வியாழன், 8 அக்டோபர், 2009

சித்தையன் கொலைச்சிந்து கதைப்பாடல்

சித்தையன் கொலைச்சிந்து கதைப்பாடல்
இப்பாடல் புதுவைப் பல்கலைக் கழக நிகழ்கலைப் பள்ளி முதன்மையாளரும், சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியின் முன்னாள் துறைத் தலைவருமான கரு. அழ. குணசேகரன், ராஜாராணி ஆட்டக் கலைஞர் ராஜநடிகர் திருமங்கலம் அ. பாக்கியம் பாடக் கேட்டு, 23.02.08 அன்று பதிவு செய்தது.

1. ஆதியிலேயே பாண்டிமன்னர் ஆண்டு வந்தார் மதுரையிலே
அவதரித்தார் எந்தன் குருவே - சீடர்கள் நாங்கள்
அவனி எங்கும் புகழ்பெறவே - மன்னர்கள்
அரும்பெரும் சபைதனிலே - அற்புதக் கவிபடிக்க ஆதரிப்பீர் எந்தன் குருவே - அருள்புரிந்து ஆதரிப்பீர் எந்தன் குருவே

2. வந்தனம் கோடி தந்தேனே மிகப்பணிந்து
வணங்கினேன் இந்த சபையை - கேளுங்க நாங்கள்
வாய்திறந்து சொல்லும் கதையை - அன்புடன்
வளர்த்த தகப்பனையும் வாழ்க்கைப்பட்ட மனைவியையும்
வஞ்சகமாய்ச் செய்த கொலையை - பாடியே வாறேன்
வஞ்சகமாய்ச் செய்த கொலையை

3. கந்த பாளையத்திலே கன்னியப்ப முதலியாரு
கண்ணுக்குக் கண்ணான மகனும் - பெயரும் வந்து
கானா சித்தையன் என்பவனும் - கிளியைப்போல
கட்டழகி பாலம்மாளை கல்யாணம் செய்துகொண்டு
கண்ணியமாய் வாழ்ந்து வந்தாராம் - சித்தையனுமே
கண்ணியமாய் வாழ்ந்து வந்தாராம்

4. சித்தையனும் பாலம்மாளும் செத்தாலும் மறவேன் என்று
திருமணம் செய்து கொள்ளவே - ஒரு மாதத்தில்
ஜென்ம சனியன் புடிக்கவே - தகப்பனிடம்
சின்னஞ்சிறு பெண் அவளைத் தன்னத் தனியாக விட்டு
திருவிழாவுக்குப் போயிருக்கவே - மைசூரு
திருவிழாவுக்குப் போயிருக்கவே

5. கள்ள எண்ணம் உள்ளவனும் சித்தையன் தகப்பனாரு
கன்னியப்ப முதலியாரு - மருமகளைக்
கண்டுமிக மோகம் கொண்டாரு - நடுசாமத்தில்
கண்ணே பெண்ணே என்று சொல்லி பாலம்மாவை
கையைப்பிடிக்க இழுத்தாரு - மருமகளைக்
கையைப்பிடிக்க இழுத்தாரு

6. அய்யோ வயதான காலத்தில் மருமகளிடம்
வம்பு செய்வதென்ன வேலை - என்னங்க மாமா
வறண்டு போச்சா உங்க மூளை - உனது மகன்
வந்தவுடனே உங்க வண்டவாளம் சொல்வேன் என்று
கோபத்தோடு வைதாளே - பாலம்மாவுமே
கோபத்தோடு வைதாளே

7. மைந்தனிடத்தினிலே தெரிவிப்பேன் என்று சொல்லி
மருமகளும் உரைத்திடவே - முதலியார்க்கு
மனசு மிகத்துடிக்கவே - உன் மனைவி
நடத்தை ரொம்ப சரியில்லை என்று திட்டமிட்டு
மகனுக்குத் தெரிவிக்கவே - முதலியாரு
மகனுக்குத் தெரிவிக்கவே

8. திருட்டுச்சிரிக்க உந்தன் பொண்டாட்டி நடத்தை ரொம்ப
டெம்பரவரி* ஆயிப்போச்சு - ஆண்களோடு
சேர்ந்து திரியலாச்சு - மகனே அந்தத்
தேவடியாளாலே ரொம்ப கேவலமா ஆகுதென்று
தீட்டினாராம் கடுதாசி - சித்தையனுக்குத்
தீட்டினாராம் கடுதாசி

9. தகப்பனார் எழுதிவிட்ட கடிதத்தை சித்தையனும்
சந்தோசமாகப் பிரிக்கவே - அதிலே உள்ள
சங்கதிகளைப் படிக்கவே - மனைவியவள்
தவறி நடந்ததை தகவல் அறிந்துகொண்டு
சஞ்சலப்பட்டுத் துடிக்கவே - சித்தையனுமே
சஞ்சலப்பட்டுத் துடிக்கவே

10. வேசித்தனங்கள் செய்த பாலம்மாளைத் துண்டு துண்டாய்
வெட்ட வேண்டும் என்று நினைத்து - மனசுக்குள்ளே
வீணாகச் சந்தேகம் எடுத்து - அந்த
வெறிபிடித்த சித்தையனும் சொந்த ஊரில் வந்திருந்து
வேதனையாலே துடிக்கவே - சித்தையனுமே
வேதனையாலே துடிக்கவே

11. ஊருக்கு வந்தவுடன் பாலம்மாளும் அவனைக்கண்டு
உள்ளத்திலே ஆனந்தம் கொள்ள - வாருங்கள் என்று
ஓடிப்போய் அழைத்தாள் உள்ளே - கிழவன் செய்த
ஊதாரித்தனத்தையெல்லாம் உரைத்தால் அசிங்கமென்று
உற்ற சேதி சொல்லவே இல்லே - கிழவன் செய்த
உற்ற சேதி சொல்லவே இல்லே.

12. ஆள் இல்லாத காட்டுக்குள்ளே ஆட்டைவெட்டிப் போட்டதுபோல்
அவளையும் கொலை புரிய - சித்தையன் ஒரு
அந்தரங்கம் திட்டமிடவே - அடியே உங்கள்
அப்பன் வீடு போவோம் வாடி ஆசையாயிருக்குதென்று
அவசரப்பட்டு ரைக்கவே - சித்தையனுமே
அவசரப்பட்டு ரைக்கவே

13. தாய் வீடு செல்கின்ற சந்தோசத்தில் பாலம்மாளும்
சம்மதம் என்றுரைக்கவே - பயணத்துக்கு
புளியோதரை கிளரி வைக்கவே
சாதங்களும் பொடவை எல்லாம் ரொங்கில எடுத்துவச்சு
ஜாலியாய்ப் படுத்திருக்கவே - பாலம்மாளும்
ஜாலியாய்ப் படுத்திருக்கவே

14. அர்த்த ராத்திரியில் ஆந்தை கத்தும் நேரத்தில்
ஆத்திரம் மிகவும் பெருகி - இடுப்புக்குள்ளே
வீச்சருவாள் எடுத்துச் சொருகி - அந்த
வெறிபிடித்த சித்தையனும் - பக்கத்திலே வந்துநின்னு
தட்டியே எழுப்பினானாம் - பாலம்மாளை
தட்டியே எழுப்பினாhனாம்.

15. பாதி உறக்கத்திலே பாலம்மாளும் துடிதுடிச்சு
பதறி எழுந்திருக்கவே - புருசனிடம்
பக்கத்திலே வந்து நிக்கவே
உறங்கையிலே பயங்கரமான ஒரு சொப்பனம் கண்டேன் என்று
பத்தினி உரைத்திட்டாளே - புருசனிடம்
பத்தினி உரைத்திட்டாளே

16. எமனும் தூதர்களும் எருமையிலே ஏறிவந்து
என்னையே அழைத்தது போலே - கனவுகண்டு
எழுந்தேன் பதட்டத்தாலே - எந்தனுக்கு
எதுநடந்தாலும் கூட நீங்கள் தானே தஞ்சமென்று
ஏங்கியே உரைத்திட்டாளே - பாலம்மாளும்
ஏங்கியே உரைத்திட்டாளே

17. கண்ணே கலங்காதடி நீயும் கண்ட சொப்பனங்கள்
சொல்வதெல்லாம் வெட்டிப்பேச்சு - உனக்கு ரொம்ப
பித்த உடம்பாயிப் போச்சு - இதனால்
பிழை ஒன்றும் நேராதடி புறப்பட வேண்டுமென்று
பொண்டாட்டியை ஏய்க்கலாச்சு - சித்தையனுமே
பொண்டாட்டியை ஏய்க்கலாச்சு

18. புருசனைத் தஞ்சமென்று பூவையவள் பாலம்மாளும்
புதுமஞ்சள் தேச்சுக்குளிச்சு - தலைசீவி
புஷ்பங்களும் பொட்டுமே வச்சு
காலை நாலுமணி ஆனவுடன் புதுச்சேலையைக் கட்டி
புருசன்கூட போகலாச்சு - பாலம்மாளும்
புருசன்கூட போகலாச்சு

19. பக்தாவும் பத்தினியும் பத்துமைல் கால்நடையா
பனங்காட்டுக்குள்ளே நடக்க - பாலம்மாளுக்கு
பாதையிலே கல்லுத்தடுக்க - எந்தன்
பாசமுள்ள நாயகரே பாதைமாறி வந்துவிட்டோம்
பயமா இருக்குதெனவே - அய்யகோ மச்சான்
பயமா இருக்குதெனவே

20. வெவ்வேறு பாதையிலே சித்தையனும் பாலம்மாளை
வேகமாக அழைத்துச் செல்லவே - பாலம்மாளுக்கு
வேதனை மிகப்பெருகவே - இந்த
வெட்டவெளிக் காட்டுக்குள்ளே பட்டாக் கத்தியாலே உன்னை
வெட்டப்போறேன் என்று சொல்லவே - உன்னை நானும்
வெட்டப்போறேன் என்று சொல்லவே

21. வெட்டுவேன் என்று நீங்க சொல்லும் சொல் புரியவில்லை
எந்த குற்றங்களும் செய்யவில்லையே - பரவாயில்லை
குற்றங்களும் செய்யவில்லையே - கொண்ட
கணவன் கையில் வெட்டுப்பட்டால் முகச்சியம்* என்று
குனிந்து நின்றாளே தலையை - பாலம்மாளும்
குனிந்து நின்றாளே தலையை

22. வேத்ததொரு சத்தம் ஏதும் கேக்கிறதா என்று சொல்லி
வெகுநேரம் நின்று பார்த்து - இடுப்பில் உள்ள
வீச்சருவாள் கையில் எடுத்து - அடியே
வெக்கம் கெட்ட வேசி மகளே வெகுமதி உனக்கு இதுதான் என்று
வெட்டினானாம் கழுத்தைச் சேர்த்து - பாலம்மாளையும்
வெட்டினானாம் கழுத்தைச் சேர்த்து

23. சண்டாளப் பாவியப் பையல் சதக்கென்று வெட்டியதில்
சலசலன்னு ரத்தம் தெறிக்க - பாலம்மாள் உடல்
தரையில் விழுந்து துடிக்க - தாலி
கட்டிக்கொண்ட சம்சாரத்தை கொலை செய்த துரோகி என்று
தலை அவனைக் கண்டு துடிக்க - துண்டாக்கிடந்த தலை அவனைக் கண்டு துடிக்க

24. சிந்திய ரத்தத்தைக் கண்டதுமே சித்தையனும்
கொஞ்சநேரம் வெறிபுடிக்கவே - கீழே கிடந்த
சிரசைக் கையில் எடுக்கவே - வெகு
சீக்கரமாய் ஓடிப்போயி தகப்பன் இடந்தனிலே
தீர்த்துவிட்டேன் என்றுரைக்கவே - சிரிக்கி உயிரை
தீர்த்துவிட்டேன் என்றுரைக்கவே


25. அய்யய்யோ இதுஎன்னடா கொலைகாரப் பயமகனே
அநியாயம் என்று மிரண்டு - கவர்மெண்டு
ஆக்கினைகள் செய்யுமே என்று - விடியுமுன்னே
அயலூரு சென்றுவிடு ஆபத்தென்று சொன்னாரைய்யா
அப்பன் என்ற பெரும் கிழடு - அறிவுகெட்ட
அப்பன் என்ற பெரும் கிழடு

26. பைத்தியக்காரனைப் போல சித்தையனும் கொஞ்சநேரம்
பஞ்சணையில் படுத்திருக்கவே - நடந்தகொலை
பாதகம் என்று நினைக்கவே - அவன்
சந்தேகத்தில் தூங்கும் பாலம்மாளும் சொப்பனத்தில்
சங்கதி உரைத்திட்டாளே - கிழவன் செய்த
சங்கதி உரைத்திட்டாளே.

27. என்னையே தஞ்சமென்று நம்பி வந்த என் மனைவி
என்னாலே இறந்தாளே - இதற்கு எல்லாம்
என் தகப்பன் செயல்தானே - இன்றைக்கு இந்த
இருட்டுக்குள்ளே அரிவாளை தீட்டிக்கிட்டு எப்படியும்
வெட்டிடுவேன் என்றானே - தகப்பனையும்
வெட்டிடுவேன் என்றானே

28. என்னையைப் பெற்றவனே ஈவிறக்கம் கெட்டவனே
இருக்கவே கூடாது என்று - தகப்பன்
இருந்த இடத்தiச் சுற்றியே நின்று
பாவி இன்றுதானே உன்னுடைய வஞ்சமே தொலையுதென்று
இரண்டு துண்டா வெட்டினானே - தகப்பனையும்
இரண்டு துண்டா வெட்டினானே
29. தாலி கட்டிக் கொண்டுவந்த தன்னுடைய மனைவியையும்
தகப்பனையும் கொலைபுரிந்தான் - கவர்மெண்டு
தண்டனைக் குள்ளாகப் பயந்தான் - இந்த
சங்கதியெல்லாம் ஒரு பேப்பரிலே எழுதிவச்சு
தற்கொலையும்ய செய்யத் துணிந்தான் - சித்தையனும்
தற்கொலையும் செய்யத் துணிந்தான்

30. சக்தியே தேவதையே உத்தமியே பாலம்மாளே
சண்டாளப் பிறவி நானே - உன்னைக் கொன்றது
தப்பிதமே தானேமானே -இப்பொழுது
பார்நீ சென்றவழி நானும் வாறேன் என்று சொல்லி
தன்னைத்தானே வெட்டிக் கொன்றானே - சித்தையனுமே
தன்னைத்தானே வெட்டிக் கொன்றானே.

31. காலை ஆறுமணி ஆனவுடன் அதிசயத்தை
அதிகாரிகள் வந்து பார்க்க - பிணக்கோலத்தில்
அப்பனும் மகனும் கிடக்க - அங்கு
அடர்ந்த தொருவனமதில் பாலம்மாள் உடல் தலை
அலங்கோலமாகக் கிடக்க - பாலம்மாள் உடல்
அலங்கோலமாகக் கிடக்க

32. ஊரிலே விசாரிக்க உண்மைகள் விளங்கவில்லை
ஒன்றுமே இல்லாமல் போச்சு - கேசு எந்த
முடிவும் இல்லாமப்போச்சு - சட்டப்படி
உயிர்விட்ட பிணங்களை அறுத்துப் பரிசோதித்து
உடனே கொளுத்தலாச்சு -பிரேதங்களை
உடனே கொளுத்தலாச்சு

33. மாசு படாதவளாம் பாலம்மாளுக்கு வந்த
மரணத்தை எண்ணிப் பாருங்க - நமது நாட்டில்
மங்கையர்கள் யோசிக்கணுங்க - சிறிய
மர்ம சங்கதி கூட புருசனிடத்தினிலே
மறைச்சுப் பேசக்கூடாதுங்க -புருசனிடம்
மறைச்சுப் பேசக்கூடாதுங்க

34. பத்தினிப் பெண்களையும் சித்திரவதை செய்யாதீங்க
பலவகையாய் நினைத்து - அவர்களைப்பற்றி
பக்கத்திலே சொல்வதைக்கேட்டு - இதையெல்லாம்
படித்து எழுதிவச்சு பாடிமகிழும் இது
பச்சையப்பன் தாசன் பாட்டு - மதுரைகவி
பச்சையப்பன் தாசன் பாட்டு

35. பைங்கிளி ராஜாக்கிளி மைனாவோடு வானம்பாடி
பப்பலப் பறவையோடு -மயில் வாகனங்கள்
புரவி நடனமாடும் - பலகவி
பச்சையப்பன் பிறந்திட்ட பட்டணம் மதுரையிலே
பச்சிகளும் கவிபாடும் - என்றைக்கும்
பச்சிகளும் கவிபாடும்.

nanRi :- maNmozi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக