ஞாயிறு, 24 மே, 2009

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு-3

3

ஈழத்துத் தமிழிலக்கியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தனித்து ஆராயப்பெறும் தகுதிகள் கொண்டது. வரலாற்றைப் பொறுத்தவரையிலும் பலமுக்கியமான நிகழ்ச்சிகள் இந்நூற்றாண்டில் நடைபெற்றன. 1802ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்றநாடானமை, 1831ஆம் ஆண்டு இலங்கைக்கு முதலாவது அரசியற் சீர்திருத்தம் வழங்கப்பட்டமை, சுதேசிகள் இலங்கையரசியலிற் பங்குபற்றும் நிலையேற்பட்டமை, ஆங்கிலக் கல்வி நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டமை, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டமை, நாட்டின் பல்வேறுபகுதிகளையும் இணைக்கும் வண்ணம் தபால் தந்திச் சேவைகளும் பெருந் தெருக்களும் புகையிரதப் பாதைகளும் அமைக்கப்பட்டமை முதலியன இலங்கை வரலாற்றுக்குப் புதிய தோற்றத்தையளித்தன. சமூக வகுப்புகளிடையேயும் புதிய அம்சங்கள் தோன்றின. புதிதாக ஆங்கிலக் கல்வி கற்க அரசாங்க சேவையில் ஈடுபட்ட மத்தியதர வர்க்கமொன்று தோன்றியது. இவ்வர்க்கத்தினரிடையே கிறித்தவ மத மாற்றம் அதிக அளவில் நடைபெற்றது, இது மட்டுமன்றி இவ்வகுப் பினரிடையிலேயே மேனாட்டு மயப்படுத்தலும் (Westernization) நிகழ்ந்தது.

இத்தகைய புதிய நிலைமைகளின் தாக்கம் இலக்கியத்திலும் பிரதிபலிக்கவே செய்தது. 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் நடந்தது போலவே 19ம் நூற்றாண்டிலும் கிறித்தவ மிசனரிமாரின்மதமாற்றமுயற்சிகள் மிகத் தீவிரமாக நடந்தன. கத்தோலிக்க, புரொட்டஸ்தாந்து மிசனரிடமாருடன் கூட அமெரிக்க, வெசிலியன் மிசனரிமாரும் ஆங்கிலேயரது ஆட்சிகாலத்தில் மதப் பிரசாரப்பணியில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ மதம், ஆங்கிலக் கல்வி, உயர்பதவி வாய்ப்பு ஆகியன ஒன்றுடனொன்று இணைந்திருந்தன. இதனால் ஆங்கிலக்கல்வியையோ உயர் உத்தியோகத்தையோ நாடுவோர் கிறித்தவர்களாவதும் இயல்பாயிற்று. பல்வேறு சலுகைகளை கருதிக் கிறித்தவரானோர் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு அந்நியப்படும் நிலைமையும் ஏற்பட்டது. முத்துக்குமாரகவிராசரின் (1780-1851) பாடலொன்று இந்நிலையை நன்கு பிரதிபலிக்கிறது.
" நல்வழி காட்டுவோம் உடு புடவை சம்பளம்
நாளு நாளுந் தருவோம்
நாஞ் சொல்வதை கேளும் எனமருட்டிச் சேர்த்து
நானமுஞ் செய்துவிட்டார்
மெல்லமெல்லப் பின்னை வேலையிங்கில்லைநீர்
வீட்டினிடை போமென்கிறார்
வேண்டியொரு கன்னியைக் கைக்கொண்டு கருவாக்கி
விட்டபின் கணவன் வேலை
இல்லை நீ போவென்று தள்ளுவது போலுமே
இனி எம்மை எம் உறவினோர்
எட்டியும் பாரார்கள் கிட்டவும் வாரார்கள்
ஏர்ட்பூடி உழவுமறியோம்
அல்லலாம் இம்மைக்கு மறுமைக்கு (நரகினுக்)கு
ஆளாகி மிக அழிந்தோம்
ஆ பரா பரனே! கிறிஸ்தவர்கள் எங்களை
அடுத்துக் கெடுத்தார்களே.
இத்தகையதொரு நிலையில் பாரம்பரிய நிலவுடமைச் சமூக அமைப்பின் மதிப்பீடுகள் மாறத் தொடங்கிய சூழலே 19ம் நூற்றாண்டு இலக்கியத்தின் சமூக அடித்தளமாக அமைந்தது எனில் மிகையாகாது.

19-ஆம் நூற்றாண்டில் எழுந்த பெருந்தொகையான இலக்கியங்கள் சமய உள்ளடக்கம் கொண்டனவாகவே அமைந்தன. தெய்வங்கள் மீதும் திருத்தலங்கள் மீதும் பாடப்பெற்ற இலக்கியங்களே இவற்றிற் பெரும்பான்மையன. இவற்றைவிட கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்குடன் எழுதப்பட்டவையும், கிறிஸ்தவ சமயத்தை மறுத்து சைவ மதத்தை நிலைநிறுத்தும் நோக்குடன் எழுதப்பட்டவையும் 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாய் அமைந்தன. கிறிஸ்தவ மதப்பிரசாரமும் அதற்கு எதிரான முயற்சிகளும் தீவிரமாகவும் பரவலாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் கல்வி கற்றோரை மட்டுமன்றி மற்றோரையும் எட்டும்படி அவை சம்பந்தமான ஆக்கங்கள் அமையவேண்டிதாயிற்று. இத்தகைய நிலை 19ஆம் நூற்றாண்டு இலக்கிய வசன நடை பிரதானம் பெறவும் வளர்ச்சியடையவும் வழியமைத்தது. உரைநடையைச் சமயப் பிரசாரத் தேவைகளுக்குப் பயன்படுத்தியோரில் கிறிஸ்தவரே முன்னின்றனர். மிசனரிமாரே முதலில் யாழ்ப்பாணத்தில் அச்சுக் கூடங்களை நிறுவினர். சமயத் தேவைக்காகப் பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள் முதலிய தகவற் தொடர்புச் சாதனங்களை அவர்கள் பயன்படுத்தினர். 1923ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத் துண்டுப் பிரசுர சங்கம் (Jaffna Tract Society) நிறுவப்பட்டது, இதன் மூலம் கிறிஸ்தவ மத சம்பந்தமான பல்வேறு துண்டுப்பிரசுரங்கள் வௌியிடப்பட்டன. சமய உண்மைகளின் விளக்கங்கள், சமய கண்டனங்கள் ஆகிய பலவும் இத்துண்டுப் பிரசுரங்களில் இடம்பெற்றன. கிறிஸ்தவரின் இதே வழியினைச் சைவரும் கைக்கொண்டனர். ஆறுமுகநாவலரும் அவரைத் தொடர்ந்து சங்கரபண்டிதர், செந்திநாதையர், தாமோதரம் பிள்ளை, கைலாயபிள்ளை போன்ற சைவப் பெரியார்களும் சிறு பிரசுரங்கள் பலவற்றை வௌியிட்டுள்ளனர்.

19ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பகுதிகளில் உருவாகிய பத்திரிகைச் சூழல் சமய அடித்தளம் கொண்டது. கிறிஸ்தவ மிசனரிமாரே மதம் பரப்புவதற்கெனப் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841இல் அமெரிக்க மிசனரி சார்பில் வௌிவந்தது. கத்தோலிக்கபாதுகாவலன், இலங்காபிமானி ஆகியனவும் 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் கிறிஸ்தவ சமயச்சார்புடன் வௌிவந்த பத்திரிகைகளாகும். எனினும் இப்பத்திரிகைகள் சமய எல்லையுள் மட்டும் நின்றுவிடாது பல்வேறு விடயங்கள்பற்றியும் எழுதின. உதயதாரகை தனது முதலாம் இதழ் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு கூறியிருந்தது.

".......உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவானகல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சிமாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்".

சமயசம்பந்தமாகத் தோன்றிய பத்திரிகைகளாயினும் இவை தமது கோட்பாட்டெல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டமை குறிப்பிடத் தக்கது. கிறிஸ்தவர் பத்திரிகைகளை ஆரம்பித்தது போன்று சைவர்களும் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கைநேசன், சைவாபிமானி, சைவ உதயபானு, இந்துசாதனம் ஆகியவை சைவர்களால் வௌியிடப்பட்டவை. இவற்றுடன் இஸ்லாமிய மறுமலர்ச்சி நோக்கில் முஸ்லிம் நேசன், சைபுல் இஸ்லாம் ஆகிய பத்திரிகைகளும் கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளிலிருந்து வௌியிடப்பட்டன. பொதுத் தகவற் சாதனமாகிய பத்திரிகையின் பரவலான தோற்றம் தமிழ் வசன நடையின் துரிதமான பன்முகப்பட்ட வளர்ச்சிக்கு வழிகோலிற்று. இலக்கண இலக்கிய தத்துவ நூல்களில் உரை வடிவங்களிலே கட்டுண்டு கிடந்த தமிழ் வசனநடை தனது பண்பாட்டெல்லைகளை விரிவுபடுத்தி, புதிய வனப்பும் வளர்ச்சியும் பெற்றமைக்குரிய பிரதான காரணிகளுள் பத்திரிகைத் துறையும் ஒன்றாய் அமைந்தது. அச்சுரூபத்தில் பல நூற்றுக் கணக்கான பிரதிகள் வௌியிடப்படும் போது இலக்கியம். தவிர்க்க முடியாதபடி பரந்துபட்ட மக்களை எட்டவேண்டி ஏற்படுகிறது. இது நவீனயுகத்தில் அச்சில் வௌிவரும் இலக்கியங்களின் நிலை பேற்றுக்குரிய விதியாகும். பத்திரிகைகளின் தோற்றத்துடன் தமிழிலக்கியம் பொதுத்தகவற் தொடர்புச் சாதனப் பண்பைப் பெற்றதை இவ்வகையிலேயே விளக்கலாம்.

அச்சுவசதி, வசன நடை வளர்ச்சி, பத்திரிகையின் தோற்றம் என்பவற்றுடன் கூட இக்காலத்தில் பரவலாகிய கல்வித் துறையும் தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரை குறிப்பிடக் கூடியதாகும். குறிப்பாக ஆங்கிலக் கல்வியின் மூலம் மேல்நாட்டு இலக்கியத்துடன் தொடர்பு எற்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் நாவல்,சிறுகதை ஆகியவை தோன்றி வளர்வதற்குரிய சூழல் ஏற்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவும் இதற்கு உதவின. 1856-ல் Parley the Porter என்ற ஆங்கில நூல் காவலப்பன் கதை என்ற பெயரில் தமிழாக்கப்பட்டது. Orson and valantine என்ற போத்துக்கேய நூல் ஊசோன்பாலந்தை கதை என நெடுங்கதையாய் வௌிவந்தது. இவற்றைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டு நாவலிலக்கியத்துக்கு முன்னோடிகளாயமையக் கூடிய அஸன்பேயுடைய கதை (1885) , மோகனாங்கி (1895) முதலிய நெடுங்கதைகளும் வௌியிடப்பட்டன.

இதுவரை 19ஆம் நூற்றாண்டுக்குரியனவாக மேலே பார்த்த புதிய வளர்ச்சிகள் வசன இலக்கிய வழியமைந்தவையே. செய்யுள் மரபுரீதியான போக்கிலேயே சென்றது. தலபிரபந்தங்களையும், சமயக்கிரியை விளக்க நூல்களையும் வடமொழி இலக்கியங்களின் தழுவல்களையுமே செய்யுட்துறையில் தொடர்ந்து காணலாம். பொருளடக்கம் மட்டுமல்லாது இலக்கிய உத்தி, மொழி நடை ஆகியவை கூட மரபு நெறிப்பட்டதாகவே அமைந்தன. வசன நடையில் புதுமையைப் புகுத்திய ஆறுமுகநாவலர் கூடச் செய்யுளை மரபுவழி நின்று 'புனிதப் பொருளாகவே' நோக்கினார். யுநீண்ட பாரம்பரியத்தையுடைய செய்யுளில் புதுமைசெய்ய இலக்கிய ஆசிரியர் தயங்கினர். ஆனால் தமது கண் முன்னே வளர்ந்த வசன நடையுடன் அதிக சொந்தம் பாராட்டி மாற்றங்கள் செய்ய அவர்கள் தயங்கவில்லை'. இந்நிலைமை ஈழத்துக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பொதுப்பண்பாகும்.

19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியும் பத்திரிகைகள் போன்ற பொதுத் தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியும் இலக்கியத்தைப் பரந்த மக்கள் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தின. இதனால் இலக்கியம் உயர்நிலை மக்களைப் பாத்திரங்களாகவும் வாசகர்களாகவும் கொள்ளும் நிலையிலிருந்து விடுபடத் தொடங்கியது. இன்னொரு வகையில் கூறினால் இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் காணப்படும் நவீன பண்புகள் பல பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பமாகியது எனலாம். இத்தகைய காரணங்களால் இக்கால இலக்கியம் தனியொரு பிரிவாகவும் விரிவான ஆய்வுக்கு உட்பட வேண்டியதாகவும் அமைகிறது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டையடுத்து இருபதாம் நூற்றாண்டு தனிக் காலகட்டமாயமைகிறது. இதுவே இந்நூலின் அடுத்துவரும் அதிகாரங்களில் இலக்கிய வடிவங்களின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக