ஞாயிறு, 25 அக்டோபர், 2009

தேவதாசி அர்ப்பணமும் திருவிதாங்கூர் சமத்தானமும்

(திருச்சி. மிஸ். நீலாவதி)

சீர்திருத்தப் பெருங்காற்று சண்ட மாருதங்கொண்டு வீசிவரும் இவ்விருபதாம் நூற்றாண்டில் பழமை விரும்பிகளுக்கும்

, வைதீக வெறியர்களுக்கும் ஒரு பக்கம் ஆச்சரியத்தையும் மறுபக்கம் அதிக திகிலையுஙம் உண்டுபண்ணக்கூடுமென்பதில், உண்டு பண்ணத்தான் செய்யும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. இது பற்றிப் பழமை விரும்பிகள், ‘பழமைப் போச்சுஎன்றும் வைதீக வெறியர்கள் மதம் போச்சு என்றும், கடவுள் காப்பாளர்கள் கடவுள்போச்சு என்றும், ஆத்திய அன்பர்கள் ஆத்திகம் போச்சு நாத்திகம் ஆச்சுஎன்றும் கூப்பாடு போடுவார்கள் தான், இவர் தம் கூப்பாட்டைக் கண்டு சீர்திருத்தக்காரர்கள் அஞ்சும் முறையைக் கைக்கொண்டால் விளையும் நலன் கடுகளவும் இல்லை. ஓர் வழியில் செல்ல காலெடுத்து முன்வைத்து அப்புரம் அவ்வழிச்செல்வதால் உண்டாகும், வரும் இடையூறுகளைக் கண்டு அஞ்சி முன்வைத்த காலை பின் வாங்குதல் சற்றும் அழகுடையதல்ல. சேறோ, மண்ணோ, குப்பையோ, எதுவோ அதில் வழுக்கி விழுந்தும், அடிப்பட்டும், மிதித்துக் கொண்டும் அதை பொருட்படுத்தாது துணிந்து செல்வதுதான் வீரமுடையோர்க்கு அழகு. நிற்க, மகா மகத்துவம் பொருந்திய இந்து மத கடவுள்களுக்கு தாசிகள் அவசியம் வேண்டும். தாசிகளின்றேல், இந்து மதச் சாமிகள் முகம் வாடிப் போகும். செந்தாமரைப் புஷ்பம் போன்றிருக்கும் முகங்கள் ஸ்ரீதேவி களையற்றுப்போகும். சாமிகள் முகம் வாடிப் போனால் நாடு செழிப்புற்று விளங்குவது எங்கே? சென்னை சட்டசபையில் டாக்டர் எஸ்.முத்துலட்சுமி அவர்களின் தேவதாசி மசோதா விவாதத்திற்கு வந்து சட்டமாக்கப்பட்ட காலத்து மூர்த்திகளும், சாஸ்திரிகளும், கடவுள் காப்பாளர்களும் போட்ட கூப்பாட்டைத் தமிழ்நாட்டார் அதற்குள் மறந்திருக்கமாட்டார்களென்றே நம்புகின்றேன். இந்து தேவாலயங்களுக்குத் தேவதாசிகள் அர்ப்பனம் செய்யப்பட்டு வரும் கொடிய முறை எக்காலும், எவராலும், எந்நாட்டாரும் கண்டிக்கப்படத்தக்கதே, அழிக்கப் படத்தக்கதே, கடவுள் பெயரால், கண்மணிகளன்னப் பெண்மணிகளைப் பொட்டுக்கட்டச்செய்து விபசார வாழ்க்கையை நடத்தச் சொல்லும், வளர்க்கச் சொல்லும் ஒரு மதம், ஒரு சாத்திரம் எவ்வளவு மேலானதாயிருக்கவேண்டும்? விருப்பு, வெறுப்பு இல்லாதவன், ஆசா பாசம் அற்றவன், நித்யானந்தன் நிற்குணன் என்று புகன்றுவிட்டு அதன்பின் அதற்கு நேர் விரோதமாக அக் கடவுள் தகாச் செயலை வேண்டும் தலைவன்என்று விளம்பரப்படுத்துவதும், கூப்பாடு போடுவதும் கடவுள் காப்பாளர்களுக்கு நியாயமாகுமா என்று கேட்கின்றேன்? ஆதியில் தேவதாசிகள் பொட்டுக்கட்டப்பட்டுத் தூய வாழ்க்கை நடத்தியிருக்கலாம், ஆனால், தற்போதோ அவர்தம், நிலை எவ்வாறிருக்கின்றது? விபசாரத்தைப் பெருக்குவதன்றி வேறில்லையே, ஒரு சில பெண்மணிகள் விபசார வாழ்க்கையை மேற்கொண்டிருத்தல் பெண்கள் உலகத்திற்கே பேரவமானமாகும். இதுபற்றி உண்மைச் சுயமரியாதை உணர்ச்சி உள்ள ஒவ்வொரு பெண்மணியின் உள்ளமும் துடிதுடிக்கத்தான் செய்யுமென்பதில் எவ்வித ஆட்சேபமும் இன்றாம், நிற்க, மாட்சிமை தங்கி திருவிதாங்கூர் ரீஜண்டு மகா ராணியார் சேதுலட்சுமிபாய் அவர்கள் தம் சமஸ்தானத்திலுள்ள தேவாலயங்களில் தேவதாசிகள் பொட்டுக் கட்டக்கூடாது என்று உத்திரவு பிறப்பித்திருப்பதாகப் பத்திரிக்கை மூலம் அறிந்து அளவிலடங்கா மகிழ்சியுற்றேன். சீர்திருத்தக்காரர்கள் யாவரும் அவ்வாறே, ஆனந்தக் ஊத்தாடுவார்களென்பதில் சந்தேகமே வேண்டாம். இந்திய மாதர் உலகிற்கு ரீஜண்டு மகா ராணியார் செய்த இப்பெரும் நன்மையை பெண் உலகம், பெரிதும்போற்றி நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றது. திருவிதாங்கூரில் பொட்டுக் கட்டுக்கு சாவுமணி அடித்தது, அடிக்கப்பட்டது மிகவும் குறிப்பிடத் தக்கது. சுதேச சமஸ்தானங்களுள் திருவிதாங்கூர் பார்ப்பன இராஜியம் என்பதை யான் நன்கு அறிவேன். மைசூர் சமஸ்தானத்தில் பொட்டுக் கட்டும் கொடிய வழக்கம் நெடுநாளைக்கு முன்பே ஒழிக்கப்பட்டு விட்டதாம், அங்குள்ள தெய்வங்கள் அதையறிந்து எங்களுக்கு தாசிகள் இல்லை. நாங்கள் இப்பூவுலகில் உயிர் வாழமாட்டோம், என்று விண்ணில் பறந்து சென்று மேலுலகம் அடைந்து விட்டதாகத் தெரியவில்லை. ஆவணி மாதம் முதல் தேதியில் மகாராணியார் உத்திரவு அமுலுக்கு வரும் காலத்து திருவிதாங்கூர் சமஸ்தான தெய்வங்கள் தம் அருமை தாசிகள் தம்மைவிட்டு நீங்குதல் கண்டு, ஏக்கங்கொண்டு இல்லற வாழ்க்கையை விடுத்து துரவறத்தை மேற்கொள்ளப் போவதும் இல்லை. உண்மையில் சாமிகளுக்கு தாசிகள் வேண்டியது அவசியந்தானா வென்றால், இந்து மதக் கடவுள்களுக்கு விபசார வாழ்க்கை இன்பந்தான் என்றால் அப்போது அச்சாமிகளை ஆழக்குழிதோண்டி புதைத்து விட்டு மறுவேலை பார்ப்பதில் எவ்வித பாவமும் வந்துவிடாது. நிற்க, சமூக சீர்திருத்தத்தில் தேவதாசி பொட்டுக் கட்டுத் தடை முக்கியமானதென்பதை ஒருவரும் மறுக்கமுடியாது. மானத்தை விற்கும் ஒரு வாழ்க்கைக்குகூடவா கடவுள் ஆதரவு இருக்கவேண்டும். சாமிகள் சம்மதம் காட்ட வேண்டும்? உண்மையில் கடவுள் காப்பாளர்களுக்கு கடவுளிடம் கடுகளவேணும் மெய்யான பக்தி இருந்தால் கடவுள் பெயரால் நடக்கும் பல கொடிய முறைகளை, அநாசாரங்களை அறவே அகற்றி அன்பு நிலையையும், தூய ஒழுக்க வாழ்வையும், நாட்டில் நிலைநாட்டட்டும், இன்றும் பொட்டு கட்டுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டதைக் கண்டுத் திருவிதாங்கூர் பார்ப்பனர்கள் மதம் போச்சு என்றும் சாத்திரம் போச்சு என்றும், கடவுளுக்கு ஆபத்து வந்து விட்டது என்றும், நாத்திகவாடை வீசத் தொடங்கிவிட்டது என்றும் ஓலமிடுவார்கள் இதைக் கண்டு மகாராணியார் அவர்கள் அஞ்சி உத்தரவை ரத்து செய்து, விபச்சாரத்தை ரோஜா பூ மாலையிட்டு வரவேற்றுத் தம் பெண்ணுலகுக்குப் பெரும் துரோகம் செய்வார்களானால் அது மிக அநியாயமானதோடு நில்லாமல் வீரமில்லா கோழைகள் செயலுக்கும், நிகராகும், வைதீகர் கூக்குரலைக் கண்டு சீர்திருத்தக் காரர்கள் அஞ்சும் பட்சத்த்தில் உலகில் எந்த சீர் திருத்தத்தையும் எவராலும், எக் காலத்திலும் நிறைவேற்றி வைக்க முடியாதென்பது திண்ணம், தொடுவதற்கெல்லாம், , மதம், , சாத்திரம் என்று ஊளையிடுவது வைதீகர் தம் தன்னலத்திற்கன்றி வேறில்லை. மற்ற விடயங்களில் மத விதிகளின் படியும் நடக்காத இவர்கள் சீர்திருத்தச் சட்டங்களுக்கு மட்டும், மதத்தையும், நடுவில் இழுத்துப் போட்டு பேசுவது மானங்கெட்ட செயல் என்பதில் குற்றம்மென்ன வென்றுதான் கேட்கின்றேன்? எதற்கும் மதம், மதம் என்று ஓலமிடும் வைதீகர்கள் சாத்திரம், சாத்திரம் என்று ஒப்பாரி வைக்கும் பார்ப்பனர்கள் மதத்தையும், சாத்திரத்தையும் தங்கள் வாயில் வைத்து பேசுதற்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? ஓதும் தொழிலைக் குலதர்மமாகக் கொண்ட உச்சிக் குடுமிப் பார்ப்பனர்கள் எல்லாம் ஓடி ஓடி வக்கீல் தொழில் செய்து கொண்டும் உலக நாகரீகங்களில் ஈடுபட்டும் குறிப்பாக மேனாட்டு நீசதேச நாகரீகங்களில் மூழ்கியும் இருந்துக்கொண்டு அவைகளுக்கெல்லாம், மதத்தையும் சாத்திரத்தையும் பொருட் படுத்தாது மண்ணில் போட்டு புதைத்துவிட்டு மக்கள் முன்னேற்றத்திற்கான குறிப்பாக பெண்கள் நலத்திற்கான சட்டங்கள் வருங்கால், தம்மால் புதைக்கப்பட்டுவிட்ட மத, சாத்திரத்தைத் தோண்டி எடுத்துக் குறுக்கே போட்டு அதோ, பாருங்கள் மதம், இதோ பாருங்கள் சாத்திரம் என்று கூப்பாடு போடும் வைதீகர்களின் வைதீக வெறியர்களின் வாயை அடக்கச் சீர்திருத்தக் காரர்கள் பின்வாங்கலாமா? பின் வாங்கினால் பெரும்பயன் என்ன இருக்கக்கூடும்? என்பதைச் சீர்திருத்த வீரர்¢கள் கவனித்தல் நன்றாம் சீர்திருத்தங்களுக்கு வைதீகர்கள் சரியான முதல் எதிரிகள் என்பதை ஒவ்வொரு சீர்திருத்த ஆணும் பெண்ணும் ஞாபகத்தில் வைக்கவேண்டும். விபசாரத்தை வேண்டும் கடவுள்வேசிகளை என்றும் தன்னருகில் இருத்திக்கொண்டிருக்க விரும்பும் தெய்வங்கள்‘‘ இன்றும் நம்நாட்டில் குடிகொண்டு வாழ்வது வருந்தத் தக்கதே, நிற்க. மகா ராணியார் உத்திரவைக் கண்டு சிலர் ஐயோமதத்தில் அரசாங்கத்தார் தலையிட லாகாதென வாதித்தாலும் வாதிக்கக்கூடும.¢ தன் மதிப்பை மானத்தை ஒரு துரும்பாய் மதிக்கும் சில தேவதாசிகளே முன் வந்து ஆ‘ ‘ நாங்கள் என்றும் நித்திய சுமங்கலிகளாய் வாழ்வதைத் தடுக்கச் செய்வது தருமமா? எங்கள் பரம்பரைத் தருமத்தை வழக்கத்தை மாற்ற யாங்கள் சற்றும் ஒருப்படோம்? என்று கூட்டங்கள் கூட்டித் தீர்மானங்கள் நிறைவேற்றி மகாராணியார் சமூகத்திற்குச் சமர்ப்பிக்கவும் செய்யலாம், இந்த மானமற்றப் பெண்களுக்கும், வைதீக வெறியர்களுக்கும் மகாராணியார் அவர்கள் தகுந்த சவுக்கடி கொடுத்து உண்மை அறிவை உணரும்படிச் செய்திடல் வேண்டும்.செய்ற்கறும் செய்கையாகிய தேவதாசி அர்ப்பனத்தை நீக்கிய மகாராணியார் சேது லட்சுமிபாய் அவர்களுக்கு என் தாழ்மையான வந்தனத்தை என் சார்பாகவும் சீர்திருத்தக்காரர்கள் சார்பாகவும், அன்புடன் செலுத்துகின்றேன். மேலும், திருவிதாங்கூர் சமஸ்த்தானத்தில் பால்ய விவாகத் தடைச் சட்டம் இல்லையென்று அறிகின்றேன். ஆகவே மாட்சிமைத் தங்கிய மகாராணியார் அவர்களுக்கு சிறியாள் மிக வணக்கமாய் விஞ்ஞாபித்துக்கொள்ளும் விண்ணப்பமாவது

.

மகாராணியார் அவர்களே

, நம் சமூக (பெண்கள்) முன்னேற்றத்திற்கு அவசியம் வேண்டியது பாலிய விவாகச் தடைச் சட்டம் என்பதைத் தாங்களறியும்படிப் பிரார்த்திக்கின்றேன், இளமணம் நடந்தேறின நம் சமூகம் கல்வியில் அபிவிருத்தி அடைய முடியுமா? இளமணக் கொடுமையால் நம் சமூகம் அடையும் நன்மைகளை எடுத்துரைக்க என் ஒரு நாவும் போதாது, கை கொண்டு எழுதவும் யான் வல்லவளல்ல, எனவே, நமது சமூக நன்மையை உத்தேசித்துப் பாலிய விவாகத் தடைச் சட்டம் ஒன்று பிறப்பிவிக்க வேண்டுமாய் மிகவும் வணக்கத்துடன் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தற்கால சீர்திருத்தச் சூறாவளியைத் தாங்களறிந்திருப்பீர்களென்றே நம்புகிறேன். அறிஞர்கள் அருவருக்கும் விபசாரத்திற்கு வெந்நீர் ஊற்றி வேலைக்களைந்து சமூக சீர்திருத்தத்திற்குத் தற்போது அடிகோலப்பட்டதைப்போல் இன்றும், பல சமூக சீர்திருத்தச்சட்டங்கள் பிறப்பிவிக்கவேண்டுமென் மிகத் தாழ்மையாய் வேண்டுகின்றேன். ஆனால் சாரதா சட்டத்தை சர்க்கார் பாழாக்கியதுபோது செய்யாமல் எவ்வித எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல் முதலிலிருந்து முடிவுவரை முன்வைத்த காலைப் பின் வைக்காமல் வீரமாய் நின்று வெற்றி பெறுவதே என்றும் மிக நன்றாய்க்கொண்டாடத்தக்கது என்பதையும் வணக்கமாய் ஞாபகமூட்டுகிறேன்

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக