல்லை.அதேபோல க.நா.வின் அன்புவழி என்ற சுவீடிஷ் நாவல் மொழிபெயர்ப்பை சந்தியா பதிப்பகம் 2002இல் வெளியிட்டுள்ளது.இந்நூலின் முதல் வெளியீடு நோபல் பரிசு பெற்ற நூல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட ஏ. கே. கோபாலன் பதிப்பகத்தால் 1956இல் செய்யப்பட்டது. இது பற்றிய குறிப்பு அந்நூலை 1995இல் இரண்டாம் பதிப்பு எனக் குறிப்பிட்டு வெளியிட்ட ‘வேர்கள்’ பதிப்பக வெளியீட்டில் கிடைக்கிறது. அவர்கள் ‘அன்பு வழி’ என்ற க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு தலைப்பை ‘பாரபாஸ்’ என்ற மூல நூல் தலைப்பாக வெளியிட்டுள்ளனர். அ. கி. கோபாலன் பதிப்புக்கு க.நா.சு கொடுத்த முன்னுரை 1995 பதிப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் 2002 சந்தியா பதிப்பக வெளியீட்டில் ‘பாரபாஸ்’ என்ற 1951 நோபல் பரிசு பெற்ற நாவல் என்ற குறிப்பும் க.நா.சு.வின் முன்னுரை (தேதி / ஆண்டு இல்லாமல்) காணப்படுகிறது. அதேபோல் ச.து.சு. யோகியார் மொழிபெயர்ப்பில் வந்த கடலும் கிழவனும் நூலின் முதல் வெளியீடு குறித்தும் தகவல் இல்லை. அதேபோல தளவாய் சுந்தரம் தொகுத்த மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்புகள் சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.எமிலிக்காக ஒரு ரோஜா (2002) என்ற நூலின் தொகுப்பாளர் குறிப்பில் ‘எழுத்து’, ‘இலக்கிய வட்டம்’ இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்ட கதைகள் என்று தளவாய் சுந்தரம் குறிப்பிடுகிறார். “அனைத்தும் ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு வந்தவை” என்பதையும் சொல்கிறார். சிறுபத்திரிகைகள் வழி தமிழுக்குக் கிடைத்த மொழி பெயர்ப்புகள் குறித்து உரிய பாராட்டுகள் வழங்குகிறார்.” மேலும், “ஆனால், அவற்றில் புத்தகமாக வெளிவந்தவற்றை விட ஆங்காங்கே பத்திரிகைகளில் உதிரியாக இருப்பவை தான் அதிகம். புத்தகமாக வெளிவந்தவற்றிலும் பலவற்றிற்கு இப்போது மறுபதிப்பு இல்லை. தற்காலத் தேவையுடைய சிறந்த மொழிபெயர்ப்புகளைத் திரும்பவும் கொண்டு வருவதை சந்தியா பதிப்பகம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகப் பத்திரிகைகளில் வெளிவந்து தொகுக்கப்படாமல் உதிரியாக இருக்கும் குறிப்பிடத்தக்கச் சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைகளைப் புதிய வாசகர்களின் கவனத்துக்குள்ளாக்கும் விதமாகத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட எண்ணினோம்” என்று குறிப்பிடுகிறார்.தாஸ்தவ்ஸ்கியின் ‘சூதாடி’ நூலின் மூலம், வழிநூல் மொழிபெயர்ப்பாளர் பற்றிய குறிப்புகூட இல்லை (சத்தியா:2003) 2002இலேயே வெளிவந்த ‘பிரபஞ்சகானம்: உலகச் சிறுகதைகள்’ தொகுப்பில் தளவாய் சுந்தரம் சிறுபத்திரிகைகளைத் தேடி அறிவதில் உள்ள சிரமம் பற்றிக் குறிப்பிடுகிறார். “இக்கதைகள் மொழிபெயர்ப்பாகி வெளிவந்த காலகட்டத்திற்குப் பிறகு வாசிப்புப் பழக்கத்திற்கு ஆட்பட்டு, தேடிப்படிக்கும் ஆவலிருந்தும் அப்பத்திரிகைகள் கிடைக்காத வாசகர்களின் எண்ணிக்கை பெருமளவில் இப்போது இருக்கக்கூடும் என்று கருதி, அவர்களுக்கு இக்கதைகளைப் படிக்கத் தருவதை நோக்கமாகக் கொண்டு இத்தொகுப்பு கொண்டுவரப்பட்டிருக்கிறது” என்கிறார்.நான் கண்டவரையில் இந்த இரு தொகுப்புகளில் இக்கதைகளின் மூலநூல், வழிநூல் விவரங்கள், மொழிபெயர்க்கப்பட்டு வெளியான ஆண்டு, பிற விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. தளவாய் ஏற்கெனவே சொன்னது மாதிரி அவற்றைத் தேடிப் படிப்பதும் சிரமம். எனவே, இன்னும் இக்கதைத் தொகுப்புகள் அடிப்படையில் ஆய்வு செய்பவர்களுக்குத் தமிழக மொழிபெயர்ப்பு வரலாற்றின் சமீபத்திய வரலாறு கூடத் தெரியாது போய்விடும் அல்லது வாசகர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்பது தொகுப்பாளரின் ஊகமாக இருக்கலாம். அது தவிர, இக்காலக் குறிப்பு இல்லாத காரணத்தால் எழுத்து, இலக்கிய வட்டம் இதழ்கள் இரண்டும் நமக்கு ஒரே காலத்தில் வந்தவை போன்ற மாயை உருவாக்குகின்றன.சிறுபத்திரிகைகளில் வெளிவந்தவை தொகுக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கும் சூழல் இது. ‘இலக்கிய வட்டம்’ (தொகு: கி. அ. சச்சிதானந்தம், சந்தியா: 2004) ‘நடை’ (தொகு: கி. அ. சச்சிதானந்தன், சந்தியா, 2004), ‘கசடதபற’ (தொகு: சா. கந்தசாமி, கலைஞன், 1999) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இத்தொகுப்புகள் படைப்பிலக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பதால், மொழிபெயர்ப்பு இரண்டாம் பட்சமாகவே வெளியிடப் படுகின்றன. எனவே முதல் மொழிபெயர்ப்பு குறித்து நேரிடையாக அறிவதற்கு முயற்சி எடுப்பவர்களுக்கு மட்டுமே அவை தெரியக்கூடும்.தொகுப்பு மற்றும் பதிப்புப் பணி என்பது பொறுப்புணர்வுடன் கூடிய தொழில்முறை அறிவும் பயிற்சியும் கோரி நிற்பவை. அவற்றுக்கான அடிப்படை விதிகளைப் பின்பற்றுவது தார்மீக நியாயம்.சமீபத்திய ‘விடியல்’ பதிப்பக மொழிபெயர்ப்புகளில் மூலநூல், வழிநூல் ஆகியவை பற்றிய குறிப்புகள் இடம் பெறுவதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இதில் மொழி பெயர்ப்பாளர்களும் அக்கறை காட்டுவது அவசியமாகிறது. மொழிபெயர்ப்பு கதைகள், ‘மௌனப்பனி ரகசியப்பனி’ (2003) என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. (‘காலச்சுவடு’ இதழ்களில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கதைகள்) அதில் “சுதந்திர மொழிபெயர்ப்பு போன்ற தழுவல் இலக்கியத்தின் நவீன ஆவிகள் காலச்சுவடில் இடம்பெற்றதில்லை” என்று ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார். ஆனால் மூலநூல்/ஆசிரியர் குறிப்பு தரும் இப்பதிப்பகம் வழிநூலான ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றித் தகவல் தருவதில்லை.ஒப்பிட்டு பார்க்கப் பயன்படுத்தப்படும் ஆங்கில மொழிபெயர்ப்பின் தராதரம் குறித்து அறிவதற்கான ஆய்வு பெரும்பாலும் மேற்கொள்ளப் படுவதில்லை. அதற்கான வாய்ப்பும் குறைவு. ‘மாண்டோ படைப்புகள்’ (நிழல், 2004) நூல் மொழிபெயர்ப்பாளர் மற்றும் தொகுப்பாளர் ராமாநுஜம் காணக்கிடைத்த ஆங்கில மொழிபெயர்ப்புகளில் உள்ள சிக்கல்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். காலித் ஹாசனின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மாண்டோ மொழிபெயர்ப்பு பணியில் பெயர் பெற்றவை. அவரது ஆங்கிலம் குறித்துப் பாராட்டும் ராமாநுஜம் அவரது மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்.ஏறக்குறைய எல்லாக் கதைகளிலும் அவர் பல பத்திகளை விழுங்கியிருக்கிறார். உதாரணத்திற்கு 7,500 வார்த்தைகள்கொண்ட மோசல் கதையின் 700 வார்த்தைகள் விழுங்கப்பட்டுள்ளன என்று வேறு பல கதைகளில் வெட்டப்பட்ட பகுதிகளைக் குறிப்பிடுகிறார். மம்மி கதையை மூன்று வெவ்வேறு ஆசிரியர்களின் மொழிபெயர்ப்பில் படித்தபோதுதான் காலித் ஹாசன் விழுங்கிய விபரீதம் புரிந்தது. அவர் கதையின் தலைப்புகளை மாற்றிய விதமும் கதையின் வாசிப்பைத் திசை திருப்புவதாக அமைந்துள்ளது. ‘திற’ என்ற தலைப்புக்குப் பதில் ‘திரும்புதல்’ என்று அவர் மாற்றியிருப்பதை உதாரணமாகச் சொல்லலாம்” என்கிறார்.அது தவிர, உருது மொழிப் புலமை பெற்றவரைக்கொண்டு தனது மொழிபெயர்ப்பு ஒப்பிட்ட தகவலையும் குறிப்பிடுகிறார். மொழிபெயர்ப்புப் பணியில் இடம்பெறவேண்டிய ஆய்வுப் பணியை இம்முன்னுரை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இனியேனும் வாசகர்கள், மாணவர்கள், மொழிபெயர்ப்பாளர், தொகுப்பாளர்கள், பதிப்பகத்தார் தத்தம் பொறுப்பு உணர்ந்து மூலமொழி, மூலநூல், மூல ஆசிரியர், வழி நூல், வழிநூல் ஆசிரியர், வெளியீடு இயன்றால் அதைக் குறித்த விமரிசனம், மொழிபெயர்ப்பு விவரங்கள், மொழிபெயர்ப்பு வெளியீடு ஆகியவற்றை முழுமையாகத் தருவதின் முக்கியத்துவத்தை உணர்வது நம்முன் உள்ள கடமையாகும். ஏனெனில் மொழிபெயர்ப்பு இருமொழிகளில் வந்த இரு படைப்பாளிகள் இரு நூல்கள் தொடர்பானது மட்டுமல்ல, இரு பண்பாட்டு வரலாறுகளின் தரவுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக