ஞாயிறு, 25 அக்டோபர், 2009

சாரதா சட்டம் --திருச்சி மிஸ். நீலாவதி


சிந்தையை அடக்கியே சும்மாவிருக்கின்ற திரம் அரிது சத்தாகி என் சிதிறமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமாயானந்தமே? ’‘ என்று தாயுமானார் கூறியபடி பெண்கள் முன்னேற்றத்திற்கு அஸ்திவாரமாய்ப் போடப்பட்ட சாரதா சட்ட விடயத்தில் அதற்கேற்படும் பெருந்தொல்லைகளைக் கண்டு வாளாவிருக்க என் சிந்தையை அடக்கியாள என்னால் கூடவில்லை. முற்றுந்துறந்த முனிவர்களுக்கே சிந்தையை அடக்கியாளும் சக்தி கைவரப்பெறவில்லையென்றால், என்போன்ற சாமான்ய மனிதர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விடலாமாம், ஆனால் சிந்தை அடக்குவது மற்றும் அறிதுதானாம்,
இங்ஙணம் சிந்தையை அடக்கப்போதிய திறன் இல்லாததால் தான் முனிவர்களென்போர், பெண்களைப் பெரும், பெரும் வசை மொழிகளால் அலங்கரித்தார்கள் போலும், நிற்க சாரதா சட்டத்தைப்பற்றி ஒரு முறையல்ல, இருமுறையல்ல, பன்முறை எழுதியாய்விட்டது. என்ன எழுதியும் மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய நிலைதான் வந்து சேர்கின்றது. எழுதி எழுதி சலித்துப் போயிருந்தாலும்கூட சமயம் நேரும் போது மீண்டும் அதைப்பற்றி எழுதித்தான் தீர வேண்டி யிருக்கிறது. எழுதாமல் யாதொன்றும் கூறாமல் இருக்கத்தான் பாழும் மனம் இடம் தரவில்லை. இந்த விசயத்தில்தான் என் சிந்தையை அடிக்கியாள என்னால் முடியவில்லை என்றேன், என் செய்வது? பெண்கள் முன்னேற்றம் இது விடயத்தில் எனக்கு ‘சுயநலம்‘ என்றாலும் கூட அதை நான் ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். ஆனால் அது ‘சுயநலம்‘ என்பதை மாற்றி ‘தன் இனநலம்‘ எனத்திருத்தினால் மிகுந்த பெருமையுடன் ஒப்புக்கொள்ளுவதோடு அதிக மகிழ்ச்சியை அடையவும் செய்வேன். சாரதா சட்டம் என்பது குழந்தை மணத்தைத் தடுப்பதென்பது எல்லோருக்கும் பொதுவாக இந்திய மக்கள் யாவருக்கும் தெரிந்த செய்தியாகும்.
குழந்தைமணக் கொடுமையால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள் சமூகமே ஆகும். இந்த இளமணக் கொடுமை இந்தியாவினின்றும் என்று ஒழிகின்றதோ அன்றே இந்திய பெண்கள் விடுதலைப்பெற்றதாகும். நாகரீகமடைந்த மற்ற மேல் நாடுகளில் ஒரு பெண் ஆனவர் பதினெட்டு (18) வயது ஆகும்வரை குழந்தையாகவே கொள்ளப்படுகிறாள். ஆனால் இந்தியாவிலோ, பதினெட்டு வயதுக்குள் ஒரு பெண் நான்கு பிள்ளைகளுக்குத் தாயாகி, எலும்புத் தோலுமாய் நின்று எல்லாம் வாழ்ந்து சலித்த நூறு வயது அடைந்த கிழவிபோல் காணப்படுகின்றாள், மேல் நாட்டிற்கும் நமது நாட்டிற்கும் இந்த ஒரு விடயத்தில் உள்ள வித்தியாசத்தைக் கூர்ந்து நோக்குமாறு இந்திய குணசீலர்களை வேண்டுகின்றேன். அமெரிக்க மாதாகிய மிஸ்.காதரைன் மேயோ நமது இந்திய மாதாவில் இந்தியாவில் இளம் பெண்கள் பாலியப் பருவத்திலேயே தாய்மார்களாகின்ற நிலையிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். இதை மேலைநாட்டார் நன்கறிந்து நமக்கு நல்கும் நற்சாட்சிப் பத்திரம் யாதாயிருக்குமென்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்,
அறியாச்சிறு வயதில் தன்னறிவுவாய்க்கப் பெறாத பாலியப் பருவத்தில் மணம் முடிக்கவேண்டியதுதான் ‘இந்து தர்மம்’ என்றால் அப்பேர்க்கொத்த இந்து தர்மத்தை அழித்தொழிக்காமல் இன்னும் வளர விட்டுக்கொண்டிருக்க வேண்டுமா? என்றுதான் கேட்கின்றேன். அதை மேலான தர்மமென்று இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பின்பற்றிப்பாழவது? சாரதா சட்டம் சட்ட சபை முன் வந்ததிலிருந்து சட்டம் நிறைவேறும் வரைக்கும், ஏன்? அமுலுக்கு வரும் வரைக்கும், அதற்கேற்பட்ட கண்டனங்கள் எண்ணிலடங்குமா? அதன் மீதேவப்பட்ட வைதீகபாணங்கள் எத்தனை? எப்படியாவது அச்சட்டத்தை நிறைவேற்ற வொட்டாமல் தடுத்துத் தம் வைதீகத்தை நிலைநாட்டவெண்ணி சிம்லாவுக்கு நடந்தத்தூதுக்கூட்டங்கள் எத்தனை? திறமுடன் கொண்ர்ந்த திருத்தங்கள் எத்தனை?
சாத்திர சம்பண்ணர்கள் செய்த சம்பிரதாயங்கள் எத்தனை? நித்தகண்டம் அனுபவித்தன்றோ சாரதா சட்டம் பூரணாயுசு பெற்றது, அந்தோ? அந்நித்தகண்டத்தினின்றும் மீண்டும் தகுந்த வைத்திய நிபுணர்களால் உயிர்பெற்றெழுந்த சராதா சட்டம் திட காத்திரத்துடன், தீரமுடன், இப்பூவுலகில் வாழ்ந்துத் திரியவில்லையே நொண்டிப்பிராணணோடும், ஊத்தை உயிரோடுமல்லவா ஊசலாடி நிற்கின்றது? இதனால் யாதோ பயன் விளையும்? பெண்கள் முன்னேற்றத்திற்கு இன்றியமையாது வேண்டுப்படும் சாரதா சட்டம் அமுலுக்கு வரும் முன்தான் அவ்வளவு தொல்லைகள் விளைந்ததென்றால் சட்டம் அமுலுக்கு வந்த பின்னராவது அத்தொல்லைகள் விளையாதிருக்கின்றனவா? மீண்டும் மீண்டும் பெரும் தொல்லைகள் விளைந்த வண்ணந்தானே உள்ளது. ‘மதவிரோதம்‘ ‘சாத்திர விரோதம்‘ ‘ஸ்மிருதி விரோதம் ‘ என்று ஊளையிட்ட பேய்களெல்லாம் தம் இந்து தர்மத்தை இந்தியாவில் என்றும் மொத்தமாக நிலைநாட்டவே அவ்வாறு கூப்பாடு போட்டார்களென்பது மிகையாகாது. ஒரு பாவமுமில்லா சாரதா சட்ட விஷயத்தில் வைதீக ஆட்சி (’வெறி‘) யின் சக்கரம் செய்யும் வேலைப்பாட்டைக் கூர்ந்து நோக்கும்படி பார்ப்பனரல்லா சகோதரர்களை மிக்கத்தாழ்மையாய் வேண்டுகின்றேன்.
அந்தோ? வைதீகமே? உன் அதிகார ஆட்சியைத்தான் என்னென்று புகழ்வது? உன்னால் பெண்களாகிய நாங்கள் அடைந்த சுகம் போதாதா? உன் கொடும் ஆட்சியினின்றும் விலகிநாங்கள் சிறிது தலை தூக்கி வரும் இதுசமயம் ‘நான் இருக்கின்றேன்’ என்று மீண்டும் நீ தலைநீட்டிப்பார்க்கின்றாயே? ஐயோ? இன்னும் நீ இப்பூவுலகில் உயிர்வாழ முயற்சிக்கின்றாயே?
ஆனால் நீ சத்தியமாயும், நீதியாயும், நேர்மையாயும் நடந்து கொண்டாயானால் வாழவேண்டியது தான். வேண்டாமென்று சொல்வார் யார்? ஆனால், நீயோ அப்படிக்கில்லாமல், வஞ்சமணமும், சூழ்ச்சித்தனமும், சூது நெஞ்சமும் கொண்டிருக்கின்றாய் என் செய்வது? உன் பிறவியே அவ்வாறு தான் போலும், ‘ஜென்மக்குணத்தைச் செருப்பாலடித்தாலும் போமோ?‘ என்று வேதாநாயகம் பிள்ளை பாடியிருப்பது போல் பிறவிக்குணத்தை மாற்றுவதும் சற்றுக் கடினந்தான், நிற்க. சட்டம் அமுலுக்கு வரும் முன் அவசர அவசரமாய் அவதிமணங்கள் நடத்தினார் அநேகர், சட்டத்தை மீறி சிறை செல்வோம் என்ற சத்திய வீரக்களெல்லாம் பச்சைக்குழவிகளுக்கு மணவிழாவின் பெயரால் கொலைவிழாக்கள் கொண்டாடினார்கள். சட்டம், நிறைவேறினால் சத்தியாக்கிரகம் செய்வதாகப் பயமுறுத்தினார்கள் பல பார்ப்பனர்கள். இவ்வளவுக்கும் முன்னால் சாரதா சட்டம் ரத்தாகும்படி, ஆதிருத்திரயாகம் ஒன்று நடத்தினார்கள் அயோக்கியப் பார்ப்பனர், அது போகட்டும் இந்த இழவுகளை யெல்லாம் இங்கு இழுக்கக்கூடா தென்றிருந்தும் எப்படியோ இழுத்துப் போட்டுவிட்டேன்.

இது ‘ சாரதா சட்டத்திற்கு ஏற்பட்ட திருத்தங்கள் எல்லாம் போதாதென்றுத் தற்போது சட்ட சபையில் சூரபதி சிங்கு என்பவர் ஒரு திருத்தத் தீர்மானம்கொண்டு வந்து அதை நிறைவேற்றியும் வைத்தாய் விட்டது. அதாவது மனச்சாட்சி இடம் கொடுக்கும் பட்சத்தில் ‘லைசென்ஸ்‘ பெற்று பாலிய விவாகம் நடத்தலாமென்பதே? ஆ‘ இக்கூற்று எவ்வளவு அழகாயிருக்கின்றது பாருங்கள் மனசாட்சி என்றபடிப் பார்த்தால் உலகத்தில் என்னதான் நடக்க முடியும்? முடிச்சுமாரிகள் மனச்சாட்சி முடிப்பை அவிழ்க்கத்தான் சொல்லும், மோசக்காரர்களின் மனசாட்சி மற்றவரை மோசம் பண்ணத்தான் சொல்லும், விபச்சாரத்தால் பணருசி கண்ட வேசிகளின் மனச்சாட்சி விபச்சாரத்தை வேண்டத்தான் செய்யும்,
கொலை செய்தவர்களின் மனசாட்சி அந்த சமயத்தில் அவர்களை கொலை செய்யத்தூண்டித்தான் இருக்கும். மனச்சாட்சி, என்று பார்த்தால் சட்டத்திற்கும் தண்டனைக்கம், சதிக்கும், நியாயத்திற்கும் இடமெங்கே இருக்கின்றது.? ஒவ்வொருவர் செய்த, செய்யும் பொல்லாக்குற்றங்களுக்கு அவர் மனச்சாட்சி அந்த சமயத்தில் அதைத்செய்யும் படித் தூண்டித்தான் இருக்கும். சிங்கநல்லூர் அக்கிரகாரப் பார்ப்பனர்கள் மனச்சாட்சி ஆதிதிராவிட மாணவர்கள் அக்கிரகார வழியே பாட சாலைக்குச் சென்றதற்காக அவர்களைத் துரத்தி பெற்றோர், உற்றார் பலரை குத்தி வெட்டி, அவ்வேழை ஆதிதிராவிடர் வீடுகளையும் சூறையாடத்தான் சொல்லியிருக்கும் லைசென்ஸ் பெற்று இளமணத்தடைச் சட்டம் ,இருந்தென்ன? இல்லாதிருந்தென்ன?
அப்படி அச்சட்டம் இருந்தால் என்ன பிரயோசனம் உண்டாகப்போகின்றது. மேலும். இங்கணம் பார்த்தால் தான் பொட்டுக்கட்டுக்கும் லைசென்ஸ் பெற்ற விபசாரத்தொழில் மீண்டும் நடைமுறையில் வந்து செழித்தோங்குமோ? வென ஐயுற வேண்டியிருக்கிறது. சதி செய்யவேண்டுமாய்த் தற்போது இப்பலக் கொடும் பாதகர்கள் மனச்சாட்சிக் கோருமானால் மேற்கண்டபடி லைசென்ஸ் பெற்று சதி செய்து அடங்கியிருந்த ‘சதி‘ கொடுமை மீண்டும் எங்குத் தலைகாட்டிவிடுகின்றதோவென அஞ்சுகின்றேன். சாரதா சட்டத்திற்கு எவ்வளவோ திருத்தங்கள் வந்தனவென்றாலும் இப்போதுவந்த இச்சீரியத் திருத்தம் என் மனதை ஈர்த்ததுபோல் வேறு எத்திருத்தமும் இல்லையென்பதைத் திண்ணமாய்ச் சொல்லுகிறேன்.
நிற்க, சமீப காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட சமூக சீர்திருத்த சட்டங்களில் குறிப்பாக பெண்கள் நலத்திற்கானவைகளில் சாரதா சட்டம் ஒன்றே மிகவும் முக்கியமானதென்பதை எவரும் மறுக்க முன்வருவார். சுமார் நூறு வருடங்களுக்கு முன் ‘சதி‘ ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்பின் இப்பொழுது சாரதா சட்டம் இயற்றப்பட்டிருக்கின்றது. இரு சட்டங்களும் பெண்கள் நலம் கோரியே இயற்றப்பட்ட தானாலும், சாரதா சட்டம் சதியொழிப்புச் சட்டத்தை விடப் பலவிதத்தில் பெரும்நலன் தரதக்கதும், மிக்க அவசியமானதும், குறிப்பிடத்தக்க தென்பதுமே எனது கருத்து.
சதியொழிப்புச் சட்டத்திற்கு முன் சாரதா சட்டமே வேண்டும். இவ்வண்ணம் யான் கூறுவதுப் பலருக்கு வியப்பை உண்டாக்கலாம். கோரமாய்க் கட்டையிலேற்றி உயிருடன் வதை செய்வதைத் தடுக்கும் சட்டமாய் பின்னால் வேண்டும்? என்றம் சிலர் கேட்கலாம். ஆம், உண்மைதான் இந்தியாவில் இளம் விதவைகள் பெருக்கிற்குக்காரணமென்ன வென்றுகேட்கிறேன்? பாலிய விவாமன்றோ பாலிய விதவைகள் பெருக்கின் ஆதிகாரணம், இன்றே இளமணப்பேயை இந்தியாவினின்றும் ஓட்டிவிட்டால் அப்புறம் இளம் விதவைகள் எண்ணிக்கையும் குறைந்திருப்பதும், வளர்ந்திருப்பதும் தெற்றென விளங்கும், ஐந்து வயதில், நான்கு வயதில் மணமான பெண்கள் தொகை லட்சக்கணக்கிலிருக்கின்றதென்றால் இந்தியாவில் இளமணக் கொடுமை எவ்வளவு வேரூன்றியிருக்கிறதென்பதை எண்ணிப்பாருங்கள். பத்து, எட்டு வயதில் படுகிழவனுக்குப் பிடித்துத் தள்ளிவிட்டால் பாலிய விதவைகள் இருப்பது எங்கே? பாலிய விவாகம் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையா கும் என்பது எவ்வித ஆட்சேபனையும், எள்ளளவு ஆட்சேபனையும் இல்லை ஆனால் பெண்களை முன்னேற வொட்டாமல் தடுப்பவர்கள், அவர்களை முன்னேற்றமடைய விடாது இடையூறு செய்ய முயற்சிப்பவர்கள், ஆட்சேபம் கூறுவார்கள் தான் அதைப்பற்றி நாம் கவலைகொள்வதில் யாதொரு பிரயோசனமும் உண்டாகப் போவதில்லை. அதை நாம் பொருட்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை.
நிற்க, சாரதா சட்டத்தைப்பற்றி இந்தியாவெங்கும் ஒரு வெறும் பேச்சுத்தான் உண்டாக இடமாயிற்றேயொழிய, காரியத்தில் பலன் தரத்தக்கது ஏதொன்றும் நடைபெற வழியில்லை. எங்கள் முன்னேற்றத்திற்கு இன்றியமையாது வேண்டப்படும்சட்டம், இந்தச் சாரதா சட்டத்தைவிட வேறு என்ன விருக்கின்றது? ஆனால் சொத்து உரிமை சட்டம், விவாகரத்துச் சட்டம் ஆகிய இரண்டும் எங்கள் முன்னேற்றத்திற்கு இன்றியமையாது வேண்டப்படுபவை களே, அவைகள் வேண்டப்படாதவையென்றும், அவசியம் இல்லாதவை என்றம், நான் முடிவு செய்யவில்லை. அனால், சொத்து உரிமைக்கும், விவாக ரத்துக்கும் முன்னால் நடக்கும் வேலை நடக்க வேண்டிய வேலை விவாகந்தானே? ஆகவே விவாக விடயத்திலன்றோ பெண்களுக்கு முதலில் சீர்திருத்தமும், முற்போக்கடையும் மார்கமும் வந்திடல் வேண்டும். ஒரு கட்டிடத்திற்குப் போடும் அஸ்திவாரம் ஆரம்பத்திலேயே அழுத்தமாகவும், சீராகவும், ஒழுங்காகவும் அமைத்து விட்டால் அப்புறம் கட்டிடம் அடிக்கடி இடிந்து விழுந்து பாழாக இடமில்லையல்லவா? போடப்படும் அஸ்திவாரம் அழுத்தமில்லாமலும், சீர்கெட்டு இருந்து மேல்பூச்சுப்பூசி எவ்வளவுதான் மினுக்க வைத்தாலும் அது நெடுநாள் பலத்தோடு நிற்க முடியாதென்பது மறைக்க முடியாத உண்மை. சாரதா சட்டத்தால் பெண்கள் பல நன்மைகள் அடைய ஏதுவிருக்கின்றது.
அவைகளுள் கல்வி யின்பத்தை சென்றடைவது ஒன்று. தமக்குச் சொந்தமான வேலைத் தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள சௌகரியமிருப்பது இரண்டு. உடல் நலமடைவது மூன்று, பூனைக்குட்டிகள் போலிருந்துகொண்டு, பல்லிக்குட்டி களைப்போல் பிள்ளைகளைப் பெற்று நாட்டை நிரப்ப மார்க்கமில்லாமல் போவது நான்கு, இளம் விதவைகள் பூண்டே இல்லாதொழிய வழி உண்டாவது ஐந்து. இவ்வாறு நலன் தரத்தக்க பல வழிகள் சாரதா சட்டத்தில் நிறைந்துள்ளதால் எங்கள் முன்னேற்றத்திற்கு முதலில் அவசியம் வேண்டப்படுதோடு, பெண்களாகிய எங்கள் முன்னினேற்த்தில் பெரும் பற்றுக் கொண்டிருப்பவர்கள் அதை ஆதரிப்பதோடு நாங்கள் முன்னேற்றமடைந்து விட்டால் தங்களுக்கு அடிமைப்பட்டிருக்க முடியாது என்று கருதி சுயநலங்கொண்டு சில வைதீகர்கள், அச் சாரதா சட்டத்தை அழிக்கவும் ஆட்சேபம் கூறவும் செய்கின்றார்கள். இளமையிலேயே பெண்களுக்கு மணம் முடிப்பதால் பாலிய பருவத்திலேயே தாய்மார்களாகி வாலிபத்திலேயே வயோதிக நிலையடைந்து வீரங்குன்றி வாழ்நாள் முழுவதும் நரகவேதனை அநுபவிக்கின்றார்கள்.
வீரமிழந்த தாய்மார்க்ளிடத்து உதிக்கும் குழந்தைகள் வீர சிகாமணிகளாய் நின்று தேசத் தொண்டு புரிவது, தாய்ப்பணி தைரியமாய்ச் செய்வது எவ்வாறோ அறிகிலேன். ‘இளமணம்தான் இந்துமத தர்மம்‘ இந்து மதம் செழித்தோங்கவேண்டுமானால் இளமணந்தான் வேண்டும்‘ ஏன்? அவ்வாறுதான் சொல்லவேண்டும், இந்து மதம் செழிப்புற்று வாழ பாலிய விவாகமே செய்யப்படல் வேண்டும். இல்லையேல் இந்துமதம் அழிந்துவிடும் என்று ஐந்து, எட்டு வயதில் பெண்களுக்கு மணம் முடிக்கச் சொல்லி மறுபக்கம் மேடைகளில், பத்திரிக்கைகளில் வீரர்களே, வாருங்கள், வாலிபர்களே வாருங்கள், இளைஞர்களே சேருங்கள், பெண்மணிகளே கூடுங்கள், தேசவிடுதலைக்கு உழையுங்கள், இரத்தம் சிந்துங்கள், உயிரைத் துரும்பாய் மதியுங்கள் என்று வீர முழுக்கம் புரிவதில் என்னஅர்த்தம் இருக்குமென்பது தான் விளங்க வில்லை, என்ன நன்மை உண்டாகுமோ தெரியவில்லை, நிற்க, சாரதா சட்டத்தை எவ்வளவோ பாடுபட்டு நிறைவேற்றியும் தற்போது அரசாங்கத்தால் அது விஷயத்தில் சிறிதளவு தயவு காட்டி விடாமல் சட்டம் பாழாய்விட்டது. முஸ்லீம் வைதீக தூதுக்கோஷ்டி களுக்கு மேதகு. வைசிராய் அவர்கள் கொடுத்த சுவுக்கடியும் வீணாய்விட்டது. சாரதா சட்டத்தைப் பார்ப்பனர்கள் எல்லோருமே ஆதரிக்கவில்லை யென்று சொல்லமுடியாது. பார்ப்பனர்களில் அநேக ஆண்களும், பெண்களும்சட்டத்தை ஆதரிக்கின்றார்கள் சாரதா சட்டத்தில் பெண்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் விவாக வயது பல பெண்களுக்கு திருப்தி யில்லையானாலும் தற்போது ஒருவாறு அதை ஒப்புக்கொள்ள இணங்கினார்கள். தற்போது சிறைவாசம் புரிந்து வரும் திருமதி. ஆர்.லட்சுமிபதி அவர்கள் கூட சாரதா சட்டத்தைப்பற்றி இப்போது நாங்கள் ஏமாற்றமடைந்து விட்டபோதிலும் இனிமேல் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வரப்படும் காலத்து விவாக வயதை உயர்த்தப்படுமென்றே நம்பு கின்றோம். என்று கூறியுள்ளார்.
தன்னல வெறியர்களின் கூப்பாட்டைக் கண்டு சர்க்கார் அஞ்சி சாரதா சட்டத்தை வெற்றுக்காகிதமாக்கியது பெரிதும் வருந்தத் தக்கது. நூறு வருடங்களுக்கு முன் சதி யொழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது, வைதீகர் எதிர்ப்பு இல்லாமலிருந்ததா? தம் ‘மதம் போச்சு‘ என்னும் கூக்குரலை மறந்து வாளாவிருந்தனன்றோ? இல்லையோ? அப்போது சர்க்கார் வைதீகர்¢களின் ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சி வீரமிழந்திருப்பார்களானால், இதுவரை எத்தனை கோடி இளம் பெண்கள் அக்கினிக்கு ஆகாரமாயிருப்பார்கள்? அக்கால மக்களை விட இக்கால மக்கள் சீர்திருத்த உணர்ச்சியில் குறைந்தாவிட்டார்கள்? அக்காலப் பார்ப்பனர்களைவிட இக்கால பார்ப்பனர்கள் எல்லா விடங்களிலும் தம் மதத்தின் படியும் சாத்திரத்தின்படியும் தானா நடந்துகொண்டு வருகின்றார்கள்? அப்படியிருந்தால் ஒருவாறு தயவு காட்டலாம். வரவர பார்ப்பனர் தம் மதமும், சாத்திரமும், அவர்களால் மண்ணிலன்றோ புதைக்கப்பட்டு வருகின்றது. எங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் முதலில் பார்ப்பனர்களே, எங்கள் நலத்திற்கான சட்டம் எது வந்தாலும் வைதீகர்கள் அதை முதலில் அழிக்கவே வழிதேடுவார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நாட்டமுற்றிருக்கின்றது என்று நம்பியிருந்த சிலர் சாரதா சட்ட விஷயத்தில் அந்நம்பிக்கையை இழந்து விட்டார்கள்.
சாரதா சட்டத்துக்கு நாங்கள் பட்டபாடெல்லாம் ’விழலுக்கிறைத்த நீரானது கண்டு அடையும் வருத்தத்திற்கோர் அளவில்லை.. கொஞ்சம் ஏமாற்ற மடைந்து போதாமன முற்றிலும் ஏமாற்றமடைந்து விட்டோம். எங்கள் முன்னேற்றத்திற்கு அஸ்திவாரமான சாரதா சட்ட விடயத்தில் சர்¢க்கார் நடந்து கொண்டதைப் பார்த்து இனி எங்கள் முற்போக்கிற்கு இன்றியமையாதப் பல சட்டங்களை இச்சர்க்காரால் பெறக்கூடுமென்று நாங்கள் நம்புவதற்கிடமில்லை. டாக்டர் சட்டத்தில் விவாத வயதுப் பெண்களுக்குப் பதினெட்டு என்று கூறினாலும், மதச் சட்டம், பன்னிரண்டு வயதுதான் பெண்களின் விவாக வயது என அதை மறுக்கின்றதே உண்மை. கல்விச் சட்டம் உடல் நலத்தை எடுத்துக்காட்டவும் மத வேற்றுமைச் சட்டம், தன்நியாயத்தை எடுத்துக் கட்டவுமானால், எடுத்துக் காட்டி அதை மறுக்கவும் செய்யுமானால் அவைகள் ஆதரவு எங்கள் முற்போக்கிற்குக் கிடைப்பதெப்படி?
ஆ, இந்திய மாதருலகமே‘ உன் துரதிஷ்டம் இவ்வாறிருக்குமென்று யாருக்குத் தெரியும்? அந்தோ‘ இந்து தர்மமே உன்னைப் போற்றாதார் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக