ஞாயிறு, 24 மே, 2009

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு: ஓர் அறிமுகம்
ஈழத்துத் தமிழிலக்கியப்பரப்பு ஐந்துநூற்றாண்டு காலத் தொடர்ச்சியான பாரம்பரியத்தையுடையது. இவ்விலக்கியப் பாரம்பரியத்தினையும் அதனூடு காணப்படும் பல்வேறு போக்குகளையும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் நோக்குதல் அவைபற்றிய தௌிந்த விளக்கத்துக்கு உதவும். இக்காலத்தில் இலங்கையில் குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் நிலவிய சமூக சமய கலாசார நிலைமைகள், அவற்றை ஊக்குவித்த அரசியல் பொருளாதார காரணிகள் ஆகியவற்றின் விளக்கமும் இவ்விலக்கிய வரலாற்று விளக்கத்துக்கு உதவி புரிவதாகும். எனினும் 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ்ப்பகுதிகளின் வரலாறானது தயக்க மயக்கங்கட்கு இடமளிப்பதாகவே உள்ளது. இக்காலப் பகுதியில் மன்னர்களின் வரன்முறைபற்றிய தகவல்கள் கிடைத்தபோதிலும் சமூக முழுமைக்குமான வரலாற்றைத் தொகுத்துக் காண்பதற்கு உதவும் சான்றுகளும் அரிதாகவே காணப்படுகின்றன. வரலாற்றியலில் காணப்படும் இக்குறைபாடு இலக்கிய வரலாற்று மாணவனையும் பாதிக்கவே செய்கிறது.

இத்தகைய பிரச்சினைகள் இருப்பினும் தற்போது கிடைக்கின்ற தகவல்களை அடிப்படையாக வைத்து ஈழத்து இலக்கியப் பரப்பினை இலக்கியப்பண்பு, இலக்கிய நெறி ஆகியவற்றின் அடிப்படையில் நோக்கி தொடாச்சியான இலக்கியவரலாற்றை அமைத்துக் கொள்ளுதல்கூடும். இப்பணியைச் செய்யவே இக்கட்டுரை முயல்கிறது.

16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஈழத்தில் தமிழிலக்கிய முயற்சிகள் தொடச்சியாக நடைபெற்றிருப்பதை அவதானிக்கலாம். இதற்கு முன்னர் எழுந்தனவாகச் சரசோதிமாலை என்னும் சோதிட நூலும், ஈழத்துப் பூதந்தேவனார் என்பாரியற்றிய சில தனிப்பாடல்களும் காணப்படுகின்றன. ஈழத்துப் பூதந்தேவனாருடனேயே ஈழத்துத் தமிழிலக்கியப் பாரம்பரியம் தொடங்குகிறது எனக்கூறுவது இன்று மரபாகிவிட்டது. எனினும் ஈழத்துப்பூதந்தேவனார் ஈழத்தவர்தானா என்பது பற்றிய சந்தேகம் இன்னும் தீர்த்துவைக்கப்படவில்லை. சங்கத்தொகை நூல்களான அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்பவற்றில் இப்புலவர் பெயரால் சில பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அகநானூறு 68, 231இ 307 ; குறுந்தொகை 34, 189, 360; நற்றிணை 366 ஆகிய பாடல்கள் ஈழத்துப் பூதந்தேவனாருடையவை. ஈழம் என்ற சொல்லே இப்புலவரை ஈழத்தவராகக் கொள்ள இடமளிக்கிறது. எனினும் ஈழம் என்ற சொல் இலங்கையை மட்டுமே குறித்ததா என்பதும் சிந்திக்க வேண்டியதாகும். ஈழத்துப் பூதந்தேவனாரை ஈழத்தவராக ஏற்றுக்கொண்டால், சங்ககால நூல்களின் பின்னெல்லையான கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு முன்னர் எழுந்தனவாகவே இப்பாடல்கள் அமையும். இதற்குப் பின்னர் நீண்டகாலமாகத் 'தமிழிலக்கிய நூல்கள்ரு ஈழத்தில் எழுந்ததற்கு இதுவரை சான்றுகள் எதுவுமில்லை. தம்பதேனியா மன்னர் 3-ஆம் பராக்கிரமபாகுவின் அரசவையில் 1310 ஆம் ஆண்டு போசராச பண்டிதர் என்பவர் சரசோதிமாலை என்னும் சோதிட நூலொன்றை அரங்கேற்றினார். ஈழத்துப் பூதந்தேவனாருக்குப்பின் சரசோதிமாலை இயற்றப்பட்டது வரை எமது இலக்கிய வரலாறு இருண்டதாகவே உள்ளது. இதற்குப் பின்னர் கிடைக்கின்ற இலக்கியங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டவையே. இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழர் வதியும்போதிலும் 17-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எதுவும் அப்பகுதிகளிலிருந்து எழுந்ததாகத் தெரியவில்லை. ஈழத்து இலக்கியவரலாற்றைக் கற்போர்இந்த அம்சத்தையும் மனங்கொள்ளுதல் வேண்டும்.

13-ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதி தனிராச்சியமாக விளங்கியதென்பதும் தமிழ் மன்னர்கள் அப்பகுதியை அரசுபுரிந்தனர் என்பதும் வரலாற்றுண்மை. இக்காலத்திலிருந்துதான் தமிழிலக்கியங்கள் பலவும் தோன்றியுள்ளன. இக்காலத்திலே இயற்றப் பட்டவையாக கிடைக்கும் நூல்களை சிங்கைச் செகராசசேகரன் காலத்தவை (1380 - 1414) எனவும் நல்லூர்ப் பரராசசேகரன் காலத்தவை (1478-1519) எனவும் இவற்றுக்குப் பிந்தியவை எனவும் பேராசிரியர் ஆ. சதாசிவம் தான் தொகுத்த ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலில் வகுத்துள்ளார். இந்லூல்களைப்பற்றி இங்கு குறிப்பிடுதல் இக்கால இலக்கியப் போக்கினை அறிந்துகொள்ள உதவும்.

செகராசசேகரம் (இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை இயற்றுவித்தவர் செகராசசேகர மன்னன் என அறியப்படுகிறது) சோமசன்மாவின் செகராசசேகரமாலை, பரராச சேகரம் (பரராச சேகர மன்னன் பன்னிரு வைத்தியர்களைக் கொண்டு இந்லூலை இயற்றுவித்தான என்பர்), பண்டிதராசர் இயற்றிய தக்கிணகைலாச புராணம், சகவீரர் இயற்றிய கண்ணகி வழக்குரை, கரசைப்புலவர் இயற்றிய திருக்கரசைப் புராணம், கதிரைமலைப்பள்ளு (இந்நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை). அரசகேசரியின் இரகுவம்சம், வையாபுரி ஐயர் இயற்றிய வையாபாடல், வைத்தியநாத முனிவர் இயற்றிய வியாக்கிரபாத புராணம், முத்துராச கவிராயரின் கைலாய மாலை முதலியவை 13ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் எழுந்த நூல்களாகும். இந்நூல்களை, சமய சம்பந்தமான நூல்கள், யாழ்பாணத்தரசர்களின் வரலாற்று வரன்முறை கூறும் இலக்கியங்கள், சோதிடம், வைத்தியம் ஆகிய துறைகள் சார்ந்த நூல்கள் என வகைப்படுத்தலாம். முதலாவது பிரிவில் தக்கிணகைலாசபுராணம், திருக்கரசைப்புராணம், கதிரை மலைப்பள்ளு, வியாக்கிரபாதபுராணம், கண்ணகி வழக்குரை என்பன அடங்கும். இரண்டாம் பிரிவில் வையா பாடல், கைலாய மாலை என்பன அடங்கும். இவற்றுடன் பரராச சேகரன் உலா என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம். 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாழ்ப்பாண வைபவம் என்ற நூல் பரராசசேகரன் உலாவைத் தனது முதனூலாகக் குறிப்பிடுகிறது. இந்நூல் தற்போது கிடைக்கவில்லையாயினும் பரராசசேகரன் பேரில் எழுந்ததாகையால் அம்மன்னன்காலத்ததாய் இருக்கலாமெனக் கருதப்படுகிறது. மூன்றாவது பிரிவில் செகராசசேகரமாலை, செகராசசேகரம், பரராசசேகரம் ஆகியவை அடங்குகின்றன. இவற்றில் செகராசசேகர மாலை சோதிட நூல்; ஏனையன இரண்டும் வைத்திய சம்பந்தமான நூல்களாகும்.

மேற்கண்டவாறு பல நூல்கள் எழுந்திருப்பினும் சமய சம்பந்தமான இலக்கியங்களே அவற்றுள் பெரும்பான்மையன. நிலவுடமைச் சமூகங்களிற் சமயம் பெறும் முக்கியத்துவத்தையே இது காட்டுகிறது. இந்நிலைமை இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை எமது இலக்கியங்களில் தொடர்ந்து காணப்படுகிறது.
2

யாழ்ப்பாண வரலாற்றில் ஐரோப்பிய இனத்தவரின் தலையீடு ஏற்படத்தொடங்கியதுடன் தமிழிலக்கியத்திலும் புதிய பண்பு ஒன்று தலைதூக்கியது. கிறித்த சமயப் பாதிப்பு வௌித்தெரியும் இலக்கியங்கள் எழத்தொடங்கியமையே இப்புதிய பண்பாகும். இதனால் இத்தகைய பாதிப்பு வௌித்தெரியும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளைத் தனித்த ஒரு பிரிவாகக் கொண்டு அக்கால இலக்கியங்களை ஆராய்தல் பொருத்தமுடைத்து. இவ்விரு நூற்றாண்டுகளிலும் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆதிக்கம் இலங்கையின் மத்திய மலைநாட்டைத் தவிர்ந்த பகுதிகளில் ஸ்திரம் பெற்றிருந்தது. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போத்துக்கேயர் இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தமது ஆட்சியை நிறுவினரெனினும் 1620ஆம் ஆண்டில்தான் யாழ்ப்பாணத்துத் தலைநகரான நல்லூரை அவர்கள் கைப்பற்றினர். அவர்கள் தமது ஆதிக்கத்தின் கீழ் வந்த பகுதிகளில் தமது நிலைமையைப் பலப்படுத்திக்கொள்ள மதமாற்றத்தையும் முக்கிய சாதனமாகக் கொண்டனர். கத்தோலிக்க மதகுருமாரின் மதம்பரப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளையும் போத்துக்கேயர் மேற்கொண்டனர். கத்தோலிக்க மதத்தைத் தழுவியோருக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. கத்தோலிக்கரான சுதேசிகள் சிற்சில வரிகள் இறுப்பதிலிருந்து விலக்கபட்டனர். கத்தோலிக்கரானோருக்கு நீதி வழங்கும் விடயத்தில் கூட சலுகைகள் அளிக்கப்பட்டன. இவற்றைவிட சைவர்கள் பொது இடங்களில் வணங்குவதும் தடைசெய்யப்பட்டது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் சலுகைகளுக்கிணங்கியும், நிர்ப்பந்தத்தினாலும் சைவர்கள் பலர் கிறித்தவராயினர். மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நீண்டகாலம் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருவாகிய பிரான்சிஸ்சேவியர் இப்பகுதிகளிலே கத்தோலிக்க மதம் நிலைபெற முயன்று உழைத்தார். போத்துக்கேயரின் பின்னர் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சியைக் கைப்பறிய ஒல்லாந்தரும் தமது மதப் பிரிவாகிய புரொட்டஸ்தாந்து கிறித்தவத்தைப் பரப்ப பல்வேறு முயற்சிகளையுமெடுத்தனர். எவ்வாறாயினும் இவ்விரு இனத்தவரின் ஆட்சிக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் சமயம் சார்ந்ததாகவேயமைந்தது. 16ஆம் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகள் இலங்கை அரசியல் வரலாற்றில் போத்துக்கேயர் காலம் (1505 - 1658) ஒல்லாந்தர் காலம் (1658-1798) என இரு பிரிவுகளாக அமையினும் தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இவை ஒருகாலகட்டமாகவே நோக்குதற்குரியன. இரு வேறு இனங்களின் ஆட்சி என்பதைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இவர்களது ஆட்சிக்காலத்தில் ஏற்படவில்லை. இவ்விரு நூற்றாண்டுகளிலும் கிறித்தவ சமயப் பொருளடக்கம் கொண்ட நூல்கள் தோன்றத் தொடங்கியதைத் தவிர இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க புதிய போக்குகள் எவையும் காணப்படவில்லை. இக்காரணங்களினால் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகள் ஒரு காலகட்டமாகவே அமையத்தக்கவை.

இக்காலப் பிரிவில் கிறித்தவ சமயத்தாக்கத்தினால் எழுந்த நூல்களை முதலில் நோக்குவது பொருத்தமாகும். ஞானப்பள்ளு கத்தோலிக்க மதத்தின் பெருமையை விளக்கும் நூல். இதை இயற்யிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. இது இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. இப் பள்ளு நூலில் இடம் பெறும் புனிதத் தலங்கள் செரு சேலமும் உரோமாபுரியுமாகும். இக்காலக் கிறித்தவ இலக்கியங்கள் பற்றி பேராசிரியர் ஆ. சதாசிவம் கூறுவது இந்நூலுக்கும் பொருந்துவதாகும்.

"அக்கால இலக்கியங்களெல்லாம் கத்தோலிக்க மத நூல்களாகையின் அவற்றிற் கூறப்படும் நாட்டு நகர வருணனைகளெல்லாம் உரோமாபுரி செருசேலம் முதலிய மேல் நாட்டுக் கத்தோலிக்க புனித தலங்களைப் பற்றியனவாய் அமைந்துள்ளன. தேசியக் கருத்துக்கள் அந் நூல்களிற் பொருந்தப்பெறவில்லை. ஞானப்பள்ளிலே நாட்டு வளம் கூறும் பள்ளியர் ஈழத்தைப் பற்றிச் சிந்திக்காது உரோமாபுரியைப் பற்றியும் செருசேலமைப் பற்றியும் சிந்திக்கின்றனர்.

ஞானப்பள்ளினைவிட வேறு சில நூல்களும் குறிப்பிடத்தக்கன. பேதுருப்புலவர் இயற்றிய அர்ச்யாகப்பர் அம்மானை, தொன்பிலிப்பு இயற்றிய ஞானானந்தபுராணம், பூலோக சிங்க முதலியாரியற்றிய திருச்செல்வர் காவியம் என்பன இவற்றுட் சில. இவற்றுடன் சந்தியோகுமையூர் அம்மானை, திருச்செல்வர் அம்மானை,மருதப்பக்குறவஞ்சி ஆகியவையும் அடங்கும். இக் கிறித்தவ மத இலக்கியங்கள் பெரும்பாலன சமூகத்தின் கீழ்மட்ட மக்கள் தொடர்புடைய சிற்றிலக்கிய வடிவங்களிலே அமைந்துள்ளன என்பதும் சுவையான அவதானிப்பாகும். 19ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதம் பரப்பியோர் பரவலான மக்களை எட்டக்கூடியதாக வசன நடயைப் பயன்படுத்தியதற்கும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் அதே தேவைக்கு இச் சிற்றிலக்கியவடிவங்கள் பயன்படுத்தப்பட்டவைக்கும் உள்ளார்ந்த தொடர்பு உண்டு போலும்.

மேற்கண்டவாறு கிறித்தவ சமயப் பிரசாரநோக்குடன் இலக்கியங்களியற்றப் பெறுதல் புதிய பண்பாகக் காணப்படினும் தொடர்ந்து சைவசமயச்சார்பான நூல்களும் பெரு வாரியாக எழுந்துள்ளன. இந் நூல்கள் அனைத்தையும் இங்கு குறிப்பிடுதல் சாத்தியமன்று. இவற்றை அவதானிக்கும் போது தலபிரபந்தங்கள், விரதமகிமை,கிரியை விளக்கம் ஆகியவை பற்றியெழுந்த நூல்கள், சமயத் தெடர்பான வடமொழி இலக்கியங்களின் தழுவல்/ மொழிபெயர்ப்புகள் என வகைப்படுத்தலாம். சின்னத்தம்பிப் புலவரின் கல்வளையமகவந்தாதி, மறைசையந்தாதி, பறாளைவிநாயகர் பள்ளு, கூழங்கைத் தம்பிரானின் நல்லைக்கலிவெண்பா வீரக்கோன் முதலியாரின் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதலியன முதலாம் பிரிவுக்கு உதாரணங்காயமையும். வரத பண்டிதரின் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம் முதலியன இரண்டாம் பிரிவுக்கும் இராமலிங்க முனிவரின் சந்தானதீபிகை போன்றவை மூன்றாம் பிரிவுக்கும் எடுத்துக்காட்டுகளாகும். இவற்றை நோக்கும் போது தொடர்ந்து சைவசமய இலக்கியங்களே தமிழிலக்கிய மரபில் கோலோச்சி வந்தமை புலப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக